2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆட்டிப்படைத்த அனர்த்தம்

Menaka Mookandi   / 2016 மே 24 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மேனகா மூக்காண்டி

நாட்டில் தொடர்ந்து நீடித்த மழை காரணமாக, வெள்ளம், மண்சரிவு என பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மத்திய மலைநாட்டைச் சேர்ந்த மக்கள் மண்சரிவினால் இன்னல்களைச் சந்தித்துவரும் அதேவேளை, கொழும்பிலுள்ள மக்கள், பாரியதொரு வெள்ள அனர்த்தத்துக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அரநாயக்க மற்றும் புளத்கொஹுபிட்டிய ஆகிய பிரதேசங்களில், தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் காணப்படுகிறது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன், மேலும் பல பிரதேசங்களிலும் மண்சரிவு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை, இதுவரையில் நீக்கப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புளத்கொஹுபிட்டிய, அரநாயக்க, தெரணியகல, யட்டியாந்தோட்டை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளின் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த மண்சரிவு ஆராய்ச்சி மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார, நிலத்தில் வெடிப்புகள், கோடு விழுதல் மற்றும் சேற்று நீரூற்று போன்றவற்றைக் கண்டால், அவை தொடர்பில் அவதானமாகச் செயற்பட்டு, அவ்விடங்களை விட்டு வெளியேறுமாறும் அறிவித்தார்.

மண்சரிவுக்கு உள்ளான அரநாயக்க பிரதேசத்தின் சாமசர பகுதி, இற்றைக்கு
நூறு வருடங்களுக்கு முன்னர் மண்சரிவுக்கு உட்பட்ட பகுதியாகும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல்துறைப் பேராசிரியர்  கபில தஹநாயக்க தெரிவித்தார்.  எவ்வாறாயினும், சாமசர மலைப் பகுதியில், மற்றுமொரு மண்சரிவு ஏற்படாதென்றே தான் எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்த பேராசிரியர், மண்சரிவொன்று ஏற்படுவதற்கு முன்னர், இயற்கையாகவே ஏற்படக்கூடிய மாற்றங்கள் சில இருக்கின்ற போதிலும், அவை கடந்த நூறு வருடங்களுக்குள் நடந்தேறியிருக்க வேண்டும் எனவும் அதன் பின்னரே அது, மண்சரிவாக வெளித்தோன்றும் என்றும் விளக்கமளித்துள்ளார்.

இதனால், இனிவரும் காலங்களில், சிறியளவில் மண் திட்டுக்கள் உடைந்துவிழக்கூடிய வாய்ப்புக்கள் மாத்திரமே காணப்படும் என்று, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தள ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசிரியர் கூறினார். பாரிய பாறை அடுக்குகளுக்கு இடையில் நீர் வடிந்தோடி, பூமிக்கு அடியிலுள்ள பாறைகள் சிதைவடைந்து, களிமண்களாக உருப்பெருகின்றன. இந்த நடவடிக்கையானது, பல வருடங்களாக இடம்பெறக்கூடிய இயற்கை மாற்றமொன்றாகவே நீண்ட காலமாக இடம்பெறும்.

இருப்பினும், அடிக்கடி மண் அடுக்குகளுக்கிடையில் நீர் வடிந்தோடுவதால், மேற்பகுதியிலுள்ள களிமண், நீருடன் கலந்து வெடிப்புக்குள்ளாவதாலேயே மண்சரிவு ஏற்படுகின்றது என்றும் பேராசிரியர் கபில தஹாநாயக்க சுட்டிக்காட்டினார். அத்துடன், அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவானது, 'கில்லர் லான்ட்ஸ்லைட்' என்று அழைக்கப்படும் கடும் மோசமான மண்சரிவாகவே கருதப்படுகின்றது எனவும் பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பேராசிரியர் கூறுவதைப் பார்க்குமிடத்து, அரநாயக்க மண்சரிவானது, விசேடத்துவம் வாய்ந்த மண்சரிவாகவே கருதப்படுகிறது. மண்சரிவு ஏற்படக்கூடிய எந்தவொரு அறிகுறியும் இல்லாத நிலையிலேயே, இந்த மண்சரிவு திடீரென ஏற்பட்டுள்ளதென்றே அறியப்படுகிறது.

கடந்த சில  தினங்களுக்கு முன்னர் மண்சரிவுக்கு உள்ளான புளத்கொஹுபிட்டிய, தெஹிஓவிட்ட, கடுகன்னாவ போன்ற பிரதேசங்கள், மண்சரிவுக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களாகவே அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.  இருப்பினும், அரநாயக்கவில், மண்சரிவு ஏற்படுவதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. அதனால், அபாய எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கவில்லை. இது தொடர்பில், உரிய தரப்பினரால், தொடர்ந்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது சுனாமி வந்ததைப்போன்றது எனலாம். விசேடமாக, இரவு வேளையிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டதால், அது ஏற்படுத்திய அழிவு மிகப்பெரியது. இதனால், உரிய தரப்பினராலும், அபாயம் தொடர்பில் அறிவிக்க முடியாமல் போயிருக்கலாம். மழை பெய்து ஓய்ந்துவரும்போதே, அரநாயக்கவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான மண்சரிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, யட்டியந்தோட்டை, புளத்கொஹுப்பிட்டிய, ருவன்வெல்ல, கலிகமுவ, வரக்காபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள், மண்சரிவு அனர்த்தம் நிகழக்கூடிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக புளத்கொஹுப்பிட்டிய பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தேத்துகல கிராமம், இதற்கு முன்னர், அதாவது 1989ஆம் ஆண்டிலும் மண்சரிவுக்கு உள்ளாகிய பிரதேசமாகும். அப்போது, 244 பேர் உயிரிழந்துள்ளதுடன் கிராமமொன்றும் முற்றும் முழுதாக அழிந்துபோயிருந்தது.

ஆனால், இவ்வனர்தத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நாளடைவில் மீண்டும் அவ்விடத்திலே குடியேறியுள்ளனர். இப்பிரேதசம், மீண்டும் மண்சரிவு அனர்த்தத்துக்கு உள்ளாகக்கூடிய பிரதேசம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் அறிவித்திருந்தது. எவ்வாறாயினும், களுபான தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டது இதுவே முதல் தடவையாகும். மேற்படி பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகள், மண்சரிவு  ஏற்படக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் மேற்படி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரையில், நாட்டில் மண்சரிவு ஏற்படக்கூடிய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மழை வீழ்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, சரிவுக்குள்ளாகும் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மண்சரிவுக்கு முன்னர், நிலத்தில் வெடிப்பு ஏற்படுவதற்கான கோடுகள் விழும். நீரின் நிறம், சகதியுடன் கூடிய நிறமாக மாறும். மரங்கள் முறிந்து விழுதல் போன்ற மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும். சில இடங்களில், இவ்வாறான அறிகுறிகள் இன்றியே, மண்சரிவுகள் ஏற்படுவதுமுண்டு.

இரவு வேளைகளில் இவ்வாறான அறிகுறிகள் தென்படும் பொது, மக்கள் அது தொடர்பில் அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. அத்துடன், மலைப் பிரதேசமொன்றின் உச்சியில் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படுமிடத்து, அவை தொடர்பில் மலையடிவாரத்தில் உள்ள மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. மண்சரிவென்பது, உடனடியாக நிகழக்கூடிய நிகழ்வாகும். அதனால், சரிவுக்கு இலக்காகக்கூடிய பிரதேசங்களிலுள்ள மக்கள் அகற்றப்பட்டு, துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், கடந்த சில தினங்களில், ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்றே கூறவேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரையில், மண்சரிவு அபாயத்தை அடையாளம் காணக்கூடிய தொழில்நுட்பத்திறன், இலங்கையிடம் போதியளவுக்கு இருக்கின்றதென்றே கூறப்படுகின்றது. இந்நிலையில், மண்சரிவு அபாயமுள்ள இடங்களில், அது தொடர்பான சமிக்ஞைகளை வழங்கக்கூடிய தொழில்நுட்ப வேலைத்திட்டமொன்றை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும்போது, 'சைரன்' சங்கொலியொன்று எழுப்பப்படும். அதன்மூலம், மக்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பில் அறிந்து, அங்கிருக்கு வெளியேற வழிவகுக்கும். ஜப்பான், நோர்வே போன்ற நாடுகளிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மண்சரிவென்பது, இயற்கையின் ஒருவித நடவடிக்கையாகும். இலங்கையில் தற்போது, மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசங்களில் மக்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், தங்களது சொந்த இடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் விட்டுவிட்டு, எங்கு சென்று வாழ்வதென்பதே, இம்மக்களின் பிரச்சினையாக உள்ளது.

இலங்கை அமைந்துள்ள ஆசியாக்  கண்டத்தில், அண்மைக் காலங்களில் ஏற்பட்ட நிலஅதிர்வுகளும், இலங்கையில் இடம்பெற்ற மண்சரிவுகளுக்கு வித்திட்டன என்று கூறலாம். காரணம், ஒரேயடியாகப் பெய்யும் மழையொன்றினால், மண்சரிவொன்று திடீரென்று ஏற்படும் எனச் சொல்லிவிட முடியாது. வரட்சியான காலநிலை நிலவும் போது, ஓரிரு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் மாத்திரமே, அந்த மழை நீர், நிலத்துக்குள் உறிஞ்சப்படும்.

இந்த நீரின் அளவினை ஏற்றுக்கொண்டு, மண் தன்பாட்டுக்கு இருக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன. இருப்பினும், அடுத்த நொடியில் விழும் மழைத்துளியுடன் சேர்ந்து, மண் சரிந்து விழக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. தூங்கிக்கொண்டிருக்கும் மிருகம், திடீரென எழுவது போன்றே, இந்த மண்சரிவையும் கருதலாம். இந்த சந்தர்ப்பத்தில், நிலஅதிர்வொன்றும் ஏற்படுமாயின், நாம் நினைத்துப்பார்க்க முடியாதளவுக்கு மண்சரிவொன்று ஏற்பட வாய்ப்புண்டு.

இதேவேளை, கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் பிரதேசங்களிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிக்கப்படும் போது, நீர்த்தேக்கங்களுக்கு கீழே அமைந்துள்ள மலையடிவாரங்களிலும் மண்சரிவு ஏற்படக்கூடும். அத்துடன், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்கப்படும் போது ஏற்படும் அழுத்தமானது, செயலிழந்துள்ள நிலத்தடி நீர்த்தொகுதிகள், செயற்பட வழிவகுக்கும். இதுவும், மண்சரிவுக்கு வித்திட வாய்ப்புள்ளது.

தொடர் மழை காரணமாக, மலைகள் புடைசூழ அமைந்துள்ள மத்திய மலைநாட்டில், மண்சரிவுகள் ஏற்பட்டு, மக்களுக்கு பாரிய அழிவுகள் நேர்ந்துள்ள இதே காலப்பகுதியில் தான், அதே மழை காரணமாக, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கும் ஒருவகையில், மத்திய மலைநாட்டிலிருந்து பெருக்கெடுத்துவரும் ஆறுகளின் நீர்மட்டமே காரணமாக அமைந்தது எனலாம்.

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக, களனி ஆற்றின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்ததால், கொழும்பின் பல பாகங்கள் வெள்ளத்தால் நிரம்பின. கொலன்னாவ, கடுவெல, வெல்லம்பிட்டிய போன்ற பிரதேசங்களில் 10 அடிக்கும் அதிகமாக நீர் நிறைந்திருந்தது. காசல்ரீ, நோர்ட்டன் மற்றும் கெனியோன் நீர்த்தேங்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டிருந்தமையாலேயே களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கப்பட்டிருந்ததென அறிவிக்கப்பட்டிருந்தது.

களனி ஆற்றின் எதிர்பாரா இடங்களிலிருந்து நீர் வெளியேறியமை மற்றும் நீர் வடிந்தோட காலதாமதமானமை போன்றவற்றுக்கு, தாழ்நிலப் பிரதேசங்கள், சட்டவிரோதமான முறையில் மண்ணிட்டு நிரப்பப்பட்டமையே காரணமாகும் என கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில், உரிய முறையில் காணி முகாமைத்துவம் செய்யப்படாமையே, இந்தப் பிரச்சினைக்கு காரணமாக இருக்கின்றது எனலாம். களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில், உரிய அதிகாரிகளின் அனுமதியின்றி, சட்டவிரோதமான முறையில் காணிகளை மண்ணிட்டு நிரப்புதல், சட்டவிரோத கட்டட நிர்மாணங்கள் போன்றன, பல நூற்றுக்கணக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், வெள்ளநீர் தேங்கியிருக்கக்கூடிய அளவுக்கு நிலம் போதியதாக இல்லாமையால், பெருக்கெடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது மாத்திரமன்றி, அந்நீர் வடிந்தோடவும் காலஅவகாசம் தேவைப்பட்டுள்ளதென இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அறிவித்துள்ளார்.

இப்பிரச்சினையானது, எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய சிக்கலான நிலைமையாகும். இதனால், இனி எந்தவொரு நிர்மாணத்தை மேற்கொள்வதாயினும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற வகையில், புதிய சட்டமூலமொன்றைக் கொண்டுவர தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் யாப்பா, கூறியுள்ளார்.

கடந்த காலங்களில், மேற்படி பிரதேசங்களிலுள்ள தாழ்நிலப் பகுதிகள், பாரியளவில் நிரப்பப்பட்டு, பல நூற்றுக்கணக்கான கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டமைக்கு சில அரசியல் தலையீடுகளும் உள்ளன. சீத்தாவக்க, கொலன்னாவ மற்றும் கடுவெல போன்ற பிரதேசங்களினூடாக, களனி ஆறு பெருக்கெடுத்தமைக்கு இந்த சட்டவிரோத நடவடிக்கையே வித்திட்டுள்ளது. இவ்வாறான வெள்ளநீர்ப் பிரச்சினை, மீண்டும் ஏற்படாமலிருக்க வேண்டுமாயின், சட்டவிரோதக் கட்டடங்கள் அனைத்தையும் உடைத்தெறிவதே சிறந்த தீர்வென்று, உரிய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  எவ்வாறாயினும், அனர்த்தமொன்று வந்தாயிற்று, அதற்கு முகங்கொடுத்தும் முடிந்தாயிற்று. பாதிக்கப்பட்ட மக்கள், தங்களது வாழ்வை மீளக்கட்டியெழுப்ப நாம் இனி என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயலாற்றுவதே காலத்தின் தேவையாக உள்ளது. அத்துடன், இனியும் இப்படியொரு நிலைமை ஏற்படக்கூடாது என்பதே எம்மனைவரதும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .