2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால்

Princiya Dixci   / 2016 ஜூலை 09 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயிரம் நிலவே வா திரைப்படத்தில் அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே... என்ற வரியுடன் பாடலொன்று தொடங்கும். அந்த வரி முடிவடைந்ததும், 'எப்பிடி எப்பிடி?' என்று இடையீட்டு குரல் ஒன்று ஒலிக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் இரகசியங்களை வெளியிடப் போவதில்லை என்று அக்கட்சியின் தவிசாளர் அறிவித்திருக்கின்ற சூழ்நிலையில் அப் பாடலை ஒலிக்கவிட்டால், 'அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே' என்று பசீரும் 'எப்பிடி எப்பிடி' என்று நடுவில் றவூப் ஹக்கீமும் பாடுவார்கள் போல.

100 சதவீதம் சுத்தமான அரசியல்வாதி என்று முஸ்லிம் அரசியலில் யாரையும் காண்பது கடினம். சாக்கடைக்குள் இறங்கிப் போனாலும் கடந்து போனாலும் அதன் தாக்கம் இருக்கவே செய்யும். அந்த அடிப்படையில் பார்த்தால், ஈரோஸ் என்ற ஆயுத இயக்கத்தின் ஊடாக அரசியலுக்குள் நுழைந்த பசீர் சேகுதாவூத் மிகத் தூய்மையான ஓர் அரசியல்வாதியா என்பது விமர்சனத்திற்குரியது. இதை அவரே ஏற்றுக்கொள்வார். மு.கா.வுக்குள் வந்தபிறகு 'நான் பல விடயங்களில் தவறிழைத்திருக்கின்றேன். ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் பிரதான இலக்கான தனி அடையாள அரசியலை சிதைய விடவில்லை. இன்று நான் மனம் உணர்ந்து திருந்தியிருக்கின்றேன். ஆனால் இதைவிடப் பெரிய தவறுகளையும் சமூகத் துரோகங்களையும் மேற்கொண்ட தலைமைத்துவம் இன்னும் தன்னை சுயவிசாரணை செய்து கொள்ளவில்லை. எனவே, என்னைப் பற்றி யார் என்ன நினைத்தாலும். நான் செய்த தவறுகளுக்காக சமூகம் என்னைத் தண்டித்தாலும். அதைக் காட்டிலும் பெரிய துரோகங்களைச் செய்தவர்களுக்கு சமூகத்தின் தண்டனையை பெற்றுக் கொடுக்காமல் ஓயமாட்டேன்' என்ற நிலைப்பாட்டிலேயே பசீர் இருப்பதாக, அவருக்கு மிக நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

மு.கா.வுக்குள் ஏற்பட்டிருக்கின்ற அண்மைக்கால முரண்பாடுகளைத் தொடர்ந்து தவிசாளர் பசீர், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் றவூப் ஹக்கீமை தூக்கி வாரிப்போட்டது. செயலாளர் ஹசன்அலியின் பக்கம் தான் ஏன் நிற்கின்றேன் என்று அவர் அந்த நெடுங்கடிதத்தில் விளக்கம் அளித்திருந்தார். பாலமுனை மாநாட்டில் வீராப்பு பேசிவிட்டுப் கொழும்புக்கு போன ஹக்கீம், செயலாளர் ஹசன்அலிடம் கிட்டத்தட்ட கெஞ்சும் நிலைக்கு இட்டுச்சென்ற இரண்டு மூன்று காரணங்களுள் இக்கடிதமும் ஒன்று எனலாம். அதற்குப் பிறகு பசீரின் பக்கத்தில் மயான அமைதி நிலவியது. அப்பொழுது திடீரென ஓர் அறிக்கை விட்டார். பிரதிநிதித்துவ அரசியிலில் இருந்து விலகிக் கொள்வதாகவும் தொடர்ந்தும் தனித்துவ அடையாள அரசியலை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடப் போவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தவிசாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவிக்கவே இல்லை. எம்.பி. பதவி தேவையில்லை செயலாளருக்குரிய அதிகாரங்களை மீளத் தாருங்கள் என்று ஹசன்அலி பகிரங்கமாகச் சொல்லிவிட்ட நிலையில், பசீர் முற்றாக பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளவும் தவிசாளராக தொடர்ந்து இருக்கவும் எடுத்த முடிவு என்பது சாணக்கியத்திற்கும் சகபாடிகளுக்கும் „ஏதோ நடக்கப் போகின்றது... என்ற உள்ளச்சத்தை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும். எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரி நடித்தாலும், அடியின் கனதியை மக்கள் நன்குணர்வார்கள்.

பசீர் மேற்படி அறிக்கையை விட்ட பிறகு, பல்வேறு அனுமானங்கள் பொதுத் தளத்தில் வெளியாகி இருந்தன. மிக முக்கியமாக, மு.கா. தலைவர் பற்றி சமூகத்திற்கு தெரியாத பல இரகசியங்கள், அந்தரங்கங்களை தவிசாளர் அம்பலப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஹக்கீமை நிலை குலையச் செய்வதற்கான கருவியாக அவர் பற்றிய மறைக்கப்பட்ட விடயங்கள் பயன்படுத்தப்படும் என்று அனுமானிக்கப்பட்டது. ஒரு சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு மூன்று பேரில் ஒரு உதவியாளன் வழக்காளி தரப்பு சாட்சியாளராக (அப்புறுவறாக) மாறினால், பிரதான நபரை அவன் எவ்வாறு காட்டிக் கொடுப்பானோ கிட்டத்தட்ட அவ்வாறு பசீர் சேகுதாவூத் எல்லா இரகசியங்களையும் மக்கள் மன்றத்தில் கூறி சந்தி சிரிக்கச் செய்வார் என்று எதிர்பார்த்தவர்களும் இருந்தனர்.

ஆனால், அதற்குப் பின்னர் கருத்து வெளியிட்ட பசீர், 'எந்தவொரு அரசியல் தலைவரினதும் கண்ணுக்கு தெரியாத தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பில் ரகசியங்கள் எதுவும் தன்வசம் இல்லை' என்று தெளிவுபடுத்தியுள்ளார். 'தனிப்பட்ட அரசியல்வாதிகளின் சபலங்கள் முஸ்லிம் அடையாள அரசியலை பலிகொண்டு விடக் கூடாது என்று மிகக் கவனமாக செயற்பட்ட எனக்கு, மற்றவர்களின் அந்தரங்கங்களை மூலதனமாக்கும் பழக்கம் இல்லை' என்று பசீர் சுட்டிக்காட்டியுள்ளார். பசீர் தலைவருக்கு எதிராக செயற்படுவார் என்றும், அவரது இரகசியங்களை வெளியிடுவார் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பசீரின் இவ் அறிவிப்பு எல்லாவற்றையும் „சப்... என்று ஆக்கி விட்டதே என்று சிலர் நினைக்கலாம். ஹக்கீம் விடயத்தில் பசீர் பயந்து விட்டார் என்று சிலரும் பசீரிடம் இரகசியங்கள் ஏதும் இல்லை என்று வேறு சிலரும் கருதலாம். ஆனால், இதிலிருக்கின்ற கண்ணுக்குத் தெரியாத விடயங்களை உற்றுநோக்கினால், இது பசீரின் சூட்சுமமான காய்நகர்த்தல் என்பது விளங்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், அதாவது ஹக்கீமுடன் பசீர் தேனிலவு கொண்டாடிக் கொண்டிருந்த காலத்தில் ஏற்பட்ட சிறு முரண்பாட்டை அடுத்து தலைவர் பற்றிய இரகசியங்களை வெளியிடப் போவதாக பசீர் அறிவித்திருந்தார். ஆனால், பின்னர் ஏற்பட்ட சமரசத்தையடுத்து அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதுடன் இரகசியங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. இதன்படி நோக்கினால், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பசீரிடம் இருந்த அல்லது அவர் அவ்வாறு குறிப்பிட்ட இரகசியங்கள் இன்னும் வெளியாகவில்லை. இப்போது அழிவடைந்திருப்பதாக அவர் சொன்னாலும் நம்ப முடியாது. எனவே தன்னிடம் அவ்வாறான இரகசியம் எதுவும் இல்லை என்று கூறுவதில் இருக்கின்ற இராஜதந்திரம் மிகவும் நுட்பமான ஒன்றாகவே தெரிகின்றது.

ஓர் அந்தரங்கம் அல்லது இரகசியம் என்பது மற்றவருக்கு தெரியாமல் இருக்கும் வரைக்கும்தான் அதை வைத்திருப்பவர்; பெறுமதியுடையவராக இருப்பார். அதை வெளியிடாத வரைக்கும், „பசீரிடம் நிறைய இரகசியங்கள் இருக்கின்றன. அவர் எதை வெளியிடுவாரோ என்ன செய்வாரோ... என்ற எண்ணம் எதிர்தரப்புக்கு இருக்கும். அதைச் சொல்லிச் சொல்லி பயங்காட்டவும் இயலும். அவ்வாறில்லாமல் வெளிப்படையாக சொல்லிவிட்டால் இரகசியங்களே பலம் பெற்றுவிடும். அதை வைத்திருக்கும் பசீர் பலம் அற்றவராகி விடுவார். எனவே, பசீரிடம் இரகசியம் இருக்கின்றது என்பது ஹக்கீமுக்கு தெரியும். ஆனால் அவ்வாறு இல்லை என்று கூறுகின்றார் என்றால் அதன்மூலம் தலைவருக்கு மறைமுகமாக ஒரு செய்தி சொல்லப்படுகின்றது. அந்த இரகசியங்களை சொல்வதற்கிடையில் திருந்திக் கொள்ளுங்கள் என்ற செய்தியாகவும் அது இருக்கலாம்.

இன்னுமொரு விடயமும் இருக்கின்றது. அதாவது, பசீர் தன்னிடம் இரகசியம் இல்லை என்று கூறுகின்றார். ஆனால் கட்சியை தூய்மைப் படுத்தப் போவதாக அறிவித்திருக்கின்றார். அப்படியென்றால், அதைவிட பலமான இன்னும் ஏதோ ஓர் ஆயுதம் அவரிடம் இருக்கின்றதோ என்று ஹக்கீம் கருதுமளவுக்கு, ஓர் உளவியல் யுத்தத்தை பசீர் தொடுத்திருக்கின்றார். இந்த மனக்குழப்பங்களே அவரை பலவீனப்படுத்தலாம். அத்துடன், பசீர் சேகுதாவூத், தன்னிடம் அரசியல் தலைமைகளின் வாழ்வு பற்றிய தனிப்பட்ட அந்தரங்கங்கள் இல்லை என்று கூறியிருக்கின்றாரே தவிர, பொது வாழ்க்கை பற்றிய இரகசியங்கள் இல்லை என்று கூறவில்லை என்பது கவனிப்பிற்குரியது. றவூப் ஹக்கீம் என்பவர் தனிப்பட்டவர். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் என்பது பொதுமக்களின் உடைமை. எனவே, அதுபற்றிய இரகசியங்கள் அவரிடம் இருக்கலாம், அதை காலம் கனியும் போது அவர் கசியவிடலாம்.

ஹக்கீம் பற்றி மக்களாகிய நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மு.கா. தலைவர் ஒரு மோசடியைச் செய்திருந்தால் அதை வெளியிட வேண்டும். மு.கா. என்கின்ற மக்களின் கட்சியை பயன்படுத்தி, பணத்துக்காகவும் பட்டத்துக்காகவும் மக்களுக்கு கேடான முடிவுகளை எடு;த்திருந்தால் அதை மக்கள் மயப்படுத்த வேண்டியது பசீர், ஹசன்அலி உள்ளடங்கலாக எல்லோரினதும் கடமையாகும். மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பத்தோடு சேர்ந்து கொள்ளையடிப்பது தனிப்பட்ட விடயம் என்று யாரும் விட்டு வைக்கவில்லை. அவ்வாறே, ஹக்கீம் மட்டுமல்ல எந்த அரசியல்வாதிகள் மக்களின் விடயத்தில் மோசடி செய்தாலும், அதை மற்றையவர்கள் வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது சமூகத் துரோகமாகும். தனிப்பட்ட அந்தரங்கங்களை பாதுகாப்பது மிக முக்கியமாகும். அதை வெளியிட வேண்டும் என்று மக்கள் கோரப் போவதும் இல்லை. ஆனால் கட்சித் தலைவர் என்ற நபர் ஏதாவது சுத்துமாத்து வேலை செய்திருந்தால், அது தனிப்பட்ட அந்தரங்கம் அல்ல. அதை இத்தனை காலமும் மறைத்து வைத்திருப்பவர்கள், ஆதரபூர்மாக மக்கள் மயப்படுத்தி மக்களிடத்தே பாவமன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். அந்த வகையிலான போராட்டத்தையே பசீர் சேகுதாவூத் ஆரம்பித்திருப்பதாக கருத முடிகின்றது. தற்போது அவர் இன்னுமொரு இரகசியக் கடிதத்தை தலைவர் ஹக்கீமுக்கு அனுப்பியுள்ளதாக நம்பகமாக தெரிகின்றது. தாறுஸ்ஸலாம் கட்டிடம் தொடர்பான கணக்கு வழக்குகள் பற்றியதாக இக்கடிதம் இருக்கக் கூடும். தாறுஸ்ஸலாமுக்கு அருகிலுள்ள, ஒரு தனியார் காணியை மு.கா. கொள்வனவு செய்தது தொடர்பான ஆவண மோசடி மற்றும் அதில் தொடர்புபட்ட நபர்கள் பற்றியும் இக்கடிதம் பேசியிருக்கலாம். இதற்கு திருப்தியான பதில் தலைவரிடம் இருந்து கிடைக்காத பட்சத்தில், அதை பகிரங்கமாக பசீர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பசீர் சேகுதாவூத் ஒருபுறமிருக்க, கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடிப்பது போல தலைவரும் அவருக்கு நெருக்கமானவர்களும் செய்ததாக கூறப்படும் பல முறைகேடுகள் தொடர்பில் உயர்பீட உறுப்பினர்கள் சிலர் அறிந்து ஆச்சரியப்பட்டுள்ளனர். நீண்டகாலமாக சபலங்கள் தொடக்கம், பணப்பரிமாற்றங்கள் வரையான பல கதைகள் ஆதரமற்றவையாக உலவித் திரிகின்றன. அவ்வாறு எதுவும் நடக்காவிட்டால், வெறுமனே தலைவருக்கு களங்கம் கற்பிப்பதற்காக இதைக் கூறிக் கொண்டிருக்கக் கூடாது. அது உண்மையாக நடந்திருந்தால், அதை மக்களுக்குச் சொல்ல வேண்டியது கட்டாயமாகும். அதை உறுப்பினர்கள் செய்யவில்லை என்றால் மக்களுக்கு பொறுப்புக்கூறும் ஊடகங்கள் அதைச் செய்து விடும். மக்கள் நலன்சார்ந்த அந்தரங்கங்களை வெளியிடுவது பாவமல்ல, புண்ணியமே.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X