2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கற்றலோனியா: தனிநாட்டுக் கனவு

Thipaan   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

தேச அரசுகளின் தோற்றத்தின் போக்கிற் பல்வேறு தேசங்களை ஓர் அரசினுள் இணைத்ததனூடு,

தேசங்களின் சிறைச்சாலைகளாக நாடுகள் உருமாறின. இவ்வுருமாற்றம் இயல்பானதல்ல. முதலாளித்துவ விருத்தியுடன் தோன்றிய தேச அரசு என்ற கருத்தாக்கம், தேசிய இனங்களாகவும் தேசங்களாகவும் அமைய வாய்ப்புள்ள சமூகங்களை ஒடுக்கித் தேச அரசுகள் என்ற வரையறைக்குள் கொணர்ந்தன.

முதலாளித்துவத்தின் இன்றைய நெருக்கடி, இத் தேசிய இனங்களினதும் தேசங்களினதும் விடுதலைக் கோரிக்கைகளுக்குப் புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளன.

கடந்த வாரம் ஸ்பெயினின் கற்றலோனியா மாநிலத்தின் பிராந்தியத் தேர்தலில் கற்றலோனியாவின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கும் கட்சிகளின் வெற்றியானது, ஸ்பெயினில் இருந்து கற்றலோனியா பிரிந்து தனிநாடாகுவதற்குப் புதிய சாத்தியங்களை உருவாக்கியுள்ளது.

ஸ்பெயினின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பிரதேசமே கற்றலோனியா. 75 இலட்சம் மக்களைக் கொண்ட கற்றலோனியா, ஸ்பெயினின் இரண்டாவது பெரிய நகரான பார்சிலோனாவைத் தலைநகராகக் கொண்டது. பார்சிலோனா, ஸ்பெயினின் இரண்டாவது பெரிய விமான நிலையத்தையும் மூன்றாவது பெரிய துறைமுகத்தையும் கொண்டது.

ஸ்பெயினின் மிகப் பெரிய தொழிற்றுறை சார்ந்த பிரதேசமாகவும் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகவும் கற்றலோனியா விளங்குகிறது. கற்றலோனியப் பிராந்தியம் ஐரோப்பாவின் நான்கு பிரதான தொழில் வளர்ச்சிப் பிரதேசங்களில் ஒன்றாகும். அவ் வகையில் ஸ்பெயினின் பொருளாதாரத்தின் தூணாக இருப்பது இப் பிரதேசமே. ஆனால், தனியாள் வருமானத்தில் ஸ்பெயினின் ஏனைய பிராந்தியங்களிலும் கற்றலோனியா மிகப் பின்தங்கியுள்ளது.  

கற்றலோனியாவின் தனிநாட்டுக் கோரிக்கை கற்றலன் மொழி சார்ந்தும் தனித்துவமான கற்றலோனியப் பண்பாட்டு அடையாளங்களின் அடிப்படையிலுமே எழுகிறது. வரலாற்று ரீதியாக, தனித்துவமான மொழியையும் பண்பாட்டையும் கொண்ட கற்றலோனியர்கள் தங்களை ஸ்பானியர்களாக அடையாளப்படுத்தவுமில்லை, தங்களை ஸ்பெயினின் ஒரு பகுதியாகக் கொள்ளவுமில்லை.   

உலக வரலாற்றில் முதலாவது மனிதக் குடியேற்றத்தின் சுவடுகள் கற்றலோனியாவிலேயே காணப்பட்டுள்ளன. இவை ஏறத்தாழ 200,000 ஆண்டுகள் தொன்மையுடையனவென வரலாற்றாசிரியர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் குறித்துள்ளனர்.

இபேரியன் நாகரிகத்தின் பிரதானமான வாழ்விடமாகக் கற்றலோனியா திகழ்ந்தது. இபேரியன் குடாநாடு என கிரேக்கர்களாலும் ரோமர்களாலும் அழைக்கப்பட்ட இப் பகுதி முக்கிய வர்த்தகத் துறைமுகமாயிருந்தது. ஸ்பானியரான கிறிஸ்தொபர் கொலம்பஸ், அமெரிக்கக் கண்டத்தைக் கண்டறிந்தமை ஐரோப்பிய வர்த்தகத்தின் போக்கை மாற்றியது. மத்தியதரைக் கடலை மையப்படுத்திய வர்த்தகம் அத்திலாந்திக் மாகடலில் மையங் கொண்டது. இது கற்றலோனியாவை வர்த்தக மையம் என்ற நிலையிலிருந்து அகற்றியது. அதனால் இப் பகுதி பாரிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்தது. தொழிலாளர்கள் வேலைகளை இழந்தனர். கற்றலோனிய தொழிலாளி வர்க்கம் முதலாளிகட்கெதிராகக்; கிளர்ந்தது. இக் கிளர்ச்சி, காலப்போக்கில் ஸ்பானிய அரசுக்கெதிரான கற்றலோனியர்களின் விடுதலைக்கானதாக மாற்றம் கண்டது.

இக் கிளர்ச்சியை ஸ்பானிய அரச படைகள் முறியடித்தன. அதைத் தொடர்ந்து 17ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முனைப்படைந்த ஸ்பானியப் பிரிவினைப் போர் கற்றலோனியர்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்து அனைத்துத் தேசிய இனத்தவர்;களையும் ஸ்பானியர்களாக அடையாளங் கண்டது. 18ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நெப்போலியனின் விரிவாக்கப் போர்களின் விளைவாக, கற்றலோனியப் பிரதேசம் பிரான்ஸின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கற்றலோனியர்கள் பிரான்ஸின் ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடினார்கள்.   

19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் துரித தொழில்மயமாக்கலின் விளைவாக கற்றலோனியா ஸ்பெயினின் பிரதானமாக கைத்தொழில் மையமாகியது. இது கற்றலன் மொழியின் மீட்சிக்கும் கற்றலோனியப் பண்பாட்டுக் கூறுகள் கற்றலோனியர்களின் வாழ்வியலின் பகுதியாவதற்கும் கற்றலோனியத் தேசியவாதத்தின் மீளெழுச்சிக்கும் வழி செய்தது.

இராணுவச் சதி மூலம் 1936இல் ஸ்பெயினின் ஆட்சியைப் பிடித்த ஜெனரல் ‡பிரான்ஸிஸ்கோ ‡பிரான்கோவின் சர்வாதிகார ஆட்சி கற்றலன் மொழி உட்பட்ட அனைத்துக் கற்றலன் பண்பாட்டு அடையாளங்களதும் பண்பாட்டுக்கூறுகளதும் நடைமுறையைத் தடைசெய்தது. 1975இல் ‡பிரான்கோவின் மறைவின் பின்னர் 1979இல் ஸ்பெயினின் புதிய அரசியல் யாப்பு, கற்றலோனியாவின் சுயாட்சி உரிமைகளை உறுதிப்படுத்தியது. கைத்தொழில் ரீதியாக உயர்நிலையில் உள்ள இப் பிராந்தியம் பொருளாதார ரீதியில் ஸ்பெயினின் மத்திய அரசையே நம்பியுள்ளது. இந் நிலையிலேயே தனிநாட்டுக் கோரிக்கை வலுப்பெற்றது.

 கற்றலோனியர்களின் தனி நாட்டுக் கோரிக்கை சிக்கலானது. கற்றலோனியர்களின் போராட்ட வழிமுறைகள் பேச்சுவார்தைகள், இணங்கிப் போதல் போன்றவற்றைக் கொண்டது. ஸ்பெயினில் தனி நாட்டுக்காகப் போராடும் இன்னொரு இனக்குழுவினரான பாஸ்க் இனத்தோர்;, 1950கள் தொட்டுத் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்;. ஐரோப்பாவின் தொன்மையான இனக்குழுக்களில் ஒன்றான அதன் மொழி எஸ்காரா. ஐரோப்பாவின் மிகத் தொன்மையான மொழியாகக் கருதப்படுகிறது. பாஸ்க் விடுதலைப் போராட்டம் ஓரளவு உலகறிந்த விடயமாயினும் கற்றலோனியர்களின் தனிநாட்டுக் கோரிக்கை அவ்வளவு அறியப்பட்டதல்ல.

ஸ்பெயினின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் உலகறிந்த நகரமாகவும் கற்றலோனியாவின் தலைநகர் பார்சிலோனா உள்ளதால், கற்றலோனியப் பிரிவினைக் கோரிக்கை சார்ந்த நெருக்கடி சிக்கலானது. 19ஆம் நூற்றாண்டில் இப் பிராந்தியத்தில் முனைப்படைந்த தொழில் வளர்ச்சியால், ஸ்பெயினின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தோர் அங்கு குடியேறினர். அத்துடன் தொழிற்றுறைக்கு வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கப் போதிய மனிதவலு அங்கு இல்லாமையால் ஸ்பெயினின் ஏனைய பகுதிகளில் இருந்து உழைப்பாளிகள் வரவழைக்கப்பட்டார்கள். இது அங்கு வாழும் அனைவரும் தனித்துவமான கற்றலோனிய அடையாளங்களுடன் வாழ்வதை இயலுமாக்கியதுடன், ஸ்பெயினின் அனைத்துச் சமூகங்களையுங் கொண்ட மக்கள் குழுவாகக் கற்றலோனிய மக்களை மாற்றியது. குறிப்பாக, 17ஆம் நூற்றாண்டின் கற்றலோனியர்களின் கிளர்ச்சி போன்று மீண்டும் நிகழாது தடுக்கத், தனித்துவமான ஒரு சமூகத்தைக் கொண்ட பிரதேசமாக இல்லாமற் கலப்பு இனப் பிரதேசமாக கற்றலோனியாவை மாற்றுவதே வழி என ஸ்பானிய ஆட்சியாளர்கள் கருதினார்கள். தொழில்மயமாக்கம் அதற்கு வசதியாகியது. 

இப்போது, கற்றலோனியாவில் வாழ்வோரை மூவகையினராகப் பிரிக்கலாம். முதலாவது, கற்றலோனியாவைத் தனித் தேசம் என கருதுகிற கிராமப்புறப் பெரும்பான்மையினரும் நகர்சார் நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினரும். இரண்டாவது, பலகாலம் முன்னே ஸ்பெயினின் பிற பகுதிகளிலிருந்து கற்றலோனியாவுக்கு இடம் பெயர்ந்தவர்களின் பரம்பரையினர். இவர்கள் கற்றலானைத் தாய்மொழியாகவும் ஸ்பானிய அடையாளத்தையும் கொண்டவர்கள். மூன்றாவது பிரிவினர் ஸ்பானிய, கற்றலோனிய அடையாளங்களை ஒருங்கே கொண்டவர்கள்.

இம் மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கிய கற்றலோனிய சமூகத்திற் சுயாட்சி, தனிநாடு என்பன பற்றிய எண்ணங்கள் வேறுபடுகின்றன. இம் மக்கள் குழுக்களின் வேறுபட்ட அடையாளங்கள் சார்ந்த தேசிய உணர்வுகள் ஒருங்கிணைந்த போராட்டத்துக்குத் தடையாக உள்ளன.

கற்றலோனியாவிற் போன்று பல ஐரோப்பிய நாடுகளில், தேச அரசின் தோற்றமும் முதலாளிய விருத்தியும் சேர்ந்து, ஒவ்வொரு நாட்டிலும் ஓர் ஆதிக்க மொழியினது அல்லது பொது மொழியினது தோற்றத்துக்கு வழி செய்துள்ளன. சிறுபான்மை மொழிகளும் கணிசமான அளவுக்கு இனக்குழும அடையாளங்களும் நலிந்தமைக்கு முதலாளியப் பொருளியற் செயற்பாடுகளின் விரிவாக்கம் தீர்மானமான பங்கு வகித்தாலும், இனக்குழும, மொழி அடையாளங்களை நசுக்குவதில் அரசு ஒரு கருவியாக இயங்கியுள்ளது. அரச ஒடுக்குமுறையினதும் பின்தங்கிய முதலாளிய வளர்ச்சியினதும் பின்னணியில், ஐரோப்பாவின் சில பகுதிகளில், இனக்குழும, மொழி அடையாளங்கள் தேசிய அடையாளங்களாகவும் பிரிவினை இயக்கங்களாகவும் உருப்பெற்றுள்ளன.

கற்றலோனியாவின் தனிநாட்டுக் கோரிக்கை அதன் அரசியல்-சமூகப்-பொருளாதாரச் சூழலின் விளைவானது. 2009இல் ஐரோப்பாவில் மையங்கொண்ட பொருளாதார நெருக்கடியின்போது, ஸ்பெயினில் மிகக் கடுமையான பாதிப்புக்குட்பட்ட பிராந்தியம் கற்றலோனியாவாகும். ஸ்பெயினின் தேசிய உற்பத்திக்கும் பொருளாதாரத்துக்கும் தொடர்ச்சியாகப் பெரும் பங்களித்துவந்த ஒரு பிராந்தியத்தின் நெருக்கடியின்போது, ஸ்பெயின் அரசாங்கத்தின் பாராமுகம் அரசியல் ரீதியாக முரண்பட்டவர்களை ஒரு புள்ளியில் இணைத்தது. கற்றலோனிய அரசியல் கட்சிகளிற் தீவிர வலதுசாரிக்கட்சி தவிர்ந்து ஏனையவை கற்றலோனிய தனிநாட்டுக் கோரிக்கையையும் பூரண சுயாட்சியையும் ஏற்கின்றன.

கடந்த வாரத் தேர்தல் முடிவுகள் அதனையே சுட்டுகின்றன. தேர்தல் பிரசாரங்கள், கற்றலோனியப் பிராந்தியத்தின் பொருளாதார நெருக்கடியின் தீர்வு பற்றியனவாயோ மத்திய அரசாங்கத்தில் இருந்து மேலதிகமான நிதிசார் சுயாதீனத்தைப் பெறுவது பற்றியனவாயோ அமையவில்லை. மாறாக அவை கற்றலோனியத் தேசியவாதப் பேரிகையின் வழித் தடத்திலேயே நிகழ்ந்தன. முடிவுகளும் அதையே பிரதிபலித்தன.

ஸ்பெயினின் அரசியல் யாப்பு 'சிறுபான்மை இனங்களையும் உள்ளடக்கிய தேசம்' என்றே ஸ்பெயினை வரையறுக்கிறது. இவ்வகையில், ஸ்பெயினின் யாப்பு கற்றலோனியாவை ஒரு தேசமாக ஏற்கவில்லை. எதிர்காலத்தில் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பை நடாத்தப்படுவதற்கோ அல்லது தனிநாடாக கற்றலோனியா உருவாவதற்கு யாப்பு ரீதியான தடைகள் உள்ளன.

அண்மைய தேர்தல் முடிவுகள், கற்றலோனியர்களிடம் தனிநாட்டுக்கான விருப்பு முன்னெப்போதையும் விட அதிகமாயுள்ளதைக் கோடுகாட்டியுள்ளது. மொத்தமாகத் தனிநாட்டுக்கு ஆதரவாக 48 சதவீதமான வாக்குகளே பதிவாகியுள்ளபோதும், நீண்டகாலத்துக்குப் பின்னர் 78சதவீதமானோர் தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள். இது தெரிவிக்கும் செய்தி வலிது. இந் நிலையில் டிசெம்பரில் நடைபெறவுள்ள தேசியரீதியலான நாடாளுமன்றத் தேர்தல்கள் முக்கியமானவை.

அதேவேளை, ஸ்பெயினின் தலைநகர் மட்ரிடில்; உள்ள மத்திய அரசாங்கம் தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரித்து, எதிர்காலத்திற் பேச்சுவார்த்தை

களினூடு கற்றலோனியர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தீர்க்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன் அப் பிராந்தியத்துக்குப் பொருளாதாரச் சலுகைகளை வழங்கவும் முன்வந்துள்ளது. ஆனால், ஸ்பெயினின் பொருளாதார நெருக்கடியின் தீவிரம் ஸ்பானிய அரசாங்கம் அதைச் செயற்படுத்தும் வாய்ப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது. மறுபுறம் கற்றலோனியா தனிநாடாக அமைந்தாலும் பொருளாதாரச் சுயச்சார்புடைய தனிநாடாக நின்றுநிலைக்கும் வாய்ப்பை ஐரோப்பா எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மறுக்கிறது.

கற்றலோனியர்களிடையே வலுத்துவரும் தனிநாட்டு விருப்பும் ஸ்பெயினின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்துக்குச்; சவாலாகியுள்ள பொருளாதாரச் சிக்கல்களும் கற்றலோனியத் தனிநாட்டின் சாத்தியத்தைப் பலவழிகளில் மறுக்கின்றன. இருந்தும் கற்றலோனிய மக்களின் விருப்பும் தேசியப் புத்துயிர்ப்பும் ஐரோப்பாவின் ஏனைய பிரிவினைவாத அமைப்புக்களின் தனிநாட்டு கோரிக்கைகட்கும் போராட்டங்கட்கும் புதிய வலிமையைக் கொடுத்துள்ளன.

பிரித்தானியாவில் ஸ்கொட்லாந்து, ஸ்பெயினில் பாஸ்க், பெல்ஜியத்தில் ‡பிளான்டர்ஸ் என ஐரோப்பாவெங்கும் கோரிக்கைகள் வலுக்கின்றன. தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி அதற்குப் புதிய உத்வேகத்தை வழங்குகிறது.

கற்றலோனியாவில் நடப்பதை மையப்படுத்திச் சிலர் இங்கு தனிநாட்டுக் கனவுகளை மீள உயிர்ப்பிக்க முயல்கிறார்கள். கனவு காணலாம். அதில் தவறு இல்லை. ஆனாற் கனவுகளில் வாழ முடியாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X