2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வாழாவிருத்தல்

மொஹமட் பாதுஷா   / 2018 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒற்றுமை பற்றி, முஸ்லிம்கள் நூற்றாண்டுகளாகப் பேசி வருகின்றனர். இஸ்லாமிய மார்க்கத்திலும் அது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நிஜத்தில், ‘ஒற்றுமை ஒற்றுமை’ என்று பேசிப்பேசியே, பல அடிப்படைகளில் பிரிக்கப்பட்ட இனக் குழுமங்களுள் ஒன்றாகவே, இலங்கை முஸ்லிம்கள் இன்றிருக்கின்றனர் என்பதை, திரும்பவும் சொல்ல வேண்டியுள்ளது.  

 அரசியல் ரீதியாகவும், மார்க்க ரீதியாகவும், இப்போது புவியியல் அடிப்படையிலும் பல பிரிவுகளாக, முஸ்லிம்கள் பிரித்தாளப்படுவதைக் காணமுடிகின்றது. முக்கியமான தருணங்களில், ஒற்றுமையின் பலத்தை, முஸ்லிம்களால் வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது.  

மார்க்க அடிப்படையில் ஒருமித்த நிலைப்பாடு இல்லாமையால், பெருநாள் கொண்டாடுவதில் இரு நிலைப்பாடுகள் எடுக்கப்படுவது போல, அரசியலில் ஒற்றுமை இல்லாத ஒரே காரணத்தால், முஸ்லிம்கள், இமாலய விடயங்களை இழந்து கொண்டிருக்கின்றனர்.   

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் முன்னெடுப்பின் மூலம், பெரிதாக எதையும் சாதிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.   

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் காலத்துக்கு முன்னர், முஸ்லிம் அரசியல்வாதிகள், பெரும்பான்மை மற்றும் தமிழ்க் கட்சிகளில் சங்கமமாகி, இணக்க அரசியல் செய்து கொண்டிருந்தனர்.   

பின்னர், முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கத்துக்குப் பிறகு, கிட்டத்தட்ட 50 சதவீதமான அரசியல்வாதிகள், ஒரு குடையின் கீழ் அல்லது கோட்பாட்டின் கீழ், கொண்டு வரப்பட்டனர். அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர், ஒரு பிரளயம் ஏற்பட்டு, மீண்டும் துருவங்களாகியுள்ளனர் முஸ்லிம் அரசியல்வாதிகள்.    

முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற கோஷமும் விருப்பமும், கடந்த 15 வருடங்களாக மேலோங்கியிருக்கின்றது.   

‘எல்லோரும் ஒன்றுபட்டால், நமக்கு நல்லது நடக்கும்’ என்று, கடைநிலை வாக்காளனும் உணர்கின்றான். ஆனால், ஒரு வருடத்துக்கு முன்பு வரைக்கும், அது கொஞ்சமேனும் சாத்தியமாகி இருக்கவில்லை.   

அதற்கு முக்கிய காரணம், தம்மைத் தாமே ராஜாக்களாக, மந்திரிகளாக நினைத்துக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே காணப்படும், பொறாமை, போட்டி, குரோத அரசியல் மனநிலையும் கருத்துநிலை முரண்பாடுகளும் காரணம் என்று கூறலாம். அதேபோன்று, ஒருவரை ஒருவர் நம்பாத, சந்தேக மனநிலையும் இதில், கடுமையாகச் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதை, மறுக்க முடியாது.   
நிலைமை இவ்வாறிருக்கையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட, கடைசிக்கட்டப் பிளவு, முஸ்லிம் கட்சிகள் சிலவற்றை இணைப்பதற்கான நிகழ்தகவுகளை, அதிகரிக்கச் செய்தது. 
மு.காவின் செயலாளர் நாயகமாக இருந்த எம். டி. ஹசன்அலி, அக்கட்சியின் தவிசாளராகப் பதவி வகித்த பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் தலைமையில், சிலர் கட்சியை விட்டும் வெளியேறி, தூய மு.கா அணியாக இயங்கத் தொடங்கியதுடன், பிரசாரக் கூட்டங்களையும் நடத்தினர்.   

மு.கா தலைவர் மீது, பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த இவர்களுக்குப் பின்னால், மக்கள் அலையொன்று அடிக்கத் தொடங்கியது.   

இந்த வேளையில்தான், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்றை, உருவாக்குவது பற்றிய சிந்தனை வலுப்பெற்றது. முஸ்லிம் கட்சிகளிடையே, ஒற்றுமை வேண்டுமென்று, நெடுநாளாகப் பலரும் சொல்லி வருகின்ற போதிலும், இந்தக் கட்டத்தில், முஸ்லிம் கூட்டமைப்பு என்ற கோட்பாட்டை வலியுறுத்தியதில், குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் பெரும் பங்கிருக்கின்றது. 

அந்த அடிப்படையில், ஒரு சில ஊடகவியலாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் இதற்காகப் பாடுபட்டனர்.   

இரண்டு கட்சிகள் சேர்கின்ற ஓர் அமைப்பாகவோ, மு.காவுக்கு எதிரான ஆட்களின் கூடாரமாகவோ, கூட்டமைப்பு அமைந்து விடக் கூடாது, என்ற எண்ணம் இருந்தது.   

ஆனால், மு.கா தலைவர் ஹக்கீம், இந்தக் கூட்டமைப்புக் கோட்பாட்டுடன் உடன்படுபவர் அல்ல என்பதுடன், பிரதான முஸ்லிம் கட்சியின் தலைவரான அவர், மு.காவை விடச் சிறியதெனக் கருதுகின்ற கட்சிகளுடனும், தனக்குத் தலையிடி கொடுக்கும் அரசியல்வாதிகளுடனும், கூட்டுச் சேர்வதற்கு முன்வரமாட்டார் என்பது, ஆரம்பத்திலேயே தெரிந்தது.   

அத்துடன், முஸ்லிம் கூட்டமைப்பு என்பது, மு.காவுக்கு எதிரான கட்டமைப்பு என நினைத்த ரவூப் ஹக்கீம், கூட்டமைப்பு தொடர்பான, நல்லெண்ணச் சமிக்ஞை எதையும் வெளிப்படுத்தவும் இல்லை.   
ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் தூய காங்கிரஸ் அணி ஆகியவை, கூட்டமைப்புக் குறித்து, நல்லெண்ணங்களை வெளிப்படுத்தி, பல தடவை, பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன. 

கடைசி நேரத்தில், தேசிய ஐக்கிய முன்னணியும், கூட்டமைப்பில் இணைய விருப்பம் கொண்டிருந்ததாக அறிய முடிகின்றது.   

முஸ்லிம் கூட்டமைப்பு என்பது, வெற்றிகரமாக நிறுவப்படுமாக இருந்தால், அது சமூகத்துக்கு நன்மை பயப்பது மட்டுமன்றி, அரசியல் ரீதியான இலாபங்களையும் கொண்டு வரும் என்பது தெளிவானது.   
ஆனால், சில சந்தேகங்கள்,  நம்பிக்கையீனங்களால், ஏ.எல்.எம். அதாவுல்லாவைத் தலைமையாகக் கொண்ட தேசிய காங்கிரஸ் கட்சி, கடைசி நேரத்தில், சிவப்புக் கொடி காட்டியது.   

கோட்பாட்டு ரீதியான முரண்பாடுகள், அரசியல் கலாசாரம் சார்ந்த நிலைப்பாடுகளின் காரணமாக, ந.தே.முன்னணியும் நழுவிக் கொண்டது.   

கடைசியில், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் ஹசன்அலி தரப்பால் பொறுப்பேற்கப்பட்ட ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு என்ற சிறு கட்சியும் இணைந்து, உள்ளூராட்சித் தேர்தலுக்குச் சரியாக இரண்டு மாதங்கள் இருக்கையில், ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ என்ற பெயரில், ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டன.   

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில், ஏதோவொரு காரணத்தால், பஷீர் சேகுதாவூத் கலந்து கொள்ளவில்லை. மேலும், ஏதோ காரணத்துக்காக, ‘முஸ்லிம் கூட்டமைப்பு’ என்ற பெயர் வைக்கப்படாமல், ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ எனப் பிரகடனப்படுத்தப்பட்டது என்பதையும் தவிர்த்துப் பார்த்தால், இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வு என்பதில், மாற்றுக் கருத்துகள் இல்லை.   
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்பது, வெறும் தேர்தலுக்கான கூட்டு இல்லை. 12 கொள்கைகளின் அடிப்படையில் உருவான ஓர் அமைப்பாகும். எனவே, இக் கூட்டமைப்பு தொடர்பாக, முஸ்லிம் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பிருந்தது.   

இன்னும், அந்த எதிர்ப்பார்ப்பு மீதமிருக்கின்றது. அதனாலேயே, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், கூட்டமைப்பு, கோட்பாட்டின் ஊடாகவும், தனித்தும் களமிறங்கிய ‘மயில்’ கட்சியால், முன்னரைவிட அதிக ஆசனங்களைக் கைப்பற்றவும் முடிந்தது.   

ஆனால், இந்த எட்டு மாதங்களிலும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எதைச் சாதித்திருக்கின்றது, பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கைகளின் வழியில், எத்தனை மீற்றர் தூரம் முன்னோக்கிச் சென்றிருக்கின்றது?  

 மாவட்டச் செயலாளராக, முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டது, தனியே மக்கள் காங்கிரஸின் முயற்சியாக அல்லாமல், கூட்டமைப்பின் முயற்சியாக இருக்குமாயின், முஸ்லிம் கூட்டமைப்பு வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தின், 12ஆவது பிரகடனம், பகுதியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் சொல்ல முடியும்.   

ஆனால், இதற்கப்பால் எதைச் செய்துகாட்டி இருக்கின்றது? குறைந்த பட்சம், தனது கொள்கைகள், கோட்பாடுகளுடன் கூட்டமைப்பை, உயிர்ப்புடன் வைத்திருக்கின்றதா, எனக் கேட்கத் தோன்றுகின்றது.   

சுருங்கச் சொன்னால், கூட்டமைப்பின் செயற்பாடுகளில் பஷீர் சேகுதாவூத், சற்றுப் பட்டும்படாமலும் இருந்து, ஐ.சமாதானக் கூட்டமைப்பு என்ற கட்சியைப் பலப்படுத்தவே, பிரயத்தனப்படுகின்றார் என்ற குற்றச்சாட்டும் தற்போது முன்வைக்கப்படுகின்றது.  

 ரிஷாட் பதியுதீனுக்கு அமைச்சின் வேலைகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேலைகளையும் செய்யவே, நேரம் சரியாக இருக்கின்றது என்ற குற்றச்சாட்டும், கூட்டமைப்பு தொடர்பாக, அவர் மீது முன்வைக்கப்படுகின்றது.   

ஹசன்அலிக்கு, சமாதானக் கூட்டமைப்பு என்ற கட்சியைக் கட்டமைப்பதே பெரும்பாடாக இருக்கின்றது. இதற்கு மேலதிகமாக, ஹசன்அலியுடன் மேடையேறிப் பேசி, மக்களை உசுப்பேற்றி விட்ட சிலர், இன்று ரிஷாட் - ஹசன்அலி என்ற இரட்டைத் தோணிகளில் கால்வைத்துக் கொண்டு தடுமாறுகின்றனர். இப்படியாக, கூட்டமைப்பின் கோட்பாடுகள், கோப்புகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றன.   

முஸ்லிம் கூட்டமைப்பில், இணைந்து கொண்ட அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், ஆரம்பத்தில் இருந்த எண்ணம், வேட்கை என்பது உன்னதமானது.   

அதை நம்பியே, ஊடகங்களும் மக்களும் ஆதரவு தெரிவித்தன. எனவே, கூட்டமைப்பு என்ற அற்புதமான கட்டமைப்பை, முன்வைக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் முன்கொண்டு செல்ல வேண்டும். 

அந்த அடிப்படையில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு நிறுவப்பட்ட போது, வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனத்தை, (சிலருக்கு மறந்திருப்பார்கள் என்பதால்) இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.  


01. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் இறைமையைப் பாதுகாப்பதற்கும், ஐக்கிய இலங்கைக்குள் இனங்களுக்கிடையில் சமத்துவத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கும், சகல இன மக்களோடும் இணைந்து முன்னோடிகளாகச் செயற்படுதல்.  

02. சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள், நாட்டின் அரச கரும மொழிகளாகத் தொடர்ந்தும் பேணப்படுவதோடு, நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் அவரது சொந்த மொழியில், சகல கருமங்களையும் ஆற்றுவதை உறுதிப்படுத்தச் செயற்படுதல்.  

03. இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ் இனங்களைப் போல, முஸ்லிம்களும் ஒரு தனியான தேசியம் என்பதோடு, அவர்களுடைய சுயநிர்ணயத்தையும் உறுதிப்படுத்தச் செயற்படல்.  

04. வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாகவே இருத்தல் வேண்டும் என்பதுடன், கிழக்கு மாகாணத்தை வேறு எந்தவொரு மாகாணத்துடனும் முழுமையாகவோ, பகுதியாகவோ, நிரந்தரமாகவோ,  தற்காலிகமாகவோ இணைக்கக் கூடாது. அத்தோடு, 1960 முதற்கொண்டு திட்டமிட்டு, கிழக்கு மாகாணத்தோடு இணைக்கப்பட்ட பிரதேசங்களை, கிழக்கு மாகாணத்திலிருந்து நீக்கிவிடுவதற்காகச் செயற்படுதல்.  

05. அதிகாரப் பகிர்வு என்பது, மாகாண சபைகளோடு மட்டுப்படுத்தப்படாமல், உள்ளூராட்சி சபைகளும் அதிகார வலுவுள்ளதாக மாற்றப்படுவதுடன், அதிகார அலகின் ஆள்புலத்துக்கு உட்பட்ட, எந்தவொரு சிறுபான்மை இனத்துக்கும் எதிரான அத்துமீறலைத் தடுக்கக் கூடிய, பொறிமுறையொன்றை தாபிக்கச் செயற்படல்.  

06. நாட்டில் காணப்படுகின்ற நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை, தொடர்ந்தும் பேணப்படுவதோடு, நேரடியாக மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் பொறிமுறை, மாற்றங்களுக்கு உட்படாதிருப்பதற்காகச் செயற்படல்.  

07. தற்போது நடைமுறையிலுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முறைமை, தொடர்ந்தும் பேணப்படுவதோடு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்விகிதாசாரத் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படும் முயற்சிகளுக்கு எதிராகச் செயற்படுவதோடு, அண்மைக்காலத்தில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களால், சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளை நிவர்த்திக்கப் பாடுபடல்.  

08. நாட்டின் சகல மதப் பிரிவினரினதும், சுதந்திரமான மதவழிபாட்டுக்கான உரிமை உறுதிப்படுத்தப்படுவதோடு, மத வழிபாடுகளில் ஏற்படுத்தப்படும் தடைகளுக்கெதிராக, நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தக்க, வலுவான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க, அரசாங்கத்தை வலியுறுத்திச் செயற்படுதல்.  

09. வடக்கு, கிழக்கு மாகாணங்களில், பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, மீள மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதுடன், முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளில், மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகச் செயற்படுவதோடு, பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை, துரிதப்படுத்தச் செயற்படுதல்.  

10. அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது, மாவட்ட ரீதியாக இன விகிதாசாரத்தைப் பேணும் வகையில், தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளைத் திருத்தம் செய்வதுடன், அபிவிருத்திச் செயற்பாடுகளில் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால், சமத்துவம் பேணப்படுவதை உறுதிசெய்யப் பாடுபடல்.  

11. நாட்டின் நிர்வாகச் செயற்பாடுகளில், மொழி ரீதியான சிரமங்களை எதிர்கொண்டுள்ள அம்பாறை மாவட்டத்தில், தமிழ்பேசும் சமூகத்தவர் பெரும்பான்மையாக வாழ்கின்ற கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியும், குறித்த மூன்று தொகுதிகளில் வாழ்கின்ற மக்களின் விகிதாசாரத்துக்குத் தேவையான காணி நிலத்தைக் கொண்டதுமான நாட்டின் 26ஆவது நிர்வாக மாவட்டத்தை ஸ்தாபிக்கச் செயற்படுதல்.  

12. அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர் உள்ளடங்கலாக, நாட்டின் சகல மட்டங்களிலும் காணப்படும் உயர் பதவிகளில் இன விகிதாசாரம் பேணப்படுவதை உறுதிப்படுத்த, அரசாங்கத்தை வலியுறுத்திச் செயற்படுதல்.  

எனவே, இந்தக் கொள்கைப் பிரகடனங்களில், எந்தளவுக்கு முஸ்லிம் கூட்டமைப்பு முன்சென்றுள்ளது என்பதும், அம்பாறை மற்றும் கண்டிக் கலவரம் தொடக்கம், ‘முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக’, இப்போது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டு வரையிலுமாக, பல விவகாரங்களில், கூட்டமைப்பு என்ன காத்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை, கூட்டமைப்பின் தலைவர் எம். டி. ஹசன்அலி, பிரதான அங்கத்துவக் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன், தவிசாளர் அமீர்அலி, இரண்டாவது அங்கத்துவக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், தூய அணியின் தீவிர செயற்பாட்டாளர்களாக இருந்த அன்ஸில், தாஹிர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரும், தமது நெஞ்சைத் தொட்டுக் கேட்டுப்பார்க்க வேண்டும்.   

முஸ்லிம் கூட்டமைப்பு என்பது, ஒற்றுமை பற்றிச் சிந்திக்கின்ற இந்த நாட்டு முஸ்லிம்களின் நீண்டகாலக் கனவாகும். தேர்தலில் வெல்வதும், வாக்குகளைப் பெறுவதும், பதவிகளும், அதிகாரங்களுமே முன்னுரிமைக்குரிய விடயங்கள் என்றால், கூட்டமைப்பு என்ற தூய்மையான கோட்பாட்டை, அதற்காகப் பயன்படுத்தக் கூடாது.   

அப்படியில்லை, நாம் இன்னும் அதே உறுதியுடன் இருக்கின்றோம் என்று, முஸ்லிம் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் சொல்வார்கள் என்றால், மேற்குறிப்பிட்ட கொள்கைப் பிரகடன விடயத்தில் வாழாவிருக்காமல், அவற்றை மெதுமெதுவாகவேனும் நிறைவேற்றுவதே, மக்களுக்குச் செய்கின்ற பெரும் கைமாறாக இருக்கும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .