2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அமைதியை பேணுமாறு பொலிஸார் வேண்டுகோள்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்

2012ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் இலங்;கையில் நடைபெற்றுள்ள 11 தேர்தல்களில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தல் எனவும் தேர்தல் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் குறைந்தளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன் அவை தொடர்பில் விரைவாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

கடந்த 2012 ஆண்டிலிருந்து இதுவரை 11 தேர்தல்கள் நடைபெற்றுள்ளதுடன் அதில் 9 உள்ளுராட்சி சபை தேர்தல்களும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் இறுதியாக நடைபெற்ற பொதுத்தேர்தல் என்பன உள்ளடங்குகின்றன.

கடந்த தேர்தல்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இலங்கையில் அமைதியான முறையில் மிகவும் சுமூகமாக இடம்பெற்ற தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. அமைதியான முறையில் தேர்தல் கடமைகளை முன்னெடுக்க பொலிஸார் சிறப்பாக செயற்பட்டார்கள்.  பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள், வேட்பாளர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் என்பவற்றுக்கு நன்றி கூறுகின்றோம்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து நிறைவு பெறும் வரை சுமார் 313 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இவை தொடர்பில் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டனர். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் தேர்தல் வன்முறை தொடர்பில் சுமார் 405 சம்பவங்கள் பற்றி பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 799 பேர் கைதுசெய்யப்பட்டதுடன் சட்டவிரோதமாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட 251 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அமைதியான தேர்தலை நடத்த வேண்டும் என்பதறகாக பொலிஸார் தமது உயிரையும் மதிக்காது கடமைகளில் ஈடுப்பட்டனர். வெலிகம பிரதேசத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவரது கைது துண்டிக்கப்படுமளவுக்கு படுகாயமடைந்தார். எனினும், வைத்தியரின் முயற்சியால் அவரது கை துண்டிக்கப்படும் நிலை தவிர்க்கப்பட்டது.

அமைதியான முறையில் தேர்தலை இலங்கையில் நடத்த முடியும் என சர்வதேச நாடுகளுக்கு நாம் எடுத்துக்காட்டியுள்ளோம்.

அமைதியான தேர்தலை நடத்த ஒத்துழைத்ததை போல தேர்தல் பெறுபெறுகள் வெளியாகியுள்ள இந்த நிலையில் அமைதியாக செயற்படுவதுடன் வெற்றி பெற்றவர்கள் தமது மகிழ்ச்சியை அமைதியான முறையில் வெளிப்படுத்தி அடுத்தவர்களின் உரிமைகள் பாதிக்கப்படாதவகையில் செயற்படுமாறு சகலரையும் கேட்டுக்கொள்கின்றோம் என பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X