2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அரசியலை ஆட்டிப்படைக்கும் ஜோதிடம்

Administrator   / 2016 டிசெம்பர் 23 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.சஞ்சயன்

இலங்கை அரசியலில் ஜோதிடத்தின் செல்வாக்கு அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது. அரசியல் மாற்றங்கள் நிகழும் போதும், தேர்தல்கள் நடத்தப்படும் காலங்களிலும் ஜோதிடர்களின் கணிப்புகள், குறிப்பாக சிங்கள ஊடகங்களில் அதிகளவில் இடம்பெறுவது வழக்கம்.  

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், அவரது எல்லா நடவடிக்கைகளுமே ஜோதிட ஆலோசனைப்படிதான் செயற்படுத்தப்பட்டன. அந்த ஜோதிடக் கணிப்புதான் அவரது காலையும் வாரிவிட்டது.  

இப்போது, எதிர்காலத்தைச் சரியாகக் கணிக்கும் ஜோதிடர் என்று தன்னை தானே கூறிக்கொள்ளும், ஒருவர், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ள ஜோதிடக் கணிப்பு வீடியோ ஒன்று, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

இந்த ஜோதிடர் வேறு யாருமல்லர், 1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி, இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக கொழும்பு வந்திருந்த போது, அவரைத் தாக்கிய கடற்படை வீரர் விஜிதமுனி ரோகண டி சில்வா தான்.   

அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்ட போது, தனது துப்பாக்கியால் ராஜீவ் காந்தியின் பிடரியில் தாக்கியிருந்தார் விஜயதமுனி ரோகண. அவரது அடி, சரியாக ராஜீவ் காந்தியின் தலையில் தாக்கவில்லை. இதனால் அவரும் தப்பித்தார்; அவரைத் தாக்கிய விஜிதமுனியும் தப்பித்தார்.  

வெயிலின் தாக்கத்தினாலேயே கடற்படை வீரர், மயங்கி வீழ்ந்தார் என்றே அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியாவைச் சமாதானப்படுத்த முயன்றார்.  
எனினும், இலங்கையை வற்புறுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்ததால் தான் ராஜீவ் காந்தியைத் தாம் தாக்கியதாகப் பின்னர், விஜதமுனி ரோகண ஒப்புக்கொண்டார்.  

இராணுவ நீதிமன்றத்தினால் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த இவரை, இரண்டரை ஆண்டுகளிலேயே பொதுமன்னிப்பின் கீழ்விடுதலை செய்தார் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச.   

இந்தியாவுடன் பிரேமதாசவுக்கு இருந்து வந்த பனிப்போர் தான், இவரது விடுதலைக்குக் காரணமாகியது. இல்லையேல் பிற நாடு ஒன்றின் பிரதமரைத் தாக்கியவருக்கு அவ்வளவு இலகுவாக விடுதலை கிடைத்திருக்காது.  

வெளியே வந்த பின்னர், விஜிதமுனி 2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிஹல உறுமயவின் சார்பில் போட்டியிட்டார். அதற்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல்களிலும் போட்டியிட்டார். எனினும், அரசியலில் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.   

ராஜீவ் காந்தியைத் தாக்கியவர் என்ற பிரபலம் மட்டும் அவர், அரசியலில் நிலைத்திருப்பதற்குப் போதுமான தகைமையாக இருக்கவில்லை.  

பின்னர், ஜோதிடம் சொல்லும் பணியில் இறங்கினார் விஜிதமுனி ரோகண. 2013ஆம் ஆண்டு, இவர் சில கணிப்புகளைக் கூறியிருந்தார். அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கமாட்டார் என்பது அதில் ஒன்று.  
மஹிந்த ராஜபக்ஷ மிகப்பலமான நிலையில் இருந்தபோது, அந்தக் கருத்து வெளியானது. அது கேலிக்குரிய விடயமாகவும் பார்க்கப்பட்டது. அடுத்து, இந்தியாவில் பா.ஜ.கவே ஆட்சிக்கு வரும் என்பதையும் இவர் முன்னரே கணித்துக் கூறியிருந்தார்.  

இது போன்ற சில கணிப்புகள் சரியாக இருந்தாலும், இப்போது அவர் வெளியிட்டுள்ள கணிப்பு சரியாக அமையுமா என்ற கேள்வி இருக்கிறது. ஏனென்றால், இவரது ஜோதிடக் கணிப்புக்குப் பின்னால், ஓர் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.  

வரும் ஜனவரி 26ஆம் திகதிக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிருடன் இருக்கமாட்டார் என்பதே அவரது கணிப்பாக இருக்கிறது. அதுமாத்திரம் தான் அவரது கணிப்பு அல்ல.  

மைத்திரிபால சிறிசேனவின் மரணத்தையடுத்து, நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ தமிழ், முஸ்லிம் வாக்குகளைப் பெறாமலேயே வெற்றி பெறுவார். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்பார் என்றும் கூறியிருக்கிறார்.  

ஜோதிடர் விஜிதமுனி ரோகண கூறுவது போன்று, மரணத்தை யாராலும் தடுக்க முடியாது. அதேவேளை, மரணத்தை அவ்வளவு இலகுவாக எவராலும் எதிர்வு கூறவும் முடியாது.   

இங்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆயுள் ஜனவரிக்குப் பின்னர் நீடிக்காது என்று இவர் கூறியிருப்பது சரியானதாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

ஆனாலும், பதவியில் இருக்கும் போது, ஜனாதிபதி மரணமாகின்ற சந்தர்ப்பத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரை, பதவியின் எஞ்சிய காலத்துக்கு புதிய ஜனாதிபதியாக நாடாளுமன்றம் தெரிவுசெய்ய வேண்டும் என்று கூறுகிறது அரசியலமைப்புச் சட்டம்.  தற்போதைய தெரிவில் பிரதமர் ரணிலே இருப்பார் என்பது வௌிப்படையானது. ஏற்கெனவே, இதுபோன்றதொரு சூழ்நிலையை இலங்கை எதிர்கொண்டது.  

1993 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த பிரேமதாச குண்டுத் தாக்குதலுக்குப் பலியானவுடன், பிரதமராக இருந்த 
டி.பி.விஜேதுங்க அந்தப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.   

பிரேமதாச மரணமாகும் போது, தனது பதவிக்காலத்தின் நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். இதனால், டி.பி.விஜேதுங்கவுக்கு எஞ்சிய ஒன்றரை ஆண்டுகள் தான் ஆட்சியில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  

தற்போதைய சூழலில், விஜிதமுனி ரோகண கூறுவது போன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், இன்னொருவர் ( அனேகமாக ரணில் விக்கிரமசிங்க) தான் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுவாரே தவிர, உடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது.  

அவ்வாறு உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியலமைப்பில் கூறப்பட்டிருக்கவில்லை. 
ஜனாதிபதி பதவி திடீரென வெற்றிடம் ஏற்படும் போது, அதனை நிரப்புவதற்கான தெரிவை அரசியலமைப்பு வழங்கியிருக்கின்ற நிலையில், கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவார் என்று கூறியுள்ளமை யதார்த்தத்துக்கு முரணான விடயமாக உள்ளது.  

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எதிரணியினர் கோத்தாபய ராஜபக்ஷவையே வேட்பாளராக நிறுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர், கோத்தாபய ராஜபக்ஷவுடன் ஜப்பான் சென்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், உடுவே தம்மாலோக தேரர், அடுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தான் என்று தெளிவாகவே கூறியிருக்கிறார். 

அந்தளவுக்கு அவரை, அடுத்த ஜனாதிபதியாகப் பிரசாரப்படுத்தும் முயற்சிகள், கூட்டு எதிரணியினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

இப்படிப்பட்ட நிலையில் தான், விஜிதமுனி ரோகணவின் ஜோதிடக் கணிப்பு, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசாங்கத்துக்கும் இது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.  

ஏனென்றால், இதற்குப் பின்னால் ஏதேனும் அரசியல் சூழ்ச்சிகள் இருக்கலாமோ என்ற சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. ஆட்சிமாற்றம் விரைவில் நிகழும் என்று கூட்டு எதிரணியினர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.  

அவர்கள் மத்தியில் இந்த அரசாங்கம் முழுப் பதவிக்காலத்துக்கும் நிலைக்காது, விரைவாகவே தாம் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது.  

மஹிந்த ராஜபக்ஷ, இன்னமும் புதிய கட்சிக்குத் தலைமையேற்கத் தயங்கிக் கொண்டிருப்பதற்கும் இதுபோன்ற ஜோதிட நம்பிக்கைகள் தான் காரணமாக இருக்கக் கூடும்.  

ஆட்சி மாற்றம் நிகழும் என்று நம்பும் கூட்டு எதிரணியினர், இராணுவச் சதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களையும் கூறிவருகின்றனர்.  

நாடாளுமன்றத்திலேயே இராணுவச் சதிப்புரட்சி ஒன்று பற்றிக் கூட்டு எதிரணியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன எச்சரிக்கை விடுத்திருந்தார்.  

இதற்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதிலும், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும், தினேஸ் குணவர்த்தன தனது கருத்தை மாற்றிக் கொள்ளவோ, அதற்காக வருத்தம் தெரிவிக்கவோ, தவறு என்று ஒப்புக்கொள்ளவோ இல்லை.

 எல்லா வழிகளிலும் ஆட்சிமாற்றம் ஒன்றை இலக்கு வைத்தே, காய்களை நகர்த்தி வருகிறது கூட்டு எதிரணி. ஆட்சியை எப்படிப் பிடிக்கப் போகிறோம் என்று கூறாமல் ஆட்சி மாற்றம் பற்றிய கனவுகளை மக்கள் மத்தியில் உருவாக்கத் தொடங்கியிருக்கிறது.  

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது, தனது ஆஸ்தான ஜோதிடராக இருந்த சுமணதாச அபேகுணவர்த்தனவின் சொல்லைக் கேட்டே எல்லாவற்றையும் செய்தார். அரசியல் முடிவுகள் கூட அவரது ஆலோசனையைக் கேட்டே எடுக்கப்பட்டன.  இராணுவ நடவடிக்கைகள் கூட, அப்போது அதிகார கேந்திரமாக விளங்கிய அலரி மாளிகையில் குறித்துக் கொடுக்கப்பட்ட நேரத்துக்கே ஆரம்பிக்கப்பட்டன.  

அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்காக, அலரி மாளிகையில் இருந்து குறித்துக் கொடுக்கப்பட்ட சுபநேரத்தில் தான், திருகோணமலையில் இருந்தும், கொழும்பில் இருந்தும் கடற்படைக் கப்பல்கள் புறப்பட்டுச் சென்றிருந்தன.  அந்தளவுக்கு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலம் ஜோதிடர்களின் கணிப்புகளில் தான் தங்கியிருந்தது.  

அதுபோலவே, மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்தியதும், ஜோதிடக் கணிப்புகள் தான். முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்த அவர் முடிவு செய்ததற்கும் ஜோதிடமே காரணமாக இருந்தது.  ஜோதிடரின் பேச்சைக் கேட்டே அவர் அந்த முடிவை எடுத்தார். இதனால் மஹிந்தவின் தோல்விக்கான பழி, ஜோதிடர் சுமணதாச மீது விழுந்தது.  

அந்தத் தோல்விக்குப் பின்னர், மஹிந்தவின் ஜோதிடர் சுமணதாச, ராஜபக்ஷக்களின் ஆட்சியை இனிமேலும் நாடு தாங்கிக் கொள்ளாது என்பதால் தான், ஜனாதிபதி தேர்தலுக்குத் தவறான நேரத்தைக் குறித்துக் கொடுத்ததாகக் கூறியிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.  

தற்போதைய ஜோதிட எதிர்வுகூறல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  ஏனென்றால், இது ஜனாதிபதியின் உயிருடன் சம்பந்தப்பட்ட விடயமாக மாத்திரமன்றி, இலங்கையின் எதிர்காலத்துடனும் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதால் அரசியல் மட்டங்களில் கலக்கம் அதிகமாகவே இருக்கிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .