2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இன ரீதியாக பிரிந்து வாக்களிப்பது ஏன்?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 நவம்பர் 20 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சனிக்கிழமை (16) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவு, ஏதும் ஆச்சரியத்துக்கு உரியதல்ல. கிராமப்புற சிங்கள மக்களின் இதயத்துடிப்பை, விளங்கிக் கொண்டவர்கள், இந்தத் தேர்தல் முடிவை எதிர்பார்த்தார்கள். சிங்கள ஊடகங்கள் மூலமாகவும் அவர்களது இதயத்துடிப்பை ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடியுமாக இருந்தது.  

அரசியல், ஏனைய உள்நோக்கம் உள்ள ஊடகவியலாளர்கள், இதனை வெளிப்படையாகக் கூறினார்கள். அவ்வாறு கூறுவதன் மூலம், தாம் பொதுவான வாக்காளர்களின் மனங்களில், தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கருதிய ஊடகவியலாளர்களும் அதனை வெளிப்படையாகக் கூறினார்கள்.   

அவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துவது, ஊடக ஒழுக்க நெறிகளை மீறுவதாகும் என்பதை உணர்ந்த ஊடகவியலாளர்கள் அதனைத் தெரிந்தும் வெளிப்படையாகக் கூறவில்லை.  

கோட்டாவின் வெற்றி, கடந்த வருடமே நிர்ணயிக்கப்பட்டது என்றே கூற வேண்டும்; கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பிரதியாகவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவு தெரிகிறது.   

கடந்த வருடத் தேர்தலின் போது, ஐ.தே.க தலைமையிலான கூட்டணி பெற்ற வாக்குகளுக்கும் பொதுஜன பெரமுன பெற்ற வாக்குகளுக்கும் இடையே, சுமார் 15 இலட்சம் வாக்குகள் வித்தியாசம் இருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் போதும், அந்த வாக்கு வித்தியாசமே காணக்கூடியதாக இருக்கிறது.  

இரு சாராரும் கடந்த வருடத்தை விட, இருபது இலட்சம் வாக்குகளை அதிகரித்துக் கொண்டு இருக்கிறார்கள். சஜித் பிரேமதாஸவின் கூட்டங்களுக்கு மக்கள் பெரும் திரளாக வந்த போதிலும், கிராம மட்டத்தில் கடந்த வருடம் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தவர்கள் மனம் மாறியிருந்ததாகத் தெரியவில்லை.  

கொள்கைகளை விட, வெற்றி பெறும் பக்கம் தாம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே பெரும்பாலான மக்கள் வாக்களிக்கின்றனர். பொருளாதார ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ நீண்ட காலமாகவும் பெருமளவிலும் தாம் பாதிக்கப்பட்டால் மட்டுமே, அவர்கள் வேறு முடிவுகளை எடுப்பார்கள்.   

அந்த வகையில், தமிழ், முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, ஐ.தே.கவை ஆதரித்தவர்கள் தான் மாற வேண்டும் என்று நினைக்கும் நிலை ஏற்பட்டதே அல்லாமல், பொதுஜன பெரமுனவை ஆதரித்தவர்கள் மாற வேண்டும் என்று நினைக்கும் நிலை ஏற்படவில்லை. எனவே தான், இந்தத் தேர்தல் முடிவு, எதிர்பார்க்கப்பட்டது தான் என்கிறோம்.  

தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து இதனை அவதானிக்க முடியாது. அதேவேளை, தமிழ், முஸ்லிம் மக்கள், வேறு விதமாகச் சிந்திப்பதற்கான நிலைமையும் உருவாகியிருந்தது.   

எனவே, நாட்டு மக்கள் பெரும்பாலும் இன வாரியாகப் பிரிந்தே, இரு பிரதான வேட்பாளர்களுக்கு, அதாவது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாஸவுக்கும் வாக்களித்துள்ளனர்; இதுவும் எதிர்பாராத ஒன்றல்ல.  

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், தமிழ், முஸ்லிம் மக்களில் 80 சத வீதத்துக்கும் அதிகமானவர்கள் பொதுஜன பெரமுனவை எதிர்த்து வந்தனர். பொதுஜன பெரமுனவில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் இல்லாததால், மிகச் சிலர் மட்டுமே இருந்ததால், அங்கு இருக்கும் வெற்றிடங்களில் ஒரு சிலவற்றை நிரப்பி, எதிர்காலத்தில் அரசியல், பொருளாதார இலாபம் அடைய நினைத்தவர்கள் சிலரும் வேறு காரணங்களுக்காகப் பொதுஜன பெரமுனவை நெருங்கியவர்கள் சிலரும் மட்டுமே, அக்கட்சியை ஆதரித்து வந்தார்கள்.  

2012ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான முஸ்லிம் எதிர்ப்புப் பிரசாரம் நடைபெற்ற காலத்தை மறந்து இருந்தாலும், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அதாவது உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராக, மிக மோசமான இனவாதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அரசியல்வாதிகள் யார், ஊடகங்கள் எவை என்பதைப் பொதுவாகச் சிங்கள மக்களே, அடையாளம் கண்டு இருந்தனர்; எனவே, அந்தப் பிரசாரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள், அதனை அறிந்திருக்கவில்லை என்று கூற முடியாது. இந்த நிலையிலேயே, பெரும்பாலான முஸ்லிம் மக்கள், பொதுஜன பெரமுனவிடம் இருந்து தூர விலகியிருந்தனர்.  

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வரையும் முஸ்லிம் மக்கள், ஐக்கிய தேசியக் கட்சியைப் போலவே, ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரது தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் ஆதரித்து வந்தனர்.   

2010ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்படி தேர்தல்களின் போது, முஸ்லிம்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் ஐ.ம.சு.முவை ஆதரித்தனர் என்று ஊகிக்கலாம்.  

ஆனால், 2012 ஆம் ஆண்டு முதல், கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில், ஹலால் எதிர்ப்புப் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் இறுதி விளைவு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, முஸ்லிம்களின் ஆதரவை இழப்பதாகும் என்றும், அதன் மூலம் அவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையலாம் என்றும், எனவே இந்தப் பிரசாரம் வெளிநாட்டுச் சதியாக இருக்கலாம் என்றும் அப்போது வீடமைப்பு அமைச்சராக இருந்த தேசிய சுதந்திர முன்னிணியின் தலைவர் விமல் வீரவன்ச, அக்காலத்தில் பல முறை கூறியிருந்தார். 

ஆனால், அந்தப் பிரசாரம் தொடர்ந்தது மட்டுமல்லாது, அரசாங்கத்தில் சில தலைவர்களது மறைமுக ஆதரவும் அதற்கு இருப்பதாகத் தெரிந்தது.  

அத்தோடு, மாட்டிறைச்சி எதிர்ப்புப் பிரசாரம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் கத்தோலிக்க மக்கள் வாழும் மேற்குக் கரைப் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில், மாட்டிறைச்சி வியாபாரம், முஸ்லிம்களின் கையிலேயே இருக்கிறது. எனவே, இந்தப் பிரசாரத்தின் நோக்கமும் முஸ்லிம்களைக் குறிவைப்பதாகவே இருந்தது.  

இவற்றோடு, முஸ்லிம்களின் மத்ரசாக்களுக்கு எதிரான பிரசாரமொன்றும் ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம்கள், சிங்கள மக்களின் இன விருத்தியைக் கட்டுப்படுத்தச் சதி செய்வதாகவும் அதற்காகச் சில கடைகளில் ‘டொபி’ வகைகள் விற்கப்படுவதாகவும் இரசாயனப் பொருள்கள் கலக்கப்பட்ட உள்ளாடைகள் விற்கப்படுவதாகவும் முஸ்லிம்களின் இனவிருத்தி அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளது என்றும் பொய் பிரசாரங்கள் பரவின. தம்புள்ள போன்ற பல இடங்களில், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன.  

பிற இன மக்களோடு, முடிந்த வரை இரண்டறக் கலந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தைப் புறக்கணித்து, முஸ்லிம்கள் தமது உடைகளை மாற்றிக் கொண்டமையும் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்குப் பதிலாக, இஸ்லாத்தைக் காட்சிப் பொருளாகப் பாவிக்க முற்பட்டமையும் (exhibitionism) இந்தப் பிரசாரத்துக்குத் துணையாக அமைந்தது.  

இவற்றின் விளைவு, விமல் வீரவன்சவின் எதிர்வு கூறலை மெய்ப்பித்தது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்தார். தாம், முஸ்லிம்களின் வாக்குகளை இழந்தமையே அதற்குக் காரணம் என, மஹிந்தவே பல இடங்களில் கூறியிருந்தார். ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயமொன்றின் போது, அவர் இக்கருத்தை, ‘ஜப்பான் டைம்ஸ்’ பத்திரிகைக்கும் தெரிவித்திருந்தார்.  

மஹிந்தவின் உத்தியோகப்பற்றற்ற ஆதரவில் பஸில் ராஜபக்‌ஷ, பொதுஜன பெரமுனவை ஆரம்பித்த போது, இந்த ராஜபக்‌ஷ விரோதத்தின் காரணமாக முஸ்லிம்கள், அக் கட்சியை ஆதரிக்கவில்லை. ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, பொதுஜன பெரமுன, தென் பகுதியில் 17 மாவட்டங்களையும் வெற்றி கொண்டது. நாட்டின் ஆட்சியாளர்களாக வரப் போகிறார்கள் என்பதை உணர்ந்த பல முஸ்லிம்கள், அக்கட்சியின் பக்கம் சாயத் தொடங்கினர்.  

ஆனால், உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராக கம்மன்பில, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, ரத்தன தேரர் போன்றோர்களும் பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் ஊடகங்களும் பிரசாரம் ஒன்றை முடுக்கிவிட்டதை அடுத்து, முஸ்லிம்கள் மீண்டும் பொதுஜன பெரமுனவிடமிருந்து விலகிச் சென்றனர். இதுவே, முஸ்லிம்கள் கோட்டாவின் வெற்றியின் பங்காளிகளாவதைத் தடுத்தது.  

தமிழ் மக்களின் கதை வேறு. போர்க் காலச் சம்பவங்களை அவர்களால் இன்னமும் மறக்க முடியாமல் இருக்கிறது. அதேவேளை, அவர்களின் தலைவர்கள் சுயநிர்ணய உரிமை போன்ற சில சித்தாந்தங்களில் சிறைப்பட்டுவிட்டனர்.   

சித்தாந்த ரீதியாக இவற்றை நியாயப்படுத்தலாம்; ஆனால், இவற்றை சிங்களத் தலைவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. சித்தாந்த ரீதியாக ஒருவர் தமிழ் ஈழத்தையும் நியாயப்படுத்தலாம்; ஆனால், இந்தியா, இலங்கைக்கு வடக்கே இருக்கும் வரை, அந்நாடு தனித் தமிழ் நாடொன்று உருவாக, இடமளிக்கப்போவதில்லை.   

அதேவேளை, தெற்கே உள்ள இனவாதிகள் அந்த நடைமுறைச் சாத்தியமில்லாத சித்தாந்தங்களைப் பாவித்து, தமது பிரசாரத்தை நடத்துகிறார்கள். 

எனவே, தமிழ்த் தலைவர்கள் யதார்த்தத்தை உணர்ந்து, தமது தந்திரோபாயங்களை வகுக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.  

அரச திட்டமிடல் பொறிமுறையில் சிறுபான்மையினர் இருப்பார்களா?

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஏறத்தாழ ஒட்டுமொத்தமாக ஒரே வேட்பாளரை, சஜித் பிரேமதாஸவை ஆதரித்துள்ளனர்.   

இதனால் அவர்கள், இனவாதிகளாகச் சிந்தித்துச் செயற்பட்டதாக, சமூக வலைத்தளங்களில் சிங்கள மொழியில் சிலர் பிரசாரம் செய்து வருகிறார்கள்.   

ஆனால் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களைப் படுதோல்வியடையச் செய்து, ஒரு சிங்களவருக்கே வாக்களித்துள்ளனர் என்பதை அவர்கள் கவனிக்கவில்லைப் போலும்.  

இருந்த போதிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் சகல பிரதான கட்சிகளையும் ஆதரிப்பதும் அக்கட்சிகள் அவர்களின் ஆதரவை நாடி நிற்பதுமே, அவர்களது பாதுகாப்புக்கு உகந்த நிலைமையாக இருக்கும்.   

ஒரு கட்சி, தமக்கு எப்போதும் சிங்களப் பௌத்த மக்களின் ஆதரவில் பதவிக்கு வர முடியும் என்று நினைக்கும் நிலை, சிறுபான்மை மக்களுக்கே பாதகமாக அமையும்.  

கொள்கைகள் என்ற அடிப்படையில் பார்த்தால், பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் அதாவது ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் வேறுபட்டவையல்ல; இரண்டு கட்சிகளும் தாராள பொருளாதார கொள்கையையே பின்பற்றுகின்றன. இரு கட்சிகளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களையே நாடி நிற்கின்றன; இரு கட்சிகளும் தத்தமது ஆட்சிக் காலத்தில் தேசிய சொத்துகளை வெளிநாட்டவர்களுக்கு விற்றுள்ளன; இரு சாராரும் பாரிய ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர்; இரு சாராரும் தேசிய உற்பத்தியைப் பெருக்கப் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை; இரு சாராரும் பௌத்த சமயத்துக்கே முதலித்தை வழங்குகின்றனர்; இரு சாராரும் சிறுபான்மை  இனத்தவர்களுக்கு எதிரான பிரசாரங்களின் போது, வாய் திறக்க அச்சப்படுகின்றனர். ஆனால், சில வரலாற்றுச் சம்பவங்களின் காரணமாக, தமிழ், முஸ்லிம் மக்கள் இன்று, ஒரு கட்சியின் பக்கம் சாய்ந்துள்ளனர். பேரினவாத சக்திகளும் மற்றொரு பக்கம் சாய்ந்துள்ளன.   

இந்த நிலைமையைத் தவிர்த்து இரு பிரதான கட்சிகளிலும் சிறுபான்மையினரின் செறிவை அதிகரித்து, வேறு வழிகளில் அக்கட்சிகளின் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமாக இருந்தால், அது தேசிய நல்லிணக்கத்துக்குச் சாதகமாகவே அமையும். ஆனால் அது சாத்தியமா?  

விகிதாசாரத் தேர்தல் முறை இதற்குப் பாதகமாக இருக்கிறது. அத்தேர்தல் முறை காரணமாக, மக்கள் தத்தமது இன வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முற்படுகின்றனர். இதனால் இனவாரியான, இனவாதப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.   

தென்பகுதி இனவாத சக்திகள், வெகுவாகப் பலம் பெற்றுவிட்டன. அவை குறிப்பிட்ட ஒரு கட்சியைக் கைப்பற்றிக் கொண்டுள்ளன. இதனால், அதன் தலைவர்களுக்குச் சிறுபான்மையின வாக்குகள் தேவையாக இருந்தாலும் அவர்களால் சிறுபான்மை மக்களை ஆதரித்துப் பரிந்து பேச முடியாத நிலை உருவாகியிருக்கிறது.  

கடந்த ஓகஸ்ட் மாதம், மஹிந்த ராஜபக்‌ஷ, தமது கட்சி, பதவிக்கு வந்தால் தமது பழைய ‘13 பிளஸ்’ திட்டத்தை அமுலாக்குவதாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதாகவும் சில தமிழ்க் கட்சிகளுக்கு அளித்த வாக்குறுதியை, அவர்கள் சிங்கள ஊடகங்களில் வெளி வராது பார்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

எவ்வாறாயினும், மக்கள் அரசியலிலும் பொது வாழ்க்கையிலும் இன வாரியாகச் செயற்படுவது நல்லதல்ல என்பதை, அரசியல் தலைவர்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், அவர்கள் அதற்கமையத் தமது கொள்கைத் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.   

குறிப்பாக, அரசாங்கம் தான் இந்த விடயத்தில் முதலடியை எடுத்து வைக்க வேண்டும். சிறுபான்மை மக்களை வென்றெடுக்க, அரசாங்கத்திடமும் ஏனைய தென்பகுதி அரசியல் கட்சிகளிடமும் கொள்கை ரீதியான திட்டமொன்று இருக்க வேண்டும்.  

அது அவர்களது அரசியலுக்கும் நல்லதாக இருக்கும். ஏனெனில், சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டும் பதவிக்கு வரும் நிலை எப்போதும் இருப்பதல்ல; 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களின் போது, மஹிந்த ராஜபக்‌ஷ பெற்ற சிங்கள வாக்குகளை மட்டும் கருத்தில் கொண்டால், அவரால் அந்த வாக்குகளால் மட்டுமேனும் பதவிக்கு வந்திருக்க முடியும். ஆனால், 2015 ஆம் ஆண்டு நிலைமை மாறிவிட்டது. தாம் சிறுபான்மை மக்களின், குறிப்பாக, முஸ்லிம் மக்களின் வாக்குகளை இழந்தமையே, தமது தோல்விக்குக் காரணம் என அவர் கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.  

அதேவேளை, பொது வாழ்க்கையில் இன ரீதியாக மக்கள் பிரிந்து செயற்படாதிருக்கும் வகையில் தமிழ், முஸ்லிம் தலைவர்களும் தமது திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.   

அரசாங்கத்தின் கொள்கை வகுக்கும், முடிவெடுக்கும் இடங்களில் சிறுபான்மை பிரதிநிதிகளின் செறிவை அதிகரிப்பதில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக அவர்களின் செயற்பாடுகளை ஊடகங்களும் மக்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .