2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மாணவர்கள் கடத்தப்பட்ட விவகாரம் ; பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Super User   / 2011 நவம்பர் 29 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

மூன்று மாணவர்களை கடத்திச்சென்ற தடுத்து வைத்திருப்பதாக கூறப்படுவது தொடர்பான வழக்கில் கடற்படையை நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை விடுப்பதற்கு போதிய காரணம் உள்ளதென மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.

இவ்வழக்கு தொடர்பாக எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி பிரதிவாதிகளான கடற்படைத்தளபதி டி.டபிள்யூ.ஏ.எஸ். திசாநாயக்க, பொலிஸ்மா அதிபர் என்.கே. இலஙக்கோன், சட்டமா அதிபர் ஆகியோருக்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் கற்பதற்காக நாட்டைவிட்டுச் செல்லவிருந்த மாணவரும் ஏனைய  க.பொ.த. உயர்தர மாணவர்கள் இருவரும் கடத்தப்பட்டு, கடற்படையினரால்  தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக  மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட  மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இம்மாணவர்களை நீதிமன்றில் ஆஜராக்குமாறு கோரி  அவர்களின் பெற்றோர்கள் தனித்தனியாக 3 ஆட்கொணர்வு மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.

திருமதி சரோஜா நாகநாதன் தனது மகன் ரஜீவ் நாகநாதனையும் ஜி.விஸ்வநாதன் தனது மகன் பிரதீப்பையும் திருமதி காவேரி ராமலிங்கம் தனது மகன் திலககேஸ்வரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கோரி இம்மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் கொட்டாஞ்சேனையை சேர்ந்தவர்களாவர்.

இம்மாணவர்கள் திருமலை கடற்படைத் தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகவும் அவர்களின் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜாவுக்கூடாக தாக்கல் செய்யப்பட்ட இம்மனுக்களில் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் டி.டபிள்யூ.ஏ.எஸ். திசாநாயக்க,  பொலிஸ்மா அதிபர் இலங்ககோண்,  சட்டமா அதிபர் ஈவா வனசுந்தர ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் ரஜீவ் நாகநாதன் அனுமதிப் பெற்றதையடுத்து அவரின் தந்தை 2008  செப்டெம்பர் 17 ஆம் திகதி தனது இல்லத்தில் விருந்தொன்றை ஏற்பாடுசெய்ததாகவும்  ரஜீவின் நண்பர்களான திலகேஸ்வரன், பிரதீப், டிலான் மொஹமட் ஆகியோர் இதில் கலந்துகொண்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் வெளியே சென்ற மேற்குறிப்பிட்ட ரஜீவ், திலகேஸ்வரன், பிரதீப்  மூவரும் மறுநாள் 18 ஆம் திகதிவரை வீடுதிரும்பவில்லை எனவும் இதனால் அவர்களின் பெற்றோர்கள் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

2009 ஜனவரி மாதம் ரஜீவின் தந்தையை தொலைபேசியில் அழைத்த நபர் தன்னை சந்திம என அடையாளப்படுத்திக்கொண்டு, ரஜீவும் அவரின் நண்பர்களும் மன்னாரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் விடுவிப்பதற்கு 25 லட்சம் ரூபா வேண்டும் எனவும்  கூறியுள்ளார்.

2009 பெப்ரவரியில் நந்தகுமார் என தன்னை அடையாப்படுத்திக்க்கொண்ட ஒருவர் தொலைபேசியில் அழைத்து  இம்மாணவர்கள் மட்டக்களப்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இம்மாணவர்கள் ஆரம்பத்தில் கொழும்பு சைத்திய வீதியிலுள்ளது என நம்பப்படும் வீடொன்றில் தடுத்துவைக்கப்பட்டதாகவும் பின்னர் திருகோணமலை  கடற்படைத் தளத்துக்கு மாற்றப்பட்டதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கும் தடுத்துவைக்கப்பட்டமைக்கும் காரணம் கூறப்படவில்லை எனவும் அவர்கள் கடற்படைச் சட்டத்தின் கீழ் கையாளப்படவோ கடற்படையினால் தடுத்துவைக்கப்படவோ வேண்டியர்கள் அல்லர் எனவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .