2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உண்மையான முஸ்லிம் தலைமையின் இலட்சணங்கள்

Thipaan   / 2016 ஜூலை 14 , பி.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

தலைவன் (Leader) என்பவன் சமூகத்தினை நல்லதொரு வழியில் கொண்டு செல்வதற்காக மக்களோடு மக்களாக நின்று போராடுகின்றவனாக இருக்க வேண்டும். கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு தொண்டர்களும் மக்களும் தியாகங்களைச் செய்ய வேண்டுமென நினைப்பவன் முதலாளி (டீழளள) எனப்படுவான். முஸ்லிம்களின் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று சரித்திரம் நமக்கு சொல்லித் தந்திருக்கின்றது. முஹம்மது நபி தொடக்கம் உஸ்மானிய பேரரசு வரைக்கும் உலகை ஆட்சி செய்த மிகப் பெரும் மதக் குழுமமாக முஸ்லிம்கள் இருக்கின்றனர். இந்த நூற்றாண்டிலும், மக்களை வழிநடத்திய இமாம் கொமய்னி போன்ற எத்தனையோ தலைவர்களை நாம் கண்டிருக்கின்றோம்.

உலகில் உள்ள பல நாடுகளின் ஆட்புல எல்லைகள் தற்போதும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. முன்பிருந்த, முஸ்லிம்களின் சாம்ராஜ்யங்கள் எவ்வாறு சரிந்தன என்பது நமக்குத் தெரியும். அந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களும் அரசியல் வழிநடாத்துனர்களும் - உண்மையான முஸ்லிமாக வாழ்ந்த வரைக்கும் அவர்களது ஆட்சி வீழ்ந்ததில்லை. இறைவனை மறந்து, உலக இன்பங்களில் லயித்து, மனித உரிமைகளை மதிக்காது, பணத்துக்கும் பட்டத்துக்கும் ஆசைப்பட்டு வாழ்ந்த பல முஸ்லிம் பெயர்தாங்கி தலைவர்களை, காலம் - மிகச் சுலபமாக அழித்திருக்கின்றது. இது இறைவனின் நாட்டம். அந்த தலைவர்களின் பழைய நாட்குறிப்புக்களை புரட்டிப் பார்த்தால், அவர்கள் எங்கெங்கே எத்தனை பாவம் செய்திருக்கின்றார்கள் என்பது நன்கு புலனாகும். அப்படியாயின் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் மற்றும் அவர்களது தலைவர்களின் நிலை என்ன என்ற வினாவுக்கும் விடை காண வேண்டியிருக்கின்றது.

முஸ்லிம்களின் அரசியலும் அரசியல்வாதிகளும் இஸ்லாமிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இயங்க வேண்டும். பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடொன்றில் இஸ்லாமிய „கிலாபத்... ஆட்சி செய்வது சாத்தியமற்றதே என்றாலும், அவர்கள் இஸ்லாமிய ஆட்சியில் உள்ள நல்ல விடயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இதன் கருத்தாகும். குர்ஆனும்

ஹதீஸும் இதற்கு அடிப்படை வழிகாட்டிகளாக இருக்கும். மக்களுக்காகவும் இனத்துக்காகவும் துணிந்து போராடுபவராக, அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவராக, மற்றைய சமூக மக்களை நேசிப்பவராக, பொய் சொல்லாதவராக, வாக்குறுதியை காப்பாற்றுபவராக, நயவஞ்சகம் இல்லாதவராக, பதவி மோகம் அற்றவராக இருப்பவரே உண்மையான முஸ்லிம் தலைவராக கொள்ளப்படுவார். பணத்துக்குப் பின்னால் அலைந்து திரிபவர்களும் பணம் என்றால் எதையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பவர்களும் குடும்பத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவர்களும் மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமையானவர்களும் மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிப்பவர்களும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுபவர்களும்.... அரசியல்வாதிகளாக இருந்து விட்டுப் போகலாம். ஆனால், அவர்கள் உண்மையான இஸ்லாமிய, முஸ்லிம் அரசியல்வாதிகள் அல்லர் என்பதில் இரண்டு நிலைப்பாடுகள் இல்லை.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் ஆழமான ஒரு மீள்வாசிப்பை வேண்டிநிற்கின்றது. இன்று அரசியல் செய்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் எவ்வாறான இலட்சணங்களைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை முஸ்லிம் மக்கள் முதலில் ஒரு பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும். „எல்லோரும் மனிதர்கள்தானே, பிழைகளும் தவறுகளும் செய்வது சகஜம்தானே... என்று மக்கள் எண்ணிக் கொண்டிருந்தமையாலேயே முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்தை ஏமாற்றியும் விற்றும் பிழைப்பு நடாத்துவதற்கு பழகிக் கொண்டுள்ளார்கள் என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். தவறுகள் செய்வது மனித இயல்பே. ஆனால், எதற்கும் ஓர் எல்லையுண்டு. இதற்கு முன்னர் இருந்த அரசியல்வாதிகளும் பல சமூக விரோத தவறுகளை செய்திருக்கின்றார்கள். அவர்களுக்கும் தனிப்பட்ட பலவீனங்களும் அசிங்கமான பக்கங்களும் இருந்திருக்கலாம். ஆனால், அவையெல்லாவற்றையும் விஞ்சுவதாக அவர்களது சேவைகள் இருந்திருக்கின்றன. அதனால் அவர்களது குறைகள் பெரிதாக தெரியவில்லை.

மறைந்த ஒரு முஸ்லிம் அரசியல் தலைவர் பற்றி பிற்காலத்தில் சில தகவல்கள் கசிந்திருந்தன. ஆனால், மக்கள் அதை நம்பாத நிலையே இன்றும் காணப்படுகின்றது. ஏனென்றால் மனிதன் என்ற அடிப்படையில் அவர் சில விடயங்களில் தவறிழைத்திருக்கலாம். ஆனால், அதைவிட அதிகமான சேவைகளை அவர் இச் சமுதாயத்துக்குச் செய்துவிட்டுப் போயிருக்கின்றார். பலவீனங்களைக் காட்டிலும் பலம்களே அவரிடம் அதிகமிருந்தன. அவரது சேவைகளும் சமூக சிந்தனையும் தூரநோக்குமே மலைபோல் எழுந்து நிற்கின்றன. இவ்வாறு வேறு பலரும் அரசியல் செய்தனர்.

இன்று முஸ்லிம்களின் தேசிய தலைமைகள் என்ற மகுடத்தை தமக்கு தாமே சூட்டிக் கொண்டிருக்கின்ற அரசியல் தலைவர்களிலும், அவர்களுக்கு „கூஜா... தூக்கி, „ஜால்ரா... போட்டு, சாமரம் வீசி, பன்னீர் தெளித்து, கால் பிடித்து விடுகின்ற இரண்டாம்நிலை அரசியல்வாதிகளிலும் பலங்களை விட பலவீனங்களே அதிகமாகத் தெரிகின்றன. செய்த நல்ல காரியங்களைவிட செய்யாமல் விட்ட நல்ல விடயங்களே அதிகமுள்ளன. அப்படியென்றால், முஸ்லிம்கள் தமக்குரிய அரசியல் தலைமை எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று, மீளவும் வரையறை செய்து கொள்வது காலத்தின் கடப்பாடாகும்.

அரசியல் தலைவர்கள் பல வழிகளில் வெளிப்படுகின்றார்கள். சிலர் தலைவராவதற்காகவே பிறப்பிக்கப்படுகின்றார்கள், சிலர் மக்களால் தலைவராக நியமிக்கப்படுகின்றார்கள், இன்னும் சிலர் தம்மை தாமே தலைவராக சுய பிரகடனம் செய்கின்றனர். ஆனால், ஓர் அரசியல்வாதி தனது உள்ளம் தலைமைப் பதவியைக் கேட்கின்றது என்று கேட்டு, வலிந்து அத்தலைமைத்துவத்தை பெற்றுக் கொள்ள முடியுமா? அவ்வாறு தலைவராகும் நபர் உண்மையான இஸ்லாமிய வழிமுறை தலைவராக இருப்பாரா? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு தானாக விரும்பிக் கேட்டு ஒருவர் தலைவராகி விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம், அப்படியாயின் அவரது பதவியாசை அவரைச் சில விடயங்களில் ஈடுபாட்டையும் வேறு சில காரியங்களில் பாராமுகமான செயற்பாட்டையும் மேற்கொள்ளச் செய்யும்.

அப்பதவியின் ஊடாகத் தான் எதிர்பார்த்த எல்லாவற்றையும் உழைத்து, வரப்பிரசாதங்களை சுகித்து, இனி வேண்டாம் என்று அவருக்கு அலுத்துப் போகும் வரைக்கும் அவர் எக்காலத்திலும் தனது தலைமைப் பதவியை இன்னுமொரு அரசியல்வாதிக்கு விட்டுக் கொடுக்கமாட்டார். அவ்வாறே, தனக்குப் பிறகு தலைவராக வரக் கூடிய ஒருவரையேனும் அவர் வளர்த்தெடுப்பதிலும் அக்கறையற்றவராகவே இருப்பார். இப்படியான ஒருவர் முஸ்லிம்களின் பிரதான அரசியல் தலைமையாக இருப்பாராயின், திடீரென அவர் அப்பதவியில் இல்லாமல் போகின்ற சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்த அரசியலும் நடுக்காட்டில் கண்ணைக்கட்டி விட்டது போல் அப்படியே திக்குத் தெரியாமல் நின்றுவிடும். அவருக்குக் கீழே பணியாற்றிய அரசியல்வாதிகள் தமக்கிடையே தலைமைப் பதவிக்காக முட்டிமோதிக் கொள்வார்கள்.

பணத்துக்காக மக்களை விற்கின்ற அரசியல்வாதி, உண்மையான தலைவராக இருக்க முடியுமா? அண்மைக்காலமாக முஸ்லிம் கட்சி ஒன்று பேரம் பேசல் என்ற தோரணையில் 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளிப்பதற்காக அரசாங்கத்திடம் இருந்தும் அதற்கு முன்னரும் பின்னரும் வேறு தரப்பிடமிருந்தும் கோடிகளைப் பெற்றுக் கொண்டதாக புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பொது மக்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். மேற்படி அரசியலமைப்பு திருத்தம் என்பது அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு சட்ட ரீதியாக இடமளிக்கும் ஓர் ஏற்பாடாகும். யாதேனும் ஒரு முஸ்லிம் கட்சி இதற்கு குருட்டுத் தனமாக ஆதரவளிக்குமாக இருந்தால் அதுவே மிகப் பெரும் சுயநலமாகவே கருதப்படும். இவ்வாறிருக்கையில், முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவர் இதற்காக ஆட்சியாளரிடம் இருந்து பல கோடிகளை பெற்றுக் கொண்டிருந்தால், அதை ஏனைய எம்.பி.க்களிடையே பங்குவைத்திருந்தால் அவரை எப்படி சமூக அக்கறையுள்ள தலைவர் என்று சொல்வது என விளங்கவில்லை.

மக்களுக்கு விருப்பமில்லாத ஒரு திருத்தத்துக்கு ஆதரவளிப்பதே பெருங்குற்றம் என்றிருக்கும் போது, யாராவது ஓர் அரசியல் தலைவர் அதற்குப் பெருந்தொகைப் பணம் வாங்கிவிட்டு, மக்களுக்கு பொய்க் காரணங்களை கூறியிருப்பாராயின் அது ஒருநாளும் மன்னிக்க முடியாத தவறாகும். இது ஓர் உண்மையான சமூக அக்கறையுள்ள அரசியல் தலைமையின் பண்பல்ல‚ மாறாக, கட்சியையும் கொள்கையையும் வாக்காளப் பெருமக்களையும் மொத்த விலையில் ஆட்சியாளர்களுக்கு விற்பனை செய்கின்ற அரசியல் வியாபாரியின் செயற்பாடாகவே கணிக்கப்படுகின்றது. அவர் எப்படி நல்ல தலைவர் இல்லையோ, அதுமாதிரியே, கோடிகளை வாங்கிக் கொண்டு, கீழ்நிலை அரசியல்வாதிகள் துணை போயிருந்தால் அவர்களும், யாரேனும் அதுபற்றி வாயைத் திறக்காமலிருந்தால் அவ்வாறான இரண்டாம்நிலை அரசியல்வாதிகளும் கூட பெரும் சமூகத் துரோகிகள் என்று பச்சை குத்தப்படலாம். 

இலங்கை முஸ்லிம்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இப்படியிருக்கையில், ஓர் அரசியல் தலைவர் நேர காலத்துடன் விழித்தெழுவது இல்லை என்றால், அவர் எவ்வாறு உண்மையான தலைவனாக இருக்க முடியும்? ஒவ்வொரு நாளும் 24 மணிநேரமும் விழித்திருந்து, சக்கரம் போல சுழன்று கொண்டிருந்தாலும் கூட நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய நேரம் போதாது இருக்கின்ற ஒரு காலப்பகுதியில், „இரவுப் பறவைகளாக... இருந்து விட்டு, நண்பகலில் கண்விழிக்கின்ற அரசியல்வாதிகள் இந்த சமூகத்தை காப்பாற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது. அதேமாதிரி, மக்களின் பெயரில் நிலபுலங்களை கொள்ளையடித்து விட்டு பொய்க்காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகள் இருப்பார்களாயின் அவர்கள் தேசிய தலைமை என்று சொல்வதற்கு அருகதையற்றவர்களே‚

அரசியலில் போதைக்கு முக்கிய இடமுள்ளது. இஸ்லாமிய மதம் அதை தடை செய்திருக்கும் நிலையில், அவ்வாறான போதைகளை பயன்படுத்துகின்ற யாராவது ஒரு நபரை இச்சமூகம் அரசி;யல்வாதி என்றோ தமது தலைவர் என்றோ அங்கிகரிக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. புதிய அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது மூன்று முஸ்லிம் எம்.பி.க்களுக்கு சபைக்கு வெளியில் „ஊற்றிக் கொடுக்கப்பட்டு இருந்ததாக... பெரிசுகளிடையே ஒரு கதையிருக்கின்றது. சித்தசுயாதீனமாக இருந்தாலேயே பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றிருக்கையில், போதையில் சாதிக்கலாம் என்று சொல்வதை நம்புவது „மதுபானம் அருந்தினால் சிறுநீரகத்துக்கு நல்லது... என்பதை நம்புவதற்கு ஒப்பானதாகும்.

அனைத்து வாழ்வியல் தத்துவங்களுக்கும் வழிகாட்டும் இஸ்லாத்தை பின்பற்றுகின்ற முஸ்லிம் சமூகம் - மக்களை ஏமாற்றுகின்றவர்களை, வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் போக்குக் காட்டுபவர்களை, வாய்கூசாமல் பொய் கூறுபவர்களை தமது தேசிய தலைமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. உதாரணமாக, ஒரு தலைவர் இருக்கின்றார், அவர் ஒரு நபருக்கு ஒரு பதவி தருவதாக அன்றேல் குறிப்பிட்ட பிரதேச மக்களுக்கு ஏதாவது ஒரு பதவியை பரிசளிப்பதாக வாக்குறுதி அளிக்கின்றார் என்றால், அவர் அதை நிறைவேற்றியாக வேண்டும். அதைச் செய்யாமல் தனது சகோதரனுக்கு அல்லது தனது குடும்பத்தவருக்கு அப்பதவியை அல்லது அதன் வரப்பிரசாதத்தைக் கொடுப்பார் என்றால் அவர் உண்மையான அரசியல் தலைவனாக இருப்பாரா? மஹிந்தவின் குடும்ப ஆட்சியை விமர்சித்துவிட்டு, இன்று கட்சிக்குள்ளும் தனது பதவிசார்ந்த அமைச்சகங்களிலும் தமது குடும்பத்துக்கே முன்னுரிமை அளிக்கும் அரசியல்வாதிகள் யாராவது முஸ்லிம் அரசியலில் இருப்பார்கள் என்றால் அவர்களை உண்மைக்குண்மையான தலைவர் என்றோ, அரசியல் ஆளுமை என்றோ யாராவது சொல்ல முடியுமா?

இதையெல்லாம் விட்டுவிட்டாலும், ஓர் உண்மையான முஸ்லிம் தலைவன் சபல புத்தியுடையவனாக இருக்க முடியாது. அது மிக மோசமான பலவீனமாகும். அரபுலகில் வாழ்ந்த சில முஸ்லிம் ஆட்சியாளர்கள் மீது முன்வைக்கப்படுகின்ற „இவ்வகையான... குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இஸ்லாத்தின் பார்வையில் அவர்களும் நல்ல தலைவர்களாக கருதப்பட முடியாது. வேறு பெண்களின் முகத்தைக்கூட பார்க்கக் கூடாது என்று தடைசெய்திருக்கின்ற இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் தனிப்பட்ட வாழ்க்கையில் சுத்தமாக இருப்பவரே, அரசியல் எனும் பொது வாழ்க்கைக்குப் பொருத்தமானவராவார்.

மேற்குறிப்பிட்டவை போன்ற இன்னும் பல இலட்சணங்களும் அவஇலட்சணங்களும் உள்ளன. நாம் யாரையும் இதில் குறிப்புணர்த்தவில்லை. மக்களாகிய நீங்களே உங்களுக்குத் தெரிந்த அரசியல் தலைவர்களை, அரசியல்வாதிகளை இவ்வாறான அளவுகோல்களினால் மதிப்பிட்டு, யார் உண்மையான தலைவன் என்பதை தீர்மானியுங்கள். இந்த பரிசோதனையில் யாரும் தேறவில்லை என்றால், இனிவரும் காலங்களில் புதுத் தலைமைத்துவத்தை உருவாக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .