2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வடக்கு கிழக்கைச்சேர்ந்த 7 பெண்கள் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபியுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தில் கூறப்படும் வடக்கு கிழக்கை சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களைச்சேர்ந்த 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது  செய்யப்பட்ட ஐவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பிபிசியில் வெளியாகியுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சந்தேக நபர்களைத் தேடும் வேட்டை என்ற பெயரில் இலங்கையில் பெண்கள் தொடர்ந்து தொல்லைக்குள்ளாக்கப்படுகின்றனர்,மார்ச் மாதம் மேலும் இரு பெண்கள் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று பெண்கள் அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது.

சமீபத்தில் மீண்டும் எடுக்கப்பட்டுவரும் தேடுதல் நடவடிக்கைகளில், ஜெயக்குமாரி என்ற பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே காலகட்டத்தில், மார்ச் மாதம் 11ஆம் திகதி ,சர்மிளா கஜீபன் என்ற 26 வயது, கர்ப்பிணிப் பெண்ணை படையினர் கைது செய்து மறுநாள் 12 ஆம் திகதி ரயில் மூலமாகப் கொழும்பில் உள்ள குற்றத் தடுப்புப் பிரிவிற்கு (நாலாம் மாடி) கொண்டு சென்றனர் என்று பெண்கள் செயல்பாட்டு அமைப்பு என்ற தன்னார்வ நிறுவனம் கூறுகிறது.

அந்த வேளை, இந்தத் திடீர் கைது மற்றும் விசாரணைகள் காரணமாக மூன்று மாதக் கர்ப்பமாக இருந்த சர்மிளாவின் கரு 14 ஆம் திகதியன்று காலை கலைந்து விட்டது என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.

இருப்பினும் அந்த நிலைமையில் சாதாரணமாக ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ உதவிகளோ, மருத்துவ கவனிப்போ அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது. மாறாக அதே நிலைமையில் கொழும்பில் இருந்து மீண்டும் ரயில் மூலமாக, அவரை பூஸா தடுப்பு முகாமுக்குக் கொண்டு சென்றுள்னனர். பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருக்கு எவ்விதமான அடிப்படை வசதிகளும், மருத்துவ உதவிகளும் வழங்கப்படவில்லை. ஆனால் தொடர்ந்து அவர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

சந்தேகத்தின் அடிப்படையிலேயே சர்மிளா கஜீபனைக் கைது செய்துள்ளதாகக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கோபி என்ற நபரின் மனைவியே சர்மிளா என்றும், கோபி இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்காகவே சர்மிளாவைத் தாங்கள் கைது செய்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தனது கணவனுடைய பெயர் கஜீபன் எனவும், அவர் கிளிநொச்சி இயக்கச்சியைச் சேர்ந்தவர் எனவும், சவூதி அரேபியாவில் தொழில் செய்துவிட்டு நாடு திரும்பியவர் என்றும் சர்மிளா கூறுகின்றார்.

இவ்வாறே கஜீபனின் தாயாராகிய செல்வநாயகி இராசமலர் என்ற 63 வயது பெண்ணையும் கைது செய்து பூஸா முகாமில் தடுத்து வைத்திருக்கின்றனர். தனது மகனுடைய பெயர் கோபி அல்ல என்றும், கஜீபன் என்பவரே தனது மகன் என்றும் அவரும் கூறுகின்றார். செல்வநாயகி இராசமலர் யுத்த காலத்தில் ஷெல் வீச்சுச் சம்பவம் ஒன்றில் காயமடைந்துள்ளார். இவருடைய உடலில் ஈரலுக்கு அருகில் ஷெல் துண்டு ஒன்று எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றது. அறுவைச் சிகிச்சையின் மூலமாகவும் அதனை அகற்ற முடியாது என்ற காரணத்தினால், அவருக்கு தொடர்ச்சியாக மருத்துவ உதவி அவசியமாக இருக்கின்றது. அப்படி இருந்தும் பூஸா தடுப்பு முகாமில் இவருக்கும் எவ்வித மருத்துவ உதவியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.

இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக இல்லாது ஒழிக்கப்பட்டது என அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது புலிகள் மீள்எழுச்சி பெறுவதாகக் கூறி இராணுவம் மீண்டும் ஆங்காங்கே சுற்றிவளைப்புகள், தேடுதல் நடவடிக்கைகள் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது என்று இந்த அமைப்பு கூறுகிறது.

இந்த இராணுவ நடவடிக்கைகளின்போது, ஆண்கள், பெண்கள், வயோதிகர்கள், சிறுவர்கள் என வயது, பால் வித்தியாசமின்றி பலரையும் இராணுவம் கைது செய்து வருகின்றது என பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு குற்றம் சாட்டுகிறது.

சுற்றி வளைப்புக்கள் மற்றும் தேடுதல்களின்போது கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  அஜித் ரோகணவிடம் வினவியபோது, இதுவரையில் ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

பயங்கரவாதம் மீண்டும் இந்த நாட்டில் உருவாகுவதற்கும், இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தி, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு காரியங்களை மேற்கொள்பவர்களுக்கு, இவர்கள் எல்லோரும் பாதுகாப்பும் உதவிகளும் வழங்கியிருக்கின்றார்கள். இதற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.
தங்களால் கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் எவருக்கும் கருச்சிதைவு ஏற்படவில்லை என்றும், பயங்கரவாதப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளரும் அத்தகைய சம்பவம் இடம்பெறவில்லை என்று தங்களுக்குக் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

'கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் அனவைரும் அரசாங்கத்தின் தடுப்பு முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய உறவினர்களோ, சட்டத்தரணிகளோ யார் வேண்டுமானாலும் அவர்களைச் சென்று பார்வையிடலாம். இவர்களை மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆணைக்குழுவினர் போன்றவர்கள் சென்று பார்வையிட்டுள்ளார்கள். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகள் என்பன செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வாறான வசதிகள் கிடைக்கவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும்' என்றும் அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .