2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கரையோர மாவட்டம்: கூச்சலும் குழப்பங்களும்

Thipaan   / 2015 நவம்பர் 17 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மப்றூக்

அம்பாறை கரையோர மாவட்டக் கோரிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் மீளவும் ஒருமுறை வலியுறுத்தி இருக்கிறது. மு.காங்கிரஸின் பேராளர் மாநாடு, இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட 15 தீர்மானங்களில், கரையோர மாவட்டக் கோரிக்கையினை வலியுறுத்தும் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

'கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் தொகுதிகள் உள்ளடக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கையை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது' என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கியதாக கரையோர மாவட்டம்; ஒன்றினை உருவாக்க வேண்டுமென்கிற கோரிக்கை 40 வருடங்களுக்கு முன்னதாகவே எழத் தொடங்கி விட்டது. ஆனால், இதை என்னவோ புதிதாக கையிலெடுக்கப்பட்டதொருகோஷம்போல் காண்பிப்பதற்கு, சிலர் முயன்;று கொண்டிருக்கின்றார்கள். அந்த முயற்சிகளின் பின்னணியில் சாக்கடைத்தனமான அரசியல் தவிர வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

1961ஆம் ஆண்டுவரை, அம்பாறை என்கிற ஒரு மாவட்டம் இருக்கவில்லை. இப்போதுள்ள அம்பாறை மாவட்டத்தின் அதிகமான பிரதேசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைந்திருந்தன. 1961 ஆம் ஆண்டு  ஏப்ரல் 10ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட சில பிரதேசங்களுடன், மேலும் சில பிரதேசங்களை இணைத்து, அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

முஸ்லிம் மக்கள்தான் அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். 1963ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்த மாவட்டத்தில் 46.11 சதவீதம் முஸ்லிம்களும், 29.28 சதவீதம் சிங்களவர்களும், 23.23 சதவீதம் இலங்கைத் தமிழர்களும் வாழ்ந்தனர். 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் சற்று மாறுபடுகிறது. 43.59 சதவீதம் முஸ்லிம்களும், 38.73 சதவீதம் சிங்களவர்களும், 17.40 சதவீதம் இலங்கைத் தமிழர்களும் அம்பாறை மாவட்டத்தில் இருப்பதாக அந்தப் புள்ளிவிவரம் சொல்கிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், 2012ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, அம்பாறை மாவட்டத்தில் 60.99 வீதமான தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்த மாவட்டத்துக்குரிய செயலகமானது, சிங்களவர்கள் நூறுசதவீதம் வசிக்கின்ற அம்பாறை நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தின் செயலாளராக சிங்களவர் ஒருவரே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டும் வருகின்றார். தமிழ் பேசுகின்ற 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள், தமது நிர்வாகக் கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, சிங்கள நிர்வாகமொன்றிடம் இவ்வாறு வலிந்து தள்ளிவிடப்பட்டுள்ளமையானது எந்த விதத்திலும் நியாயமில்லை.

1978ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் நியமிக்கப்பட்ட 'மொரகொட எல்லை நிர்ணய ஆணைக்குழு'வானது, கரையோர மாவட்டத்தை உருவாக்குவதற்குரிய சிபாரிசினை முன்வைத்தது. அம்பாறை மாவட்டத்திலிருந்து கரையோர மாவட்டமும், யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி மாவட்டமும் உருவாக்கப்பட வேண்மென, மொரகொட ஆணைக்குழு தன்னுடைய சிபாரிசில் தெரிவித்திருந்தது. ஆயினும், அப்போது அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி. தயாரட்ன, கரையோர மாவட்ட உருவாக்கத்துக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார். இதனால், அந்த யோசனை கைவிடப்பட்டது.

இருந்தபோதும், 1984ஆம் ஆண்டு, யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட பிரதேசங்களைக் கொண்டு, கிளிநொச்சி என்கிற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மாவட்டங்கள் இலங்கையில் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதும், அவை நிர்வாக மாவட்டம், தேர்தல் மாவட்டம் என்கிற வகைகளாகும் என்பதும் பாடப் புத்தகங்களில் நாம் படித்த விடயங்களாகும்.

புதிய மாவட்டமொன்றினை உருவாக்குதல் என்பது பிரச்சினையானதொரு விடயமே அல்ல. ஆனால், 'கரையோர மாவட்டம்' என்பதை சிலர் பூதாகரமானதொரு விவகாரமாகக் காட்ட முயற்சிக்கின்றனர். அவ்வாறானதொரு மாவட்டம் உருவாக்கப்பட்டால், முஸ்லிம்களுக்கு 'தனி ஈழம்' கிடைத்துவிடும் என்பது போல், சிங்கள மக்களிடம் சில அரசியல்வாதிகள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில், 1955ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க நிர்வாகச் சட்டத்தின் படி, 20 மாவட்டங்கள்தான் இருந்தன. அதன் பின்னர்தான் மொனராகல, அம்பாறை, முல்லைத்தீவு, கம்பஹா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.

இதேவேளை, இலங்கையில் மேலும் மூன்று புதிய மாவட்டங்களை உருவாக்கும் வகையில் 2002ஆம் ஆண்டிலும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குருநாகல் மாவட்டத்திலிருந்து நிகவரெட்டி, பதுளை மாவட்டத்திலிருந்து மஹியங்கணை மற்றும் அம்பாறை மாவட்டத்திலிருந்து கரையோரம் ஆகிய மூன்று மாவட்டங்களை புதிதாக உருவாக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்று 2002 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அங்கிகாரமும் கிடைத்திருந்தது. ஆனால், இறுதியில் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

கரையோர மாவட்டம் என்கிற கோரிக்கையானது, அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் மக்கள், தங்களுடைய நிர்வாகத் தேவைகளை இலகுவாகவும், தமது மொழியினூடாகவும் நிறைவேற்றிக் கொள்வதற்கான தேவையிலிருந்து உருவானதாகும். இந்த மாவட்டத்தில் தமிழ் பேசும் பெரும்பான்மை இனத்தவராக முஸ்லிம்கள் உள்ளமையினால், கரையோர மாவட்டக் கோரிக்கையை முஸ்லிம் சமூகமும், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் தூக்கிப் பிடித்து வருகின்றன.

இந்த நிலையில், அம்பாறை மாவட்டத் தமிழர்களில் சில தரப்பினரும் கரையோர மாவட்டக் கோரிக்கைக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இது கவலைக்குரிய விடயமாகும். கரையோர மாவட்டம் என்பது முஸ்லிம்களுக்கானது என்கின்ற மாயப் பிரசாரத்தில் மூழ்கிக் கிடப்பதனால்தான், கரையோர மாவட்டக் கோரிக்கையை, மேற்படி தமிழர் தரப்புக்கள் எதிர்த்து நிற்கின்றன.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கரையோர மாவட்டக் கோரிக்கையினை முஸ்லிம் காங்கிரஸ் எந்த வகையில் முன்வைத்துள்ளது என்பதனை, தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் அந்தக் கட்சிக்கு உள்ளது.

கரையோர மாவட்ட உருவாக்கமானது, நாட்டின் நிர்வாகச் செயற்பாட்டை இலகுபடுத்துவதற்கானதொரு முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் தீர்வுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் முஸ்லிம் தரப்;பு சார்பானதொரு கோரிக்கையாக இருந்து விடக்கூடாது.

40 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கியிருக்க வேண்டிய கரையோர மாவட்டத்தினை, இப்போது முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வாகக் கருதி வழங்கவோ, பெற்றுக்கொள்ளவோ முயற்சிப்பதென்பது அரசியல் ஏமாற்று வேலையாக அமைந்துவிடும்.

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் பேச்சுக்கள் எழுகின்ற போதெல்லாம், முஸ்லிம்கள் சார்பான கோரிக்கைகளும் அவ்வப்போது மேலெழுந்தவாரியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. 'இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணத்துக்குள் முஸ்லிம்களுக்கான ஒரு நிர்வாக அலகு வேண்டும்' என்கிற கோரிக்கையினை மு.காங்கிரஸ் முன்னொரு காலத்தில் முன்வைத்தது. பின்னர் 'தென்கிழக்கு அதிகார அலகு' என்கிற கோசத்தினை மு.கா. கையில் எடுத்தது. அந்தவகையில், தற்போது முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள கரையோர மாவட்டக் கோரிக்கையானது, அந்தக் கட்சியின் முந்தைய 'தென்கிழக்கு அலகு' என்கிற கோரிக்கையின் பிந்திய வடிவமா, அல்லது புறம்பானதொரு கோரிக்கையா என்பதை மு.காங்கிரஸ் தெளிவுபடுத்துதல் அவசியமாகும்.

கரையோர மாவட்டம் என்பது, ஆகக்குறைந்தது கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களுக்கான அரசியல் தீர்வாகக்கூட அமைந்து விடப்போவதில்லை. எனவே, கரையோர மாவட்டக் கோரிக்கையை முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டங்களில் ஒன்றாக முன்வைப்பதென்பது சாதுரியமாகாது.

இதேவேளை, கரையோர மாவட்டக் கோரிக்கைக்கு சமாந்தரமாக, இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் முஸ்லிம்கள் சார்பான முன்மொழிவுகள் என்ன என்பதனையும் மு.காங்கிரஸ் வெளிப்படுத்துதல் வேண்டும்.

மு.காங்கிரஸின் அம்பாறை மாவட்ட சம்மேளனக் கூட்டம், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மருதமுனையில் நடைபெற்றது. இதன்போது, 'இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் முஸ்லிம்களுக்கான தேவைகளைக் கண்டடைந்து கொள்வதற்காக, மு.காங்கிரஸ், கட்சி மட்டத்தில் ஒரு குழுவினை நியமிக்க வேண்டும்' என்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் மு.காங்கிரஸின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தார்.

மேற்படி சம்மேளனக் கூட்டத்தில் மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் என்று வரும்போது, முஸ்லிம் சமூகம் சார்பில் முன்வைப்பதற்குரிய கோரிக்கைகளை, மு.காங்கிரஸ் ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ளதாகக் கூறினார்.

மு.காங்கிரஸ் தலைவர் கூறுகின்றமைபோல், இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில், முஸ்லிம் சமூகம் சார்பான யோசனைகளை அந்தக் கட்சி தயாரித்து வைத்திருக்குமாயின், அது குறித்து பரவலாகப் பேச வேண்டிய தேவை உள்ளது. குறித்த தீர்வுத் திட்ட யோசனைகள் பற்றி, முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளிடம் கருத்துகள் பெறப்பட வேண்டும்.

பின்னர், அனைத்து முஸ்லிம் கட்சிகளுடனும் இதுதொடர்பில் இணக்க ரீதியான பேச்சுக்களை மேற்கொள்தல் அவசியமாகும்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த பிரதான விடயங்களில், அனைத்துத் தமிழ் கட்சிகளும், அநேகமாக ஒன்றுபட்ட கருத்தினைக் கொண்டுள்ளமையானது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், முஸ்லிம் கட்சிகளுக்குள் அந்த நிலைவரம் இன்னும் உருவாகவில்லை.

வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணமாக இருக்க வேண்டுமென்பது தமிழர் தரப்பின் பிரதான கோரிக்கையாக உள்ளது. ஆனால், முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்குள் இந்த விடயத்திலேயே இதுவரை ஒருமித்த கருத்தொன்று உருவாகவில்லை.

வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாகப் பிரிந்தே இருக்க வேண்டுமென்பார், முன்னாள் அமைச்சரும் தே.காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா. இரண்டு மாகாணங்களும் இணைய வேண்டுமென்று தமிழ் தரப்பு விரும்புமாயின், அது குறித்து முஸ்லிம்களுடன் தமிழர்கள் பேச வேண்டும் என்பது, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் நிலைப்பாடாகும். ஆனால், 'இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணம்' என்பதற்கு ஆதரவான நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது. அதேவேளை, இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்குள் முஸ்லிம்களுக்கான அதிகார அலகு என்ன என்பது பற்றி, தமிழ் தரப்பு தமது தீர்வுத் திட்ட யோசனையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

ஆயினும், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுமாயின் அதற்குள் முஸ்லிம்களுக்கான அதிகாரங்கள் என்ன என்பது பற்றியோ, இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தினுள் முஸ்லிம்களுக்கான அதிகார அலகு ஒன்று வழங்கப்படுதல் தொடர்பிலான யோசனைகளையோ, இதுவரை தமிழ் தரப்பு உத்தியோகபூர்வமாக முன்வைக்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.   

எனவே, இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் முஸ்லிம்களுக்கான 'தனி அலகு' யோசனை என்பதும், கரையோர மாவட்டக் கோரிக்கை என்பதும் வௌ;வேறான விடயங்களாக இருத்தல் வேண்டும். ஆகவே, இது தொடர்பில், மு.காங்கிரஸும் தனது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்துதல் அவசியமாகும்.

ஏனெனில், மு.காங்கிரஸின் தனி அலகு யோசனைதான், கரையோர மாவட்டக் கோரிக்கையாக தேய்வடைந்து போயுள்ளதா என்கிற குழப்பம், ஏராளமானோரிடம் உள்ளது.

குழப்பங்களை விட்டு வைக்கக் கூடாது. குழப்பங்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் இருந்துதான் பிரச்சினைகள் உருவாகத் தொடங்குகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X