2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

3 சிறுமியர் வன்புணர்வு வழக்கு: புதிய சந்தேகநபருடன் ஆறு பேருக்கும் பிணை

Editorial   / 2017 ஜூன் 13 , மு.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடமலை ராஜ்குமார், பொன்ஆனந்தம், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, மூதூர் பெரியவெளிக் கிராமத்தில், சிறுமியர் மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அறுவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கு, மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.றிஸ்வான் முன்னிலையில், நேற்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.  

தலா, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவித்த நீதவான், மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை, காலை ஒன்பது மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், மூதூர் பொலிஸ் நிலையத்துக்கு வந்து ஒப்பமிடவேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தார்.  இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும், சந்தேகநபர்கள் ஐவருடன், மற்றுமொரு நபரையும், சாட்சியாளர்களாக மேலும் இரண்டு சிறுமிகளையும், பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.  

ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட சந்தேநபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே, ஆறாவது சந்தேகபர், கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். 

சாட்சியாளர்களாக, புதிதாகச் சேர்க்கப்பட்ட இரண்டு சிறுமிகளும், 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவிகளாவர்.  

வழக்கின் 6ஆவது சந்தேக நபர், ஒருவருக்கு அறுவர் என்ற விகிதத்தில், நேற்று (12) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டார். எனினும், பிரதிவாதிகளான மூன்று சிறுமிகளும் அவரையும் அடையாளம் காட்டவில்லை. 

எனினும், புதிய சாட்சியாளர்களான 10ஆம் தர மாணவிகள் இருவருவம், 6ஆவது சந்தேக நபரை, தனித்தனியாக அடையாளம் காட்டியுள்ளனர். 

இதேவேளை, கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில், ஏனைய ஐவரையும் அடையாளம் காட்டுவதற்கு, அச்சிறுமியர் மூவரும் தவறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.  

எனினும், புதிய சந்தேகநபரை, புதிய சாட்சியாளர்களாக ஆஜர்படுத்தப்பட்ட சிறுமிகள் இருவரும் அடையாளம் காட்டினர். 

புதிய சந்தேகநபரான ஆறாவது சந்தேகநபர், வெளிநாடொன்றிலிருந்து வந்தமையால், அவருடைய கடவுச்சீட்டை பொலிஸில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  

புதிய சந்தேகநபரை சுட்டிக்காட்டி, அவரை உங்களுக்குத் தெரியுமா என, புதிய சாட்சியாளர்களான சிறுமிகள் இருவரிடமும் நீதவான் கேட்டபோது, அவர், தங்களையும் அன்றையதினம் அழைத்தார் என்று தெரிவித்தனர். இதனையடுத்தே, கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  

குற்றம் சாட்டப்பட்ட அறுவர் சார்பாக, சட்டத்தரணிகள் எட்டுப்பேரும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பாக 07 சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜராகியிருந்தனர். 

சந்தேக நபரகள் சார்பில் சட்டத்தரணி சாலியும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் ஸ்டெனிஸ்லஸ் செலஸ்டின் தமது வாதங்களை முன்வைத்தனர். 

பொலிஸார் தரப்பில் மூதூர் பொலிஸ் நிலையப் பொலிஸாரும் தமது தரப்பு நியாயங்களை முன் வைத்தனர்.   இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைக் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்குமாறும், அவருடை கடவுச்சீட்டை இரத்துச்செய்யுமாறு குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவிக்குமாறும் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நீதவான் கட்டளையிட்டார்.  

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வுத் திணைக்கள, சட்டவைத்திய பரிசோதனை அறிக்கைகளை, அடுத்த வழக்கு அமர்வின்போது சமர்ப்பிக்குமாறும் குறித்த பிரிவினருக்குக் கட்டளையிட்ட நீதவான், வழக்கை ஜூலை 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.  

மூதூர் பெரியவெளி கிராமத்தில் பாடசாலையில், கடந்த மே மாதம் 28ஆம் திகதியன்று இடம் பெற்ற பிரத்தியேக வகுப்புக்கு சென்றிருந்த, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகள், பாடசாலை கட்டடப்பணிகள் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரால், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.  சம்பவத்தையடுத்து, அப்பகுதி மக்களால் நான்கு பேர் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் ஒருவர் விசாரணையின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .