2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெள்ளைக்கொடி விவகாரம்: குற்றவாளிகளை பொறுப்பேற்க அரசாங்கம் தயாரில்லை

Princiya Dixci   / 2015 ஜூலை 31 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சந்துன் ஏ.ஜயசேகர

யுத்தத்தில் வெற்றி பெற பங்களித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இராணுவ அதிகாரிகள் மற்றும் வேறு எந்த தரப்பினரையும் எந்வொரு விசாரணைக்கும் உட்படுத்த அனுமதிக்கப்போவதில்லை என்று அறிவித்த அரசாங்கம், வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்தவர்கள் மற்றும் பணம் பறிப்பதற்காக கொலை செய்தவர்கள் தொடர்பில் பொறுப்பேற்ற முடியாது என்றும் குறிப்பிட்டது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை, எதிர்வரும் செப்டெம்பரில் வெளிவந்த பின்னர், சர்வதேச நியமனங்கள் மற்றும் தராதரங்களுக்கு அமைய  நம்பகமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையொன்றை ஆரம்பிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது என அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். 

நேற்று வியாழக்கிழமை (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது கருத்து கூறுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு தொடர்ந்து பேசிய அவர், 'யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து எந்தவொரு வெளிநாட்டுக்குழுவோ அல்லது நீதிமன்றமோ விசாரணை நடத்தாது. ஆனால், சர்வதேச நெறிமுறைகளுக்கும் தராதரங்களுக்கும் அமைவான உள்நாட்டு விசாரணைக்குழுவொன்றினால் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்' என்றார். 

'உள்நாட்டு விசாரணைகளில் குற்றவாளிகளாக இனங்காணப்படுபவர்களுக்கு எதிராக உள்நாட்டு நீதிமன்றங்களிலேயே வழக்கு தொடரப்படும். தருஸ்மன் அறிக்கையின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, யுத்தக்குற்ற விசாரணைகள் நடத்துவதாகவும் குற்றவாளிகளாக  காணப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், சர்வதேச சமூதாயத்துக்கு வாக்குறுதியளித்துவிட்டது' எனவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் நம்பகமான விசாரணைகளை முன்னெடுக்க மஹிந்த அரசாங்கமே வழிசமைத்துக்கொடுத்ததாக குறிப்பிட்ட ராஜித்த,  சர்வதேச சமூதாயம் மற்றும் ஐ.நா முகவரங்கள், இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு மைத்திரி அரசாங்கமே நடவடிக்கை எடுத்தது என்றும் அதனாலேயே ஐ.நா அறிக்கை வெளிவருவது 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது என்றும் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட சமஷ்டி அரசு, வடக்கு - கிழக்கான இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர், தேர்தல் பிரசாரத்தின் போது வானத்தின் கீழ் உள்ள சகலதையும் தருவதாக கட்சிகள் கூறுகின்ற போதிலும் அவற்றை நிறைவேற்றுவதென்பது கடினமானது என்றும் குறிப்பிட்டார். 

தேர்தலின் பின்னர், அமைக்கப்படவுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், தேசத்தின் பாதுகாப்பு, இறைமை, ஆள்புல ஒருமைபாடு என்பவற்றை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு கோர்க்கைக்கும் இணங்கமாட்டாது. புதிய அரசாங்கம், நாட்டில் ஒற்றையாட்சி முறையை பாதுகாப்பதுடன் இன நல்லிணக்கம், ஐக்கியம், பரஸ்பர மரியாதை என்பவற்றை குழப்பும் வகையில் எதையும் செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், சோல்பரி ஆணைக்குழு முறையை முதலில் சிலாகித்து பேசியவர் எஸ்.டபீள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கதான் எனவும் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X