2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அமெரிக்க - தலிபான் சமாதான உடன்படிக்கை: ஆப்கானில் அமைதி?

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2020 மார்ச் 05 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதானம் ஏன் வருகிறது, யாருக்காக வருகிறது என்பது தெரியமுதலே சமாதான உடன்படிக்கைகள் கையொப்பமிடப்படுகின்றன. அதில் மக்கள் பங்காளிகளாவதும் இல்லை; அவர்கள் நலன்கள் பிரதிபலிக்கப்படுவதும் இல்லை. ஒரு யுத்தக் களத்தில் சமாதான உடன்படிக்கை, அமைதி, ஆரவாரம், பரிசுகள் என எதிர்பார்ப்புகளோடு விடிகிறது ஆப்கானியப் பொழுதுகள். 

கடந்தவாரம் தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டது. ஆப்கானுக்கு அமைதி திரும்புமா என்பதே எல்லோரினதும் கேள்வியாகும். 

ஆப்கானின் வரலாறு, பிராந்திய நலன்களாலும் பேராசைகளாலும் ஆதிக்கத்துக்கான அவாவாலும் வழிநடத்தப்படுகிறது. இதில், அமைதி யாருக்கானது என்ற வினாவே, தொக்கி நிற்கிறது.   

ஆப்கானிஸ்தான்: ஒரு சுருக்கமான வரலாறு

இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று அழைக்கப்படுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ள அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ், கோகோ ஹராம் போன்றவற்றின் மூலத்தைத் தேடினால், அவை ஆப்கானிஸ்தானில் போய் நிற்கும். இதனாலேயே, ஆப்கானிஸ்தானின் வரலாற்றைச் சுருக்கமாக விளங்குதல் அவசியமாகிறது.

வடக்கே உஸ்பெக்கிஸ்தான், தாஜிகிஸ்தான், வடமேற்கில் துர்க்மேனிஸ்தான், வட கிழக்கில் சீனா, கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான் ஆகியவற்றால் சூழப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான். 

உலகில் இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும் இந்தப் பகுதி, மத்திய ஆசியா என்று அழைக்கப்படுகின்றது. இங்குள்ள 2,000 மைல் நீண்டு அகன்ற ஸ்டெபி புல்வெளிகளுக்கு, ஒரு நீண்ட வரலாறு உண்டு. அதைவிட, அது தன்னுள் இயற்கை வளங்களை உட்பொதித்து வைத்துள்ளது. 

ஆப்கானின் புவியியல் அமைப்பும், அதைச் சூழ்ந்துள்ள நாடுகளின் முக்கியத்துவமும் தவிர்க்கவியலாமல் ஆப்கானிஸ்தானைக் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்தனவாய் மாற்றியுள்ளன. இதன் வடக்கே உள்ள, உஸ்பெக்கிஸ்தானில் உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் இருக்கிறது. 

உலகிலேயே மிக அதிகமான வெள்ளியை தாஜிகிஸ்தான் கொண்டுள்ளது. உலகின் மொத்த யுரேனியத்தில் கால்வாசிக்கு அதிகமானளவு கஜாகிஸ்தானில் புதைந்துள்ளது. 

உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் வளைகுடாவுக்கும் சைபீரியாவுக்கும் அடுத்தபடியாக அதிகளவு இருப்பை கொண்ட நாடுகள், இந்த மத்திய ஆசிய நாடுகளே ஆகும். இதில் முதன்மையானது துர்க்மேனிஸ்தான் (ஏனையவை கசகஸ்தானும் அசர்பைஜானும்). இத்தனைக்கும் நடுவே ஆப்கானிஸ்தான் அமைந்திருக்கிறது. 

1978இல் ஏப்ரல் புரட்சி என்று அழைக்கப்பட்ட ஒரு சதிப்புரட்சியின் விளைவால், சோவியத் ஒன்றியத்தின் ஆதரவு பெற்ற, ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது. 

இதைத் தொடர்ந்து பெண்களுக்கு கல்வி; பெண்களுக்கு வேலைவாய்ப்பு; நிலச்சீர்திருத்தம், மதச்சுதந்திரம் என்பனவற்றை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். 

இது அங்கிருந்த பழைமைவாதிகள், நிலச்சொந்தக்காரர்கள், முல்லாக்கள், பழங்குடி இனங்களின் தலைவர்கள் ஆகியோருக்குப் பாரிய நெருக்கடிகளை உருவாக்கியது. அவர்கள் ஆண்டாண்டு காலமாய் அனுபவித்து வந்த சலுகைகளையும் செல்வாக்கையும் செல்வத்தையும் இழந்தார்கள். 

இதனால் அவர்கள் அரசுக்கெதிராக கிளர்ந்தெழுந்தார்கள்.  அரசுக்கெதிராகப் போராட்டங்கள் தொடங்கியபோது, 1979இல் ஆப்கான் அரசைப் பாதுகாக்க, சோவியத் ஒன்றியம் தனது படைகளை அனுப்பியது. 

கெடுபிடிப்போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலமது. சோவியத் படைகளைத் தோற்கடிப்பதற்காக அமெரிக்கா, தனது ‘திருப்பணி’யைத் தொடங்கியது. 

சோவியத் ஒன்றியத்தைத் தோற்கடிக்க ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதம், இஸ்லாமிய சர்வதேசியம். இது புதிதல்ல என்பனையும் நினைவுறுத்த வேண்டும். 

இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து அராபிய நாடுகளில் எழுந்த வீறுகொண்ட மக்கள் போராட்டங்களையும் கொம்யூனிச எழுச்சியையும் இஸ்லாமிய மதவாதத்தின் துணையுடன் அமெரிக்காவும் கொலனியாதிக்கச் சக்திகளும் அடக்கின. 

இதன்மூலம் தமக்கு ஆதரவான மன்னர்கள், முல்லாக்கள், ஆட்சிகளைத் தக்கவைத்தன. இதை இன்னொரு வகையில், அமெரிக்கா ஆப்கானில் பயன்படுத்தியது. 

சோவியத் படைகளுக்கு எதிராகப் போரிட, இஸ்லாமிய சர்வதேசியவாதம் பயன்பட்டது. அந்நியப் படைகளுக்கு எதிரான புனிதப் போருக்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விடுதலை வீரர்கள், முஜாகிதீன்கள் எனப்பட்டார்கள். இவர்களுக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்தது. 

புனிதப் போருக்காக வந்த உலகின் நாற்பது நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், பாகிஸ்தான் மதரசாக்களில் சித்தாந்தப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் பெற்றார்கள். இங்கு பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகம்.  

இதில் ஒரு பிரிவினர், சிறப்புப் பயிற்சிகளுக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு ஆப்கானியர்கள், ஜோர்தானியர்கள், எகிப்தியர்கள் எனப்பலர் பயிற்சிபெற்றனர். ஆப்கான் முஜாகிதீன்கள் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனை வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். இவர்களை, அமெரிக்க ஜனாதிபதி ‘விடுதலை வீரர்கள்’ என்று புகழ்ந்தார். 

அமெரிக்கா, இந்த முஜாகிதீன்களுக்கு ஆண்டொன்றுக்கு சராசரியாக 65,000 தொன் எடையுள்ள நவீன ஆயுத தளவாடங்களையும் வெடி மருந்துகளையும் தொடர்ச்சியாக வழங்கியபடியே இருந்தது. 

அமெரிக்காவில் சிறப்பு ஆயுதப் பயிற்சி மட்டுமன்றி, அவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை குறித்தும் கற்பிக்கப்பட்டது. 1979இல் ஆப்கானில் மிகச்சிறிய அளவில் இருந்த கஞ்சா பயிற்செய்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்கிப் பெருகியது. புனிதப் போருக்கு நிதி திரட்டுவதற்காக, கஞ்சா பயிர்செய்யும்படி முஜாகிதீன்கள் உத்தரவிட்டார்கள். இதை நெறிப்படுத்தியது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஜ.எஸ்.ஜ ஆகும். 

1981ஆம் ஆண்டு, அமெரிக்காவின் போதைப்பொருள் தேவையில் 60சதவீதத்தை ஆப்கான் நிறைவு செய்தது. இது பின்னர், மெதுமெதுவாக அதிகரித்து உலகின் முக்கியமான போதைப்பொருள் உற்பத்தித் தளமாக ஆப்கானிஸ்தான் மாறியது. இஸ்லாமிய சர்வதேசியவாதம் ஆப்கானில் மய்யம் கொண்டது. 

இந்தக் கருத்துருவாக்கம், உலகின் பல நாடுகளில் உள்ள இளைஞர்களைச் சுண்டி இழுத்தது. பலர் ஆப்கானிய விடுதலைக்காகப் போராட வந்தார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் ஒசாமா பின்லாடன். 

1989இல் சோவியத் படைகள் வெளியேறின. கெடுபிடிப்போரும் முடிந்தது. சோவியத் ஒன்றியமும் துண்டு துண்டுகளாக உடைந்தது. ஆனால், புதிய ஆட்சியை அமைக்கும் போட்டி ஆப்கானில் தொடங்கியது. 

இவ்வேளை தனக்கு ஆதரவான ஆட்சியை அமைக்க அமெரிக்க விரும்பியது. 1994ஆம் ஆண்டு, 50 இளைஞர்களுடன் தனது சொந்த ஊரான கண்டகாரில், பாகிஸ்தான் மதரசாவில் பயின்ற 34 வயதான முல்லா முகம்மது ஓமர், தலிபான் என்ற அமைப்பை உருவாக்கினார். சிறிது காலத்திலேயே 15,000 மாணவர்கள் இவருடன் இணைந்தனர். 

சோவியத் படைகளுக்கு எதிரான யுத்த காலத்தில், இராணுவவாத அதிதீவிர இஸ்லாமியச் சிந்தனையுடைய  புத்தகங்களைச் சுதேசிய மொழியில் அச்சிட்டு, அமெரிக்கா இப்பள்ளிகளில் இலவசமாக விநியோகித்தது. இதன் தாக்கத்தின் விளைவால், மாணவர்கள் தலிபான் அமைப்பில் சேர்ந்தார்கள். 

இவர்களுக்கான முழுமையான ஆதரவை, பாகிஸ்தானின் உளவு அமைப்பின் ஊடாக, அமெரிக்கா வழங்கியது. 1996 செப்டெம்பரில் தலைநகர் காபுலில் தமது அரசை தலிபான்கள் அமைத்தார்கள்.    

ஆப்கான் மீதான போர்: பரிமாணங்கள்

தலிபான்களை அங்கிகரிக்க, அமெரிக்கா விரும்பினாலும் அவர்களது செயல்களும் சர்வதேசிய ரீதியான கண்டனங்களும் இதைச் செய்யத் தடையாக இருந்தன. ஆனால், அமெரிக்காவின் செல்வாக்கு ஆப்கானில் இருந்தது. 

மத்திய ஆசியாவின் எண்ணெய் மீது, நீண்டகாலம் குறிவைத்திருந்த அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள், ஏதாவது ஒரு வகையில், ஒரு குழாய் மூலம் மத்திய ஆசிய எண்ணெய்யை ஐரோப்பாவுக்குக் கொண்டுவர முடிவுசெய்தன. முன்னாள் சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த நாடுகளை இலகுவில் வளைத்துப்போடலாம் என அவை எதிர்பார்த்தன. ஆனால் அது நடக்கவில்லை. 

கசகஸ்தானில் இருந்து எண்ணெய் பெற்றுக்கொள்ள ஒப்பந்தங்கள் தயாரான வேளை, ரஷ்யா கசகஸ்தானிலிருந்து கருங்கடல் வரை புதிய எண்ணெய்க் குழாய் அமைக்கும் திட்டத்தை, கசகஸ்தான் அரசாங்கத்துக்கு முன்மொழிந்தது. இத்திட்டம் கசகஸ்தான் அரசுக்கு அதிக இலாபமுடையது எனக்கண்டுகொண்ட அரசாங்கம், அமெரிக்க நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடவில்லை. 

அதேவேளை ரஷ்யாவின் எண்ணெய்க்குழாய் திட்டம் அவர்களுக்கு சவாலானதாக மாறியது. இது ரஷ்யாவைத் தவிர்த்து, ஐரோப்பாவுக்கு எண்ணெய் கொண்டு செல்லும் ஒரு திட்டத்தை வேண்டி நின்றது. 

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இருந்த அடுத்த தெரிவு, ஈரான் ஊடாகக் கொண்டு செல்வது. ஆனால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் உறவு சரியில்லை. சரி, அப்படியென்றால் ஜோர்ஜியாவின் ஊடாகக் கொண்டு செல்லலாம் என்றால், ஜோர்ஜியாவில் நிலையான ஆட்சி இல்லை; எண்ணெய்க் குழாய்களுக்குப் பாதுகாப்பு இல்லை. 

இதன் விளைவாக உதித்ததுதான் ஆப்கான்-பாகிஸ்தான்-அரபுக்கடல் வழியான எண்ணெய்க்குழாய்ப் பாதை. இதற்கு ஆப்கானிஸ்தான் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 

2001இல் இரட்டைக்கோபுரங்கள் மீதான தாக்குதல், அல். கொய்தா, ஆப்கான் மீதான அமெரிக்கப் போர் எனத் தொடங்கிய கதை எல்லோருக்கும் தெரியும். கடந்த 18 ஆண்டுகளாக, அமெரிக்கப் படைகள் ஆப்கானில் நிலைகொண்டுள்ளன. சரியாகச் சொல்வதானால் புதைமணலில் சிக்கிக்கொண்டுள்ளன. இந்தப் 18 ஆண்டுகளில் அமெரிக்காவால் தலிபான்களை அழித்துவிட்டோம் என்றோ, முழு ஆப்கானிஸ்தானையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டோம் என்றோ, ஆப்கானில் அமைதி திரும்பிவிட்டதென்றோ அறிவிக்க முடியவில்லை. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலைமை மோசமடைந்துள்ளது. தலைநகர் காபுலுக்கு வெளியே எந்தப் பகுதியும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. தலைநகரிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குண்டுகள் வெடித்த வண்ணமே உள்ளன. 

தலிபான்கள் மீளத் தங்களைக் கட்டமைத்துள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவு ஆப்கானியர்கள் மத்தியில் உண்டு.      

இந்தப் போருக்கு அமெரிக்கா இதுவரை 975 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளது. 2,441 அமெரிக்கப் படைவீரர்களும் 1,589 ஏனைய கூட்டுப்படையினரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

2010ஆம் ஆண்டு, தலிபான்களை மொத்தமான அழிக்க முடிவுசெய்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 150,000 வெளிநாட்டுப் படைகளை ஆப்கானில் நிலைகொள்ள வைத்துப் போரிட்டார். கடந்த பத்தாண்டுகளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டோ அல்லது காயப்பட்டோ இருக்கிறார்கள்.  

உடன்படிக்கை: முன்னும் பின்னும்

ஓபாமாவின் திட்டம் தோல்வியடைந்த பின்னணியில், அமெரிக்கா 2012ஆம் ஆண்டு முதல், இரகசியமாகத் தலிபான்களுடன் பேசி வருகிறது. ‘நாங்கள் பயங்கரவாதிகளுடன் பேசுவதில்லை’ என்று அமெரிக்கா வீரம் பேசி வந்தாலும், கடந்த எட்டு ஆண்டுகளாகத் தலிபான்களுடன் சமரசத்துக்கு வரும் முயற்சிகள் நடந்து வந்துள்ளன. 

2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க, கட்டாரின் தலைநகர் டோகாவில், தலிபான்கள் தங்கள் அரசியல் அலுவலகத்தைத் திறந்தார்கள். இதன்மூலம் அனைத்துப் பேச்சுகளின் மய்யமாக டோகா மாறியது. 

டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவாகிய பின்னர், பேச்சுக்கள் கொஞ்சம் வேகம் கொண்டன. அமெரிக்கப் படைகளை மீளப்பெற்றுக் கொள்ள ட்ரம்ப் விருப்பம் காட்டினார். 2018 ஒக்டோபர் முதல் நடந்த பேச்சுகளின் விளைவே கடந்தவாரம் கைச்சாத்திடப்பட்டுள்ள சமாதான உடன்படிக்கை ஆகும். 

இந்த உடன்படிக்கையில் நான்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் 14 மாதங்களில் ஆப்கானில் இருந்து வெளியேறுவதற்கான உடன்பாடும் அதற்கான கால அட்டவணையும். 

ஆப்கானிஸ்தான் மண்ணானது அமெரிக்காவுக்கோ அதன் நட்பு நாடுகளுக்கோ எதிரான சக்திகளுக்கான களமாகப் பயன்படுத்தப்பட அனுமதிக்கப்பட மாட்டாது என்பதற்கான தலிபான்களின் உறுதிமொழி

எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிமுதல் ஆப்கான் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும். 

நிரந்தரமான விரிவான போர்நிறுத்த உடன்படிக்கை. 

உடன்படின்கையின் பின்னரும் தலிபான்களும் அமெரிக்காவும் தொடர்ந்தும் வெவ்வேறு மொழிகளிலேயே பேசுகிறார்கள். தலிபான்கள் இதை ‘அந்நியப் படைகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான உடன்படிக்கை’ என்றார்கள். அமெரிக்காவோ ‘தலிபான்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதை அவர்கள் இறுகப் பற்ற வேண்டும். இது தலிபான்களின் வெற்றி அல்ல’ என்கிறது. 

உடன்படிக்கையின்படி சிறையில் உள்ள 5,000 தலிபான்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் இந்த உடன்படிக்கையில் பங்காளியாக இல்லாத ஆப்கானிஸ்தான் அரசாங்கம், “விடுதலை சாத்தியமில்லை” என்று அறிவித்துவிட்டது. 

இந்த உடன்படிக்கையில் ஆப்கானிஸ்தான் அரசாங்கமோ, ஜனாதிபதியோ பங்காளியாகவில்லை. எனவே, அமெரிக்க நலன்களுக்கு அதன் ஆதரவு பெற்ற அரசு கூட முக்கியத்துவம் அல்ல.  உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவாலேயே தனது ஆயுதபலத்தால் தலிபான்களைத் தோற்கடிக்க முடியவில்லை. 

போர்நிறுத்தங்கள் நிரந்தரமானவை என எதிர்பார்க்கப்பட்டாலும், அவை தற்காலிகமானதாய் அமைவது கடந்த சில தசாப்தங்களில் வழமையாயுள்ளது. அதுவே, இதன் கதியாகவும் இருக்கவும் கூடும்.

ஆனால், அமெரிக்கப் படைகள் மீளப் பெறப்பட்டமை ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்குப் பலம் சேர்க்கும். அவருக்கு நோபல் பரிசும் கிடைக்கலாம். ஆப்கான் மக்களின் எதிர்காலம் பற்றிய கவலை யாருக்கும் இருப்பதாய் தெரியவில்லை. அதையே இந்தச் சமாதான உடன்படிக்கையும் கோடிட்டுக் காட்டுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .