2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'இந்திய விஸ்தரிப்புவாதம் குறித்து ஜே.வி.பி. முரண்பாட்டுக் குழு இப்போதும் நம்புகிறது'

Super User   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)

இடதுசாரி கொள்கைகளின் அடிப்படையிலான பாரிய இயக்கமொன்றை கட்டியெழுப்பப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முரண்பாடான கருத்து கொண்ட பிரிவினர் அறிவித்துள்ளனர். அதேவேளை இந்தியா பல்வேறு துறைகளில் பிராந்திய மேலாதிகத்தை செலுத்த முயற்சிப்பதாகவும் 'இந்திய விஸ்தரிப்புவாதம்' குறித்து தாம் இப்போதும் நம்புவதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.

இக்குழுவின் அங்கத்தவரான சேனாதீர குணதிலக்க, தமிழ் மிரரின் சகோதர ஆங்கில நாளிதழான டெய்லி மிரருக்கு அளித்த செவ்வியில் இதைத் தெரிவித்துள்ளார்.

உண்மையான இடதுசாரி இயக்கத்திற்கான தேவை உலகில் குறிப்பாக இலங்கையில் இருப்பதாக அவர் கூறினார்.
ஜே.பி.பியின் அங்கத்தவரான குமாரன் குணரட்னம் தலைமையிலான முரண்பாட்டுக்குழுவைச் சேர்ந்த சேனாதீர குணதிலக்க, ஜே.வி.பியின் மத்திய குழு அங்கத்தவர்களில் ஒருவராக விளங்கியவர். 1989 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் பின்னர் ஜே.வி.பியை மீளக் கட்டியெழுப்புவதில் முனைப்புடன் செயற்பட் அவர் 1994 ஆம் ஆண்டு தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார்.

தற்போதைய அரசியல் முறைமையின் கீழ் வலதுசாரி அரசியலை பின்பற்ற  ஜே.வி.பி. தீர்மானித்தாகவும் அவர் கூறினார்.

"வலது சாரி அரசியலிலிருந்து இடது சாரி அரசியலை தனித்துவப்படுத்துவது தொட்பாக உட்கட்சி விவாhதம் இருந்தது. அக்கலந்துரையடல்கள் 12 வருடங்கள் நீடித்தன. இப்போது விவாதம் இல்லை. அது இப்போது இடதுசாரி இயக்கத்திற்கான போராட்டமாகிவிட்டதது. இது கட்சியின் பெயரையோ சின்னத்தையோ தலைமைத்துவத்தையோ கைப்பற்றுவது அல்ல. இவ்விடயத்தில் ஜே.வி.பி. தனது வரலாற்றுக் கடமையை கைவிட்டுள்ளது" என அவர் கூறினார்.

"நாம் ஏற்கெனவே கருத்தரங்கு தொடர்களை ஆரம்பித்துள்ளோம். அடித்தள ஆதரவு கிடைத்தவுடன் நாம் கட்சியொன்றை அமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம். அதற்கு காலம் தேவைப்படும். எவ்வளவு விரைவாக நாம் அதை செய்ய முடியும் என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும்" என அவர் கூறினார்.

கட்சியொன்றை பதிவு செய்வதற்கு முன் தேர்தலில் போட்டியிடுவீர்களா எனக் கேட்டபோது,' "1977 ஆம் ஆண்டு ஜே.வி.பியை பதிவு செய்வதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதை செய்யமுடியவில்லை. பின்னர் ரோஹன விஜேவீர தலைமையில் சுயேட்சைக்குழுவாக நாம் போட்டியிட்டோம். தேர்தல் அரசியல் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். தேர்தலொன்று அறிவிக்கப்பட்டால் நாம் அதில் போட்டியிடுவது குறித்து வித்தியாசமான தெரிவுகளை ஆராய்வோம்" என அவர் பதிலளித்தார்.

ஜே.வி.பியின் அண்மைய பிளவுக்கு இந்தியாவின் றோ மற்றும் அமெரிக்க சி.ஐ.ஏ. போன்ற சர்வதேச புலனாய்வு அமைப்புகள் பின்னணியில் இருப்பதாக கூறப்படுவது குறித்து கேட்கப்பட்டபோது, அது உண்மையான பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக ஜே.வி.பி. தலைமையினால் கட்டிவிடப்பட்ட கருத்து என சேனாதீர குணதிலக்க கூறினார்.
'அவர்கள் எமது போராட்டத்தை எல்.ரி.ரி.ஈ.யின் பிரிவினைவாதத்துடன் தொடர்புபடுத்த முயற்சித்தனர். புலம்பெயர்ந்த தமிழர்கள், சர்வதேச சக்திகள் என்பன இத்தகையவை. இவை கட்சிக்குள் பிரச்சினை இல்லை என மக்களை ஏமாற்றுவதற்கான நடவடிக்கையாகும்' எனஅவர் தெரிவித்தார்.

அதேவேளை, ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீர சுட்டிக்காட்டியது போல இந்திய விஸ்தரிப்புவாதம் குறித்து தமது குழு  இன்னும் நம்புகிறது என குணதிலக்க கூறினார்.

'இன்று சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களில் பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்த இந்தியா  நவீனமான அணுகுமுறை மூலம் முயற்சிக்கிறது.  இவ்விடயம் இன்று மேலும் பாரதூரமாகியுள்ளது. சீனாவும் ஓர் உலக சக்தி என்ற வகையில் இதையே செய்கிறது. உலக ஒழுங்கு மாற்றத்தை நாம் மீளாய்வு செய்ய வேண்டும். இன்றைய உலகின் சீனா குறித்து தந்திரோபாய கற்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்' என அவர் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .