2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தலைமைத்துவ பயிற்சியில் 82% மாணவர்கள் பங்கேற்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஒலிந்தி ஜயசுந்தர)

பல்கலைக்கழக மாணவர்களுக்காக நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆரம்பமான தலைமைத்துவ பயிற்சி நெறியில் 82 சதவீதமான மாணவர்கள் பங்கேற்றிருந்ததாக உயர்க் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் தலைமைத்துவ திறமை மற்றும் நல்ல சிந்தனையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி நேற்று முன்தினம் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைகழகங்களுக்கு செல்வதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கே இந்த தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுகிறது.  இந்நிலையில், இப்பயிற்சிக்கு முதல் தொகுதியினராக சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகளவானோர் பயிற்சிக்காக சமூகமளித்திருந்தனர் என்றும் இவர்களுக்காக சுமார் இரண்டு வார காலங்கள் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் உயர்க்கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்க் கல்வியமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இணைந்தே இந்த தலைமைத்துவ பயிற்சி செயற்றிட்டத்தை முன்னெடுக்கின்றது.

தலைமைத்துவப்பயிற்சி இம்முறை மூன்று கட்டங்களாக 22 மத்திய நிலையங்களில் நடைபெறுகின்றது. முதல் கட்டமாக 10 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். இந்த பயிற்சி ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு அளிக்கப்படவுள்ளது.

இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் 16ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் முதலாம் திகதிவரை நடைபெறும். மூன்றாவது கட்டம் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிவரை நடைபெறும் என்று உயர்க்கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்து பல்கலைகழகங்களுக்கு செல்வதற்கு தகுதியடைந்த மாணவர்களுக்கே இந்த பயிற்சியளிக்கப்படுகின்றது.

இவர்கள் 2012ஆம் ஆண்டு பல்கலைகழகங்களுக்கு உள்ளீர்த்திருக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் வெட்டுப்புள்ளி பிரச்சினையினால் அவர்கள் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X