2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமெரிக்க உதவிச் செயலாளர் - ஹக்கீம் பேச்சு

Super User   / 2012 நவம்பர் 20 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் கலாநிதி அலைஸ்ஸா அய்ரஸ்க்கும் நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நீதியமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  மிச்சேல் ஜே. சிசோன் அரசியல் விவகார ஆலோசகர் மைக்கல் ஹொனிங்ஸ்டீன் மற்றும் நீதியமைச்சின் செயலாளர் கமிலினி டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் நீதித்துறையின் பங்களிப்புப் பற்றி  நீதியமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விதந்துரைகளை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவது குறித்தும், முன்னர் யுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது குறித்தும், மேற்கொள்ளப்படும்  புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார.

இலங்கையின் செயல்திறன் மிக்க நீதித்துறை பற்றியும், நம்பகமான நீதித்துறை வழிமுறைகள் எடுத்துரைத்துள்ள அவர்  அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் சில முக்கிய அம்சங்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியுள்ளார்.

பிணக்குகளுக்கு தீர்வு காணும் மாற்றுப்பொறிமுறை கிராம மட்டத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் இணக்கச் சபைகளின் ஊடாக நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்குகளின் எண்ணிக்கையை கணிசமான எண்ணிக்கையில் குறைப்பதற்கு முடிந்திருக்கின்றது. அத்துடன் வழக்குத் தாமத்தையும், கால விரயத்தையும் அதன் விளைவாக ஏற்படும் வீண் செலவுகளையும் குறைக்க முடிந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்தப்பொறிமுறை  65 சதவீதம் வெற்றியளித்திருப்பதாகவும், யுத்தம் முடிவடைந்து அமைதி நிலவும் சூழ்நிலையில் மத்தியஸ்த சபைகள் எனப்படும் இணக்க சபைகளின் செயற்பாட்டை நாட்டின் வடகிழக்கு மாகாணங்களுக்கும் விஸ்தரிக்க முடிந்திருக்கின்றது. இலங்கையில் காணப்படும் பரந்துபட்ட இணக்க சபைகளின் நடைமுறையை பின்பற்றுவதற்கு ஏற்கனவே நேபாளம், சீனா போன்ற நாடுகள் முன்வந்திருக்கின்றது.

அத்துடன், காணி, நிலபுலன்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய விவகாரங்களிலும் இணக்க சபைகளை ஈடுபடுத்தி நிலவுடமையாளர்களுக்கு நீதி நியாயத்தையும், நிவாரணத்தையும் வழங்க நீதிமன்றங்களுக்கு வெளியிலான சட்டரீதியான செயல்பாட்டின் சாத்தியக் கூறுகள் பற்றியும் நீதியமைச்சு ஆராய்ந்து வருவதாகவும், காணி பிரச்சினைகள் பற்றிய பிணக்குகளுக்கு தீர்வு காணும் விதத்தில் இணக்க சபைகளில் கடமையாற்றும் சுயேட்சையான ஊழியர்களுக்கு காணி உறுதிகள் மற்றும் வரைபடங்கள் தொடர்பான பயிற்சியை வழங்குவது பற்றியும் தாம் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .