2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கோட்டாபய அரசியலுக்கு வரவேண்டும் : மனோ

Kanagaraj   / 2014 ஜூலை 02 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய, நாளை அமைச்சர் கோட்டாபயவாக மாறி, பகிரங்க அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்பதுடன், தம்பியின் விருப்பத்தை புரிந்துகொண்டு, உரிய அழைப்பை அண்ணன் விடுக்க வேண்டும் என நான் பகிரங்கமாக கோருகிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை  பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;

ஜனாதிபதி அழைப்பு விடுத்தால், தான் அரசியலுக்கு வருவதற்கு தயார் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். உண்மையில்  கோட்டாபய ஏற்கனவே திரைமறைவு அரசியலில் இருக்கிறார். ஆகவே இனிமேல் அவர் பகிரங்க அரசியலில் இறங்கவேண்டும். அவரது இந்த கருத்தை நான் சாதகமாக பார்க்கின்றேன்.

இதுவரை கேள்விகளுக்கு பதில் கூறாத திரைமறைவு அரசியல் செய்துவரும் கோட்டாபய,  இனிமேல் பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் பதில் கூறும் நிலைமை இதனால் ஏற்படும். இது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது.

 கோட்டாபயவின் பகிரங்க அரசியல் ஆர்வம் இன்று பகிரங்கமாயுள்ளது. அண்ணன் அழைத்தால் வருகிறேன் என்கிறார். ஆகவே தம்பியை அழைத்து வாருங்கள் என அண்ணனை நாம் கோருகிறோம். இன்று நாடாளுமன்றத்தில் சும்மா இருக்கும் ஒரு தேசியப்பட்டியலை வீட்டுக்கு அனுப்பி விட்டு கோத்தா உள்ளே வரலாம். இந்த நாட்டில் இன்று திரைமறைவில் நடைபெறும் பல விடயங்களுக்கு இது ஓரளவாவது முடிவு கட்டும். 

கேள்வி எழுப்ப நான் இன்று அங்கு இல்லை என்பது ஒரு மனக்குறைதான். ஆனாலும், இங்கே இருக்கும் என் நண்பர் சுரேஷ் உட்பட கெட்டிக்கார எதிரணி எம்.பி.கள் நேரடியாக கோட்டாபயவிடம் கேள்விகள் எழுப்பலாம்.  இன்று கோட்டாபயவை பார்க்ககூட முடியாமல் இருக்கும் ஆளும்கட்சி எம.பி.கள் கூட, கோட்டாபயவிடம் கேள்விகள் எழுப்பலாம் அல்லது நேரடியாக பாராட்டி தேவாரம் பாடலாம்.    

கோட்டா இன்னொன்றையும் சொல்லியுள்ளார்.  தான் அரசியலுக்கு வந்தால், இன்று அரசியலில் இருக்கும் பல   அரசியல்வாதிகளை விட மிக சிறப்பாக பணிபுரிவேன் என அவர் கூறியுள்ளார். இது எதிரணியில் இருக்கும் எங்களை நோக்கி சொல்லப்பட்டது அல்ல. நாங்கள், மக்கள் பிரச்சினைகளை அரங்கத்துக்கு கொண்டு செல்கின்றோம். அதற்காக போராடுகின்றோம். குரல் எழுப்புகின்றோம். ஆனால், அரசு பணியாற்றும் அதிகாரம் எங்களிடம் இல்லை. அது அரசாங்கத்துக்குதான் இருக்கிறது.

இன்று அரசில் உள்ள பல அமைச்சர்கள், மந்திரிகள் சும்மா இருக்கின்றார்கள். நாட்காலிகளை சூடாக்குவதற்காகவே பலர் பாராளுமன்றம் போயுள்ளார்கள். ஜனாதிபதி முதல் பிரதமர் உட்பட பல அரசு தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை  பார்த்துதான்,  கோட்டாபய ராஜபக்ஷ இப்படி கூறியுள்ளார் என நான் நினைக்கின்றேன். 

நாய் மனிதனை கடித்தால் செய்தி இல்லை. ஆனால், மனிதன் நாயை கடித்தால் செய்தி. சாரசரி குடிமக்களுக்கு துன்பம் வருவது சகஜம்,. ஆகவே அது பெரும் செய்தி  இல்லை. ஆனால், பொலிஸாருக்கே துன்பம் வந்துவிட்டது. இது செய்தி. வெள்ளை வான் கடத்தலை விசாரிக்க வேண்டிய பொலிஸார், கடந்த மாதம் வானில் வந்த சிலரால் கடததப்பட்டு கொல்லப்பட்டது நமக்கு தெரியும்.

இன்று தெற்கு கடுகதி சாலையில் ஒரு பிரதியமைச்சரின் வாகனத்தை நிறுத்தி விசாரித்த பொலிஸ் அதிகாரி, பொலிஸாரின் விசாரணையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லி தனது பதவியை இராஜினாமா செய்யும் அளவுக்கு  போய் விட்டார். இது செய்தி. இந்த பொலிஸ் அதிகாரியின்; தனிப்பட்ட வாகனம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. அவரும் தாக்குதலுக்கு உள்ளானார்.

இன்று அது சம்பந்தமான விசாரணை நடைபெறுகிறது. அந்த விசாரணைகளில் சம்பந்தப்பட்ட பிரதியமைச்சரின் தலையீடு  இருப்பதால், பொலிஸ் விசாரணையில் நம்பிக்கையில்லை என பொலிஸ் அதிகாரியே கூறுகிறார். இந்த அளவில் இலங்கை பொலிஸாரின் தாராதரம் சந்தி சிரிக்கும் நிலையில் உள்ளது.  

தென்னாபிரிக்க துணை ஜனாதிபதி ரமபோஷா தலைமையிலான குழு இங்கு வரப்போவதைபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்ற மாதிரி இன்று இலங்கை அரசு நடந்து கொள்கிறது. கூட்டமைப்புடனும், இலங்கை அரசுடனும் பேசித்தான் அவர்கள் இங்கு வரவுள்ளர்கள். அதனால்தான் தென்னாபிரிக்கா, ஐ.நா மனித உரிமை பேரவை தீர்மானத்தின் போது நடுநிலை வகித்தது.

இன்று அரசின் பங்காளிகள் தென்னாபிரிக்காவை தூற்றுகிறார்கள். அரசு தலைமை இதை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது. ரமபோஷா குழுவினர்  தங்களுக்கு தெரியாமல் இலங்கை வருவதைப்போல் அரசாங்கம் சிங்கள மக்களுக்கு காட்டுகிறது. கடைசி தருணத்தில், ஐநா மனிதவுரிமை குழுவுக்கு சொல்வதைபோல், உள்ளே வர விசா இல்லை என்று ரமபோஷா குழுவினருக்கும்  சொன்னாலும் இவர்கள் சொல்வார்கள். அப்படி சொல்லி, சிங்கள மக்களை தூண்டிவிட்டு ஊவா மாகாணசபை தேர்தலுக்கு போனாலும் போவார்கள் என மனோ மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .