2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இணக்கப்பாட்டுக்கு பின்னரான எதிர்வினைகள்

Administrator   / 2016 டிசெம்பர் 23 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மொஹமட் பாதுஷா  

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்டிருந்த பிரதான உட்பூசல்களில் ஒன்றாக இடம்பிடித்திருந்த தலைவர் - செயலாளர் நாயகம் முரண்பாடு இப்போது ஓரளவுக்கு இணக்கத்துக்கு வந்திருக்கின்றது.   

அடுத்த பேராளர் மாநாடு நடைபெறும் வரைக்கும் இது தற்காலிகமான ஓர் இணக்கப்பாடாகவே அமையும் என்பதற்குப் புறம்பாக, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அடிப்படையாக வைத்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை சமூக மட்டத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கும் காரணமாகியுள்ளது.   

தனக்கு தேசியப்பட்டியல் ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்டதாலும், கட்சியில் தான் வகித்த செயலாளர் நாயகம் பதவியில் முறையற்ற விதத்தில் அதிகாரக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டமையாலும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் 
எம்.ரி.ஹசன் அலி, தலைவர் ரவூப் ஹக்கீமுடன் முரண்பட்டிருந்தார். 

ஹசன் அலி விடயத்தில் தலைவர் நடந்து கொண்ட விதம் உட்கட்சி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கின்றது என்று கருதிய கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் தலைவருடன் இப்போதும் முரண்பட்டுள்ளார்.   

இவ்வாறிருக்கையில், தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த நடவடிக்கையானது மு.கா தலைவரை முன்னொருபோதுமில்லாத இக்கட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தியதை நாமறிவோம். அதாவது, தலைவரும் ஹசன்அலியும் சமரசமாகிப் போகவில்லை என்றால் கட்சியின் குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் தேர்தல் ஆணைக்குழுவால் மட்டுப்படுத்தப்படுவதோடு, இவ் விவகாரத்தை நீதிமன்றத்தின் ஊடாகவே அணுக வேண்டிய நிலை ஏற்படும். அந்த நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரைக்கும் கட்சியின் தனிஅடையாள செயற்பாடுகள் முடக்கப்படும் வாய்ப்பு இருந்தது.   

ஏனெனில், ஹசன் அலியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டது தேர்தல் ஆணைக்குழுவுக்குப் பிரச்சினையில்லை. ஆனால், அது குறைக்கப்பட்ட விதம், அதனை ஹக்கீம் அறிவித்த முறைமை எல்லாம் ஆணைக்குழுவுக்கு முறையற்றதாக இருந்தது. எனவேதான், ஹசன் அலியை சமரசப்படுத்தியேயாக வேண்டிய கட்டாயத்துக்குள் கட்சித் தலைவர் தள்ளப்பட்டார்.   

அந்த அடிப்படையிலேயே ஹசன் அலிக்கு இப்போது தேசியப்பட்டியல் எம்.பி பதவியைத் தருவது என்றும் அடுத்த பேராளர் மாநாட்டில் அங்கிகாரத்தைப் பெற்று, செயலாளர் நாயகத்துக்கான அதிகாரங்களைத் திரும்பவும் வழங்குவது என்றும் ஹக்கீம் வாக்குறுதியளித்துள்ளார்.   

இதற்குப் பிரதியுபகாரமாகவே தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்திருந்த ஆட்சேபனையை ஹசன்அலி வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். ஹசன் அலியை நம்ப வைப்பதற்காக, தேசியப்பட்டியல் எம்.பியான எம்.எச்.எம்.சல்மானின் இராஜினாமாக் கடிதத்தின் பிரதியும் ஹசன் அலிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சல்மான் இன்னும் இராஜினாமாச் செய்யவில்லை என்று மு.கா சார்பானவர்களே கூறிவரும் நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோன்றிய தலைவர் ஹக்கீம் “இன்னும் ஓரிரு வாரங்கள் சல்மான் எம்.பியாக இருக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.   

இது, ‘ஏற்கெனவே அவர் இராஜினாமா செய்து விட்டார்’ என்ற தகவலில் குழப்பநிலையை ஏற்படுத்தியிருந்தாலும், ஜனவரி ஒன்பதாம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடுகின்ற போது எது உண்மையெனத் தெரியவரும்.  

ஹசன் அலிக்கு எம்.பியைக் கொடுக்கும் முடிவை (?) ஹக்கீம் எடுத்திருக்கின்றார் என்றால் அது வெறுமனே அவரைத் திருப்திப்படுத்தி சமரசப்படுத்துவதற்கு மட்டுமான முயற்சி என்று கருதிவிட முடியாது.   

இப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாவிட்டால் கட்சி, மரச் சின்னத்தில் போட்டியிடுவது சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்தப்படலாம். அதாவது மு.கா தனது சுயத்தை இழக்க நேரிடலாம்.

அதேபோன்று, தேசியப்பட்டியல் எம்.பியை அட்டாளைச்சேனை உள்ளடங்கலாக பல ஊர்களும் தனிஆட்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், ஹக்கீமுக்கு இருக்கின்ற மிகச் சிறந்த தெரிவு ஹசன் அலியே ஆவார். அவருக்கு அப்பதவியை வழங்குவதற்கு பல நியாயங்களை முன்வைக்க முடியும். தனது இந்த முடிவுக்கு ஹசன் அலியின் பிடிவாதமே காரணம் என்று சொல்லவும் முடியும்.   

பஷீர் சேகுதாவூத் தனியேயிருந்து காய்களை நகர்த்தக் கூடியவர் என்பதை ஹக்கீமே நன்கு அறிந்தவராயினும், ஹசன் அலிக்கு எம்.பியைக் கொடுத்து, தனது வழிக்கு எடுத்துவிட்டால், தவிசாளர் பஷீர் சேகுதாவூதை கொஞ்சம் தனிமைப்படுத்தலாம் என்ற எண்ணமும் தலைவருக்கு இருக்கலாம்.   

அதேபோன்று, கிழக்கின் எழுச்சி என்ற கோஷத்தில் ஹசன் அலியின் புதல்வர் அங்கம் வகிக்கின்ற அதேவேளை, அதற்குப் பின்னால் ஹசன் அலியும் இருப்பதாக ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில், அவருக்கு எம்.பியைக் கொடுத்தால் ‘கோஷங்கள், எழுச்சிகள்’ கொஞ்சம் அடங்கிப் போகும் என்று மு.கா தலைவர் நினைத்திருக்கலாம். இது பிழையான கணிப்பு என்று கூறவும் இயலாது.  

 இப்படியான காரணங்களின் அடிப்படையிலுமே ஹக்கீம், ஹசன் அலிக்கு எம்.பி பதவியைக் கொடுக்கும் தீர்மானத்துக்கு வந்திருக்கிறார். இதன்மூலம், தலைவருக்கும் செயலாளர் நாயகத்துக்கும் இடையில் பகைமூட்டித் திரிந்தவர்கள், அறிக்கை விட்டவர்கள் எல்லோருக்கும் கடுமையான உள்காயம் ஏற்படும் தாக்குதல் ஒன்றைக் கட்சித் தலைவர் மேற்கொண்டிருக்கிறார்.   

ஆரம்பம் தொட்டே, சமரசமாகிப் போவதற்கு எம்.ரி.ஹசன் அலி முயற்சி செய்து வந்தார். ஹக்கீம் அணியினர் சொல்வது போல், வேறு கட்சிகளின் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் ஹசன் அலி போயிருந்தால், தலைவர் இதைவிடப் பெரிய சிக்கலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கலாம்.   

ஆனால், ஹசன் அலிக்குப் பல முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருந்திருக்கலாம், என்றாலும் கட்சியை விட்டு வெளியேறும் மனநிலையில் இருக்கவில்லை. “அடிமரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டே இறப்பேன்” என்று ஆரம்பத்திலேயே அறிக்கைவிட்ட அவர், “கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்த மாட்டேன்” என்று பகிரங்கமாகக் கூறியது, மட்டுமன்றித் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரிடமும் அதனைச் சொல்லியிருந்தார்.   

ஆனால், மனம்போன போக்கில், தற்றுணிவை அளவுக்கதிமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற கட்சித் தலைவர், தன்னை மாற்றிக் கொள்ளாவிடில் அவருக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டுமென்ற எண்ணம் ஹசன் அலிக்கு இருந்தது.   

ஆனால், தேர்தல்கள் நடைபெறவுள்ள ஒரு காலச்சூழலில், கட்சிக்குள் முரண்பாடுகள் அதிகரித்துச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம், கட்சி ஆதரவாளர்களைப் போல தலைவருக்கும் செயலாளர் நாயகத்துக்கும் இருக்கின்றது எனலாம்.  

 மிக முக்கியமாக, தான் இணங்கிப் போகாவிட்டால் கட்சி அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்படும் என்றும் அந்தப் பழியெல்லாம் தன்மீதே வந்துவிழும் என்றும் ஹசன் அலி நினைத்தார். இவ்வாறான காரணங்களோடு ஹக்கீமுடைய கோரிக்கைகளுக்கு இணங்கிப் போயுள்ளார்.

அதுமட்டுமன்றி நீண்டகாலத்துக்குப் பிறகு கடந்த புதன்கிழமையன்று முதன்முதலாக கட்சித்தலைமையகமான தாறுஸ்ஸலாத்தில் உள்ள தனது அலுவலகத்துக்குச் சென்றிருக்கின்றார்.   

கட்சித் தலைவர் ஹக்கீமின் வாக்குறுதிகளை நம்பி, அதன்பின்னால் போய், ஏமாந்து விடுவதற்கு ஹசன் அலி தயாரில்லை. ஒரு வருடத்துக்கும் மேலாக இத்தனை நெருக்குவாரங்களைக் கொடுத்த போதும், ஹசன் அலியை சமாளிப்பதற்காக உயர்பீட செயலாளராக நியமிக்கப்பட்ட மன்சூர் ஏ.காதரை அப்பதவியில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கை எடுக்காத கட்சித் தலைமை, “கட்சியின் யாப்பைத் திருத்தி, செயலாளர் நாயகத்துக்கான அதிகாரத்தை ஒப்படைப்பேன்” என்று கூறுவதை கையில் எந்தப் ‘பிடி’யும் இல்லாமல் நம்ப முடியாது என்றே ஹசன் அலி நினைத்திருப்பார்.   

மறுபுறத்தில், “முதலில் அதிகாரங்களை வழங்குங்கள், எம்.பி பற்றி பிறகு பார்க்கலாம்” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லியனுப்பிய ஹசன் அலியை, வெறும் வாக்குறுதிகளால் நம்ப வைக்க முடியாது என்பதை உணர்ந்தே, தேசியப்பட்டியல் எம்.பியை வழங்கும் முடிவை ரவூப் ஹக்கீம் எடுத்திருக்கின்றார் என்று சொல்லலாம்.  

ரவூப் ஹக்கீம் - ஹசன் அலி இணக்கப்பாடு மு.காவை நேசிப்போரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. ஆனால், இவ்விருவரும் மீண்டும் கைகோர்ப்பது கட்சிக்குள் சிலருக்கு வயிற்றைக் கலக்கியுள்ளது. ஹசன் அலி உள்ளே வந்துவிட்டால் தம்முடைய முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று பலர் நினைக்கின்றனர்.   

அதேநேரத்தில், இந்த எம்.பி பதவிக்காக காத்திருந்த ஊர்ப் பொதுமக்களும் தனிஆட்களும் இன்று தம்முடைய எதிர்வினைகளை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைப்பதை வரவேற்போருக்கு சம அளவானோர் அதனை எதிர்க்கின்றனர். இந்நிலைமை, முஸ்லிம் காங்கிரஸுக்குள் இன்னுமொரு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது என்றால் மிகையில்லை.   

கடந்த பொதுத் தேர்தலில் மு.காவுக்கு இரண்டு அல்லது அதற்கும் குறைவான தேசியப்பட்டியல் எம்.பிகளே கிடைக்கும் என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்த கணக்காக இருக்கத்தக்கதாக, அட்டாளைச்சேனை உள்ளடங்கலாக ஏழெட்டு ஊர்களுக்கும் தனிஆட்களுக்கும் தேசியப்பட்டியல் எம்.பி தருவதாகக் கட்சித் தலைவர் சொன்னார். ‘சில வாக்குறுதிகளைக் குறுகிய காலத்தில் நிறைவேற்றலாம்; சிலவற்றை நிறைவேற்ற நீண்டகாலம் எடுக்கலாம்’ என்று, இப்போது வியாக்கியானம் கொடுக்கின்ற தலைவர் ஹக்கீம், அப்போது வழங்கிய எம்.பி தொடர்பான வாக்குறுதியை உடனே நிறைவேற்றுவார் என்றே மேற்சொன்ன எல்லா தரப்பினரும் நம்பினர்.  

 இது எப்படி சாத்தியப்படும் என்று யோசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால், தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஹசன்அலி, பஷீர் சேகுதாவூத், நிசாம் காரியப்பர் ஆகியோருக்குக் கூட அப்பதவியை வழங்காமல் அப்பட்டியலில் இடம்பிடித்திருந்த தனது சகோதரர் டொக்டர் ஹபீஸையும், நண்பர் சட்டத்தரணி சல்மானையும் எம்.பிக்களாக தலைவர் ஹக்கீம் நியமித்திருந்தார்.   

தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஹபீஸ், பல மாதங்களாக அப்பதவியில் இருந்தார். சல்மான் இராஜினாமா செய்துவிட்டார் என்பது சந்தேகமாகவே உள்ளது. ஆனால், இவ்வளவு காலமும், தேசியப்பட்டியல் எம்.பிக்காகக் காத்திருந்த எந்தத் தரப்பினரும் தலைவரின் இந்த நடவடிக்கையை பெரிதாக விமர்சிக்கவில்லை. இதனைச் சாணக்கியம் என்றே பெருமிதம் கொண்டனர்.   

அட்டாளைச்சேனை போன்ற ஊர்கள் ஹக்கீமின் நடவடிக்கைக்கு எதிராக, ஒன்றுதிரண்டு, ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை. 

எம்.எச்.எம். சல்மானின் எம்.பி பதவிக்கு ஒரு வருடம் முடிவடைந்த பிற்பாடும், ஊடகங்களே அதைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தனவே தவிர, மு.காவின் மூத்த உறுப்பினர்கள் யாரும் இதற்கெதிராகக் குரல் கொடுக்கவில்லை. 

 உயர்பீட உறுப்பினர்கள் உயர்பீடக் கூட்டத்தில் இதனைத் தட்டிக் கேட்டுப் பேசியதாக ஞாபகமில்லை. காரணம், தலைவரைப் பகைத்துக் கொண்டால், தம்முடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்று அவர்கள் பயந்தனர். 

தமக்குத் தலைவர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுக்கப் போவதாகக் கொழும்புக்குப் புறப்பட்டுப்போன பலர் அங்கு சென்று, அடக்கி வாசித்து விட்டுத் திரும்பி வந்து அறிக்கை விட்டு சமாளித்தனர் என்பதே உண்மை.   

அதில் ஒரு எம்.பி பதவியே இன்று ஹசன் அலிக்குக் கொடுக்கப்படப் போகின்றது. அப்படிப் பார்த்தால், சல்மானிடம் இருந்து மீளப் பெறுவது கடினம் என்று பலர் நினைத்த ஒரு தேசியப்பட்டியல் பதவியைப் பிடுங்கி எடுப்பதில் ஹசன் அலி வெற்றி காண்கின்றார். அதுமட்டுமன்றி, ஆவேசப் பேச்சுக்களை பேசிவந்த கட்சித் தலைமையை மிகவும் நுட்பமான முறையில் இறங்கிவர வைத்திருக்கின்றார்.

இப் பின்னணியில், செயலாளர் நாயகத்துக்குத் தேசியப்பட்டியல் எம்.பியைக் கொடுக்கக் கூடாது என்று ஒரு தரப்பினர் கோஷமெழுப்புகின்றனர். ‘செயலாளருக்கான அதிகாரமே முதலில் வேண்டும், தேசியப்பட்டியல் எம்.பியை அட்டாளைச்சேனைக்கு கொடுக்கட்டும்’ என்று அறிக்கைவிட்ட ஹசன் அலி, இப்போது அதிகாரத்துக்கு முன்னரே பதவியைப் பெறுவது நல்லதல்ல என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுகின்றது.

இதில் ஹசன் அலி பற்றிய தோற்றப்பாட்டைச் சிதைவடையச் செய்யும் வாய்ப்பு அதிகமிருக்கின்றது. இவ்விரண்டு வாதங்களிலும் நியாயங்கள் உள்ளன, என்றபோதும் அதைவிடப் பெரிய நியாயங்களை ஹசன் அலியும் ஹக்கீமும் வைத்திருக்கின்றனர்.   

 

வாக்குறுதி அளிக்கப்பட்ட ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தேசியப்பட்டியல் எம்.பியைக் காலக்கிரமத்தில் வழங்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு இருக்கின்றது.

அவ்வாறே, தலைவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லி கோருவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உரிமை இருக்கவே செய்கின்றது.   

ஆனால், இன்றைய நிலைவரப்படி தேசியப்பட்டியல் எம்.பி என்பது இப்போதிருக்கின்ற பிரச்சினையை தற்காலிகமாகத் தணிவடையச் செய்வதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

பல்லாயிரம் மக்களின் எதிர்ப்புக்களைச் சந்திப்பதை விடவும் ஹசன் அலியின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதும் கட்சி முடக்கப்படாமல் பாதுகாப்பதும் தலைவர் ஹக்கீமுக்கு முன்னுரிமைக்குரிய விடயமாகத் தெரிகின்றது. இதன் பிரகாரமே தேசியப்பட்டியல் உறுப்புரிமையை ஹசன் அலிக்கு வழங்க அவர் முடிவு செய்திருக்கின்றார்.   

தற்போது தலைமைக்கு ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகளைக் காரணம்காட்டி மு.கா தலைவர் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலியை ஏமாற்றுவதற்கு நிறைய சாத்தியக் கூறுகள் உள்ளன. என்றாலும், எம்.பியை வழங்காமல் விடுவதற்கான நிகழ்தகவுகள் நாளுக்குநாள் குறைவடைந்து செல்வதை உன்னிப்பாக நோக்குகின்றவர்களால் உணர்ந்து கொள்ள முடியும்.   

ஆக, செயலாளர் பதவிக்கான அதிகாரத்தைப் பெறும் முயற்சியில் ஹசன் அலி சற்றே தடுமாறுகின்றாரோ என்று ஐயப்பாடு ஏற்பட்டாலும், தமக்கு வாக்களிக்கப்பட்ட தேசியப்பட்டியல் பதவியை வென்றெடுப்பதற்கான தார்மீக யுத்தத்தில் அவர் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றார் என்பது தெளிவு. 

மறுபக்கத்தில் - இன்னும், இப்போராட்டத்தை முகத்துக்குமுகம் நின்று முறையாக முன்னெடுக்காத தனியாட்களினதும், ஒரு தீர்மானத்துக்கு வருவதற்கு கூடத் தயங்கும் ஊர்களினதும் எதிர்வினையாற்றல்களை சமாளிப்பதற்கான சாணக்கியத்துடன், ஹக்கீம் தயாராகிக் கொண்டிருக்கின்றார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .