2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கூட்டமைப்புக்குள் விரிசல்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற விளையாட்டுத்திடலில் நடைபெற்ற 67ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக்கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றதையடுத்து கூட்டமைப்புக்குள் கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் இலங்கையின் சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தையும் குற்றத்தையும் புரிந்த சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கும் பொறுப்பும் கடமையும் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உரியதால் இதனை உடனடியாக கூட்டவேண்டும் என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இனியும் ஒரு சிலர் மட்டுமே எமது மக்களின் தலைவிதி பற்றி தீர்மானிக்கும் பரிதாப நிலையை நாம் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம். சுமந்திரன் ஆகிய இருவரும்  இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றது அவர்களின் தனிப்பட்ட முடிவாகும்.

அவ்விருவரும் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இது தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் பங்கேற்பு உகந்ததாக இருக்காது என தானும், மாவை சேனாதிராஜாவும் அவரிடம் கூறியதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என்பது இலங்கையின் அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டதற்கு சமம் என்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதில் பங்குபெறாமல் இருந்து வந்தன என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
ஆனால், இப்போது என்ன அடிப்படையில், என்ன காரணத்துக்காக அவ்விருவரும் கலந்து கொண்டனர் என்பதும் கூட யாருக்கும் தெரியாது என அவர் கூறுகிறார்.

அவர்களின் பங்கேற்புக்கும் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கிறார். சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது எனும் கருத்தும் ஏற்புடையது அல்ல.

தமிழ்த்தேசியக்கூட்டைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதி ராஜா தலைமையிலான தமிழரசுக்கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப், வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளோட், ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி, வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான ந்;டலோ ஆகிய கட்சிகளே அங்கம் வகிக்கின்றன.

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர், 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.

அதில் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ்மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எனவே சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தலைவர்கள் எவரும் பங்குபற்றுவதில்லை என்றும், அந்த நாளை கறுப்பு பட்டியணிந்து துக்க நாளாகக் கடைப்பிடிப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்போது இரா. சம்பந்தனும் முக்கிய புள்ளியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .