2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாடு திரும்பும் அகதிகளுக்கு என்ன உத்தரவாதம்? இந்தியா கேள்வி

George   / 2015 ஜனவரி 31 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விரும்பினால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எத்தகைய உத்தரவாதத்தை இலங்கை அரசாங்கம் அளிக்கும் என இலங்கை தூதரக அதிகாரிகளிடம் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, டெல்லியில் நேற்று வெள்ளிக்கிழமை(30) நடைபெற்றுள்ளது.

இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை இணைச் செயலர் சுசித்ரா துரை தலைமையில் மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை, நிதித் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுவினரும், இலங்கையின் சார்பில் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் துணைத் தூதர் எம்.ஆர்.கே.லெனகாலா தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டனர்.


இது குறித்து வெளியுறவுத் துறை இணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான சையது அக்பருதீன்  ஊடகங்களுக்கு தெரிவிக்கும்போது,


முதலாவது கூட்டம் என்பதால், இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் எத்தகைய வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம் என்பது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் விவாதித்தனர்.


அகதிகளை விருப்பத்தின்பேரில் திருப்பி அனுப்பும்போது அவர்களுக்கு எத்தகைய வசதி, வாய்ப்புகள் இலங்கையில் உள்ளன என்பது குறித்து இந்தியா தரப்பில் கேட்கப்பட்டது. 


இரு தரப்பிலும் சில ஆவணங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதையடுத்து மீண்டும் இரு நாடுகளின் உயரதிகாரிகளும் கூடிப் பேசத் தீர்மானித்துள்ளனர். இதற்கான திகதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இந்திய வெளியுறவுத் துறை தகவல்கள் தெரிவிக்கும்போது,


இலங்கைக்கு விருப்பத்தின்பேரில் திரும்பிச் செல்லும் அகதிகளுக்கு அவர்களின் பூர்வீகப் பகுதியில் வீட்டுவசதி, வாழ்வாதாரத் திட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்க ஐ.நா. அகதிகள் மறுவாழ்வுத் திட்டத்தின்படி சில திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கியுள்ளது.


இத்திட்டங்களைச் செயல்படுத்தும் நிதியத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கியுள்ளது. அதேபோன்ற திட்டங்களை இலங்கை அகதிகளுக்காக இந்தியா உருவாக்குமா? என இலங்கை தரப்பில் கேட்கப்பட்டது.


இதேபோல, இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளுக்கு அந்நாட்டு அரசு எத்தகைய வாழ்வாதார திட்டங்களை வைத்துள்ளது? அத்திட்டத்தின் செயல்பாடு குறித்து ஏதேனும் அறிக்கை தயாரிக்கப்பட்டதா? என்பது குறித்து இந்தியா தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.


2012-ஆம் ஆண்டு  பெறப்பட்ட தகவல்களின்படி, இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள், முகாம்களிலும் வெளியிலும் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் எண்ணிக்கை கொண்ட பட்டியலை இலங்கை தூதரக அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.

இது குறித்தும் மீண்டும் இரு தரப்பிலும் விவாதித்த பிறகு தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு இக்குழுவினர் சென்று அங்கு வசிக்கும் அகதிகளிடம் தாயகம் திரும்புவது தொடர்பாக கருத்துகளைக் கேட்பதென்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன என இந்திய வெளியுறவுத் துறை தகவல்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்திகளில் மேலும் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .