2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

உட்கட்சிப் பூசலும் ஊரறிந்த காரணங்களும்

Thipaan   / 2016 மார்ச் 19 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையிலும் அரசியல்வாதிகளுக்கு மத்தியிலும் ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டு, அவர்கள் எல்லோரும் ஓரணியில் திரள வேண்டுமென்ற கருத்தாடல்கள் வலுவடைந்து கொண்டு வருகின்ற இன்றைய காலப்பகுதியில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருக்கின்ற இணக்கப்பாடே சிதைந்து போய்விடும் சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன.

'தலைவருக்கு பலம் சேர்க்கும் யாப்பின் கட்டமைப்பை மாற்றுதல்' என்ற போர்வையில் ஆரம்பமாகியிருக்கும் உள்ளக போராட்டங்கள், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியாத பட்சத்தில், அதன் பக்கவிளைவு எதுவாக இருக்கும் என்ற அச்சம் முஸ்லிம் அரசியல் நலன் விரும்பிகளிடையே தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு நாளை சனிக்கிழமை அம்பாறை மாவட்டம், பாலமுனை பிரதேசத்தில் இடம்பெறுகின்றது. மு.கா. தலைமை மீதும் கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகள் மீதும் பல விமர்சனங்கள் கோப தாபங்கள் இருந்தாலும் கூட, நமது கட்சியின் தேசிய மாநாடு நமது மண்ணில் நடக்கின்றது. எனவே, இதை சிறப்புற நடாத்த வேண்டும் என்பதற்காகவே எல்லாப் போராளிகளும் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதை ஹக்கீம் மறந்து விடக் கூடாது. கிழக்கு மக்களையும் போராளிகளையும் மட்டமாக எடை போட்டுவிடக் கூடாது.

வழக்கமாக ஒரு மாநாடு இடம்பெறுகின்றது என்றால், அக் குறிப்பிட்ட கட்சி அதனது ஏற்பாடுகள் சார்ந்த சவால்களையே பெரிதும் எதிர்கொள்ளும். ஏனென்றால், தமக்கு வசதியான ஓர் இடத்தையே மாநாட்டுக்காக அக்கட்சி தேர்ந்தெடுத்திருக்கும். உயர்ந்தபட்சமாக, மாற்றுக் கட்சியினர் சில தடைகளை ஏற்பாடுத்துவார்களேயொழிய, இவ்வாறான மாநாடு ஒன்றுக்கு முன்னர் பாரிய சலசலப்புக்கள் ஏற்படுவது அசாதாரணமானது.

இவ்வாறான சர்ச்சைகள், சலசலப்புக்களுக்குள் அதிகமானவை மாநாட்டின் ஏற்பாட்டு வேலைகளுடன் அன்றி, கட்சியின் அரசியலோடும் தலைமையோடும் தொடர்புபட்டதாக இருக்கக் காண்கின்றோம்.

தேசியப் பட்டியலின் இரண்டாவது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமல் மு.கா. தலைவர் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருப்பது, ஒலுவில் மக்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இருப்பது, சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம், கரையோர மாவட்டம் போன்ற பழைய விடயங்கள் குறித்த விமர்சனங்களும் கோரிக்கைகளும் மக்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்படுகின்றன.

இதை மேலோட்டமாகப் பார்க்கின்றவர்கள், இப்பிரச்சினைகள் அனைத்தும் மு.கா.வின் செயலாளர் (?) எம்.ரி. ஹசன் அலியினாலும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தினாலும் திரைமறைவில் இருந்து இயக்கப்படுவதாக நினைக்கின்றனர். அல்லது, அவர்கள் இருவருக்கும் தேசியப்பட்டியல் எம்.பி. பதவி வழங்கப்படாததன் காரணமாகவே, குட்டை குழப்பப்படுவதாக வியாக்கியானம் சொல்ல முற்படுகின்றனர்.

இவ்விடயத்திற்கும் இப்போது ஏற்பட்டிருக்கின்ற சிறுசிறு கருத்து மோதல்களுக்கும் தொடர்பிருக்கின்றதுதான். இருந்தாலும் அதுமட்டுமே காரணமல்ல என்பது அரசியல் முதிர்ச்சியுள்ளவர்களுக்குப் புரியும்.

கட்சிக்குள் எப்போதும் கருத்து வேற்றுமைகள் இருந்தே வந்திருக்கின்றன. இது சகஜமானதும் கூட. இதற்கு முன்னரும் கட்சியில் பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றது. மு.கா.வின. ஸ்தாபக தவிசாளர் எம்.எச்;;.சேகு இஸ்ஸதீன் என்ற பலம்பொருந்திய ஆளுமை கட்சியில் இருந்து வெளியேறினார். அதாவுல்லா, ரிஷாட் பதியுதீன், நஜீப் ஏ.மஜீத் பிரிந்து சென்றார்கள். ஆனால், அப்போதெல்லாம் சிவில் சமூகத்தில் இது பற்றிய பாரிய அதிர்வுகள் ஏற்பட்டிருக்கவில்லை என்றே கூறவேண்டும். ஆனால், அப்போது ஏற்பட்டதை விடவும் மிகவும் விசாலமான விதத்தில் தற்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மாநாட்டுக்கான ஆயத்தங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற சமகாலத்தில் மு.கா. தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பரந்தளவிலான பிரசாரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. துண்டுப் பிரசுரங்கள், மனுக்கள் போன்றவற்றுக்கு மேலதிகமாக கட்சியின் உயர்பீடத்தில் உள்ள 30-40 பேர், ஓர் ஆவணத்தில் ஒப்பமிட்டு வருவதாக அறியமுடிகின்றது.

தேசிய மாநாட்டுக்கு முன்னதாக முஸ்லிம் காங்கிரஸிற்கு இப்போது ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்களுக்கு வழியமைத்துக் கொடுத்ததில் முக்கிய பங்கு அதன் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு உள்ளது. அதாவது, அவரது சாணக்கியம் பலிக்காமல் போனமை அல்லது பிழையான கோணத்தில் பலித்தமையே இதற்கு முக்கிய காரணமாகும். இவ்வாறு இரண்டு விடயங்களில் மு.கா. தலைமை கோட்டை விட்டிருப்பதாகச் சொல்ல முடியும்.

அஷ்ரபின் மரணத்துக்குப் பின்னர், கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொள்ளும்படியான எந்த சேவையைiயும் மேற்கொள்ளாமலும் அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்காமலும், அவர்களை கிள்ளுக்கீரையாக பயன்படுத்தியமை.

தேசியப் பட்டியல் எம்.பி. நியமனத்தில் நியாயமற்ற விதத்தில் நடந்து கொண்டதன் மூலம் தேவையில்லாத சர்ச்சைகளை தோற்றுவித்தமை.

இதனை இன்னும் ஆழமாக நோக்க முடியும். மு.கா.வின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் அஷ்ரபின் மரணத்துக்கு பின்னரான இந்த 16 வருடங்களில் அதன் தலைவராக இருந்த ஹக்கீமின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த சாதனையையும் நிகழ்த்திக் காட்டவில்லை. கட்சிக்கு கிடைக்கின்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சை தன்னோடு எடுத்துச் சென்றுவிடும் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த மக்களின் சிவில் பிரச்சினைகளையோ, அரசியல் அபிலாஷைகளையோ நிவர்த்தி செய்வதற்காக போராடவில்லை.

மிகச் சாதரணமான அரசியல்வாதியாக இருந்த அதாவுல்லாவும் ஹிஸ்புல்லாவும் தங்கள் சொந்த ஊர்களுக்கு என்றாலும் செய்த சின்னச்சின்ன அபிவிருத்தியைக் கூட பென்னம்பெரிய மு.கா. என்ற கட்சித் தலைமையால் செய்ய முடியாமல் போனதுதான் நிதர்சனம். சரி, அபிவிருத்தி அரசியலுக்கு அப்பால் உரிமை அரசியலில் நோக்கினாலும் கூட, தமிழ் தேசியக் கூட்டமைப்பு போல, பட்டம் பதவிகளை துறந்தேனும் தமது இனத்துக்கான உரிமைகளை வென்று கொடுப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் ஜொலிக்கவில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் என்பது கிழக்கு முஸ்லிம்களின் உயிரில் கலந்த கட்சி. தம்முடைய சொந்தக் கட்சி போலவே கிழக்கிலுள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் அதை நோக்கினர். ஆனால், கிழக்குக்கு வெளியிலிருந்து வந்த தலைமைத்துவம் அதனை சிதைத்து விட்டது என்ற எண்ணம் மூத்த போராளிகள் பலருக்கு இருக்கின்றது. இன்று கட்சிக்குள், தலைவரிடம் ஒட்டி உறவாடும் பலர், தமக்கு நெருக்கமானவர்களுடன் இதைப் பற்றியெல்லாம் சொல்லி கவலைப்பட்டுக் கொள்கின்றனர்.

ஆனாலும் கட்சியை விட்டு வெளியில் வரக் கூடாது என்ற திடசங்கற்பத்தின் காரணமாக சிலரும் சொந்த அரசியல் இலாபங்களுக்காக பலரும் இன்னும் தலைவருக்கு நல்லபிள்ளைபோல் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

மறுபக்கத்தில், சின்னச் சின்ன விடயங்களைக் கூட ஒரு சமூகத்துக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு திராணியற்ற ஒரு தேசிய தலைமை இருப்பதை தொடர்ச்சியாக அவதானித்து வருகின்ற மட்டு, அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் மனதில் ஒருவித சலிப்புத்தன்மையும் வெஞ்சமும் கலந்த உணர்வு ஏற்பட்டு வருகின்றது. இதைச் சீர்செய்வதற்கு ஹக்கீம் ஒருக்காலும் முயற்சி செய்யவில்லை.

இந்த மக்களை சமாளிப்பது எப்படி என்ற வித்தையை அவர் கற்று வைத்திருக்கின்றார். ஆனால், இன்று இவ்விடயத்தில் சமூக ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்கள் இப்போது கவனம் செலுத்தியுள்ளதாக தோன்றுகின்றது. இது இதற்கு முன்னர் பெரிதாக அவதானிக்கப்படாத சமிக்ஞைகளாகும். அவர்கள் ஏதோ ஓர் அடிப்படையில் முஸ்லிம்களின் அரசியலில் அக்கறை செலுத்தியுள்ளனர். முஸ்லிம்களின் அரசியல் என்று வரும் போது, மு.கா.வின் அரசியலும் ரவூப் ஹக்கீமும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிக்கின்றனர்.

முதலில் மு.கா.வின் செயற்பாடுகளை மக்களுக்கு நலன்தருவதாக ஆக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று அக்கட்சிக்கு எதிராக ஏற்பட்டிருக்கின்ற விமர்சனங்களும் சலசலப்புக்களிலும், அதுவே பெரும்பங்கு வகிக்கின்றது,

உறைநிலையில் இருந்த மேற்படி விமர்சனங்கள், திடீரென வெளிக்கிளம்;புவதற்கு வித்திட்டது தேசியப்பட்டியல் எம்.பி. நியமனமும் கட்சிக்குள்ளான வெட்டுக் குத்துக்களும் என்பது மு.கா.வின் அரசியலோடு நெருக்கமானவர்களுக்கு நன்றாக தெரியும். மேலே சொல்லப்பட்டவாறு, கட்சிக்கும் தலைவருக்கும் எதிராக ஏதாவது விமர்சனங்கள் எழுகின்ற போது, அதைச் சமாளிப்போரில் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் ஹசன்அலி ஆகியோர் முக்கிய பங்கேற்றிருந்தனர். கட்சிக்குள் இவ்விருவரும் சில விடயங்களில் தலைவருடன் வாக்குவாதப்பட்டாலும் வெளியில் தலைவரது இமேஜை காப்பாற்றி வந்திருக்கின்றார்கள்.

தலைவரின் தனிப்பட்ட தோற்றப்பாட்டை சிதைக்காமல் பேணியதில் தவிசாளருக்கும், கட்சிக்கு எதிரான விமர்சனங்களுக்கு முகம் கொடுத்ததில் செயலாளருக்கும் முக்கிய பங்கிருந்தது என்றால் அது மிகையில்லை. ஆனால், தேசியப் பட்டியல் நியமனத்தில், தான் மேற்கொண்ட சாணக்கியமற்ற காய்நகர்த்தலாலும், கட்சியில் அவர்களது பதவிகளின் கீழான அதிகாரங்களை பிடுங்கிக் கொண்டதாலும், இவ்விருவரையும் பகைத்ததன் மூலம் நிலைமைகளை கெடுத்துக் கொண்டார் ஹக்கீம்.

ஹசன்அலி மு.கா.வின் மூத்த போராளிகளுள் ஒருவர். அவரை விட சிரேஷ்ட போராளிகளும் கட்சியில் இருக்கின்றார்கள் என்றாலும், அவர்களில் பலர் தமது ஓய்வு நேரங்களில் அரசியல் செய்பவர்களாக இருந்திருக்கின்றார்கள். எனவேதான் முழுநேரமாக அரசியலை செய்து வந்த ஹசன் அலி போன்ற சிலர் அஷ்ரபின் தலைமைத்துவத்தின் கீழ் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தனர். அஷ்ரபின் அமைச்சினது இணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்த ஹசன் அலி, தலைவர் மரணிக்கும் போது கட்சியின் பொருளாளராக இருந்தார் என்பதை மறந்துவிடக் கூடாது.

அவருக்கு எம்.பி. பதவி வழங்கியது, பின்னர் தலைவரான ரவூப் ஹக்கீம் என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும், ஹக்கீம் காலத்தில் எம்.பி.யாக இருப்பதை விட, அஷ்ரப் காலத்தில் இணைப்பாளராக இருந்தாலேயே அதிக சேவை செய்ய முடியும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த ஹசன் அலி, இம்முறை தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு தேசியப் பட்டியல் எம்.பி. தருவதாக வாக்குறுதியளித்த ஹக்கீம் போட்டியிட வேண்டாமென கேட்டுக் கொண்டார். ஹசன் அலியின் பெயரும் பட்டியலில் போடப்பட்டது. ஆனால், எம்.பி.பதவி கிடைக்கவில்லை. இதுதான் பஷீர் சேகுதாவூத்துக்கும் நடந்தது. ஹசன் அலியை விட மிக மோசமாக வஞ்சிக்கப்பட்டவர் பஷீர் என்றும் கூறலாம்.

ஏனெனில், தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டு எம்.பி.யாக இருந்த சமயத்தில் அவருக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. நியமன எம்.பி. பதவியை ஒருவருக்கு சதா காலமும் வழங்க முடியாது என்பதில் ஒரு நியாயம் இருக்கின்றது. ஆனால், அப்படியாயின் தேர்தலுக்கு முன்னமே அதை அவரிடம் சொல்லிவிட்டு, பட்டியலில் வேறு ஒருவரின் பெயரை போட்டியிருக்க வேண்டும். அதேபோல் பஷீருக்கும் தேசியப்பட்டியல் ஆசையூட்டி, ஏமாற்றுவதை தவிர்த்திருக்க வேண்டும்.

இவ்விருவரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை கோரிய போது மு.கா. தலைவர் சொன்ன விளக்கம், ' ஊரொன்றுக்கு இரண்டு எம்.பி.களை வழங்க இயலாது' என்பதே ஆகும். உண்மையில் இது நல்லதொரு கருத்து. ஆனால், இது முன்னமே தெரிந்த விடயம்தானே. அப்படியென்றால், ஏன் அவர்களது பெயர்கள் முன்மொழியப்பட்டன, என்ற கேள்வி எழுகின்றது. கட்சியை ஒரு தனியார் கம்பனிபோல நடாத்திச் செல்கின்ற முதலாளித்துவ போக்கின் மூக்கணாங்கயிற்றை இழுத்துப் பிடிக்கின்ற இருவரை நாசுக்காக ஒரங்கட்டுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே இதுவென்று கட்சிக்குள்ளேயே இதற்கான பதிலும் இருக்கின்றது.

எவ்வாறெனினும், ஊரொன்றுக்கு இரண்டு எம்.பி. கிடையாது என்று கூறிய தலைவர், ஒரு குடும்பத்துக்கு இரண்டு எம்.பி. எடுத்தது எங்ஙனம்? என்று கடைசிமட்டும் சொல்லவேயில்லை. அத்துடன் இரண்டாவது தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்கு இன்னும் நிரந்தரமாக ஒருவரையேனும் நியமிக்கவும் இல்லை.

இவ்வாறான காரண காரியங்களே இன்று ஒரு தளம்பல் நிலையையும் வெளிப்புற அழுத்தத்தையும் உண்டுபண்;ணியிருக்கின்றது என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இது வெறுமனே உட்கட்சிப் பூசலினால் மட்டும் ஏற்பட்டதல்ல என்பது ஊரறிந்த உண்மையாகும். கட்சியினதும் தலைமையினதும் போக்கை மாற்ற வேண்டுமென்றே இப்போது அழுத்தம் கொடுக்கும் சக்திகள் நினைக்கின்றன.

கட்சியை அஷ்ரபின் கோணத்தில் இருந்து பார்க்கின்றவர்களும், பிரதிபலனை எதிர்பாராது கட்சியை நேசிக்கின்றவர்களும் அதையே விரும்புகின்றனர். இந்நிலைமையை தலைமைத்துவமும் கட்சியும் சீர்செய்து கொள்ளுமாயின், இவ்வாறான தேவையற்ற அழுத்தங்கள், விமர்சனங்கள் தானாகவே குறைந்துவிடும்.

இது ஒருபோதும் மு.கா. கட்சிக்கு எதிரான கோஷமல்ல. அந்தக் கட்சி மீது மக்களுக்கு இருக்கின்ற உரிமையாகும். மக்கள் மீது அக்கட்சிக்கு இருக்கின்ற நன்றிக்கடன் ஆகும். இத் தேசிய மாநாடு இதற்கெல்லாம் பரிகாரம் தேடும் நிகழ்வாக பயன்படுத்தபபபடுமாயின், சாணக்கியம் மீள நிரூபிக்கப்படலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X