2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு வேண்டும்: கருணாநிதி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 12 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழர் விவகார பிரச்சினையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

டெசோ மாநாட்டு தீர்மானங்களை நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையிடமும் ஜெனீவா மனித உரிமைப் பேரவையிலும் கையளித்துவிட்டு சென்னை திரும்பிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு டெசோ அமைப்பின் சார்பில் வரவேற்பு மற்றும் பாராட்டு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து பேசிய கருணாநிதி கூறியதாவது,
'மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய நன்றிக்கடன் என்று வள்ளுவர் பெருந்தகை சொல்கின்றார். அத்தகைய உறவுக்கு இன்று வடிவமாக, பொருளாக ஸ்டாலின் திகழ்வது எனக்கு எவ்வளவு பெருமை, எவ்வளவு மகிழ்ச்சி. இதுபற்றி யார் விசமத்தனத்தை பரப்பினாலும் நான் கவலைப்பட மாட்டேன்.

இலங்கை தமிழர்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்காதா? என்ற ஏக்கத்தோடு ஐ.நா. சபையில் உள்ளவர்களிடமும், மனித உரிமை கழகத்தினரிடமும் மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் மனு கொடுத்துவிட்டு அவர்கள் வெற்றிகரமாக அவர்களுடைய பணிகளை முடித்துவிட்டு வந்துள்ளனர்.

அவர்கள் முழு வெற்றியை பெற்றிருப்பதாக நான் சொல்லவில்லை. அவர்களுடைய பயணத்தை பொறுத்துவரையில் வெகுதூரம் செல்ல வேண்டியது உள்ளது. அந்த வெற்றியின் உச்சத்திற்கு செல்ல நாம் வெகு தூரம் போக வேண்டியது உள்ளது.

பொது வாக்கெடுப்பில் எத்தனை சிறிய நாடுகள் எல்லாம் விடுதலை பெற்றிருக்கின்றன. இந்த பொது வாக்கெடுப்பை பயன்படுத்தி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக ஐ.நா. சபையை நாம் தயார்படுத்த வேண்டும். அப்படி தயார்படுத்தப்படுவதற்கு நாம் கொடுக்கின்ற அழுத்தம் மட்டும் போதாது.
 
நாம் கொடுக்கின்ற அழுத்தம் என்றால் தமிழ்நாடு கொடுக்கின்ற அழுத்தமாக மாத்திரம் அல்லாமல் இந்தியாவே தருகின்ற அழுத்தமாக அமைய வேண்டும்.

அப்படி அமைவதற்கு இந்திய அரசும் நமக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்கள் உறுதுணையாக இருந்தால் தான் நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும்' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • வசந்தகுமார். Monday, 12 November 2012 06:02 PM

    அறம் சார்ந்த கடமை செவ்வையாகவும் நீதியாகவும் இலங்கை அரசு செயல்படுமேயானால் தமிழர்களின் நிலைமை வேறு. முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப்பெற்றால் அந்த நிலைமையைதான் தமிழர்கள் தற்சமயம் அனுபவிக்கின்றார்கள். வடகிழக்கு மாகாண இணைப்புக்கே குந்தகம் விளைவிக்கும் அரசுகள் தமிழர்களின் சனநாயக உரிமைகளுக்கு என்ன உத்தரவாதம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X