2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பயங்கரவாத முத்திரை குத்தியவர்களாலேயே கௌரவிக்கப்பட்ட தலைவன் மண்டேலா: சுரேஷ்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்
 
பயங்கரவாதி என்று வர்ணிக்கப்பட்டவர்களாலேயே சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்ட தலைவன் மண்டேலா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது. 
 
தென்னாப்பிரிக்காவின் சிற்பி என்று புகழப்படும் நெல்சன் மண்டேலாவின் மரணம் குறித்து அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் இல்லாத ஓர் உலகை நினைத்துப் பார்ப்பதற்கே துன்பமாக இருக்கின்றது என்றும் அவரால் இவ்வுலகம் பெருமையடைகின்றது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. 
 
அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
அநீதிகளும் அடக்குமுறைகளும் நிறைந்த உலக வரலாற்றில் அடக்கப்படும் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்காகவும் சமூக நீதியை நிலைநாட்டவும் அவ்வப்போது சில மகோன்னத மனிதர்கள் பிறப்பதுண்டு. அந்தவகையில் 20ஆம், 21ஆம் நூற்றாண்டுகளின் புரட்சிநாயகனாகத் திகழ்ந்தவர்தான் தோழர் நெல்சன் மண்டேலா.
 
நவீன தென்னாப்பிரிக்காவின் சிற்பி; அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் அனைத்து மக்களினதும் ஆதர்ஷ புருஷன்; சமருக்குச் சிங்கம், சமாதானத்திற்குப் புறா தென்னாப்பிரிக்க நிறவெறிக்கெதிரான நீண்ட நெடிய விடுதலை இயக்கத்தின் நீண்டகாலத் தலைவன்; அடக்குமுறையாளருக்கும் ஆட்சியில் சமபங்கு வழங்கிய ஜனநாயகத்தின் வழிகாட்டி; தனக்குப் பின்னால் தொடர் தலைமையை உருவாக்கிய புதிய தலைவர்களுக்கு வழிகாட்டி. 
 
தேசத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையொளியேற்றிய உயர்ந்த தலைமைப் பண்பாளன்; விடுதலைப் போரில் வெற்றிபெற அடக்கப்படும் அனைவரினதும் ஒற்றுமையின் அவசியத்தை சொல்லிலும் செயலிலும் நிரூபித்தவர். பல்லின மக்களின் அரசியல் தலைமைகளை ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் என்ற ஒரேகுடையின்கீழ் ஜனநாயக அடிப்படையில் இணைத்ததன் மூலம் விடுதலையை வென்றெடுப்பதற்கு ஸ்திரமான ஒரு கட்சியின் அவசியத்தை உலகிற்கு உணர்த்தியவர். 
 
மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், மார்ட்டின் லூதர்கிங் ஆகியோரின் கொள்கைகளும் வழிமுறைகளும் ஒருங்கே அமையப்பெற்ற பல்தகைமைத் தலைவன். தென்னாப்பிரிக்காவில் வெள்ளையரின் காலனித்துவ ஆட்சிக்கு முடிவுகட்டவும் அவர்களின் நிறவெறி ஆட்சிக்கு முடிவு கட்டவும் காந்தியவழியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அடக்குமுறை ஆட்சியாளருக்கு அகிம்சைமொழி புரியதாததினால் ஆயுதப் போராட்ட வழியைத் தேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர். ஆயுதப் போராட்ட வழிமுறையைத் தேர்ந்தெடுத்தபோதிலும் எதிரிகள் வெல்லப்படவேண்டியவர்கள் அல்லர்; கொள்கையின்பால் வென்றெடுக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் தெளிவாக இருந்தவர். இதனை புரட்சியில் வெற்றிகண்ட பின்னர் அடக்குமுறையாளர்களுக்கும் ஆட்சியில் பங்களித்ததன் மூலம் நிரூபித்துக்காட்டியவர்.
 
தென்னாப்பிரிக்க மக்களின் விடுதலைக்காக சிறைக்குச் சென்றவர், மூன்று தசாப்தங்களின் பின்னர் உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான தலைவராக சிறையிலிருந்து வெளிவந்தார். விடுதலை என்பதன் உண்மையான பொருளையும் மனிதநேயத்திற்கான இலக்கணத்தையும் உலகிற்கு உணர்த்திய ஒப்பற்ற தலைவராகவும் மண்டேலா திகழ்கின்றார். இன நல்லிணக்கம் என்பதற்கு இவர் ஆசான். இதனால் இனவெறி, மதவெறி மற்றும் நிறவெறிகளுக்கெதிரான போராட்டங்களின் குறியீடு இவர். அகிம்சைப் போராட்டத்தின் ஆபிரிக்கக் குறியீடு இவர். சிறையிலிருந்த போதிலும் மக்களின் உள்ளங்களில் புகுந்து மூன்று தசாப்தங்கள் போராட்டத்தை வழிநடத்தியவர். இத்தகைய ஒரு தலைவன் வாழ்வதென்பதே அடக்குமுறைகளுக்கு எதிரான போராளிகளின் பலம். சமாதான ஆர்வலர்களின் பலம். உண்மையான இன நல்லிணக்கம் நாடுவோரின் பலம். தனது 95 ஆண்டுகால வாழ்வில் இவற்றை தனது பேச்சிலும் செயலிலும் நிரூபித்து வாழ்ந்துகாட்டிய ஆசான். 
 
பயங்கரவாதி என்று வர்ணிக்கப்பட்டவர்களாலேயே சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்ட தலைவன். இதனால் விடுதலைப் போராளிகளுக்குப் பெருமை சேர்த்த தலைவன். குழப்பவாதி, சதிகாரன், தேசத்துரோகி போன்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்ட இவர், உலகெங்கும் நடைபெறும் குழப்பங்கள், மோதல்களைத் தீர்ப்பதற்கான அனுசரணையாளராக இதேசக்திகளால் பரிந்துரைக்கப்பட்டவர். அவர் தான்மட்டுமன்றி தனது வழித்தோன்றல்களையும் அவ்வாறே செயற்பட வழிகாட்டியவர். உலகத்தில் உண்மையான அமைதியை நேசித்ததன் மூலம் நோபல் பரிசிற்கே பெருமை சேர்த்தவர்.
 
அடக்குமுறைகளுக்குள் வாழும் தமிழ் மக்களின் விடிவின்பால் கரிசனை கொண்ட தலைவன். அவரது நெறிப்படுத்தலில் உருவான ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ், தமிழ் மக்களின் விடுதலைக்காக அனுசரணையாளராகச் செயற்பட வருகின்றமை அவரது சிந்தனைகளை அடியொற்றியே கட்சியும் அதன் தலைமையிலான அரசும் செயற்படுகின்றது என்பதற்கு ஓர் உதாரணம். 
 
எனவே, தோழர் நெல்சன் மண்டேலா இறக்கவில்லை. அவருக்கு இறப்பும் இல்லை. உலக மக்களின் இதயங்களில் நிரந்தரமாகக் குடியேறியிருக்கின்றார். அவரது உடலிலிருந்து பிரிந்த உயிர் ஏனைய உடல்களில் வியாபித்திருக்கின்றது. எம் அனைவரினுள்ளும் அவர் வாழ்கின்றார். நடைபெறுவது அவரது உடலுக்கான இறுதி மரியாதையே தவிர, அவருக்கு அல்ல. புரட்சியாளனுக்கு இறுதி என்று எதிவுமில்லை. அவரது பூதவுடலுக்காக மேற்கொள்ளப்படும் இறுதிமரியாதையில் நாமும் பங்குகொண்டு, எமது தோழரின் உடலோடு இணைந்த உயிரைப் பிரிந்து தவிக்கும் அந்நாட்டு மக்கள், அவரது கட்சித் தோழர்கள், அரசாங்கத்தினர், குடும்பத்தினர் மற்றும் ஏனைய புரட்சியாளர்களுடன் சேர்ந்து இலங்கைத் தமிழ் மக்களாகிய நாமும் மரியாதை செலுத்துகின்றோம்.

You May Also Like

  Comments - 0

  • Sumathy M Saturday, 07 December 2013 01:45 PM

    மேற்கத்தைய நாடுகள் மண்டேலா என்ற விடுதலை வீரனை பயங்கரவாதி என முத்திரை குத்தியது. ஆனால் இன்று அவர் உலக தலைவன் ஆகிவிட்டார். ஆனால் மாகாண சபை காலத்தில் விடுதலைக்காக புறப்பட்ட சுரேஷ் அவர்களின் "மண்டையில் போடுதலால்" தமிழ் மக்கள் அவரை கொலைகாரன் என தூக்கி எறிந்தார்கள். இன்று கூட்டமைப்பும் ஓரங்கட்டி விட்டது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X