2024 மார்ச் 30, சனிக்கிழமை

50,000 வீடுகள் அமைக்கும் திட்டம் விரைவில் ஆரம்பமாகும் - நிருபமா ராவ்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ரி.விவேகராசா)

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்கு இந்தியா  பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது அதில் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பமாகும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் வவுனியாவில் தெரிவித்தார்.

மதவாச்சி - மன்னார் மற்றும் ஒமந்தை – பளை ரயில் பாதைகளையும் இந்தியா புனரமைத்து மக்களுடைய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தும். அதற்கும் மேலாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொள்ள சீமெந்து கட்டிடப்பொருட்களும் இந்தியாவினால் வழங்கப்படும் எனவும் அவர் சொன்னார்.

அத்துடன், விவசாய நடவடிக்கைளுக்கு தேவையான உபகரணங்கள், விதைகள் கூட வழங்கப்படும். இவை  அனைத்தும் இலங்கை அரசின் ஊடாகவே வழங்கப்படும் எனவும் ஒமந்தையில் செய்தியாளர்களுடன் பேசியபோது நிரூபமா ராவ் தெரிவித்தார்.

செட்டிகுளம் கதிர்காமர் நிவாரண கிராமம், மற்றும் இந்திய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரால் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வரும் ஒமந்தை, மகிழங்குளம் பிரதேசத்திற்கும் இந்திய குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸை சந்தித்து மாவட்ட நிலைமை குறித்து நிருபமா ராவ் கேட்டறிந்தார்.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர்கள், வடமாகாண ஆளுநர், வன்னி மாவட்ட கட்டளை தளபதி மற்றும் சிரேஷ்ட உயர் அதிகாரிகளும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டிருந்தனர். நகரசபை கலாசார மண்டத்தில் இடம்பெயர்ந்த நிலையில் தங்கியுள்ள மக்களையும் இந்த குழுவினர் சந்தித்தனர்.

குறிப்பாக திருமுறுகண்டி பகுதி, சாந்தபுரம் கிராமத்து மக்கள் தமது நிலைமைகளை இந்திய குழுவினருக்கு எடுத்து கூறினர். வன்னி மாவட்ட எம்.பி சிவசக்தி ஆனந்தனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மக்களுடைய நிலமைகளை தெளிவுபடுத்தினார்.

வவுனியா விஜயத்தை முடித்துக்கொண்ட இந்திய குழுவினர், பகல் 1.30 மணியளவில் கிளிநொச்சிக்கு புறப்பட்டனர். அங்கு அவர்கள் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் முகாம்களுக்கு சென்றதாகவும் அவர்களுடன் உரையாடியபோது தமது பழைய இருப்பிடங்களுக்கு செல்ல ஆவல் கொண்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது என குறிப்பிட்ட நிருபமா ராவ், கடந்த காலத்தில் நடமாடும் இந்திய வைத்திய குழுவினர் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றிய சேவையினை ஞாபகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .