2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உறவுகளைத் தேடும் நிறைவு​றாத பயணம்

Gavitha   / 2017 மே 30 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உறவுகளைத் தேடும் நிறைவு​(வே)றாத பயணம்

எண்ணற்ற கதைகளை நெஞ்சில் சுமந்துகொண்டு, வீதிகளில் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடித்தமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், 100 நாட்களை எட்டிவிட்டன. நம்முடைய தொலைந்து போன உறவுகள், பல ஆண்டுகள் கழித்து நம் கண்முன் வந்தால் எப்படியிருக்கும்? ஆனந்தத்தில், இன்ப அதிர்ச்சியில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுக்கும் இல்லையா? அப்படிப்பட்ட ஓர் இன்ப அதிர்ச்சியை ​அனுபவிப்போமா இல்லையா? என்பது கூடத் தெரியாமலேயே, இந்தப் போராட்டம் தொடர்கிறது.  

தனியான ஈழதேசம் வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளால், கடந்த 30 வருடகாலங்களாக முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டுப் போர், 2009ஆம் ஆண்டு நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட போது, யுத்தம் நிறைவடைந்துவிட்டதே என்று சந்தோஷப்பட்ட ஒரு கணம், காணாமற்போன உறவுகள் எங்கே என்று தேட ஆரம்பித்துவிட்ட மக்களுக்கு, இன்னும் ஒரு முடிவைப் பெற்றுக்கொடுக்க முடியாது, அரசாங்கம் நிலைதடுமாறி நிற்கிறது. 1988 மற்றும் 1989களில், தங்களது உறவுகளைத் தொலைத்தவர்கள் ஒருபுறம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உறவுகளைத் தொலைத்தவர்கள் மறுபுறம் என்று, அரசாங்கத்துக்குப் பல வருடங்களாக அழுத்தம் கொடுத்த வண்ண​மே உள்ளனர். இருப்பினும், காணாமற் போனோரைக் கண்டறிவதற்கான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளில், அரசாங்கம் களமிறங்கவில்லை. இத்தனை போராட்டங்கள், அழுத்தங்களுக்கு மத்தியில், இன்னும் ஏன் அந்த அலுவலகத்தை அரசாங்கம் ஸ்தாபிக்கவில்லை என்பது, கேள்விக்குறியாகவே இருக்கின்றது.  

காணாமற் போனவர்களது சர்வதேச வாரம், நேற்று 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த வாரம், எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும். காணாமற் ​போனோர் தொடர்பான சட்டம், கடந்த 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும், 8 மாதங்களாகியும் அந்தச் சட்டம் இன்னும் அமுலுக்கு வராமலேயே உள்ளது. அலுவலகத்தின் பொறுப்பு, அமைச்சரொருவருக்குச் சட்டப்படியாக வழங்கப்படவில்லை என்றும் அதுவே, இந்த அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்குத் தடையாக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் குறையை உடனடியாக நிவர்த்திக்குமாறும் அலுவலகத்தை உடனடியாக ஸ்தாபிக்குமாறும் கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சு, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோருக்கு, காணாமற் போனோரைத் தேடியலையும் சங்கம், கடந்த 17ஆம் திகதி மனுக்களைச் சமர்ப்பித்திருந்தது.  

எவ்வாறான குறைபாடுகளுக்கு
மத்தியி​லாவது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், குறிப்பாக ‘இதுவரை அவதானம் செலுத்தப்படாத’ காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட பல முறைகளின் கீழ், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான உண்மையை வெளிப்படுத்துவதற்கான முதற்படியாக, இச்சட்டத்தை தாம் கருதுவதாகவும் அதனைப் பாதுகாப்பதற்கு, அரசாங்கத்துக்கான உயரிய ஒத்துழைப்பை வழங்க, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்பார்த்திருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

அதற்கு முன்னர், கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற, “ஆட்கள் காணாமல் போகச் செய்வதைக் குற்றவியல் குற்றமாக்கு” என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கின் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்களது உறவுகளைத் தேடித்தருவதற்காக, அரசாங்கமோ அமைச்சர்களோ எந்தவொரு நடவடிக்கைகையையும் எடுக்கவில்லை என்று கூறி, கருத்து முரண்பாடுகளிலும் ஈடுபட்டனர்.  

உண்மையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும், அவர்கள் காணாமல் போனமைக்குக் காரணமாக இருப்பவர்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிய வேண்டும் போன்ற காரணங்களுக்காகவே, இந்தக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் ஸ்தாபிப்பதற்கான சட்டம் அமைக்கப்பட்டது. யுத்த காலத்தின் போது காணாமற்போன சுமார் 65,000 பேருக்கான சான்றிதழ்களை வழங்குவதற்கு, அரசாங்கம் ஒப்புக்கொண்டிருந்தது. யுத்தத்தின் போது, தங்களது கணவர்மா​ைர இழந்த சுமார் 40,000 விதவைகள் உள்ளனர். இவர்களுக்கு, தங்களது கணவர்மார் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்பது கூடத் தெரியாது.  

இந்நிலையில், இந்த வருடம், மறுசீரமைப்பு மற்றும் சகவாழ்வுகளுக்கான தேசியக் கொள்கையொன்றுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருந்தது. அதில், சமஷ்டி, மனித உரிமைகள், மொழியியல் உரிமைகள், ​தேசிய ஒத்துழைப்பு மற்றும் பன்முகத்தன்மை, இலங்கையிலுள்ள செயலூக்கமான குடியுரிமை பற்றிய கருத்துப் போன்ற பல்வேறு விடயங்கள் அடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அமைச்சரவையில் அங்கிகாரங்கள் வழங்கப்பட்டாலும், அமுல்படுத்துவதில் ஏற்படும் தாமதம் பற்றி பதில் சொல்வதற்கு யார் முன்வருகின்றனர்?  

பலவந்தமாகவும் விருப்பமின்றியும் காணாமல் போகச் செய்வதென்பது, மனித குலத்துக்கு எதிராக இழைக்கப்படும் மிக மோசமான குற்றத்துக்கு ஒப்பானதாகும். காணாமற் போனவர்கள், தாங்கள் விரும்பிய இடத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு உரிமை இழக்கச் செய்யப்படும் ஒரு குற்றச்செயலாகவே இது கருதப்படுகின்றது. ஒருவர் உயிரிழந்தால், கல்லறை கட்டுகிறோம். ஆனால், இவ்வாறு காணாமற்போனவர்கள் இறந்துவிட்டார்களா? அல்லது உயிருடன் இருக்கின்றார்களா? என்பதைக்கூட உறுதிப்படுத்த முடியாத, அவர்கள் இந்த பூமியில் நிரந்தரமாக வாழ்ந்தார்களா என்பது பற்றிக்கூட வரலாற்றுக்குத் தெரியப்படுத்த முடியாத அவர்களது தடயங்களை அழித்துத் துடைத்தெறியும் செயலாக​வே இது கருதப்படுகிறது.  

உலகிலுள்ள சனத்தொகையினர், இந்தப் பூமி தங்களுக்குரியது என்று சொந்தம் கொண்டாடுகின்றார்கள் என்றால், அந்தச் சனத்தொகையினர், தங்களுக்குள்ள இடம், உரிமை, சொத்து, சொந்தங்கள் அனைத்தையும் பலவந்தமாக இழக்க நேரிடுகின்றது என்பதை, காணாமல் ஆக்கப்படுகின்றமைக்கு அர்த்தமாகக் கொள்ளப்படுகின்றது.    பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுகின்றவர்கள் என்பது, மனித உரிமை மீறல்களின் தொகுப்பு என்று கூறினாலும் அது மிகையாகாது. ஏனெனில், மனித உரிமை மீறல்கள் என்று கூறப்படும் பல்வேறு விடயங்களுக்குள், இதுவும் உள்ளடங்குகின்றது. ஒரு மனிதனுக்கு, நாட்டின் பிரஜை என்ற வகையில் கிடைக்கப்பட வேண்டிய பாதுகாப்புக்கான உரிமை பலாத்காரமாகப் பறிக்கப்படுதல், தனக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை இழத்தல், தன்னுடைய உண்மையான அடையாளத்தை மறைத்தல், சட்டரீதியான உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது போதல், சித்திரவதைக்கு உட்படுத்தி, மோசமான முறையில் நடத்தப்படுதல், அவ்வாறு நடத்தியவர்களை தண்டனைக்கு உட்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்காமல் இருத்தல், அனைத்துக்கும் மேலாக, மனிதனாகக்கூட வாழ முடியாத சூழலைத் தோற்றுவித்தல் என்பன அனைத்தும், மனித உரிமை மீறல்களாகவே கருதப்படுகின்றன. சட்டதிட்டங்களுக்குக் கீழ் குற்றமாக அமையும் இப்படியான காரியங்களுக்கு, அரசாங்கத்தினர் அல்லாதவர்களும் கூட சட்டப்படி​ பொறுப்பேற்க வேண்டும். குற்றத்துக்கு யார் பொறுப்பு என்றிருந்தாலும், நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரினது வாழ்வுரிமைக்கும் பாதுகாப்புக்கும், அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுபவர்கள் பற்றிய உண்மையான விவரங்களைத் தெரிந்துகொள்வது, அதற்கு ஈடான நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வது போன்ற உரிமைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களால் நேரடியாகப் பாதிக்கப்படும் உறவினர்களுக்கு மறுக்கப்படும் போது, காணாமல் போயுள்ள தமது உறவுக்கு என்னவாயிற்றோ என்று எண்ணிக்கொண்டிருப்பது, ஒரு வகையான மனதளவுச் சித்திரவதையாகும்.  

கடந்த 1989 - 1990களில், இடம்பெற்ற கிளர்ச்சி நடவடிக்கைகளின் போது, 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டனர். 1983-2009 ஆண்டுகளின் காலப்பகுதிக்குள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்கேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்​டில் யுத்தம் நிறைவுற்ற பின்னர், மனித உரிமை ஆர்வலர்கள், மனித நேய உதவி அமைப்புகளின் ஊழியர்கள், முன்னணிச் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டதோடு. ஆட்கடத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டனர். 2010-2011ஆம் ஆண்டுகளுக்குள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்குமான ஜனாதிபதி ஆணைக்குழு (LLRC) இனால் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, 3,596 பேர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமையும் அதில் 1,018 பேர் பாதுகாப்பு படையினரால் கொண்டுசெல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்றும் கண்டறியப்பட்டது.  

2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், காணாமற் போனோர் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால், மெக்ஸ்வெல் பரணகமவின் தலைமையில் அமைக்கப்பட்டது. 1983 தொடக்கம் 2009ஆம் ஆண்டுகளுக்குள், உள்நாட்டுப் போரின் போது காணாமற் போனவர்கள் தொடர்பில், சுமார் 18,000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இவையனைத்திலும் ஒரு சில முறைப்பாடுகளுக்கு மாத்திரமே விடை கிடைத்துள்ளன. ​மற்றையவை அனைத்தும் இன்னும் கிடப்பில் உள்ளன.   

கடந்த 1980ஆம் ஆண்டில், மனித உரிமை பாதுகாப்புக்கும் மேம்பாட்டுக்குமான ஐக்கிய நாடுகளின் துணை ஆணைக்குழு, ஆட்கள் காணாமல் போவதற்கு எதிரான செயற்குழுவொன்றை அமைத்தது. உலக அளவில் குறிப்பிட்ட ஒரு கருப்பொருளில் மனித உரிமைப் பொறிமுறை ஒன்றை முதல் தடவையாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தியிருந்தது. அதன்பின்னர், பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிராக, 1992ஆம் ஆண்டுப் பிரகடனம் ஒன்றுக்கு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒப்புதல் அளித்தது. பலவந்தமாக கொண்டுசெல்லப்பட்டவர்கள் காணாமல் போவதிலிருந்து அவர்​களைப் பாதுகாப்பதற்கு, 2006ஆம் ஆண்டு, சர்வதேச ஒப்பந்தமொன்று இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம், கடந்த 2010ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது. அதன் செயலாக்க விதம், பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டவர்கள் காணாமல் போவதற்கு எதிரான குழுவொன்றால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.  

இவ்வாறு, நாடளாவிய ரீதியில் மாத்திரமல்லாது, உலகளவிலும் காணாமல் ஆக்கப்படுகின்றமைக்கு எதிராக பல சட்டங்கள் இருக்கின்ற போதிலும், போராட்டங்களும் கதறல்களும் நீடித்துக்கொண்டே இருக்கின்றன என்றால், சட்டங்கள் எதற்கு? உலகில், பலவந்தமாக கொண்டுசெல்லப்பட்டு காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் மிக அதிகம் இடம்பெறும் இரண்டாவது நாடு இலங்கைதான் என்று கூறினால் நம்புவீர்களா? இவ்விடயத்தை, பலவந்தமாகவும் விருப்பத்துக்கு மாறாகவும் கொண்டு செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான ஐக்கிய நாடுகள் செயற்குழுவே பட்டியல்படுத்திக் கூறியுள்ளது.   

பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் காணாமல் போவதென்பது, சர்வதேச சட்டங்களின் கீழ் ஒரு குற்றமாகும். அவற்றை விசாரித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, அனைத்து நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இருக்கின்றது. பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேகநபருக்கும் சம்பந்தமில்லாத ஓர் இடத்தில் சம்பவம் நடைபெற்றால், அந்த நாடு அதனை விசாரிக்க வேண்டும். போர்க் காலம், போர் வருவதற்கான ஆபத்து உண்டு, உள்நாட்டு அரசியல் கிளர்ச்சி இருக்கின்றது, வேறொரு அவசரநிலை ஏற்பட்டுள்ளது என்ற காரணங்களைக் காட்டி, பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுவதை, எந்தவொரு அரசாங்கத்தாலும் நியாயப்படுத்த முடியாது. பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் காணாமல் போவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தில், 2016ஆம் ஆண்டு மே மாதத்தில், இலங்கையும் கையொப்பம் இட்டது. இந்நிலையில், நாட்டின் எவரும், பலவந்தமாகக் ​கொண்டு செல்லப்பட்டுக் காணாமல் போவதைத் தடுப்போம் என்று, வெளிப்படையாகவே இலங்கை உறுதியளித்துள்ளது.  

காணாமற் போனவர்களும் அவர்களது உறவினர்களும், பிணங்களாகவே வாழ்ந்து வருகின்றனர். உயிருடன் இருந்தாலும் மாண்டு விட்டதான நிலை, உயிருடன் இருப்பவர்கள் மரணித்து விட்டதான தோற்றப்பாட்டுடனேயே பார்க்கப்படுகின்றனர்.

பலவந்தமாகவும் விருப்பமின்றியும் ஆட்களைக் காணாமல் போகச்செய்யும் மூலோபாயமானது, அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை இத​ர மனிதர்களுடனும் இடங்களுடனும் தொடர்புகொள்ள முடியாத வகையில் ஒதுக்கி வைப்பதாகும். இன்னொருவிதமாகக் கூறினால், நான்கு சுவர்களினாலான சிறையில் அடைத்து வைப்பதாகும். காணாமல் போகச்செய்தல் எனும் சம்பவத்தால், பாதிக்கப்பட்டவரது அந்த வாழ்க்​ைக, எதை ஒத்ததாக இருக்கும்? காணாமல் போகச்செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரோடு இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய துக்கம், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுமொரு புலம்பலுக்கு ஒத்ததாகக் கூறமுடியாது. எந்த​ேவார் அறிக்கையிடப்பட்ட மரணத்தைத் தொடர்ந்தும் ஏற்படக்கூடிய துக்கம், குறிப்பிட்டதொரு நினைவேந்தல் காலப்பகுதியோடு முடிவுக்கு வந்துவிடும். ஆனால், காணாமல் போகச்செய்த சம்பவத்தினால் ஏற்படக்கூடிய துக்கம் முடியப்போவதில்லை. அந்தத் துக்கம், நிரந்தரமாக நம்மை தொடர்ந்து வரும். அந்தப் பழிபாவத்துக்கு, இந்த நல்லாட்சியும் உள்ளாகப்போகிறதா? அல்லது, இந்தப் பிரச்சினைக்கு, இந்த ஆட்சி முடிவிலேனும் விடை காணப்போகிறதா என்பது, நல்லாட்சியாளர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .