2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோட்டாவின் வெற்றியும் ஒப்பாரி அரசியலும்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2019 நவம்பர் 20 , மு.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

   கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு ஒருசில மணி நேரத்துக்கு முன்னராகத் தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில், ‘வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வது, வெற்றியை நோக்கிய பயணத்தை விட முக்கியமானதாகும்’ என்று எழுதியிருந்தார்.   

பெரும் தோல்விகளிலிருந்து, ஐந்து வருடத்துக்கு உள்ளாகவே மீண்டெழுந்து, வெற்றியை அடைந்துவிட்ட ராஜபக்‌ஷக்களின், தொடர் வெற்றிகளுக்கான கட்டியமாகவே, மேற்கண்ட நிலைத்தகவலைக் கொள்ள முடியும்.  

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், ராஜபக்‌ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்படும் போது, அவர்கள் குறித்த நம்பிக்கைகள் பெரிதாக யாரிடமும் இருக்கவில்லை.   

நல்லாட்சி அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படாதவர்களே, ராஜபக்‌ஷக்களின் பின்னால் நின்றார்கள். ரணில் விக்கிரமசிங்க, சுதந்திரக் கட்சியை உடைத்து, தன்னுடைய பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரு கருவியாக மாத்திரமே, ராஜபக்‌ஷக்களை நோக்கினார். அதன்போக்கிலேயே அவர்களைக் கையாளவும் செய்தார்.   

சிறுபான்மைக் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் கூட, ராஜபக்‌ஷக்களைக் குறித்து, குறைந்த மதிப்பீட்டையே கொண்டிருந்தார்கள். இந்தப் பத்தியாளர் உட்பட, பெரும்பான்மையான பத்தியாளர்களும் ஆய்வாளர்களும் கூட, ராஜபக்‌ஷக்களை ஒரு கட்டம் வரையில், ஆடி ஓய்ந்துவிட்ட கிழட்டுச் சிங்கங்களின் கூடாரமாகவே பார்த்தார்கள்.  

குறிப்பாக, ராஜபக்‌ஷக்களால், 2016ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட பேரணிகளையும் மாநாடுகளையும் எள்ளலுக்கான விடயமாகவே அணுகினார்கள். மதுபோதையில், கூட்டங்களில் வித்தை காட்டியவர்களைக் கேலி செய்வதில் காலத்தைக் கடத்தி, ராஜபக்‌ஷக்கள் தென்இலங்கை மக்களிடம் மீண்டும் கட்டியெழுப்பிய அபிமானத்தைக் குறைத்து மதித்துவிட்டார்கள்.   

அந்த அபிமானம், இனவாதம் என்கிற ஒற்றை விடயத்தை மாத்திரம் முன்னிறுத்தியது அல்ல; மாறாக, நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனங்கள், குழறுபடிகளாலும் ஏற்பட்டது என்பது உணரப்படவில்லை. அதுதான், தனிச் சிங்கள வாக்குகளில், 62 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை, ராஜபக்‌ஷக்கள் பெறக் காரணமானது.  

கோட்டா பெற்ற 69 இலட்சம் வாக்குகளில், சுமார் 66 இலட்சம் வாக்குகள், தனிச் சிங்கள வாக்குகள். அவருக்கு எதிராக, சஜித் பிரேமதாஸவால் 36 இலட்சம் தனிச் சிங்கள வாக்குகளையே பெற முடிந்திருக்கின்றது. இது, சிங்கள வாக்குகளில் 35 சதவீதமானது மட்டுமே ஆகும்.   

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும், தனிச் சிங்கள வாக்குகளில் 42 சதவீதத்துக்கும் அதிகமாகப் பெற முடியாது போனால், சிறுபான்மை வாக்குகள், அந்த வேட்பாளருக்கு 90 சதவீதம் கிடைத்தாலும் வெற்றிபெற முடியாது.   

ஏனெனில், நாட்டின் ஒட்டுமொத்த வாக்குகளில் 72 சதவீதத்துக்கும் அதிகமானவை, தனிச் சிங்கள வாக்குகளாகும். சஜித், 45 இலட்சம் தனிச் சிங்கள வாக்குகளைப் பெற்றிருந்தால், அவரின் வெற்றி குறித்த நம்பிக்கைகளைக் கொண்டிருக்க முடியும். ஆனால், அதற்கான வாய்ப்புகளை ஐக்கிய தேசியக் கட்சியும் நல்லாட்சி அரசாங்கமும் தென்இலங்கையில் ஏற்படுத்தவில்லை.   

அதற்கு, ராஜபக்‌ஷக்கள் குறித்த குறைமதிப்பீடு முக்கிய காரணமாகும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளை, ஜனாதிபதித் தேர்தல் போன்ற ஒன்றோடு, நூறுக்கு நூறு சதவீதம் ஒப்பிட முடியாதுதான்.   

ஆனால், அதன் பகுதியளவு உண்மைகளையாவது புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு, கொழும்பு என்கிற ஒற்றை அரசியல் புள்ளியிலிருந்து ரணிலும் ஐ.தே.கவும் சிந்தித்ததன் விளைவு, எதிர்வரும் பத்து வருட ஆட்சிக் கனவை இல்லாமல் செய்திருக்கின்றது.  

இந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களித்த சதவீதமும் விதமும் இன்னொரு தேர்தலில் பிரதிபலிக்குமா என்பது கேள்வி. ஏனெனில், ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளைக் காட்டிலும், இந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் அதிகம். ராஜபக்‌ஷக்களிலேயே கோட்டா குறித்த பயம் அதிகமிருப்பதே அதற்குக் காரணமாகும். ராஜபக்‌ஷக்களுக்காக வாக்குக் கேட்டு வந்தவர்களையும் தேர்தலைப் பகிஷ்கரிக்க கோரியும் பொது வேட்பாளர்களை நிறுத்தியும் மறைமுகமாக ராஜபக்‌ஷக்களுக்கு உதவ முற்பட்ட முகவர்களையும் தமிழ், முஸ்லிம் மக்கள் புறங்கையால் ஒதுக்கித் தள்ளினார்கள்.   அதனால்தான், ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆற்றிய முதலாவது உரையிலேயே கோட்டா, சிறுபான்மை மக்கள் தனக்கு வாக்களிக்காமை குறித்துப் பொரும வேண்டி வந்தது.  

இன்றைக்குத் தனிச் சிங்கள மக்களின் வாக்குகளால் தேர்தெடுக்கப்பட்ட இலங்கையின் ஜனாதிபதியாகவே கோட்டா அடையாளப்படுத்தப்படுகிறார். அதனை, எப்படியாவது கடந்தாக வேண்டும் என்கிற அடிப்படையிலேயே, பொதுத் தேர்தலிலாவது, சிறுபான்மை மக்களின் ஆதரவு பெற்றவர்களைத் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டிய விடயத்தைக் குறித்து அவர் சிந்திக்கிறார்.  அதனால்தான், இனியாவது, தன்னோடு சிறுபான்மை மக்கள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று கோரவும் வேண்டி வந்திருக்கின்றது.  

ஒவ்வொரு தேர்தல்களிலும் வெற்றி, தோல்விகளை வரையறுப்பதற்கான காரணிகள் மாறுபடலாம். ஆனால், சாதாரண மக்களின் மனங்களைப் புரிந்து கொள்ளாது, அதற்கு மாறாக நடக்கின்ற எந்தத் தரப்பாக இருந்தாலும் அவர்களைத் தோற்கடிப்பதற்கு, மக்கள் தயாராவார்கள் என்பது அடிப்படையானது.   

அதைத்தான் இந்தத் தேர்தல் முடிவும் பதிவு செய்திருக்கின்றது. வடக்கு மக்களின் அரசியல், வாழ்வாதார தேவைகள் பலவுண்டு. ஆனால், அதில் முதலாவது இடத்தில், வாழ்தலுக்கான அச்சுறுத்தல் என்கிற விடயம் வரும் போது, அதற்கு எதிராக அவர்கள் திரண்டார்கள். அதையே, தென் இலங்கையிலும் மறுவளமாக ராஜபக்‌ஷக்கள் முன்னிறுத்தி வெற்றி கொண்டார்கள்.  

தமிழ்த் தேசிய அரசியல் இயங்கு நிலை என்பது, ஏக (ஒற்றைத்) தலைமை என்கிற வழக்கத்தைக் கொண்டிருப்பது. இரட்டைத் தலைமை, மாற்றுத் தலைமை என்கிற விடயங்களுக்கான சந்தர்ப்பங்களைப் பரிசீலிப்பதற்கே தயாராக இருப்பதில்லை.   

அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்பட்டாலும், மாற்றுத்தலைமையாக வருபவர்களும் ஏக தலைமையாக உருவாகவே விரும்புகிறார்கள். அதுபோலவே, புலிகள் காலத்தில் அன்டன் பாலசிங்கம் வகித்த பாகத்தை, எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது, தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கிக் கொண்டிருக்கின்ற புலமையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் பலருக்கு இருக்கின்ற கனவு.   

ஒரு கட்டத்தில், பாலசிங்கத்தையே புலிகள் வெட்டிவிட்டார்கள் என்பதைக் கண்டுவிட்ட பின்னரும், பாலசிங்கமாக, ‘மதியூகி’ பட்டம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது, அவர்களின் அவா. அதனால், தமிழ் மக்களிடம் உருவாக வேண்டிய ஜனநாயக உரையாடல்களுக்கான வெளி என்பது, குறுகிய சிறு சிறு வட்டங்களுக்குள் முடிந்து போய்விடுகின்றது.   

ஒரு கட்டத்தில், ஒவ்வொரு சிறு வட்டமும் மற்றைய வட்டத்துக்கு எதிராக, நாம் பெரியவர்கள் என்று நிரூபிப்பதற்காகக் காலத்தைக் கடத்துவதிலேயே நேரத்தைச் செலவிட்டுத் தொலைக்கின்றன.   

அதனால், சாதாரண தமிழ் மக்களின் தேவைகள், விருப்பங்கள் குறித்து அறிவதிலிருந்து தவறி நிற்கின்றன. அப்படியானதொரு நிகழ்ச்சி நிரலில் இயங்கியே, தமிழ் மக்கள் பேரவையும் பேரவையின் சுயாதீனக் குழுவும் சுயாதீனக் குழுவுக்குள் இருக்கும் தமிழ் சிவில் சமூக இயக்கத்தின் முக்கியஸ்தர்களும் அந்த முக்கியஸ்தர்களை ஆலோசகர்களாகக் கொண்டிருக்கின்ற (கொண்டிருந்த) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இன்றைக்கு மக்களிடம் இருந்து தூக்கியெறியப்பட்டு இருக்கின்றன.  

அரசியல் என்பது, ஒவ்வொரு நிகழ்விலும் பிரதிபலிப்பது மாத்திரமல்ல; எதிர்கால நிகழ்வுகளைக் கணித்து, அதனை நோக்கித் திட்டமிட்டு இயங்குவது. ஆனால், தமிழ் அரசியல் சூழலில், அதற்கான வாய்ப்புகளை அடைப்பதிலேயே, கட்சிகளும் சிவில் அமைப்புகளும் கவனம் செலுத்துகின்றன.   

அது, யார் பெரியவர் என்கிற ஒற்றை விடயத்தாலேயே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கு, ஒருசில வாரங்களுக்கு முன்னர், பொது வேட்பாளர் விடயத்தைத் தூக்கிச் சுமப்பதும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராகப் பகிஷ்கரிப்புக் கோசத்தை எழுப்புவதும் ஆரோக்கியமான அரசியலா?   

இவ்வாறான அரசியலை வைத்துக் கொண்டு, ஏகநிலை பெற்றிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் திருத்திவிட முடியுமா? பலவீனமான எதிரிகளை வைத்துக் கொண்டு, விளையாடுவதையே யாருமே விரும்புவார்கள்; அதனைத்தான் கூட்டமைப்பும் விரும்பும். அதற்கான சித்து விளையாட்டைத்தான், பொது இணக்கப்பாடு உள்ளிட்ட விடயங்களில் கலந்து கொண்டு, கூட்டமைப்பு ஆடிக்கொண்டிருக்கின்றது.   

ஏனெனில், மக்களின் இந்தத் தேர்தல் குறித்த முடிவு, எது என்பது வெளிப்படையானது. அதன்போக்கில் முடிவெடுத்துவிட்ட கூட்டமைப்பு, என்ன சித்து விளையாட்டுகளை விளையாடினாலும் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது தெரியும்.   

அவ்வாறான சூழலில், அரசியலை வைத்துக் கொண்டு, சர்வதேசத்தை வளைத்து, எமது அடைவுகளை அடைந்து கொள்ள முடியும் என்பது, படுமுட்டாள்தனமானது.  

நாம் விரும்பாவிட்டாலும், கோட்டா என்கிற ஒருவரை ஜனாதிபதியாக எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு எதிர்கொண்டே ஆக வேண்டியிருக்கின்றது. அவரின், கடந்த கால வரலாறுகளைக் கருத்தில் கொண்டும், எதிர்கால அரசியலுக்கான வழிவரை படங்களை, உண்மையான அர்த்தத்தோடு புரிந்து, வரைந்து கொண்டும் தமிழ்த் தேசிய அரசியல் களம் இயங்க ஆரம்பிக்க வேண்டும்.   

இல்லையென்றால், மீண்டும் மீண்டும் ஒப்பாரி அரசியலையே செய்ய வேண்டியிருக்கும். அது, ஒரு வகையில் அயோக்கியத்தனமானது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X