2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கூறுகூறானால் தமிழரின் நிலை?

Editorial   / 2020 மார்ச் 12 , மு.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன்  

தேசிய அரசியலில் (தமிழர்களின்) என்றுமில்லாத அளவுக்குப் பிரிவினைகள் தோன்றியுள்ளன. சுயலாப நோக்கிலான அரசியல் மேலோங்கி உள்ளதே, இதற்கான பிரதான காரணமாகும். ஆனால், சிங்கள தேசியவாதத்தை நிலைநிறுத்தும் அரசியல் மாத்திரம், பலமான சக்தியாக மேலெழுந்து  செல்கிறது.   

இத்தகைய சூழ்நிலை ஒன்றின் உருவாக்கத்துக்கு, இராணுவ மேலாதிக்கப் போக்கும், இலங்கை, சிங்கள தேசம் என்ற இனவாதச் சிந்தனையும் அடிப்படையாக அமைந்துள்ளன. 

ஐக்கிய தேசிய கட்சியின் உட்கட்சி மோதல்களும் அதற்குள்ளே முகிழ்ந்துள்ள வர்க்கவாத சாதியவாதச் சிந்தனைகளும் ஐ.தே.கவின் அரசியல் எதிர்காலம் தொடர்பாகக் கேள்விக்குறியை முதன்மைப்படுத்தி நிற்கின்றன. 

இந்தப் பின்புலத்தில், ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டணிகளும் அதனோடு உறவு வைத்துள்ள சிறுபான்மைக் கட்சிகளின் அதிகாரப் பலமும் செயலிழந்துள்ள இன்றைய சூழ்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், பல்வேறு எதிர் வினைகளைத் தொடுத்துள்ளன. 

இத்தகைய நிலை, பிரதான கட்சி ஒன்றின் நிலைமையாக இருந்தாலும், நாட்டின் ஏனைய பிரதேசங்களிலுள்ள கட்சிகளுக்கும் இவ்வாறானதொரு நிலைமையையே எட்டிவருகின்றன. ஆனால், புதிதாக உருவாகும், உருவாகிக் கொண்டிருக்கும் அமைப்புகள், குழுக்கள் இதனையொரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை; உருவாகிவரும் ஆபத்துகள் குறித்தும் எச்சரிக்கை கொள்ளவில்லை என்பது குறித்தும் அக்கறைசெலுத்தப்பட வேண்டும். 

இத்தகைய சூழலில், தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனங்களுக்கிடையிலான இனவாதச் சிந்தனைகளும் போட்டா போட்டிகளும் என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. இந்த அதிகரிப்பின் பின்புலத்தில், பொதுஜன பெரமுனவின் எழுச்சியும் அதன் சித்தாந்த அடிப்படையிலான அரசியல் அணுகுமுறைகளும் கால்கோல்களாக அமைந்துள்ளன.

வீதிக்கு வீதி கட்சிக்கு கட்சி, பணப் பெட்டிகளுடன் ஆசனம் தருமாறு, புலம்பெயர் சமூகத்தின் அனுசரணையிலும், பேரினவாத சக்திகளின் கைக்கூலித்தனமான ஒதுக்கீட்டிலும், தேர்தலில் குதிப்பதற்கு போட்டா போட்டியோடு, மக்களின் வாக்கைச் சிதறடித்துத் தமது அரச விசுவாசத்தைக் காட்டுவதற்கான முஸ்தீபுகளும் உயிரோட்டம் பெற்றுள்ளன. 

இத்தகைய போக்குகள், இலங்கைச் சிறுபான்மைச் சமூகத்தின் பிரச்சினையைத் திசை திருப்பி அபிவிருத்தியும், தொழில்வாய்ப்புமே அவர்களது இயல்பான பிரச்சினை எனச் சர்வதேசத்துக்கு காட்டும், சிங்களப் பேரினவாத அரசியல் சித்தாந்தத்துக்குத் துணைபோவதோடு தமிழர் பிரச்சினையைத் நீர்த்துப்போகச் செய்யும் துரோக அரசியலையும் இந்தப் புல்லுருவித் துரோகிகள் செய்ய முனைந்துள்ளனர். 

இலங்கை சிறுபான்மை சமூகங்களான தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் இத்தகையதொரு இக்கட்டான, துர்ப்பாக்கிய, அரசியல் நீரோட்டத்தில் இருந்து எதிர்நீச்சல் போட்டு வெளியே வராவிட்டால், இத்தீவில் செல்லாக் காசுகளாவதுடன் சுதந்திரம், உரிமை, கௌரவம் எதுவும் கிடைக்கப் பெறாத, பிரஜைகளாகி விடுவார்கள். 

அதுமட்டுமல்லாமல், 1990களின் பின், தமிழ் பேசும் இனத்தைத் தங்கள் அரசியல் நலன்களுக்காக கூறுபோட்டு முஸ்லிம் தேசிய இனம் என்று, மதத்தைக் காரணம் காட்டி எப்படிப் பிரித்தார்களோ, அதே நிலையை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் பிரித்து விடுவார்கள். 

தமிழ்பேசும் இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் பிரிவினைபடுத்துவதன் மூலம், கிறிஸ்தவ தேசிய இனம், இந்து தேசிய இனம் எனப் பாகுபடுத்தி, இலங்கை தீவில் தமிழ்த் தேசிய இனம் என்று ஒன்று இல்லை என வெளிப்படுத்தி, இலங்கைத் தீவில் 74 சதவீதம் சிங்கள மக்களும் ஏனைய 26 சதவீதம் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, மலையக இந்தியத் தமிழ் சிறு குழுக்கள் மட்டுமே இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டு விடுவார்கள். அப்பொழுது, இலங்கைத் தீவில் உரிமைகளற்ற இனமாகத் தமிழ் பேசும் இனம் புறந்தள்ளபடும். 

எனவே, முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து என்ற மத பேதங்களை மறந்து, தமிழ் பேசும் சமூகம் என சிறுபான்மையினர் ஒன்றுபட்டு இணைவது காலத்தின் கட்டாயம் ஆகும். எனவே, ஒன்று பட்டால்த்தான் உண்டு வாழ்வு. 

இத்தகையதொரு பின்புலத்தில், வடக்கு, கிழக்கு, மலையக அரசியல் நிலைவரம் என்பது, மக்கள் ஆதரவற்ற, அவர்கள் நலன் சாராத சித்தாந்தங்களின் அடிப்படையில், இனவாத கருக்கொண்ட சக்திகளுடன் கைகோர்க்கும் ஒரு இக்கட்டான நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 

இருந்தபோதும், அதன் வழிநின்று சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன்  ஜனநாயகத்தையும் பாதுகாக்க முடியும் என்றதொரு புதிய அரசியல் சித்தாந்தம் தோற்றுவிக்க முயலப்படுகிறது.

இந்தப்போக்கு, கடந்தகால அரசியல் வரலாற்றுப் பாடங்களில் கற்றுக்கொண்ட அனுபவங்களின் எதிர்வினைகளாக முகிழ்த்துள்ளன. ஆனால், உண்மையில் இந்த முகிழ்ப்பென்பது, கடந்தகால வரலாறுகள் கற்றுத் தந்த பாடங்களின் படிப்பினைகளுக்கு, முரணானதாகும்.  இைதத் துல்லியமாகக் கணிப்பதற்கு,  தமிழ்க் கட்சிகளால் இத்தேர்தலில் கைக்கொள்ளப்படும் அணுகுமுறைகளை நோக்குவது சாலச்சிறந்ததாகும். 

அந்தவகையில் தான், எதேச்சதிகாரப் போக்கும் அதற்கு அடிமைச் சேவகம் செய்யும் கைக்கூலி அரசியல் நிலைவரங்களும் இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்களின் செயலிழந்த பேரம்பேசும் சக்தியின் அடையாளமாக அடையாளப்படுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு, இலங்கைச் சிறுபான்மை அரசியல் தலைவர்களைத் தள்ளிவிட்டுள்ளது. 

இத்தகைய போக்குகள் இத்தீவில் நீடித்த சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும், உரிமையையும் பேண்தகு ஜனநாயக நடைமுறைகளையும் ஒருபோதும் பெற்றுத்தர மாட்டாது என்பதே புத்திஜீவிகளின் கணிப்பாகவும் பதிவாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தவகையில் வடக்கு, கிழக்கு அரசியல் நிலைவரமானது, தமது அரசியல் அபிலாசைகள், உரிமைகள் தொடர்பான நீட்சியான தொடர் போராட்டங்களினதும் நீடித்த கோரிக்கைகளினதும் பலாபலனற்ற செயல் உருவமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  

இதில் யாரால் மாற்றம் ஏற்படுத்தப்படப் போகிறது என்பது மில்லியன் கேள்விகளாகவும் இருக்கிறது. 

மேலும் மேலும், ஒரு சரியானதொரு கட்டமைப்பில்லாத சிறுபான்மைச் சமூகத்தின் செயற்பாடுகளால், எதிர்பார்ப்புகளையோ நிலையான  தீர்வுகளையோ ஏற்படுத்திக் கொள்ள முடியாது என்பதே நிரந்தரமாகும். 

அந்த வகையில்தான், மலையக மக்களின் அடிப்படை ஜீவாதார பிரச்சினையான ஆயிரம் ரூபாய் சம்பளம் கானல் நீராகவே மாற்றப்பட்டுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

போலியான வாக்குறுதிகள், பலம் பொருந்திய அரசியல் பிரசார சாதனமாக மேலெழுவதன் காரணமாக, மக்கள் நம்பிக்கையற்ற நயவஞ்சகத்தின் வெளிப்பாட்டை உணரத் தொடங்கியுள்ளனர். இது பாரதூரமானதொரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லையானால் மக்கள் சக்தி என்பது, பயனற்றது என்றே கொள்ள வேண்டும். 

காலங்காலமாக, இலங்கைச் சிறுபான்மை சமூகம் தமது அடிப்படை ஜீவாதாரப் பிரச்சினைகளில் இருந்தும் உரிமைகளில் இருந்தும் மீண்டெழ முடியாத அளவுக்குப் பேரினவாத சக்திகளுக்கு, காலத்துக்குக்  காலம் முண்டு கொடுக்கும் சிறுபான்மை மலையக அரசியல் கட்சிகள், பேரம்பேசல் பம்மாத்து நாடகத்தில் பங்குதாரிகளாகி, சூழலுக்கு துலங்கும் துரோக அரசியலை, மக்களின் வாக்குரிமையில் சவாரி செய்து, அவர்களைப் பேசாமடந்தைகளாக்கியுள்ளனர். இதில் மாற்றம் ஏற்பட வேண்டும். 

தமது சுயலாப அரசியலின் எதிர்வினையாக, மலையக மக்கள் என்றுமே விடிவு பெறாத, அரசியல் அடிமை வாழ்வை அனுபவிப்பதற்கு இவர்கள் ஒப்பந்தங்களைச் செய்துள்ளனர். 

இத்தகைய கீழ்த்தரமான அரசியல் போக்கானது, நம்பிய மக்களை மாற்றாந்தர பிரஜைகளாக நோக்கும் நிலைக்கு, இவ்வரசியல் தலைமைகளின் சிந்தனைகளைப் பின்தள்ளியுள்ளன. 

இதன் விளைவே, ஆசிரிய கல்லூரி நியமனங்களில் பயிற்சியை முடித்தும் நியமனத்தை பெறமுடியாமல், அதற்குத் தேவையான அரசியல் செல்வாக்கின்றித் தவிக்கும் 700க்கும் மேற்பட்ட நுவரெலியா, ஹட்டன் பிரதேச தமிழ் ஆசிரிய உதவியாளர்களின் நிலைவரமாகும்.

இத்தகைய பின்புலத்தில், என்றுமில்லாத அளவுக்கு வடக்கிலும் கிழக்கிலும் சாதியம், பிரதேசவாதம், மதவாதம் என்ற அடிப்படைகளிலும் தேசிய அபிலாசைகளை வெற்றிகொள்ளப்போவதாகச் சுயலாப அரசியல் நாடகங்களை அதன் தயாரிப்பாளர்களாகப் பல்வேறு அரசியல் குழுக்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தும், பேரினவாதத்துடன் கூட்டுச் சேர்ந்தும், அதற்குத் துணை போகும் வகையில் சுயேச்சைக் குழுக்களாகவும் தங்களைத் தாங்களே தமிழ் மக்களின் இரட்சகர்களாக பிரகடனப்படுத்தியும் தேர்தல் உலா வலம் வரும் காட்சிகள் அரங்கேறுகின்றன.  

இத்தகைய போக்குகள், ஆயுதம் தரித்த விடுதலைப் போரின் மௌனிப்பின் பின் மிக மோசமானதொரு சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய ஆபத்தான கட்டத்தை தமிழ் மக்களின் ஒற்றுமையின் மூலமே கடந்துசெல்ல முடியும்; இது ஒன்றுதான் வழி!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .