2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக நவம்பர் 8இல் பாரிய ஆர்ப்பாட்டம்:ஐ.தே.க

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சுகந்தினி)

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி மாவட்ட ரீதியிலான பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.


20 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஆர்ப்பாட்டங்களில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்குபற்றுவதுடன் சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் குரல் எழுப்பவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் சரத் பொன்சேகா தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, திஸ்ஸ அத்தநாயக்க இதனைக் கூறினார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர், "சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஐ.தே.க கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை. மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐ.தே.க உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்றைய ஆர்ப்பாட்டம் குறித்து ஐ.தே.கவுக்கு நேற்று முந்தினம் இரவே அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட சிவில் அமைப்புக்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றதால் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி சிவில் அமைப்புக்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க ஐ.தே.க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில்,  சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் திகதி தேசிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிகளும் மத வழிபாடுகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .