2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேர்தலுக்கு முன்னர் மூவரை விசாரிப்பதற்கு தடை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேனகா மூக்காண்டி

இம்மாதம் 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை, அரசியல்வாதிகளிடம் பொலிஸ் விசாரணைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச ஆகியோருக்கு பாரிய நிதிமோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு விடுத்திருந்த விசாரணைக்கான அழைப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பு நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் எந்தவொரு அரசியல்வாதியிடமும் மேற்படி பொலிஸ் பிரிவு விசாரணை நடத்தக்கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, பொலிஸ் திணைக்களம் மேற்கண்ட முடிவை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரை இன்றும் (12) விமலின் மனைவியான சசி வீரவன்சவை நாளையும் (13) விசாணைக்கு வருமாறு மேற்படி  பொலிஸ் விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், 10ஆம் திகதி  திங்கட்கிழமையன்று தேர்தல்கள் ஆணையாளரைச் சந்தித்த கட்சிகளின் பிரதானிகளில் சிலர், மேற்படி விசாரணைக்கான அழைப்பு தொடர்பில் ஆணையாளரிடம் முறையிட்டனர். இதன்போது தான் அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மஹிந்த தேசப்பிரிய உறுதியளித்திருந்தார்.  

இதற்கமைய, பொலிஸ் மா அதிபரைத் தொடர்புகொண்ட தேர்தல்கள் ஆணையாளர், தேர்தல்கள் முடியும்வரை எந்தவொரு அரசியல்வாதியையும் விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கமைய, விமல், நாமல் மற்றும் சசி ஆகியோருக்கு விடுக்கப்பட்ட விசாரணைக்கான அழைப்பு இரத்து செய்யப்பட்டதுடன், தேர்தல் முடியும்வரை அரசியல்வாதிகளிடத்திலான விசாரணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .