2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வடக்கு,கிழக்கு காணி சிக்கல்: மதிப்பீடு பூர்த்தி

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 21 , பி.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

30 ஆண்டுகளாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகளின் காரணமாக விரிவடைந்த காணிச் சிக்கல்களின் குணவியல்புகளையும், அளவையும் மதிப்பீடு செய்யும் நடவடிக்கை பூர்த்தியடைந்துள்ளது என்று கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த மதிப்பிடும் நடவடிக்கை நீதி அமைச்சுடன் இணைந்து ஆசிய அறக்கட்டளை அமைப்பு மேற்கொண்டது.

இரண்டு மாகாணங்களிலும் உள்ள காணி சம்பந்தமான பிரச்சினைகள், சிக்கல்கள் ஆகியவற்றிற்கான தீர்வுகளைப் பெறுவதற்கு வழிசெய்வதற்காக நீதி அமைச்சினால் பிரேரிக்கப்பட்டதன்படி விசேட மத்தியஸ்த சபைகளின் உருவாக்கத்திற்கு உதவியளிப்பதற்காக இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

விசேட மத்தியஸ்த சபைகளின் உருவாக்கமானது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 9.104 பரிந்துரையை நடைமுறைப்படுத்துகிறது.

வடக்கு, கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 27 பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்த துரித மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதோடு, காணிச் சிக்கல்கள் அதிகமானளவு இடம்பெற்றமைக்கான முறைப்பாடுகள், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இனப் பிரதிநிதித்துவத்தின் அமைப்பும், காணி சம்பந்தமான விசேடமான பிரச்சினைகள் ஆகியவற்றையும் கருத்திற்கொண்டு மதிப்பீட்டிற்கான தளங்கள் தெரிவுசெய்யப்பட்டன.

வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் எதிர்கொண்ட பரந்தகன்ற அளவிலான காணிச் சிக்கல்களின் மேலோட்டமான பார்வையை இந்த மதிப்பீடு வழங்குகின்றது. அரச காணிகள் தொடர்பான பிரச்சினைகள், தனியார் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் என இந்தச் சிக்கல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆவணங்கள் தொலைக்கப்பட்டமை, போலியான காணி ஆவணங்கள், மத்திய, மாகாண, மாவட்ட, பிரதேச மட்டங்களில் பதிவேடுகளில் பதிவுகள் காணாமற் போனமை அல்லது அழிக்கப்பட்டமை, இரண்டாமவர் குடியேற்றம், நில ஒதுக்கீட்டில் அத்துமீறல், அதிகாரமளிக்கப்படாதவர்களால் காணிகள் உரிமை மாற்றப்படல், பொய்யான ஆவணங்களூடாக காணிகளின் மாற்றம் ஆகியன காணிப் பிரச்சினை, சிக்கல்கள் இரண்டிலும் உள்ளடங்குகின்றன. இதற்கு மேலதிகமாக, இடம்பெயர்ந்த மக்கள், வீடுகளின் பெண் தலைவர்கள் ஆகியோர் முகங்கொடுக்கும் பலவீனமான நிலைகளையும் இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

காணிப் பிரச்சினைகளையும், சிக்கல்களையும் தீர்ப்பதற்கான விசேட மத்தியஸ்த சபைகளின் உருவாக்கத்திற்கும், இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரிற்குப் பின்னரான சூழலில் வாழ்ந்தும் வரும் மக்களிற்கும், சமூகங்களிற்கும் நிவாரணங்களை வழங்குவதற்காக அவ்வாறான சபைகளின் கருத்தாக்கம், பயிற்சிகள், அமுல்படுத்தல் ஆகியவற்றின் உட்கூறுகளை உருவாக்குவதற்கும் இந்த துரித மதிப்பீடு பின்னணியை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சமூக மட்ட காணிச் சிக்கல்களின் துரித மதிப்பீடு இன் கையளிப்பு நிகழ்வு அண்மையில் நீதி அமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டீ சில்வா, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் ஹெக்டர் யாப்பா உட்படப் பலரின் பிரசன்னத்தில் கொழும்பில் இடம்பெற்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X