2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'தேசியப்பட்டியல் வழங்கியதில் இரகசிய ஒப்பந்தம்'

Gavitha   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் நியமனம் குறித்த சர்ச்சைகளும் விமர்சனங்களும் கிளம்பியுள்ள நிலையில், ஐ.ம.சு.கூ.வின் ஊடாக தேசியப்பட்டியல் நியமனம் வழங்குவது தொடர்பில் இரகசிய ஒப்பந்தமொன்று இருந்ததாக அக்கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

கொழும்பு-03, பம்பலப்பிட்டி, பேர்ல் கிராண்;ட் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக போட்டியிட்டு தோல்வியடைந்த உறுப்பினர்களில் எழுவருக்கு தேசியப்பட்டியல் ஊடாக இடம் வழங்கப்பட்டுள்ளமைக்கு கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. உங்களுக்கு வழக்கப்பட்டுள்ள இந்தத் தேசியப்பட்டியல் நியமனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இது ஏன்?' என்று வினவினர்.

இதற்கு பதிலளித்த ஹிஸ்புல்லா, 'ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் காழ்புணர்ச்சியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமே இதற்கு காரணமாகும்' என்றார்.

அப்படியானால், உங்களுக்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக மட்டும் ஏன் எதிர்ப்பு கிளம்புகிறது? மக்களால் நிராகரிக்கப்பட்டு, தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடம் வழங்குவது முறையானது என நீங்கள் கருதுகின்றீர்களா? என வினவுகையில்,

'நடந்து முடிந்த இந்த தேர்தலில் சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்த என்னைப் போன்றவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லர். காலச் சூழ்நிலை அரசியலால் தோல்வியடையச் செய்யப்பட்டவர்கள்' என்று ஹிஸ்புல்லா பதிலளித்தார்.

'அத்துடன், தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்;பில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் போட்டிடுவோருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் (முன்னாள்) சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த இரகசிய ஒப்பந்தததின் பிரகாரம், இவ்விரு மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றவர்களில் ஒருவர் வெற்றிப்பெற்றால், தோல்வியடையும் மற்றொரு சமுகத்தைச் சேர்ந்தவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறுபவருக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்படும்.

அவ்வாறு இல்லாமல், இவ்விரு மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றவர்களில் எவரேனும் வெற்றிப்பெறாவிடின், ஐ.ம.சு.கூ.வின் சார்பில் கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்றவருக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கவேண்டும் என்பதே அந்த இரகசிய ஒப்பந்தமாகும். அந்த அடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் நானும் (எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா), யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து அங்கஜன் இராமநாதனும் நியமிக்கப்பட்டுள்ளோம்' என்றார்.

தேர்தல் காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா நீக்கப்பட்டு அக்கட்;சியின் பதில் செயலாளராக துமிந்த திஸாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரான சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டு கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக விஸ்வ வர்ணபாலவும் கட்சி மற்றும் கூட்டமைப்பின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர்.

எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல், சுசில் பிரேமஜயந்தவின் கையொப்பத்துடன் தேர்தல்கள் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X