2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காலம் கனிந்துள்ளது; கதவுகள் திறந்துள்ளன

காரை துர்க்கா   / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்துத் தரப்பினராலும், ஆவலோடு எதிர்பார்த்த நாட்டின் ஐனாதிபதித் தேர்தல் நிறைவு பெற்று உள்ளது.   

இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களைப் போல் அல்லாது, மிகக் குறைந்த அளவிலான முறைப்பாடுகளோடும் வன்முறைகளோடும், அமைதியாகத் தேர்தல் முற்றுப் பெற்றுள்ளது.  

தேர்தல் முடிவுகளின் பிரகாரம், மீண்டும் ஒருமுறை இலங்கை நாடு, இனத்தாலும் அதனால் ஏற்படுத்தப்பட்ட பயத்தாலும் இரண்டாகப் பிளவுபட்டு போய்க் கிடக்கின்றது என்ற செய்தியும் தெளிவாக உலகத்துக்கு உரைக்கப்பட்டு உள்ளது.  

வளங்கள் நிறைந்த அழகிய நம்நாடு, ஆண்டாண்டு காலமாக, இனவாதத்துக்குள் ஆழமாகச் சிக்குண்டு, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றது. இது, இன்று இனங்களுக்கு இடையே, நம்பிக்கைகள் அற்ற நிலையையும் பய உணர்வுகளையும் விருட்சமாக வளர்த்து விட்டுள்ளது.  

அதாவது, இலங்கை நாடு, தமது கையை விட்டுச்சென்று, இரண்டாகப் பிளவு அடைந்து விடும் என்ற பயம், சிங்கள மக்களிடையே இன்னமும் உள்ளது. அதாவது, இனவாதமும் சுயநலனும் கலந்த அரசியல்வாதிகளால், இவ்வாறான மாயை உருவாக்கப்பட்டு, விதைக்கப்பட்டுள்ளது. இந்த மாயையே, பயமாக உருமாற்றம் பெற்றுள்ளது. அது, பல வேளைகளில், அரசியல்வாதிகளால் செவ்வனே தக்க வைக்கப்படுகின்றது; பயன்படுத்தப்படுகின்றது.  

இது போலவே, காலங்காலமாகத் தமிழ் மக்கள் மத்தியில், சிங்கள எதிர்ப்புநிலை தமிழின வாதமும் உள்ளது. இவ்வாறாகத் தமிழினவாதம், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டமையும் அது குடி கொண்டிருக்கின்றமையும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இயல்பானதே; அதனைப் பிழை எனக் கூற முடியாது; அது ஒருவகையில் தன்னினத்தைப் பாதுகாக்கும், முன்னெச்சரிக்கை உணர்வாகும்.   

ஏனெனில், நீண்ட கால இனப்பூசல், இன விரிசல் ஆகியவை, மக்களிடையே இனச்சாயத்தை வலுவாகப்பூசி விட்டன. இதனால், அனைத்து விடயங்களையும் இனவாத அடிப்படையில், சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் பழக்கம், இனங்களுக்கிடையே ஒரு வழக்கமாக, உள் நுழைந்து விட்டது.  

இது இவ்வாறு நிற்க, நாட்டில் அண்ணளவாக, 72சதவீதமாக வாழ்கின்ற சிங்கள மக்களால், தனித்து ஜனாதிபதியைத் தீர்மானிக்க முடியும் என நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஒற்றுமையாக, அனைவரும் ஒரு கட்சிக்கு வாக்களித்தால், அது இலகுவான காரியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  

அதுபோலவே, இந்நாட்டில் சிறுபான்மைத் தமிழ் மக்கள், 12 சதவீதமாகக் காணப்படுகின்றனர். அதாவது, தமிழ் மக்களோடு ஒப்பிடுகையில், ஆறு மடங்கு அதிகமாகச் சிங்கள மக்கள் வாழ்கின்றனர்.  

இந்நிலையில், தங்களது இனத்தின் இனத்துவ அடையாளங்களை அங்கீகரிக்காது விட்டால், தாங்கள் ஒரு கட்டத்தில், பெரும்பான்மை இனத்துடன்  கரைந்து விடுவோமோ எனத் தமிழ் மக்கள் அச்சம், கவலை கொண்டுள்ளார்கள். நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள், இன்று பெரும்பான்மை இனத்துடன் கலந்துவிட்டனர். அவர்களின் இனத்துவ அடையாளம் அழிக்கப்பட்டுவிட்டது.   

நீண்ட கால வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் மொழி, தமிழ் மண், தமிழர் வளம், தமிழ் மரபுகள், தமிழ் விழுமியங்கள் என்பன பாதுகாக்கப்பட்டு, தமிழ் இனம் கௌரவமாகவும் கண்ணியத்துடனும் வாழ வேண்டும் என, ஆழமான விருப்பத்துடன் உள்ளார்கள்.  

இதனாலேயே, ‘இலங்கையர்’ என்ற தேசிய அடையாளத்துக்குள், தமிழ் மக்கள் என்ற இன அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளவும் அதனை அங்கீகரிக்கச் செய்யவும் 70 ஆண்டுகளாகத் தவம் செய்து வருகின்றார்கள். இதைச் சராசரி சிங்கள மக்களுக்கு, விளங்க வைக்க முடியாது தவிக்கின்றார்கள்.  

இந்நிலையில், தமிழ் மக்களுடைய ஆதங்கங்களையும் விருப்பங்களையும் உணர்வுகளையும் சிங்கள மக்கள் புரிந்து கொள்வதற்கான களங்கள், கடந்த 10 ஆண்டு காலங்களில், ஆங்காங்கே அவ்வப்போது திறந்திருந்தாலும், அவை இனத்துவ அடையாளங்களுக்குள் புதைந்து போயின.  
1956ஆம் ஆண்டு, தனிச்சிங்களச் சட்டத்தில் ஆரம்பித்து, 1958 இனக்கலவரம் தொடக்கம் 2009 முள்ளிவாய்க்கால் யுத்தம் வரை சென்று, தமிழ் மக்கள் கடுமையாகக் களைப்படைந்து விட்டார்கள். இக்காலப் பகுதியில், தங்களது உயிர்கள், உடமைகள், காணிகள் என இழந்தவைகள் ஏராளம்.   

இறுதிப் போருக்குப் பின்னரான கடந்து 10 ஆண்டு காலப் பகுதியில், தமிழ் மக்கள் பலவித நெருக்கடிகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். பொருளாதார நெருக்கடிகள், உள, உடல் நெருக்கடிகள், சமூக நெருக்கடிகள் என நெருக்கடிகளும் சிக்கல்களும் நிறைந்த வட்டத்துக்குள்ளேயே சிக்கிக்கொண்டு உள்ளார்கள்.  

இவ்வாறான ஒரு சூழலில், தம்பியும் அண்ணனும் என, ஜனாதிபதியும் பிரதமருமாகச் சகோதரர்கள் அமர, புதிய ஆட்சி மலர்ந்துள்ளது. 2005இல், ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கத் தவறியதாலேயே, மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியானார். மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி என்கின்ற பதவி வகித்தமையாலேயே, அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆனார்.  

அதுவே, அவர்கள் புலிகளை அழிக்கவும் அதனால் சிங்கள மக்கள் மத்தியில் வீர புருசர்களாக வலம் வரவும் அதையும் தாண்டி, இன்று அரியணை ஏறவும் வழி வகுத்து உள்ளது.  
இந்நிலையில், “நாம் யுத்தத்தைத் தொடங்கவில்லை; முடித்து வைத்தோம்” எனத் தேர்தல் பிரசாரங்களில், கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்து வந்தார். ஆகவே, அன்று யுத்தத்தை முடித்து வைத்தவர்கள், இன்று இனப்பிரச்சினையையும் முடித்து வைக்க வேண்டும் என்பதே, தமிழ் மக்களின் அவா ஆகும்.  

“இனப்பிரச்சினை என ஒன்று உள்ளது; அது தீர்க்கப்பட வேண்டும்; அதற்காகத் தமிழ் மக்களுக்கு நியாயமானதும் நிலையானதுமான தீர்வுப் பொதிகளை வழங்க வேண்டும்” என, இன்றைய ராஜபக்‌ஷ அரசாங்கம், சிங்கள மக்களுக்குக் கூறினால், அவர்கள் அதனை, முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள்.  

ஏனெனில், ஏனைய அரசாங்கங்களைக் காட்டிலும், ராஜபக்‌ஷ அரசாங்கம் மீது நகரம், கிராமம் என, அனைத்துச் சிங்கள மக்களும் அபார நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆகவே, தமிழ் மக்களுக்கு, அரசியல் தீர்வுகள் வழங்குவது தொடர்பில், தாங்கள் குழம்பவோ, அடுத்தவர்களைக் குழப்பவோ மாட்டார்கள்.  

மேலும், இனப்பிரச்சினைக்கு ஆளும் கட்சி, அரசியல் தீர்வு வழங்க முயற்சி செய்கையில், எதிர்க்கட்சி குழப்புகின்ற வழமையான செயற்பாடுகள், இம்முறை நிகழ மாட்டாது என்றே கூறலாம்.   

ஏனெனில், நேற்றுவரை அரசியல் சீர்திருத்தம் என்றும், புதிய அரசமைப்பு என்றும் கதைத்த ஐக்கிய தேசியக் கட்சி, இன்று, அந்த முயற்சிக்கு எதிராகத் துளியேனும் கதைக்க முடியாது. அவ்வாறு அவர்கள் கதைக்க முற்பட்டால், ‘நல்லாட்சி நல்ல நாடகம்’ என்பதாக அமைந்து விடும்.  
ஆகவே, இலங்கையில் புரையோடிப்போன இனப்பிணக்குக்குச் சமாதான பாதையில், தீர்வை எட்டக் கூடிய தூரத்தில், ஜனாதிபதியும் பிரதமரும் என, ராஜபக்‌ஷ குடும்பம் உள்ளது. மேலும் இவர்களுக்கு, இதைச் செய்து முடிக்கின்ற திராணியும் உள்ளது.  

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள், இனத்துவ அடிப்படையில் வாக்களித்து உள்ளார்கள் என பேசிக் கொள்கின்றார்கள். ஆனால், சிறுபான்மை இன மக்களாகிய தமிழ், முஸ்லிம் மக்கள், இனத்துவ அடிப்படையில் சிவாஜிலிங்கத்துக்கோ, ஹிஸ்புல்லாஹ்வுக்கோ வாக்களிக்கவில்லை.  

1977, 1983 இனக்கலவரங்கள், 1979 பயங்கரவாதத் தடைச்சட்டம், 1981 நூலக எரிப்பு என, இன்னும் பல கறுப்பு நினைவுகளையும் நிழல்களையும் ஒரு கணம் தூர ஒதுக்கி வைத்து விட்டு, அக்காலப் பகுதியில் பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாஸவின் மகனுக்கே, தமிழ் மக்கள் வாக்களித்து உள்ளார்கள்; சஜித் பிரேமதாஸ என்கின்ற பௌத்த சிங்கள வேட்பாளருக்கே வாக்களித்து உள்ளார்கள்.  

இவ்வாறான சூழ்நிலையில், பிரதேச சபை, மாகாண சபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் தமது இனத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தமிழர்களாக வாக்களிக்க வேண்டும்.  

ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் அப்படிச் செய்யக் கூடாது என, ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தலில், தாமும் பங்காளராக வேண்டும் என்ற ஆர்வம், தமிழ் மக்களிடையே இம்முறை வெகுவாகக் காணப்பட்டது.  

இதன் நீட்சியாகத் தமிழ் மக்களுக்கு நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ‘அன்னம்’ சின்னத்துக்கு வாக்களிப்பதைத் தவிர, வேறு தெரிவுகள் இருக்கவில்லை எனக் கூறலாம். மாறாக, சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானால் தங்களுக்குத் தங்கத் தட்டில் வைத்துச் சுதந்திரத்தைத் தருவார் எனத் தமிழ் மக்கள் எள்ளளவும் கருதவில்லை.  

இது மாற்றம் அல்லது, இதுவே நியதி என்றால், அதை யாரால் என்ன செய்ய முடியும்? இலங்கையில் சமாதானமும் சக வாழ்வும் மலர வேண்டும் என, இலங்கையர்கள் தான் முதலில் உணர வேண்டும்.  

ஆகவே, இன்றைய ஆட்சியாளர்களுக்கு வாய்ப்புகள் கை கூடி உள்ளன; கை நழுவ விடக்கூடாது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .