2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஒரு பண்பாட்டுச் சிதைவுக்கு துணைபோகக் கூடாது

Administrator   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கருணாகரன் 

விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில், போர் முடிந்து ஏழு ஆண்டுகளின் பின்னர், கடந்த மாதம் 27 ஆம் திகதி நிகழ்ந்திருக்கும் மாவீரர் நாள் நிகழ்வு, அது முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்டபோதிலும், அந்த நிகழ்வின் அரசியல் பரிமாணம் மிகவும் விசாலமாகக் காணப்படுகின்றது. அந்த நிகழ்வையொட்டி, தமிழ் மக்களிடத்தில், குறிப்பாக மாவீரர் குடும்பங்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்நிலைகளும் அபிப்பிராயங்களும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உண்டாக்கியுள்ளது. இந்தக் கட்டுரை அவற்றைப் பற்றிய கவனத்தையே ஈர்க்கிறது.  

மாவீரர்நாள் கொண்டாட்டங்கள் எதிர்பார்க்கப்பட்டதையும் விட, இந்த ஆண்டு எந்தவிதமான அசம்பாவிதங்கள் இன்றி நடந்துள்ளன. ஆனால், அதேயளவுக்கு வாதப்பிரதிவாதங்களும் உண்டு. குறிப்பாகச் பொதுச்சுடரேற்றல் பற்றிய சர்ச்சைகளும் கருத்துகளும் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.  

 விடுதலைப்புலிகள் செயற்பாட்டில் இல்லாத கடந்த ஆறு ஆண்டுகளும் புலம்பெயர் நாடுகளில் கொண்டாடப்பட்ட மாவீர்நாள் நிகழ்வுகள் சர்ச்சைகளை உண்டாக்கியதுண்டு. அதற்குக் காரணம், அங்கே ஒரு தலைமைத்துவத்தின் ஒழுங்கமைப்பு, வழிப்படுத்தல் போன்ற விதிமுறைகள் எதுவுமில்லாமல், பல அணிகள் இதைச் செய்வதற்கு முயற்சித்ததேயாகும். 

 இப்போதும் அங்கே அதுதான் நிலைமை. மாவீரர் நாளைக் கொண்டாடுவது, ஒரு போட்டியாகவே அங்கே வளர்ந்துள்ளது. இந்தப்போட்டியின் விளைவுகள், அணிமோதல்கள் வரை செல்கிறன. இந்த ஆண்டும் மாவீரர் நாளையொட்டிய நிகழ்ச்சி ஏற்பாட்டுப் போட்டியினால் பாரிஸில் மோதல் சம்பவங்கள் நடந்ததுண்டு. ஆனால், பின்னர் அது தணிந்து விட்டது. 

இதேவேளை, இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகள் மாவீர்நாள் நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்கான சாதகமான களச்சூழலை அரசாங்கம் விட்டுவைத்திருந்தது.   

விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட முன்னர், அவர்களே மாவீரர் நாளை ஒழுங்குபடுத்தி வழிப்படுத்துவதுண்டு. தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் சரி, புலம்பெயர் நாடுகளிலும் சரி, புலிகளின் நெறிப்படுத்தலின்படியே மாவீரர் நாள் நிகழ்வுகள் நடக்கும்.  

 இதற்கென அவர்கள் மாவீரர் செயலகங்களையும் அதற்கான பணியாளர் தொகுதியையும் பிரத்தியேகமாக வைத்திருந்தனர். மாவீரர் செயலகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து பொன் தியாகம் என்ற பொன்னம்பலம் தில்லைநாதன் என்பவர், மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக இருந்தார். இந்தச் செயலகத்தின் கீழ் ஒவ்வொரு மாவீரர் துயிலுமில்லங்களுக்கும் ஒவ்வொரு பொறுப்பாளர்கள் இருந்தனர். அவர்கள், துயிலுமில்லங்களைப் பராமரிக்கும் பணிகளுக்குப் பொறுப்புடையவர்களாகச் செயற்பட்டனர். 

மாவீரர் நாள் நிகழ்வுகளை மையப்பணிமனை ஒழுங்குபடுத்தி அறிவிப்பை விடுக்கும். அந்த அறிவிப்பின்படியே நிகழ்வுகளின் ஒழுங்குகள் இருக்கும். இதன்படி ஒவ்வொரு துயிலுமில்லங்களிலும் பொதுச் சுடரினை ஏற்கெனவே ஒழுங்கு படுத்தப்பட்ட ஏற்பாட்டின்படி புலிகளின் தளபதிகள் ஏற்றுவதுண்டு. பிரபாகரன், தனிப்பட ஒழுங்கு படுத்திய ஓர் இடத்தில் சுடர் ஏற்றுவார்.  
இப்போது புலிகள் இல்லை. எனவே, புலிகளால் நடைமுறைப்படுத்தப்படும் ஒழுங்குகளும் இல்லை.

அதை வழிப்படுத்துவதற்கோ நெறிப்படுத்துவதற்கோ வேறு தரப்புகளும் முன்வரவில்லை. மட்டுமல்ல, மாவீரர்நாள் நிகழ்வு நடந்த நவம்பர் 27 க்கு முதல்நாள் வரையிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் நடக்குமோ என்று உறுதியாக நம்ப முடியாத ஒரு சூழல் நிலவியது.   

எனினும் துயிலுமில்லங்களில் இருந்து ஏற்கெனவே படையினர் வெளியேறியிருந்தமையும் ஏற்கெனவே முள்ளிவாய்க்கால் நினைவு கூரல், எழுக தமிழ் நிகழ்ச்சி, திலீபனின் நினைவு நாள் போன்றவற்றை அரசாங்கம் கண்டும்காணாமல் இருந்தமை, ஒரு வகையான தற்துணிபை மக்களுக்கு வழங்கியிருந்தது. இதனால் அவர்கள் மெல்ல மெல்ல மாவீரர் துயிலுமில்லங்களைத் துப்புரவாக்கத் தொடங்கினர். இதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் சில இடங்களில் கிடைத்ததுண்டு.  

‘மாவீரர்நாள் நிகழ்வுகளை மக்கள் கொண்டாடுவதற்குத் தடைகளை ஏற்படுத்த வேண்டாம்’ என கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான சம்மந்தனும் சுமந்திரனும் பிரதமரோடும் ஜனாதிபதியோடும் பேசி உடன்பாடு கண்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கூட்டமைப்பின் பிரதேச அணியினர் சில இடங்களில் செய்தனர். மாவீரர் நாள் நிகழ்வுகளிலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இதற்குப் பிறகுதான் விமர்சனங்களும் சர்ச்சைகளும் உருவாகத் தொடங்கின. பொதுச்சுடரை ஏற்றுவது என்பது அரசியல்வாதிகளை விட மாவீர்கள் குடும்பங்களுக்கு உரியது என்பதே மாவீரர் குடும்பங்களின் நிலைப்பாடாகும்.   
அரசாங்கம் இதேமாதிரியான நிலைப்பாட்டில் கண்டும்காணாமல் இருக்கும் போக்கைக் கடைப்பிடித்தாலோ அல்லது இனநெருக்கடிக்கான தீர்வு கிடைக்கப்பெற்றாலோ, இனிவரும் காலத்தில் இன்னும் கூடுதலான துயிலுமில்லங்களில் மக்கள் இந்த நிகழ்வை அனுஷ்டிக்கக் கூடியதாக இருக்கும். 

காலப்போக்கில் அதற்கான வகையில் ஏனைய துயிலுமில்லங்களையும் படையினர் விடுவிக்கக்கூடும். இப்படியான ஒரு நிலையில்தான் பல சிக்கல்கள் உருவாகவுள்ளன.   

இந்தத் துயிலுமில்லங்களைப் புனரமைப்பதற்கு மக்கள் முயற்சிப்பர். ஆனால், மக்களை முந்திக்கொண்டு அரசியல்வாதிகள், தமது சுயநலன்களுக்காக இவற்றைப் புனரமைப்பதற்கு முன்னிற்பர். இப்போதே அதற்கான போட்டிகள் உள்ளரங்கில் ஆரம்பமாகி விட்டன.  

மாவீரர் துயிலுமில்லங்களைப் புனரமைப்புச் செய்வதாக இருந்தால் அதற்கான நிதியை உள்ளுரிலும் புலம்பெயர் நாடுகளிலும் தாராளமாகத் திரட்டலாம். தாராளமாகவும் இலகுவாகவும் நிதி புரளும்.

எனவே, இதற்காக ஒரு கூட்டம் முயற்சிக்கும். அத்துடன் துயிலுமில்லங்களைத் தாம் முன்னின்று புனரமைப்புச் செய்வதன் மூலமாக மாவீரர் குடும்பங்களிடத்தில் தமக்கான அரசியல் செல்வாக்கினைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கமும் இந்த அரசியல்வாதிகளுக்குண்டு. ஆகவே, இது ஒரு போட்டியாகவே நடக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.   

 

இப்படி ஒரு போட்டி நடக்குமாக இருந்தால், நிச்சயமாக அது புலம்பெயர் நாடுகளில் நடப்பதைப்போல துயிலுமில்லங்களுக்கான அதிகாரப் போட்டியாக மாறும். புலம்பெயர் நாடுகளில் போராளிகளைப் புதைத்த கல்லறைகள் இல்லை. அங்கே உள்ளவை நினைவிடங்கள் மட்டுமே; இங்கே அப்படியல்ல; பல ஆயிரக்கணக்கான போராளிகளைப் புதைத்த இடங்கள் இவை. 

 ஆகவே, இங்கே அப்படியான ஓர் அதிகாரப் போட்டி உருவாகுமாக இருந்தால், அது சம்மந்தப்பட்ட குடும்பங்களையும் உறவுகளையும் நிச்சயமாகப் பாதிக்கும். மட்டுமல்ல, கூட இருந்த சக போராளிகளின் மனதிலும் துயரத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கும்.  

இந்த மாதிரியான விடயங்கள் எப்போதுமே உணர்ச்சிகரமானவை. பண்பாடு என்பதே பெரும்பாலும் அப்படியான ஒன்றுதான். அந்தப் பண்பாட்டைச் சுவீகரிப்பதற்காகவே பலரும் முயற்சிக்கின்றனர். ஆகவே, இதை எளிதில் யாரும் சிதைப்பதை சம்மந்தப்பட்ட குடும்பங்களும் மக்களில் ஒரு தொகுதியினரும் விரும்பமாட்டார்கள்.   

குறிப்பாக துயிலுமில்லங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. அவற்றை மீள ஒழுங்கமைப்பதாக இருந்தால் பெருமளவு நிதி தேவை. தவிர, எந்தத் துயிலுமில்லத்தில் யாருடைய நினைவுக்கல், நடுகல் இருந்தென்று முழுமையாகத் தெரியாது.  

 அப்படித்தான் விவரங்களைத் திரட்டுவதாக இருந்தாலும் அதை முழுமைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதென்பது எளிய விடயமல்ல. காயப்பட்டவர்கள், போரிலே பெற்றோரை இழந்தவர்கள், அங்கங்களை இழந்தவர்களின் எண்ணிக்கையையே ஒழுங்காகத் திரட்டாத சமூகமாக இருக்கும்போது, சிதைக்கப்பட்ட துயிலுமில்லங்களில் நினைவுக்கற்களை ஒழுங்குபடுத்தி உரிய இடங்களில் மீளமைப்புச் செய்வதென்பது எளிதானதல்ல. இப்போதைக்கு அது சாத்தியமானதுமல்ல.  

எனவே, இந்த நிலையில் ஏற்கெனவே, பலரும் முன்வைத்த கருத்தின் அடிப்படையில் இந்தத் துயிலுமில்லங்களை மாவீரர் பூங்காக்கள், மாவீரர் படிப்பகங்கள் அல்லது நூலகங்கள், கணினி மையங்கள் என அமைக்கலாம். அதேவேளை, பொது நினைவுச்சின்னத்தை நிறுவலாம். மாவீரர் நாள் நினைவு கொள்ளப்படும்போது உரியவர்கள் வந்து திரளக்கூடிய அமைப்பில் இதை நிறுவலாம். இதற்கெல்லாம் முறைப்படியாகத் திட்டமிடக்கூடிய ஒரு தெளிவான தூரநோக்குப் பார்வை தேவை.  
இவற்றை முறையாக வழிப்படுத்துவதற்கு ஒரு தலைமைத்துவம் தேவை.

ஆனால், இப்போதுள்ள நிலையில் அத்தகைய தலைமைத்துவம் ஏதும் தென்படவில்லை. அப்படி யாராவது முன்வந்தாலும் அதை ஏனைய தரப்புகள் முழுமையாக அங்கிகரிக்குமா என்ற கேள்வியும் உண்டு. எனவே, இந்த நிலையில், மாவீரர் குடும்பங்களை மையப்படுத்தி, ஒரு குழுவை உருவாக்குவதே சிறப்பானதாகும்.  

 எந்தவொரு அரசியற் கட்சியனதும் கட்டுப்பாட்டுக்குள் சிக்காத, ஒரு பொது அமைப்பாக, சுயாதீனக் குழுவாக இருப்பதன் மூலம் இந்தக் குழு தனக்கான செயற்திட்டங்களையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியும்.  
இந்தக் குழுவானது முன்னின்று, தலைமை தாங்கி வழிப்படுத்தலைச் செய்யக்கூடியதாகவும் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடியதாகவும் இருக்கும்.

இவ்வாறு செய்வதன் மூலம் ஒழுங்கொன்றைப் பொதுவாக உருவாக்குவதுடன் வீணான முரண்பாடுகளுக்கும் சர்ச்சைக்கும் தனிநபர்கள் செல்வாக்கைப் பெறுவதற்கும் வழியற்றுப்போகும்.  

ஆகவே, எதிர்காலத்தில் இந்த மாதிரிக் குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக, படிப்பினைகளைக் கருத்திற் கொண்டு செயற்படுவது சிறப்பு. அல்லாது விடின் இந்த விடயம் சட்டப்பிரச்சினைகளுக்குள் சிக்கி நீதி மன்றம் வரையில் செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டு.  

 இதேவேளை இன்னொரு விடயத்தையும் இங்கே நாம் கவனிக்க வேணும். இந்தத் துயிலுமில்லக் காணிகளில் அநேகமானவை அரசாங்க நிலங்களாகும். ஆகவே, இந்த விவகாரம் சட்டச் சிக்கலுக்குட்பட்டால், அது எத்தகைய ஒரு தீர்மானத்துக்குச் செல்லும் என்றும் சொல்ல முடியாது.

அதுமட்டுமல்ல, தற்போதுள்ள ஆட்சி, மாற்றமடையும்போது இந்த நிலைமை நீடிக்கும் என்றும் சொல்ல முடியாது. புதிய அரசியலமைப்பு திருப்திகரமாக நிறைவேற்றப்பட்டு, நல்லதோர் தீர்வு கிடைத்தால் புதிய நிலைமைகள் உருவாகக்கூடும். ஆனால், அதற்கு எத்தகைய உத்தரவாதங்களும் இல்லை. எனவே, எதற்கும் முன்னாயத்தமாகச் சரியாகச் சிந்தித்து முறையாக நடப்பதே சிறப்பு.  

   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X