2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கள்ளன் - பொலிஸ் விளையாட்டு

முகம்மது தம்பி மரைக்கார்   / 2017 ஜூன் 14 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அச்சத்துக்குள் வாழ்தல் மிகவும் மோசமான அனுபவமாகும். அடுத்து என்ன நடக்கும், என்னவும் நடக்கலாம் என்கிற பீதி - நிம்மதியைக் கொன்று விடும்.   

இலங்கை முஸ்லிம்கள் கிட்டத்தட்ட இப்படியானதொரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அடுத்து எந்தக் கடை எரியும் என்கிற பயத்தில், ஒவ்வொரு முஸ்லிம் வியாபாரியும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு படுக்கைக்குச் செல்லுகின்றான். நெருப்பை வைத்துக் கொண்டு, எப்படி உறங்க முடியும்.  

முஸ்லிம்கள் மீது உமிழப்பட்டு வந்த இனவெறுப்பு பேச்சுகளும் அச்சுறுத்தல்களும் இப்போது வேறு புள்ளிக்கு நகர்ந்திருக்கின்றன. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களைத் தீயிட்டுக் கொழுத்தும் ஒரு நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.   

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்து, அவர்களை நடுத் தெருவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க முடிகிறது.  
என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, யார் இதை நடத்துகின்றார்கள் என்கிற கேள்விகளுக்கு அநேகமாக எல்லோருக்கும் விடைகள் தெரியும். ஆனாலும், எதுவும் தெரியாதவர்கள் போல் ஆட்சியாளர்கள் நாடகமாடுகின்றனர்.   

குற்றங்களைக் கண்டு பிடிக்க வேண்டிய பொலிஸாரும், முஸ்லிம்களின் கடையெரிப்பு விவகாரத்தில் நியாயமாகச் செயற்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

“முஸ்லிம்களின் கடைகள் எரிகின்ற போதெல்லாம், அதற்குப் பொலிஸார் வேறு வியாக்கியானங்களைக் கூறுவது கேவலமானதாகும்” என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசனம் தெரிவித்திருக்கின்றார்.   

“மஹியங்கனையில் முஸ்லிம் ஒருவரின் கடை எரிந்து கொண்டிருந்தபோது, அந்தப் பிரதேசத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, மின் ஒழுக்கு காரணமாகவே அந்தக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக என்னிடம் அந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார். விசாரணைகளுக்கு முன்பாகவே, பொலிஸார் தீர்ப்புக் கூறிக் கொண்டிருக்கின்றனர்” என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.  

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் முஸ்லிம்களின் மகரகம மற்றும் நுகேகொட கடைகளுக்கு தீ வைத்தார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர், பொது பலசேனா அமைப்பைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் கூறியிருக்கின்றனர்.   
மேலும், கைது செய்யப்பட்ட நபரும், “நானே கடைகளுக்குத் தீ வைத்தேன்” என்று, குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், பொது பலசேனா அமைப்பினரோ, “நாங்கள் இந்தாளிடம் தீ வைக்கச் சொல்லவில்லை” என்று, வீடியோ மூலமாக அறிக்கை விட்டிருக்கின்றார்கள். காட்சிகளையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது, கள்ளன் - பொலிஸ் விளையாட்டு மாதிரித்தான், இவை தெரிகின்றன.  

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இருக்கின்ற 21 உறுப்பினர்களின் நிலையும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளுந்தரப்பில் இருக்கின்றபோதும், முஸ்லிம்களுக்கெதிரான இந்த நடவடிக்கைகளுக்குத் தீர்வுகளை எட்ட முடியவில்லை.   

ஜனாதிபதியிடம் முறையிட்டால், சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் பார்த்துக் கொள்வார் என்கிறார். சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சரோ - பொலிஸார் மீதும், அரசாங்கத்தின் மீதும் பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்கிறார். பொலிஸார் இது விடயத்தில் கேவலமாக நடந்து கொள்வதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றம் சாட்டுகிறார்.   

ஆளுந்தரப்பிலுள்ள ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும், ‘அரசாங்கம்’ என்கிற நிறுவனத்தின் அங்கத்தவராவர். எனவே, முஸ்லிம்களின் கடையெரிப்பு விவகாரத்தில் அரசாங்கம் நியாயமாகச் செயற்படவில்லை என்றால், ஆளுந்தரப்பிலுள்ள ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.   

மாறாக, ஆளுந்தரப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் ஒருவரை மற்றவர் விரல் நீட்டிக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது.  

முஸ்லிம்களின் கடையெரிப்பு விவகாரத்தை முன்னிறுத்தி, ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ எனும் பாணியில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டும் விலகத் தேவையில்லை என்று, கடந்த வார பத்தியில் கூறியிருந்தோம். ஆனாலும், நிலைமை கட்டு மீறினால், எதிரணியில் அமர்கின்றமை பற்றியும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.   

தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா இந்த விவகாரத்தை முன்னிறுத்தித் தனது அபிப்பிராயத்தை நம்மிடம் கூறினார். “குறிப்பிட்டதொரு காலப் பகுதிக்குள் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்தச் செய்யுமாறு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், ஆட்சியாளர்களுக்கு காலக்கெடுவொன்றை விதிக்க வேண்டும். அந்தக் காலப்பகுதிக்குள் தீர்வு கிடைக்காமல் விட்டால், அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிரணியில் அமர வேண்டும்” என்கிறார் அதாவுல்லா.  

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இது குறித்து கூறுகையில், “முஸ்லிம் காங்கிரஸில் 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இந்தக் கட்சிகள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் தலா ஒருவரை இப்போது எதிரணியில் அமர வைக்க வேண்டும். பின்னர் அரசாங்கத்துக்கு ஒரு காலக்கெடுவை விதித்து, முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வைக் காணுமாறு கோர வேண்டும். அந்தக் காலக் கெடுவுக்குள் தீர்வு கிடைக்காமல் விட்டால், அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிரணியில் அமர வேண்டும்” என்கிறார்.   

எதிரணியில் அமர்ந்து விட்டால் மட்டும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டி விடுமா என்று சிலர் கேட்கக் கூடும். அவ்வாறான கேள்விகள் புத்திசாதுரியமற்றவையாகும். ஆளுந்தரப்பில் இருக்கின்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை விடவும், எதிரணியில் இருக்கின்ற தமிழர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சமூகத்துக்காக ஏராளமான விடயங்களை அரசாங்கத்தினூடாகச் சாதித்துள்ளார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.  

இன்னொருபுறம், இதுவரை எரியூட்டப்பட்ட கடைகளுக்குரிய இழப்பீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அதனூடாக, ஒரு முஸ்லிமுடைய கடையை எரித்தால், இறுதியில் அரசாங்கத்தையே அது பாதிக்கும் என்கிற நிலை உருவாக வேண்டும். அப்போதுதான், இந்த விவகாரத்தில் சட்டமும் தன் கடமையைச் சரி வரச் செய்ய முயற்சிக்கும்.  

இதேவேளை, முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் இப்படியே தொடந்து சென்றால், தன்னுடைய அமைச்சுப் பதவியை துறப்பதற்குத் தயாராக இருப்பதாக, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதில் வைத்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருக்கின்றார்.  

அதற்கு முன்தினம் சம்மாந்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் “முஸ்லிம்களுக்கு எதிரான தற்போதைய விவகாரம் தொடர்பில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென, முஸ்லிம்களின் மார்க்க நிறுவனமான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினர் முடிவு செய்ய வேண்டும். அவர்களின் முடிவின்படி, நான் நடப்பேன்” என்று உறுதியளித்துள்ளார்.  

 எனவே, முஸ்லிம்களுக்கு எதிரான தற்போதைய நிலைவரம் தொடர்பில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினர், தீர்க்கமானதொரு முடிவை எடுக்க வேண்டும்.  
இரண்டு நாட்களாக முஸ்லிம்களின் கடைகள் எவையும் எரியவில்லை. அதற்காக, நிலைமை சுமூகமடைந்து விட்டதாக அர்த்தமாகி விடாது. சரி, இதற்குப் பிறகு கடைகள் எவையும் எரியாவிட்டாலும், அப்படியே விட்டு விடவும் முடியாது. ஏற்கெனவே முஸ்லிம்களின் கடைகளை எரித்தவர்கள் அனைவரும் அடையாளம் காணப்படுதல் வேண்டும். மேலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படுதல் அவசியமாகும்.

‘யாரோ ஒரு குழுவினர் நினைத்த மாத்திரத்தில் ஒருவரின் கடையை எரிக்க முடியும், ஆனால் சட்டம் அவர்களைத் தண்டிக்க மாட்டாது’ என்கிற நிலைவரம் மிகவும் ஆபத்தானதாகும். எனவே, முஸ்லிம்களின் கடையெரிப்பு விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுதல் வேண்டும். அதேபோன்று, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதை இங்கு மீளவும் பதிவு செய்கிறோம்.  

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கும் நோக்கத்துடன் தற்போது அவர்களின் வியாபார நிலையங்கள் மீது, தீ வைக்கப்படுகிறது. ஆனாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, சாம்பராகிக் கொண்டிருப்பது இலங்கையின் பொருளாதாரம்தான் என்பதையும் அனைத்துத் தரப்பினரும் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.  

இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமானளவு பங்கு - முஸ்லிம் வர்த்தகர்களின் கைகளிலுள்ளன. ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களின் வியாபார நிறுவனங்களுக்குத் தீ வைப்பவர்கள், நமது தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் தீ வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் மறைமுகமான உண்மையாகும்.  

1983 ஜூலைக் கலவரத்தின் போது, தமிழர்களின் பொருளாதாரம் இலக்கு வைத்து அழிக்கப்பட்டமைக்கு பின்னர், இப்போது மிகத் திட்டமிட்டு முஸ்லிம்களின் பொருளாதாரம் இலக்கு வைத்து நாசமாக்கப்படுகின்றன. அன்று ஐ.தே.கட்சி அரசாங்கம் தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டபோது ‘சும்மா’ இருந்ததைப் போல், இன்று முஸ்லிம்களின் பொருளாதாரம், குறி வைத்துத் தாக்கப்படுகின்றமையை நல்லாட்சி அரசாங்கம் ‘வேடிக்கை’ பார்த்துக் கொண்டிருக்கிறது. பௌத்த பேரினவாதம்தான் அதையும் செய்தது, இதையும் செய்கிறது.  

முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வளவு கொடூரம் நடைபெற்று வருகின்ற நிலையில், அது தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிடும் பொருட்டு, அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனபோதும், அவர்கள் அனைவரையும் ஒன்றாகச் சந்திப்பதற்கு இதுவரை ஜனாதிபதி நேரம் ஒதுக்கிக் கொடுக்கவில்லை என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்தல் வேண்டும். ஜனாதிபதியிடத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கௌரவம் எந்தளவில் உள்ளது. 

எனவே, தமக்கு கௌரவமற்றதொரு இடத்தில் அல்லது கௌரவம் வழங்காத நபரிடத்தில் பதிலுக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்கிற கேள்வியும் இங்கு உள்ளது.   

இவ்வாறானதொரு நிலையில், நாடாளுமன்ற அமர்வை முஸ்லிம் உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பது தொடர்பாக ஐ.தே.கட்சியின் உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தொடர்ந்து பேசி வருகின்றார். ஆனாலும், பேச்சு பேச்சாக இருக்கின்றதே தவிர, இதுவரை செயலில் எதையும் காணவில்லை.   

அப்படியென்றால், பொதுமக்களின் கோபத்தைச் சமாளிப்பதற்காக இவர்கள் விடுகின்ற ‘டூப்பாக’ இது இருக்குமோ என்கிற சந்தேகமும் இங்கு எழுகிறது. மக்களைச் சமாளிப்பதற்காக காட்டப்படும் ‘படங்கள்’ வெகு நாட்களுக்கு ஓடாது.  

முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் அச்ச சூழ்நிலையைக் களைந்தெறிவதற்கு உளச் சுத்தியுடனும், சமூக அக்கறையுடனும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றித்துச் செயற்படுதல் வேண்டும். அப்படியில்லாமல், இந்த சந்தர்ப்பத்திலும் ‘படம் காட்டும்’ அரசியலை யாரும் செய்ய நினைத்தால், அது, நெருப்போடு விளையாடுதலுக்குச் இணையாக அமைந்து விடும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X