2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிழக்கின் நிலை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப்

Editorial   / 2020 ஜனவரி 09 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன்  

இன்றைய சமகால அரசியல் சூழ்நிலையில் தமிழர் தேசிய அரசியல் போக்குகளும் அதுதொடர்பான கருத்தாடல்களும்  ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. 

கட்சிகளுக்கு இடையில் நிலவும் அதிகாரப் போட்டிகளும் தனிப்பட்ட குத்து வெட்டுகளும் காழ்ப்புணர்வுகளும் தமிழ்த் தேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது, இன்று தமிழ் மக்களுக்குள் எழுந்துள்ள அச்ச நிலையாக உள்ளது. 

இத்தகைய சூழலில், தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் பல்வேறு வியூகங்கள், பெரும்பான்மை அரசியல் கட்சிகளாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்குகளுடனும் செயற்பாடுகளுடனும் ஒத்துவராத, முரண்பட்ட கட்சிகளாலும் அமைப்புகளாலும் வகுக்கப்பட்டு வருகின்றன. 

தனிப்பட்ட கோபதாபங்களின் நிமித்தமும் தம்மைத்தாமே மாற்றுத் தலைமைகள் என மக்களின் அங்கிகாரத்தை பெறாமல் கூறிக்கொள்ளும் கட்சிகளும் தேர்தலில் போட்டி போட வேண்டும்; எனக்கும் ஒரு கட்சி இருக்கிறது என்ற சித்தாந்தத்தில் வாக்கு வங்கிகளற்ற புதிதாக உதயமாகிக் கொண்டிருக்கும் தமிழரின் தேசியக் குரலாகத் தங்களைத் தாங்களே வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் பல்வேறு தமிழ் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாத்திரம் விமர்சித்துக் கொண்டு, தேர்தல் ஒன்றே இலக்காகக் கொண்டு செயற்படுகின்றன. 

இக் கட்சிகள், தமது வேலைத்திட்டம் தொடர்பான தௌிவுபடுத்தல்களை மக்கள் முன்வைக்க வேண்டும். தமது தேவை, எதிர்கால நிகழ்ச்சித்திட்டம், அதை முன்நகர்த்திச் செல்வதற்கான செயற்பாட்டுத்திட்டம், அதன் காலப்பகிர்வு போன்றவை தொடர்பான விளக்கங்களை இக்கட்சிகள் மக்கள் முன்வைக்க வேண்டும். 

அதை விடுத்து, ஊடகங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் தலைமையையும் ஊடகப் பேச்சாளரையும் விமர்சித்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல; மாறாக, இது தனிப்பட்ட குரோதத்துக்காக, வஞ்சம் தீர்ப்பது போலவே அமைகிறது.

ஏனெனில், தமிழர் இருப்புத் தொடர்பாகக் கூட்டமைப்பு எதையும் செய்யவில்லை என்று விமர்சனம் செய்பவர்கள், முதலில் தாங்கள் எத்தகைய வேலைத்திட்டங்களைச் செய்துள்ளார்கள் என்பது பற்றி நிரூபிக்க வேண்டும். 

ஏட்டிக்குப் போட்டியாக, கட்சி உருவாக்கியமையையும் கூட்டமைப்புத் தலைமைகளை விமர்சித்ததையும் தவிர, வேறு எதையும் சாதிக்கவில்லை என்றே மக்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் செயற்பாடுகள், கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, செவிடன் காதில் ஊதிய சங்காகவே காணப்படுகின்றன.

இந்நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இச்சூழ்சிலையில், கட்சிகளுக்கான ஆசனப்பங்கீடு, கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் சுமூகமாக அமைந்துவிட்டது என்றே அறியமுடிகிறது. 

ஆனால், மாற்றுத் தலைமை வேண்டும் எனக் கூறிக் கொண்டு, புதிதாக சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகியுள்ள அணிகளிடையே ஆசனப் பகிர்வில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

கட்சி பதிவாகும் முன்பே, கூட்டுச் சேர்ந்து உள்ளவர்களுக்குள்ளே, ஆசனப்பங்கீடு தொடர்பாகச் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. இவர்களுடன் இன்னும் பல கட்சிகள் இணையும் பொழுது, கட்சிகளுக்கு எவ்வாறு ஆசனங்களை ஒதுக்கீடு செய்வது என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயமாக இருக்கப் போகின்றது. 

இந்நிலையில், வடக்கின் முன்னாள் முதலமைச்சர் தலைமையில், ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடப் போகின்றவர்களுக்கான மக்கள் ஆதரவு, எவ்வாறிருக்கிறது என்பதும் நாடி பிடித்துப் பார்க்கப்பட வேண்டியதாகும். 

அவ்வாறாயின், தமது வேட்பாளர்கள் முதல் தேர்தலில் எத்தனை ஆசனங்களைப் பெறக் கூடியதாக இருக்கும் என்பது தொடர்பான தெளிவான தீர்மானம் இவர்களிடம் உள்ளதா? ஊகங்களின் அடிப்படையில், கற்பனை வெற்றிக் கனியை சுவைக்கின்றார்களா என்ற பல கேள்விகள் மக்களிடம் இருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம், அவர்கள் சாதகமான விடைகளை மக்கள் முன், தமது செயல்களாலும் வாக்குகளாலும் உறுதிப்படுத்த வேண்டும். 

உண்மையில், இவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியத்தை நேசிப்பதாக இருந்தால், தமிழ்த் தேசியத்தின் ஒருமித்த வேண்டுகோள், ‘அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதாகும். தமிழ்க் கட்சிகள் குரோதங்களை மறந்து, இச்சந்தர்ப்பத்தில் ஒன்றிணையாவிட்டால் தமிழர்கள் மீண்டும் ஒருமுறை தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வரலாற்றுத் தவறொன்றை முன்னெடுத்ததாக வரலாற்றில் பதிவாகும்’ என்பதாகவே காணப்படுகின்றன. 

இந்த வரலாற்றுத் தவறைத்திருத்திக் கொள்ள, தமிழ்த் தேசியத்தின் பால் அக்கறையும் ஈடுபாடும் உள்ளவர்கள் ஓரணியாக அணிசேர்ந்து, தேர்தலில் போட்டியிட வேண்டும். அப்போதுதான் தமிழ்ப் பிரதிதித்துவத்தைக் காப்பாற்றுவதுடன், தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பாக, மக்களது விருப்பங்களையும் அடையாளப்படுத்த முடியும். 

மாறாகத் தமிழ்க் கட்சிகள் பிளவுபட்டு, தமிழ் மக்களின் வாக்குகளையும் சிதறடித்து, பிரதிநிதித்துவத்தையும் இழந்து, எதிர்காலத்தில் தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டுச் செல்லும் நிலைக்கு வந்துவிடக்கூடாது. 

இத்தகைய நிலைமை, எதிர்வரும் தேர்தலில் உருவானால் தமிழ்த் தேசியமும் அதன் அபிலாசைகள் தொடர்பான  கருத்தாடல்களும் போராட்டங்களும் அரசியல் நகர்வுகளும் அஸ்தமனம் ஆகிவிடும் அபாயம் காணப்படுகின்றது. 

மாறாகத் தமிழ் மக்கள், தங்கள் தனிப்பட்ட இருப்புகளுக்காகப் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு ஆதரவு அளித்து, தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும், சுயநலத் தற்காப்பு அரசியலுடன் சங்கமிக்கும் முடிவுகளை எடுக்கக் கூடாதெனப்  பல்வேறு புத்திஜீவிகளும் கருதுகிறார்கள். இக்கருத்து, சாதாரண தமிழ் மக்களிடமும் ஆழமாக காணப்படுவதையும் காணலாம்.   

இத்தகைய சூழ்நிலையில், தமிழரின் அரசியல் நிலைவரம் தொடர்பாகத் தமிழ்க் கட்சிகளிடையே எத்தகைய குத்து வெட்டுகள் இருந்தாலும், அரசியலில் வடக்கு நிலைவரம் வேறு; கிழக்கு நிலைவரம் வேறு என்ற யதார்த்தம் அனைத்து அரசியல் தலைமைகளாலும் உணரப்பட வேண்டும். 

இவ்வாறான, கிழக்கு மக்களின் கருத்துகளையும் கள நிலைவரத்தையும் கருத்தில் கொண்டு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்திருக்கிறது. இத்தகைய செயற்பாடானது, தமிழ் மக்களை நேசிக்கும் ஒரு கட்சியாகத் தன்னை மீண்டும் ஒருமுறை அடையாளப்படுத்தி உள்ளது எனலாம்.

காலத்துக்குக் காலம் கட்சிகளின் ஜனநாயகத்துக்காகத் திம்புப் பேச்சுவார்த்தை முதல், இன்றுவரை இப்பணியை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அர்ப்பணிப்புடன் செய்திருக்கிறது என்பது வரலாறு. 

இந்த வரலாற்று உண்மையை, கடந்த சில நாள்களுக்கு முன், அதன் தலைமை ஊடக அறிக்கையாகவும் வெளியிட்டிருந்தது. வடக்கு அரசியல் நிலைக்கு ஏற்ப, மாற்றுத் தலைமை இருப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால், கிழக்கு மக்களுக்காக, அவர்களது அரசியல் அபிலாசைகளைக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை என்பதை ஈ.பி.ஆர்.எல்.எப் உணர்ந்திருக்கிறது. அதன் வெளிப்பாடே, பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான துரைரட்ணம் ஊடங்களுக்கு வெளிப்படுத்திய கருத்தாகும்.

கிழக்கைப் பொறுத்தவரையில், ஈ.பி.ஆர்.எல்.எவ் எடுத்துள்ள இந்த ஆரோக்கியமான முடிவானது, இழக்கப்படவிருந்த  பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றும் என்பது உறுதி. 

கிழக்குத் தமிழர்களின் நலன்களில் அக்கறையின்றி, வடக்கின் முடிவுகள் எட்டப்படுமாக இருந்தால், அது ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் சாவுமணி அடிக்கும் முடிவாகவே இருக்கும். 

எனவே, காலத்தின் தேவை அறிந்து, கிழக்கு நிலைவரம் தொடர்பாக எடுத்துள்ள முடிவானது,   யதார்த்தமானது.  இது தமிழ் மக்களால் ஏகமனதாக வரவேற்கப்பட்டுள்ளது. 

 இந்த முடிவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பார்க்கப்போகிறது, அதற்கு நேசக்கரம் நீட்டப் போகிறதா, ஒன்றிணைந்து செயற்பட வாய்ப்பளிக்குமா? என்ற வினாக்களுக்கு நிச்சயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் சாதகமாகப் பதிலளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 

ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதைச் செய்யாதுவிடின், அதுவும் தமிழரின் தனித்துவத்தை இழக்கச் செய்வதற்கு துணைபோன கட்சியாகவே கிழக்கு மக்களால் பார்க்கப்படும்.

தமிழ் மக்களின் இன்றைய தேவை, கிழக்கின் இருப்பும் தமிழர் தாயகமும் அதன் பண்பாடும் வரலாறும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். கடந்த இரு தசாப்தங்களாகப் பல்வேறு வழிகளிலும் படிப்படியாகக் கபளீகரம் செய்யப்பட்டுள்ள இந்தக் கிழக்கு மண்ணின் தமிழர் தாயகம், மிகவும் சுருங்கிக் கொண்டு வருகிறது. 

தொழில் வாய்ப்பு, அபிவிருத்தி, கலை, பண்பாடு தொடர்ச்சியாகக் கபளீகரம் செய்யப்படுகிறது. தமிழ்த் தேசியம் அதன் சுயத்தை இழந்து போகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இத்தகைய களநிலவரங்களை, யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள், விளங்கிக் கொள்ளாதவர்கள், வாக்குகளைப் பிரித்து, பிரதிநிதித்துவத்தை இழக்கத் துணை போவார்கள். 

எனவே, கிழக்கின் மீது அக்கறை இருந்தால், கூட்டமைப்பில் இணைந்து, ஆதரவுக் கரம் கொடுக்க வேண்டும். இல்லையேல், தேர்தல் களத்தை விட்டு, தமிழ் மக்களுக்காக ஒதுங்கிவிட வேண்டும். ஏனெனில், கிழக்கில் தமிழரின் இருப்பு, பாதுகாக்கப்படுவதுதான் இன்றைய முக்கிய தேவை.

காலத்தின் தேவை உணர்ந்து, ஈ.பி.ஆர்.எல்.எவ் இந்த முடிவை எடுத்திருப்பது, கிழக்கின் அரசியல் தளம்பலில் இருந்த அச்ச நிலை நீங்குவதற்கு வழிவகுத்துள்ளது எனலாம். இது, தமிழர் அரசியலில் ஆரோக்கியமான செல்நெறியாகும். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X