2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தடையை நீக்கியதால் புலி வரும்

George   / 2014 ஒக்டோபர் 20 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியமையால் புலிகள் அமைப்பு சர்வதேச ரீதியில் மீளவும் செயற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். ஆனால், அதனை உறுதியாக சொல்ல முடியாது என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையககத்தில் நேற்று திங்கட்கிழமை(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இதனை கூறினார்.

ஐரேப்பிய ஒன்றிய நீதிமன்றம், தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு பதவியேற்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒருவருடம் கடந்து அதாவது 2006 ஆம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீது தடைவிதித்திருந்தது.

இதனையடுத்து புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன.

தற்போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புலிகள் அமைப்பின் மீதான தடை நீக்கப்பட்டாலும் ஏனைய நாடுகளில் அத்தடை தொடர்ந்தும் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அடங்கும் 28 நாடுகளில் மாத்திரம் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

தடையை நீக்கியமையால் இந்த நாடுகளில் புலிகள் அமைப்பினை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவாக மக்களிடம் நிதி திரட்டிவந்திருந்தனர். எதிர்காலத்தில் பலவந்தமாக நிதியை திரட்டலாம்.

இந்நிலையில், புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதையடுத்து இந்த நாடுகளில் மீண்டும் புலிகளுக்கு ஆதரவாக நிதிதிரட்டப்படும் அபாயம் காணப்படுகின்றது என்றார்.

இது தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் சர்வதேச ரீதியில் இராஜதந்திர மட்டத்தில் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

சில நாடுகளில் உள்ள சட்;டம் மற்றும் நீதி முறைக்கு அமைவாக தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கலாம். இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், புலிகள் மீதான தடையைநீக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்தை கோரியுள்ளனர்.

இறுதி தீர்மானம் அந்தந்த நாடுகளுடையது. எனினும், இலங்கையில் இந்த அமைப்பை 2009ஆம் முற்றாக நாம் தோல்வியடைய செய்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதே வேளை, நாடு கடந்த தமிழீழ அமைப்பு தோன்றுவதற்கு 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கறுப்பு ஜூலை முக்கியமான காரணமாகும். அதன்போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அடுத்து இலட்சக்கணக்கான தமிழர்கள்  வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

அப்போதைய அரசாங்கம் கறுப்பு ஜூலை கலவரத்தை தடுத்திருந்தால் புலிகள் அமைப்பு தோன்றியும் இருக்காது இனப்பிரச்சினையும் இந்தளவுக்கு விஷ்வரூபம் எடுத்தும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் 11,000 விடுதலைப்புலி உறுப்பினர்களை புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தியுள்ளோம். விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஆயுதங்களை கீழே வைத்துவிடடு சமூகத்துடன் இணைந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X