2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வடக்கு, கிழக்கில் வெள்ளம்; 63,386 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 14 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.சுகந்தினி, ஹனீக் அஹமட், எஸ்.மாறன், எம்.சுக்ரி, ஜவீந்திரா, ஏ.ஜே.எம்.ஹனீபா


வடக்கு, கிழக்கில் பெய்துவருகின்ற கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 13,903 குடும்பங்களைச் சேர்ந்த 63,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழையினால் பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.

கிழக்கு மாகாணத்தில் திருக்கோயில், மண்முனைபற்று, வெல்லாவலி, காத்தான்குடி, ஏறாவூர் ஆகிய பிரதேசங்களிலும் வடக்கில் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலுமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

திருக்கோவில் பிரதேசத்தில்  திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 16 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும்  153 குடும்பங்களைச் சேர்ந்த 416 அங்கத்தவர்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் இரண்டாம் பிரிவு வீடொன்று இடிந்து வீழ்ந்துள்ளதுள்ளதுடன், சிறுமியொருவர் காயமடைந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

சாகாமம் மன்னன் குளம் உடைப்பெடுத்துள்ளது. இதனால் சுமார் 450 ஏக்கர் நெற் காணிகள் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டோருக்கு 75 கூடாரங்களை உள்ளிட்ட நிவாரணம்  வழங்குமாறு மாவட்ட செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் மேலும் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் கடந்த 48 மணித்தியாலயங்களில் 162.0 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 400 குடும்பங்களை சேர்ந்த 1,439 பேரும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 20 குடும்பங்களை சேர்ந்த 73 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 3,964  குடும்பங்களை சேர்ந்த 12,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 8,320 குடும்பங்களை சேர்ந்த 33,321 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ளதனால் பல நூற்றுக்கணக்கான நெல் வயல்கள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன.

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் போக்குவரத்திற்கும் மற்றும் ஏனைய இதர சேவைகளுக்கும் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மண்டூர் - வெல்லாவெளி வீதி ஊடாக போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. போரதீவுப்பற்று பிரதேசத்தின் சின்னவத்தை, ஆனைகட்டியவெளி, மற்றும் மாலையர்கட்டு ஆகிய கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இக்கிராம மக்கள் தோணிகள் மூலம் தமது போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் முதலையின் அச்சத்தினால் தோணி போக்குவரத்தும் தற்போது இடம்பெறவில்லை.

இதேவேளை, வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் இதுவரையில் மழை வெள்ளம் காரணமாக 986 குடும்பங்களைச் சேர்ந்த 1,719 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வவுனியாவில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருகின்ற நிலையில், வெள்ளம் காரணமாக இதுவரையில் 943  குடும்பங்களைச் சேர்ந்த 1,561 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள இம்மக்கள் 4 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பண்டிக்கெய்த கிராம அலுவலகர் பிரிவிலுள்ள பெரியமடு அம்மன் வித்தியாலயத்தில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேரும் புளியங்குளம் வடக்கிலுள்ள பழைய அரைக்கும் ஆலையொன்றில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேரும் பழையவாடி கிராம அபிவிருத்தி அமைப்பிலுள்ள நலன்புரி நிலையத்தில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேரும்  பிரப்பைமடுக் கிராமத்திலுள்ள பொதுமண்டபமொன்றில் 831 குடும்பங்களைச் சேர்ந்த 1,220 பேரும்  தங்கவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்கு அந்தந்த கிராம அலுவலகர் பிரிவுகளினூடாக சமைத்த உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நிலையத் தகவல்கள் கூறின.

மேலும் வவுனியாவில் பண்டிக்கெய்த கிராம அலுவலகர் பிரிவு, புளியங்குளம் வடக்கு கிராம அலுவலகர் பிரிவு, குளம் கிராம அலுவலகர் பிரிவு, நாவற்குளம், புளியங்குளம் தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் பழையவாடிக் கிராமம் மற்றும் ஆலங்குளம் கிராமம், வவுனியா தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் பிரப்பைமடுக் கிராமம்  ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

பெரியமடுக்குளம், பண்டிக்கெய்தகுளம், நாவற்குளம் ஆகிய குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. புதுக்குளம், கிழவிக்குளம், வவுனியாக்குளம் ஆகிய குளங்கள் வான்பாய்கின்றன. ஏற்கெனவே உடைப்பெடுத்த கதிரவேலர்பூவரசங்குளம், மேற்குளம், துலாவிக்குளம் ஆகிய குளங்களிலிருந்து நீர் மேவிப் பாய்கின்றன.

இது இவ்வாறிருக்க குஞ்சுக்குளம், மூன்றுமுறிப்பு பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அப்பாதையூடான வாகனப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. அத்துடன், வவுனியாவிலிருந்து – குஞ்சுக்குளம், நவ்விக்குளம் கிராமத்திற்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக  வவுனியா அனர்த்த முகாமைத்துவ பிரிவுத் தகவல்கள் கூறுகின்றன. 

கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவிலிருந்து பெய்த அடை மழையைத் தொடர்ந்து 43 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் முரசுமோட்டை கிராம அலுவலகர் பிரிவில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 94 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் முருகானாந்தா அ.த.க.பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் மருதநகர் கிராம அலுவலகர் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் பன்னங்கண்டி அ.த.க.பாடசாலையிலும் முஹமட் முன்பள்ளியிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கச்சார் கிராம அலுவலகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த  14 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் தினேஷ் முன்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நிலையத் தகவல்கள் கூறுகின்றன.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .