2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

எல்லா வெளிச்சங்களும் விடிவுகளைத் தருவதில்லை

Thipaan   / 2016 மே 17 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப.தெய்வீகன்

இன்னொரு தடவை மே 18 வந்திருக்கிறது. தமிழினம், தனது வரலாற்றில் சந்தித்த உச்ச அழிவினை, இந்தத் தடவையும் நினைவு கூருவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்தத் துயரநாள் வந்துபோவதும் அதில் எல்லோரும் சுடரேற்றி வணக்கம் செலுத்துவதும் சம்பிரதாயமாக நடந்து முடிகிறது. இந்தச் சுடரேற்றல்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், எமது இனம் எவ்வளவு வீச்சுடன் போராடியிருக்கிறது அல்லது அவ்வாறு முனைப்பாக போராடவேண்டிய தேவை ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய்வதுதான் இந்தப்பத்தி.

மே 18 என்பது, இறந்தவர்களை நினைவுகூரும் சடங்கு நிகழ்வாக நடந்துமுடிந்தாலும், தமிழினத்தைப் பொறுத்தவரை, இது எமது இனத்துக்கு ஏற்பட்ட ஆறாத காயத்துக்கு நிரந்தர மருந்திடும் தீர்வினைக் கண்டறிவதற்கான சத்தியப்பிரமாணத்தைச் செய்து, அதனை நோக்கி முழு வீச்சுடன் செயற்படுவதற்கு உறுதிபூண வேண்டியநாள். ஒவ்வொரு வருடமும், நினைவுச்சுடரின் முன்னால் நிற்கும்போதும் கடந்த வருடத்திலிருந்து நாம் முன்னேறிய பாதையின் தூரத்தை நாங்களே சுய மதிப்பீடு செய்துகொள்ளவேண்டிய நாள். அதுதான், இந்த நாளின் தூய்மையை மேலும் வெண்மைப்படுத்தி, இறந்தவர்களின் இழப்புக்குப் பெறுமதியை அள்ளிக்கொடுக்கும் வீரியம் மிக்க நாளாக அமையும். முப்பதாண்டு காலமாக வீரத்தின் விளைகளமாக உலகுக்குப் பறைசாற்றிய இந்த இனத்தின் மானத்தைப் பறைசாற்றுவதாகவும் அமையும்.

அப்படியானால், கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த நோக்கத்துடன் நாம் பயணித்த

தூரம் எவ்வளவு, அதில் பெற்றுக்கொண்ட பலாபலன்கள் என்ன?

தமிழர் தாயகத்தில் எத்தனையோ தேர்தல்கள் வந்து போயிருக்கின்றன. அதற்கு வெளியில் நடைபெற்ற தேர்தல்களிலும், தமிழ்மக்களின் தீர்ப்புக்கள் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கின்றன. ஆகமொத்தம், தற்போது தாயகத்தின் அரசியல் நிலைமையைப் பொறுத்தவரை, தமிழினம் முன்னெப்போதும் கொண்டிராத அசுர பலத்துடன் காணப்படுகிறது. மக்கள் அதற்கான ஆணையை தமிழ்க் கூட்டமைப்புக்கு வழங்கியிருக்கிறார்கள்.

இந்த ஆணையைப் பயன்படுத்தி கூட்டமைப்புச் செய்யக்கூடியது என்ன என்பதை, சம்பந்தன், அவர்களுக்குள் மாத்திரம் மையப்படுத்தி வைத்திருப்பதால், கூட்டமைப்பின் ஒற்றுமை என்பது நாளுக்கு நாள் ஈடாட்டம் கண்டுவருகிறது. இது வெளிப்படையான கள யதார்த்தம். ஆனாலும், இந்த வருடம் ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அதீத துணிவுடனும் நம்பிக்கையுடனும் அரசாங்கத்துடன் கைகோர்த்து, அளவுக்கதிகமான தனது ஆதரவை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறார் சம்பந்தன்.

இதுதான் தாயகத்தின் தற்போதைய நிலை.

புலம்பெயர்ந்து வாழும் மக்களை எடுத்து நோக்கினால், கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டை கடுமையாக விமர்சிப்பதோடு, சிங்கள தேசத்துடன் கடும்போக்கை கடைப்பிடிப்பதே ஒரே வழி என்ற கொள்கையுடன், அப்படியான கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் அரசியல் தரப்பு யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தமது ஆதரவை வழங்குவதும் அவர்களுக்கு ஊடாக கூட்டமைப்பின் பயணத்தை விமர்சிப்பதுமாக இந்தப் புலம்பெயர் தரப்புக்களின் போக்குக் காணப்படுகிறது.

தென்னிலங்கைப் பக்கம் கொஞ்சம் பார்வையைத் திருப்பினால், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றைக் காணுவதற்கு அரசாங்கம் தயாரென்றாலும், அதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கும் அந்தத் தீர்வினைத் திருப்தியுடன் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் சரியான தெளிவு இல்லை. கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட 'இனமோதல்' என்ற அத்திபாரத்தின் மீதுநின்றுதான், தமிழர்களின் பிரச்சினையை சிங்கள மக்கள் பார்க்கிறார்கள். ஆகவே, சிங்கள மக்களின் இந்தப் புரியாத்தன்மையை தமக்குச் சார்பாக பயன்படுத்திக்கொள்ளும் பேரினவாதச் சக்திகள் தொடர்ந்தும் வெற்றிபெற்று வருகின்றன. சிங்கள மக்கள் என்ன, முஸ்லிம் மக்களுடன்கூட தமிழ் மக்களுக்கான உறவென்பது இன்னமும் ஆரோக்கியமான நிலையில் இல்லை என்பது தீர்வுபற்றிப் பேச்சு எடுக்கப்படும்போதெல்லாம் முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைக்கும் அதிதீவிர கருத்துக்களிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது.

இந்தத் தடைகளைத் தாண்டுவதற்கு, தாயகத்தில் கடந்த ஏழாண்டுகளில் எந்த உருப்படியான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தப் பெரும் தடையைக் கடந்த ஏழாண்டு காலத்தில் தமிழர் தரப்பு தாண்டவே இல்லை என்று கூறலாம். இதனைத் தாண்டும் வரை, தீர்வை நோக்கிப் பேசுவதும் அது குறித்து பரவசம் கொள்வதும் கடற்கரையில் மணற்கோட்டை கட்டுவதுபோன்றதே ஆகும்.

பழிவாங்கும் அரசியலும் கடும்போக்கு நிலைப்பாடுகளும்தான் நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வினைத் துரிதமாகத் தாயக மக்களுக்குப் பெற்றுத்தரும் என்று புலம்பெயர் அமைப்புக்களில் பல நம்புவதாகத் தெரிகிறது. அத்துடன், தாங்கள் சார்ந்த நாடுகளின் அரசாங்கங்கள், தமிழ் மக்களின் அழிவின்போது எதுவும் செய்யாத காரணத்தினால், அதற்குப் பிராயச்சித்தமாக தாங்கள் கேட்கும் தீர்வினை இப்போது தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

எமக்கான சரியான கொள்கையும் பாதையையும் நாமே வகுத்துக்கொள்ளாமல், எமக்காக யார் பேசினாலும் உடனே அவர்களின் பின்னால் அணிவகுத்து நின்றுவிட்டு, குறுகிய காலத்தில் அந்த முயற்சி வீண்போன பின்னர், தோல்விகளுடனும் விரக்திகளுடனும் மீண்டும் அடுத்தவரை எதிர்நோக்கி காத்திருப்பதுதான் கடந்த ஏழாண்டு காலத்தில் அதிகம் நிகழ்ந்தது எனலாம்.

இன்றுவரை, புலம்பெயர்ந்த நாடுகளில் அந்தந்த நாடுகளிலுள்ள அரசாங்கங்களுடன், தமிழ் மக்களின் தீர்வு இதுதான் என்றும் அதனை வழங்குவதற்கு எவ்வாறு அந்த அரசாங்கங்களுடன் இணைந்து செயற்படலாம் என்றும் பேசுவதற்கு இறுக்கமான ஒற்றை அமைப்புக்கள் இல்லை. எண்ணுக்கணக்கற்ற அமைப்புக்கள், ஒவ்வொரு தீர்வு குறித்துப் பேசுகின்றன. இவர்கள் எல்லாம் எமக்காகத்தான் பேசுகிறார்களா என்று, தாயக மக்களே வியக்கும் வகையில் சிலவேளைகளில் இந்த அமைப்புக்களின் கோரிக்கைகள் காணப்படுகின்றன.

அதேவேளை, இந்த அமைப்புக்கள் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுகிறார்களா, கூட்டமைப்பிடம் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி, எவ்வாறு அவர்களுடன் இணைந்து பயணிப்பது என்று சிந்திக்கிறார்களா என்றால், அவ்வாறு செயற்படும் சொற்ப எண்ணிக்கையாளர்களும் கடுமையான வசைபாடல்களுக்கு உட்படுத்தப்பட்டு, சமூகத்தினரால் தீண்டத்தகாதவர்கள்போல முத்திரை குத்தப்பட்டுகிறார்கள். யதார்த்தத்தைப் பேசுபவர்கள், ஏலியனாக்கம் செய்யப்பட்டு, உணர்ச்சிப் பேச்சாளர்கள் அடுத்த தலைவர்களாக்கப்படுகிறார்கள்.

ஆனால், தமிழகத்தில் ஏழு வருடங்களாக எமக்குக் குரல் கொடுக்கும் சீமான் வகையறாக்களுடன் மாத்திரம் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதுடன்தான், இந்த அமைப்புக்களின் கனவுப் பயணம் நீண்டுசெல்கிறது.

தமிழகம் என்பது, இந்தியாவின் ஒரு மாநிலம். இந்தியா என்பது தமிழ் மக்களின் மீது இன்னமும் இரக்கத்தைக் காண்பிக்க மறுக்கும் மிகப்பெரும் வல்லரசு. இன்று அந்த வல்லரசின் மிகப்பெரிய பங்காளி அமெரிக்கா. சீனா என்ற பெரும்பூதத்திடமிருந்து தெற்காசியாவைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அமெரிக்காவுடன் பங்காளியாகிவிட்ட இந்தியாவின் அரசியல், இராஜதந்திர நிகழ்ச்சி நிரல்கள் ஆழமானவை. அகலமானவை. இந்தச் சிக்கலான சகதிகளுக்குள் நின்று சீமான், எம் மக்களுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என்று நம்புவதும் அவரே இனி எம்மினத்தின் மீட்பர் என்ற தோரணையில் சாஷ்டாங்கமாகக் கிடப்பதும் எவ்வளவு முட்டாள்தனம்?

இதிலும்கூட, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழின அழிப்பின்போது துரோகம் செய்த கருணாநிதியை வீழ்த்தவேண்டும் என்பதற்காகவே, சீமானுக்கு கொம்பு சீவி விட்டு வேடிக்கை பார்ப்பதற்கு இன்னொரு கூட்டம் வெறிகொண்டு நிற்கிறது.

எம்மினத்தை அழித்தவன் அழியவேண்டும் என்று கொதிப்படைவது இயல்பான மனநிலைதான். ஆனால், எஞ்சியிருக்கும் எமது மக்களின் வாழ்வுக்கு ஒரு தீர்வையடைந்துவிட்டு இந்த வீரவிளையாட்டுக்களுக்குப் போகலாமே?

எமது இனத்துக்கான போராட்டத்தில் மற்றவர்கள் வழங்கும் ஆரோக்கியமான பங்களிப்புக்கள் வெறும் போனஸ். அவ்வளவே.

மேலே குறிப்பிட்டதுபோல, ஈழத்தமிழ் சமூகம், கவனிக்கவேண்டிய இன்னொரு மிகமுக்கிய விடயம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள மக்களின் மனங்களை வென்று அவர்களுடன் ஒரு நல்லுறவைப் பேணுவது.

புலம்பெயர்ந்து இரண்டாவது தலைமுறையையும் காணப்போகும் எமது ஈழத் தமிழினத்தவர்கள், இன்று பல நாடுகளில் பல முக்கிய பொறுப்புக்களை வகிக்கிறார்கள். அந்தந்த நாட்டு மக்களுக்கு பல சேவைகளைச் செய்கிறார்கள். ஆனால், அவை எதுவுமே புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழினத்தின் ஒட்டுமொத்த பலமான அங்கு பதிவுசெய்யப்படவில்லை. தனித்தனியான பங்களிப்பாக மாத்திரமே மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு பலம் மிக்க சமூகமாக - கூட்டு உழைப்புடன் - மேற்கொள்ளக்கூடிய நற்காரியங்கள்தான் எமது இனத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் மண்ணில் உயரிய அங்கிகாரங்களைப் பெற்றுத்தரும். அந்த அங்கிகாரங்களின் ஊடாகவே, எமது தாயக மக்களுக்கான தேவைகளை நாம் முன்னெடுக்கும்போது எமக்கான ஆளணிகள் பெருகும்.

இதன் தேவையை கடைசிக்கட்ட போரின்போது நன்றாகவே எல்லோரும் அறிந்திருந்தோம். ஆனால், கடந்த ஏழாண்டுகளிலும் இந்தநிலை அப்படியேதானிருக்கிறது.

இது ஈற்றில், எவ்வாறு எமது பிரச்சினையை சிங்கள மக்களுக்குப் புரியவைக்காமல், நாம் மாத்திரம் ஒரு தீர்வினை ஒற்றைத்தனமாகப் பெற்றுவிடவேண்டும் என்று விரும்புகிறோமோ, அதுபோன்ற யாதார்த்தத்துக்கு ஒவ்வாத அணுகுமுறையாகவே வெளிநாடுகளிலும் அமையும். புலம்பெயர் மண்ணில் இங்குள்ள இனத்தவர்களுடன் எமது மக்களின் பிரச்சினைகளை ஆழமாப் பேசி அவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டு முன்னேறாதவரை, ஈழத் தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள் வீதிக்கு குறுக்காகப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைக்கும் - கோபத்தை ஏற்படுத்தும் - போராட்டங்களாக மட்டுமே அமையும்.

தாயகத்தினதும் புலம்பெயர் மண்ணினதும், தமிழிகத்தினதும் யாதார்த்தங்களை மீள்பரிசீலனை செய்து கொள்வதுதான் இம்முறை மே 18ஆம் திகதி, அனைத்துத் தமிழர்களும் உறுதியெடுத்துக்கொள்ளவேண்டியதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .