2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தமிழக மீனவர்களை விடுவிக்க தலையிடுங்கள்: ஜெயா மீண்டும் கடிதம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நேரடியாக தலையிடுங்கள் என்று தமிழக முதலமைச்சர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று வியாழக்கிழமை மீண்டும் ஒரு கடிதத்தை  எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 34 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்கடையினரால் இரக்கமின்றி கொடூரமாக தாக்கப்பட்டு பிடித்து செல்லப்பட்டனர்.

தற்போது அவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கொடூரமாக தாக்குவது, அடித்து காயப்படுத்துவதும், கடத்தி செல்வதும், கைது செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருதை நான் மீண்டும், மீண்டும் உங்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்து வருகிறேன்.

கடந்த 15.6.2013 அன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த 8 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கடத்தி சென்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை வைத்துள்ளதை நான் 17.6.2013 அன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

ராமேசுவரம் மீனவர்கள் எட்டு பேரையும் 27.6.2013 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் அவர்கள் அனுராதபுரம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். பிறகு அவர்களது காவல் 25.7.2013 வரை நீட்டிக்கப்பட்டு, அவர்கள் வவுனியா சிறைக்கு மாற்றப்பட்டனர்.

தற்போது அந்த 8 பேரின் காவல் 6.8.2013 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளில் 6.7.2013 அன்று மீன் பிடிக்க சென்றிருந்த போது இலங்கை கடற்படை வீரர்களால் கடத்தி செல்லப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை அனுராதபுரம் சிறையில் 19.7.2013 வரை காவலில் வைக்க உத்தர விடப்பட்டது. இந்த சம்பவம் பற்றி நான் உங்களுக்கு 8.7.2013 அன்று ஒரு கடிதம் எழுதினேன். தற்போது அந்த 21 மீனவர்களின் காவல் 2.8.2013 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது.

அந்த மீனவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படை வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். 4.7.2013 மற்றும் 17.6.2013 ஆகிய திகதிகளில் உங்களுக்கு நான் எழுதிய கடிதங்களில் 5 அப்பாவி தமிழக மீனவர்கள் கடத்தி செல்லப்பட்டு, பொய் வழக்குகள் போடப்பட்டு 20 மாதங்களுக்கும் மேலாக இலங்கை சிறைகளில் அவதிப்பட்டு கொண்டிருப்பது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் துயரங்கள் பற்றி நான் மீண்டும், மீண்டும் கடிதம் எழுதியுள்ள போதிலும் மத்திய அரசு, அவர்களை விடுவிக்க எந்த ஒரு உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அப்பாவி மீனவர்கள் சமூதாயத்தில் மிகவும் ஏழ்மையான பிரிவில் இருப்பவர்கள். அவர்களை இப்படி நீண்ட நாட்கள் சிறையில் வாட விடுவது அவர்களது வாழ் வாதாரத்துக்கே இழப்பை ஏற்படுத்தும். அவர்களை பிரிந்து தவித்து கொண்டிருக்கும் மீனவர்களின் குடும்பத்திலும் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடுவதை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள ஒட்டு மொத்த மீனவ சமுதாயத்தினரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற உணர்வு அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை உடனே விடுவிக்கும் ஏற்பாடுகளை செய்ய வெளியுறவு துறைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் தூதரக உயர் அதிகாரிகள் மூலம் நம் மீனவர்களை மீட்க உரிய உறுதியான நடவடிக்கைகளை உடனே விரைந்து எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தாங்களே நேரில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .