2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வடமாகாணசபை தேர்தலை நடத்த சம்பிக்க, விமலின் அனுமதி தேவையில்லை: பிரபா

A.P.Mathan   / 2012 நவம்பர் 09 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணசபை தேர்தலை நடத்த விடமாட்டோம் என்றும் மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்றும் விமல் வீரவன்சவும் சம்பிக்க ரணவக்கவும் கூக்குரல் விடுகிறார்கள். வடமாகாணசபை தேர்தலை நடத்த விடமாட்டோம் என்று சொல்வதற்கு இவர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்...

நாட்டில் முதன் முதலாக தமிழ் மக்களுக்கு கிடைத்த அதிகாரப் பகிர்வு மாகாணசபை முறைமையாகும். வட, கிழக்கு மக்களுக்கு உருவாக்கப்பட்ட இவ் அதிகாரப் பகிர்வானது வடமாகாண மக்களுக்கு இதுவரை கிட்டவில்லை. 20 வருடங்களுக்கு பின்புதான் 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண மக்களுக்கான சபை உருவாக்கப்பட்டது. இது இவ்வாறு இருக்க மாகாணசபை முறைமையை அகற்ற வேண்டும் என கூறும் ஹெலஉறுமய சம்பிக்க ரணவக்கவும் தேசிய மக்கள் முன்னணி தலைவர் விமல் வீரவன்சவும் நாட்டை மீண்டும் கூறு போடுவதற்கான ஆயத்தங்களை செய்கின்றனர்.

ஹெலஉறுமய கட்சியை சார்ந்த உதய கம்மன்பில, மேல்மாகாண சபையின் அமைச்சராக இருக்கின்றார். அதேபோல் விமல் வீரவன்ச கட்சியினை சேர்ந்தவர்களும் மாகாணசபை உறுப்பினர்களாக உள்ளனர். முடியுமானால் மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டுமானால் இவர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும். அதன் பின்பு மாகாணசபை ஒழிப்பு முறைமையைப் பற்றி பேச வேண்டும். மாகாணசபை மூலமாக கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக்கொண்டு வெளியிலே இரட்டை வேடம் போடுகிறவர்கள். அதேபோல் வடமாகாணத்தைப் பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை. விரைவில் வட மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும். மாகாணசபை முறைமையினால் இன்று மலையகத்திற்கு இரண்டு தமிழ் மாகாண அமைச்சர்கள் கிடைத்திருப்பது மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இவற்றை இழந்து விட மலையக மக்களும் தலைவர்களும் ஒரு போதும் இடங்கொடுக்க மாட்டோம்.

இவ் இனவாதிகளின் அறிக்கை சம்பந்தமாக நான் நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து சிறுபான்மை கட்சியினருடனும் பேசியுள்ளேன். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலுள்ள சிறுபான்மை அமைச்சர்களுடனும் பேசியுள்ளேன். அது மட்டுமின்றி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கமியூனிஸ்ட் அமைச்சர்களுடனும் கலந்துரையாடியுள்ளேன். இவர்கள் அனைவருமே 13ஆவது திருத்த சட்டத்தை அகற்றுவதற்கான இவ்வினவாதிகளின் போக்கை கடுமையாக எதிர்க்கின்றனர். ஆகவே ஒருபோதும் மாகாணசபை முறைமையை ஒழிப்பதற்கு அரசாங்கம் முன்வரப் போவதில்லை. இம்முறைமையை விட்டுக்கொடுப்பதற்கு சிறுபான்மை அரசியல் தலைவர்களும் முற்போக்கு சிங்கள தலைவர்களும் இடம் கொடுக்கப்போவதுமில்லை.  

You May Also Like

  Comments - 0

  • எல்லாளன் Friday, 09 November 2012 04:15 PM

    நீங்கள் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதை விட்டுவிட்டு பாராளுமன்றத்தில் அவர்களுக்கு முன்பாக பேசுங்கள்

    Reply : 0       0

    Rajkamal Saturday, 10 November 2012 02:36 AM

    அண்ணன் மாதிரி தம்பி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .