2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

அஷ்ரப்: வலிதரும் மரணமும் விலகாத மர்மமும்

Thipaan   / 2015 நவம்பர் 24 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மப்றூக்

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றினைப் புரட்டிப் போட்டவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப். பத்து வருட நாடாளுமன்ற அரசியலினூடாக ஒரு புரட்சியினைச் செய்து முடித்தார். வியப்புக்கள் நிறைந்த அவரின் வாழ்க்கை போலவே, அவருடைய மரணமும் மர்மங்களாலானது.

ஹெலிகொப்டர் விபத்தொன்றில் அஷ்ரப் மரணித்தார். ஆனாலும், அந்த விபத்து, ஒரு சதியாக இருக்குமோ என்கிற சந்தேகம் இன்னுமிருக்கிறது. அதனால், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள், அனைத்து மட்டங்களிலும் இன்றுவரை எழுந்தவண்ணமே இருக்கின்றன.

2000ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி ஒரு சனிக்கிழமை நாள். 9.30 காலைப் பொழுது. பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்திலிருந்து, அஷ்ரப் உட்பட 15 பேருடன், அம்பாறை நோக்கிக் கிளம்பிய, இலங்கை விமானப்படையின் ரஷ்ய நாட்டுத் தயாரிப்பான எம்.ஐ. 17 ரக ஹெலிகொப்டர், 40 நிமிடங்கள் கழிந்த பயணத்தின் போது, ஊரகந்த அரநாயக்க எனும் மலைப் பிரதேசத்தில் வெடித்துச் சிதறியது. அந்த விபத்தில்தான் அஷ்ரப்பும் அவருடன் பயணித்தவர்களும் பலியாகினர்.

அஷ்ரப் பயணித்த ஹெலிnகொப்டரை ஓட்டிச் சென்றவர், கெப்டன் ஷிரான் பெரேரா. சுமார் 7,000 மணித்தியாலங்கள் ஆகாயத்தில் பறந்த அனுவம் கொண்டவர். பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்திலிருந்து ஹெலிகொப்டர் கிளம்பி, கிட்டத்தட்ட 40ஆவது நிமிடத்தில், அஷ்ரப் பயணித்த விமானம் நில மட்டத்திலிருந்து 500 அடி உயரத்தில் (கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம்) மலைப்பாங்கான பகுதியில் பறந்து கொண்டிருந்தது. 15 நிமிடங்களில் கண்டியை அடைந்து விடும் தூரத்தில் இருந்தார்கள். அப்போது, கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை விமானப் படையின் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்ட கப்டன் ஷிரான் பெரேரா, விமானமோட்டிகளுக்கான சங்கேதப் பாசையில் 'ஏiஉவழச ஆமைந ஊhயசடநை' என்றார். 'வானிலை மிகவும் தெளிவாக இருக்கிறது' என்பது அதற்கு அர்த்தமாகும். இப்படிக் கூறி, சில நிமிடங்கள் ஆவதற்குள் கட்டுப்பாட்டு அறையுடனான ஹெலிகொப்டரின் தொடர்பு இல்லாமல் போனது.

இதனையடுத்து, இலங்கை விமானப்படையின் மீட்புப் படையினர் தமது ஹெலிகொப்டர் மூலமாக தேடுதல் நடத்தத் தொடங்கினர். ஹசலக, ரந்தெனிகல மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகள் வரை, அந்தத் தேடுதல் நீண்டது. அப்போதுதான், அஷ்ரப் பயணித்த அந்த ஹெலிகொப்டரின் சிதறிய பாகங்களும், அதனுள் பயணித்தவர்களின் உடல்கள் கருகிய நிலையிலும் ஊரகந்த- அரநாயக்க என்கிற மலைப்பாங்கான காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த விபத்தில்தான் அஷ்ரப் மரணமானார். அவருடன் ஹெலிகொப்டரை ஓட்டிச் சென்ற கப்டன் ஷிரான் பெரேரா, இணை ஓட்டுநர் ஆர்.பி.எஸ்.அந்ராடி ஆகியோரும் பலியாகினர். விபத்து நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் அந்ராடி திருணம் முடித்திருந்தார்.

இவர்களுடன், அஷ்ரப்பின் மெய்ப் பாதுகாவலர் அஜித் விதானகே பெரேரா, பாதுகாப்பு உத்தியோகத்தர்களான சந்தன மற்றும் சாதீக், அஷ்ரப்பின் துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சில் தட்டெழுத்தாளராகக் கடமையாற்றிய பெரியதம்பி, மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் நி‡மதுல்லா, இவர்களுடன் ரவுப்டீன், மௌலானா, அஸீஸ், கதிர்காமத்தம்பி என்று, அந்த விபத்தில் பலியானவர்களின் பட்டியல் நீண்டது.

விமானப் படையைச் சேர்ந்த கோப்ரல் ஜி.ஆர். வீரக்கோன், விமானப் பொறியியலாளர் டப்ளியு.ஏ.ஜே.எஸ். ஆரியசேன மற்றும் டப்ளியு.எம். ரூபசிங்க ஆகியோரும் அந்த விபத்தில் மரணத்தைத் தழுவிக்கொண்டனர்.

விதியை வெல்ல முடியாது என்பார்கள். உண்மையில், விபத்து நடந்த தினத்துக்கு முந்தைய தினமன்று பிற்பகலளவில்தான், ஹெலிகொப்டரில் அஷ்ரப் பயணமாக இருந்தார். ஆனால், சொல்லாமல் கொள்ளாமல் அந்தப் பயணம் இரத்தாகிப் போனது.

அன்றைய தினம், அஷ்ரப்புடன் ஹெலிகொப்டரில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.ஐ.எம். மன்சூரும் பயணிப்பதாக இருந்தார் என்கிற செய்தியை, மு.காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் முழக்கம் மஜீத் நம்மிடம் கூறினார்.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.

'அந்த விபத்து நடப்பதற்கு முந்தைய நாளில்தான் தலைவர் அஷ்ரப் ஹெலிகொப்டர் மூலம் அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்துக்கு செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்தப் பயணத்தில் நானும் இணையவிருந்தேன். அதன்படி, குறித்த தினம் மாலை 5.00 மணியளவில் நானும், இன்னும் சிலரும் பம்பலபிட்டி பொலிஸ் மைதானத்தில் காத்துக் கொண்டிருந்தோம். அங்கிருந்துதான் ஹெலிகொப்டர் புறப்படுவதாக இருந்தது. ஆனாலும், நீண்ட நேரமாகியும் அங்கு தலைவர் அஷ்ரப் வருகை தரவில்லை.

இதனையடுத்து, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அஷ்ரப்பின் உத்தியோகபூர்வ வீட்டுக்கு நாம் வந்தோம். என்னோடு கதிர்காமத்தம்பி உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். அந்த நேரத்தில், வீட்டு மாடிப்படி வழியாக தொலைபேசியில் கதைத்தவாறே அஷ்ரப் இறங்கி வந்து கொண்டிருந்தார். அவரின் கையில் ஏற்பட்ட காயமொன்றுக்காக மருந்திட்டு, வெள்ளை நிறத் துணியால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. தொலைபேசியில் இறக்காமம்

ஹாறூன் என்பவருடன் அஷ்ரப் பேசிக் கொண்டிருந்தார் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. 'வெரி சொறி ஹாறூன், இன்று என்னால் பயணிக்க முடியவில்லை. கையில் காயமொன்று ஏற்பட்டு விட்டது. நாளை இறக்காமம் வருகிறேன்.

முந்நூறு பேருக்கு காலைச் சாப்பாடு ஆயத்தம் செய்யுங்கள்' என்று தொலைபேசியில் தலைவர் அஷ்ரப் கூறினார். ஹாறூன் என்பவர் முஸ்லிம் காங்கிரஸின் இறக்காமம் பிரதேசத்துக்கான அப்போதைய அமைப்பாளராக இருந்தார்.

இதன்போது, அஷ்ரப் அவர்கள் எங்களைக் கண்டதும் 'வாருங்கள்' என்று அழைத்துப் பேசினார். கையில் காயம் ஏற்பட்டதால் இன்று தன்னால் பயணிக்க முடியவில்லை என்கிற விடயத்தை எங்களிடமும் கூறினார். சிறிது நேரத்தின் பின், அஷ்ரப் அவர்களின் வீட்டின் வெளிப்பகுதியில் வந்து அமர்ந்து கொண்டோம். அப்போது, அங்கிருந்தவர்களிடம் நான் கூறினேன் 'தலைவர் நாளைதான் வருவார். எனவே, தரை வழியாக நான் இன்றே ஊருக்குப் போகிறேன்' என்று. அப்போது, அங்கிருந்த கதிர்காமத்தம்பி, 'நானும் உன்னுடன் வருகிறேன் மன்சூர்' என்றார்.

இந்த நிலையில், எனது பெயரைச் சொல்லி அஷ்ரப் அழைத்தார். உள்ளே சென்றேன். 'நாளை ஹெலிகொப்டரில் நீங்களும் வருகிறீர்கள்தானே மன்சூர்' என்று கேட்டார். 'இல்லை சேர், நான் தரை வழியாக ஊருக்குப் போகிறேன். நாளை உங்களை இறக்காமத்தில் சந்திக்கிறேன்' என்றேன். அங்கிருந்த வேறு சிலரும் தரை வழியாகப் பயணிக்கவுள்ளதாகக் கூறினார்கள். அப்போது கதிர்காமத்தம்பியும் என்னுடன் தரைவழியாக வர விரும்பினார். ஆனால், அதை அஷ்ரப்பிடம் சொல்வதற்குத் தயங்கிய நிலையில், என்னைக் கூறுமாறு கண்ணால் சாடை காட்டினார். எனவே, தலைவர் அஷ்ரப்பிடம் 'சேர், கதிர்காமத்தம்பி ஐயாவும் என்னுடன் தரைவழியாக வரப்போகிறாராம்' என்று நான் கூறினேன். 'நோ.. நோ... அவர் என்னுடன்தான் வரவேண்டும். அவர் உங்களுடன் வர முடியாது. நீங்கள் எல்லோரும் தரைவழியாகப் போங்கள்' என்றார் அஷ்ரப்.

'இதனையடுத்து, நாங்கள் இரவோடிராவாகப் புறப்பட்டு - காலை ஊர்வந்து சேர்ந்தோம். தாமதமாக நேரமிருக்கவில்லை. உடனடியாகத் தயாராகி இறக்காமம் வந்து தலைவர் அஷ்ரப்புக்காகக் காத்து நின்றோம். அப்போதுதான் அவர் விபத்துக்குள்ளான அந்தச் செய்தி கிடைத்தது' என்றார் மன்சூர்.

அஷ்ரப்பின் மரணம் குறித்து விசாரணை செய்வதற்காக, அப்போது ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் எல்.எச்.ஜி. வீரசேகர ஆணைக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது, மு.காங்கிரஸின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம், அந்தக் கட்சியின் பிரதிச் செயலாளரும் கல்முனை மாநகரசபை மேயருமான சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்டோர் சாட்சியமளித்திருந்தனர்.  இறுதியில், ஆணைக்குழுவானது விசாரணையை நடத்தி முடித்து, அதன் அறிக்கையினையும் கையளித்தது. ஆயினும், அந்த அறிக்கை இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மு.காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தார். விடுதலைப் புலிகளின் 'மரணப்' பட்டியலில், அஷ்ரப்பின் பெயர் உச்சத்தில் இருந்தது. அதேபோன்று, அப்போதைய அரசில் ஓர் அமைச்சராக அஷ்ரப் இருந்தபோதும், அரசுக்குள் இருந்த சிலருடன் அவர் கடுமையாக முரண்பட்டிருந்தார் என்பதும் இங்கு குறித்துச் சொல்லத்தக்கது.

அஷ்ரப்பின் மரணத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் குறித்து, மு.காங்கிரஸில் உள்ளவர்களும், மு.காங்கிரஸுக்கு எதிரானவர்களும் இன்றுவரை பேசி வருகின்றனர். ஆனால், அதுகுறித்து நடவடிக்கைகள் எவற்றினையும் எடுப்பதற்கான முயற்சிகளை எந்தத் தரப்பினரும் எடுத்ததாகத் தெரியவில்லை.

 

அஷ்ரப்பின் மரணம் குறித்து விசாரணை நடத்திய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவானது, அவருடைய மரணத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களான அவரின் மனைவி, மகன் மற்றும் தாய் ஆகியோருக்கு 80 லட்சம் ரூபாயினை இழப்பீடாக வழங்க வேண்டுமென சிபாரிசு செய்திருந்தது. இதற்கிணங்க, அப்போது சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையானது, அஷ்ரப்பின் குடும்பத்தினருக்கு 70 லட்சம் ரூபாயினை இழப்பீடாக வழங்குவதற்கு அங்கிகாரம் வழங்கியது. இதன்படி, அஷ்ரப்பின் மனைவி பேரியல் அஷ்ரப் 50 லட்சம் ரூபாயினையும், அவருடைய மகன் அமான் 20 லட்சம் ரூபாயினையும் இழப்பீடாகப் பெற்றுக் கொண்டனர். அஷ்ரப்பின் தாயாருக்கு இழப்பீடு வழங்கும் கோரிக்கையினை அமைச்சரவை நிராகரித்து விட்டது.

இதேகாலப் பகுதியில், புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மனைவி, ஹேமா பிரேமதாஸவுக்கும் இழப்பீட்டுத் தொகையொன்று வழங்கப்பட்டது. அந்தத் தொகை வெறும் 06 லட்சம் ரூபாயாகும்.

அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் மு.காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலருக்கும் சந்தேகம் உள்ளமையினை வெளிப்படுத்திக் கொண்டே வருகின்றனர். 2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் காத்தான்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் வைத்து, மு.காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் 'மு.காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பின் மரணம் விபத்தா அல்லது சதியா என்பதை, அப்போதைய அரசாங்கமாவது வெளிப்படுத்த வேண்டும்' என்று கோரிக்கை விடுத்திருந்தமை இந்த இடத்தில் நினைவுகொள்ளத்தக்கது.

இந்த விடயத்தை மு.கா. தவிசாளர் பசீர் கூறிய காலப்பகுதியில், மு.காங்கிரஸ் ஆளுந்தரப்பில் இருந்தது. பசீர் சேகுதாவூத் அந்த அரசில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டிருந்தார். ஆனாலும், இந்த வகையான மேடைக் கோரிக்கைகளுக்கு அப்பால் சென்று, அஷ்ரபின் மரணம் குறித்த விவகாரத்தில் வேறு எதனையும் இவர்களால் செய்ய முடியவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

அஷ்ரப்பைப் பொறுத்தவரை, அவர் - மு.காங்கிஸுக்கு மட்டும் சொந்தமானவரில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்த அதாவுல்லா - அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவர். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் - அஷ்ரப் ஆரம்பித்த மு.காங்கிரஸில் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் விலாசம் பெற்றவர். இன்று வெற்றிலைக் கூட்டணிசார்பாக நாடாளுமன்றம் புகுந்து, பிரதியமைச்சராகப் பதவி வகிக்கும் ஹிஸ்புல்லாவுக்கு அரசியல் அடையாளம் கொடுத்தவர் அஷ்ரப்தான்.

ஆனால், இவர்களில் எவருமே அஷ்ரப்பின் மரணம் குறித்த மர்மம் வெளிப்பட வேண்டும் என்பதில் அக்கறை காட்டவேயில்லை. ஆனால், இந்த விடயத்தில் ஆளாளாளைக் குற்றம் சொல்வதில் மட்டும் குஷியடைந்து கொண்டிருக்கின்றார்கள்.

எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் மு.காங்கிரஸுக்கும் அதன் தலைமைக்கும் தவிர்க்க முடியாததொரு பொறுப்பு உள்ளமையினைத் தட்டிக் கழிக்க முடியாது. அஷ்ரப்பின் மரணத்திலுள்ள மர்மம் குறித்த தெளிவினை, வெளிக்கொண்டு வரவேண்டிய தவிர்க்க முடியாத பொறுப்பு மு.காங்கிரஸுக்கு உள்ளது. இத்தனை காலமும் அந்தப் பொறுப்பினை மேற்கொள்வதற்கு, மு.காங்கிரஸால் ஏன் முடியாமல் போனது என்பதற்கான விளக்கத்தினைக் கூட, முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை முன்வைக்கவில்லை.

ஆனாலும், தற்போதைய காலகட்டமானது, அஷ்ரப்பின் மரணத்திலுள்ள மர்மம் குறித்துப் பேசுவதற்கும், கிளறுவதற்கும் பொருத்தமானதாகும். கடந்த காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள் மற்றும் காணாமல் போகச் செய்யப்பட்ட விவகாரங்கள் அனைத்தும் தோண்டியெடுக்கப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அஷ்ரப்பின் மரணம் தொடர்பிலும், அதனைச் சூழ்ந்திருக்கும் மர்மம் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுதல் அவசியமாகும். அதற்கு முதலாக, அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினைப் பகிரங்கப்படுத்துவற்கான முயற்சிகளை மு.கா. தரப்பினர் மேற்கொள்தல் வேண்டும்.

அதற்கு இப்போதைய காலகட்டத்தினையாவது பயன்படுத்திக் கொள்தல் அவசியமாகும். காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளத் தவறுவோமாயின், நாளைய தலைமுறை இதைச் செய்யாமல் விட்ட பொறுப்புதாரிகளையெல்லாம் நிச்சயம் தூற்றத் தொடங்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .