2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கூட்டுக் கலக மனப்பாங்கு

Thipaan   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

மனிதர்களுக்கு இருக்கின்ற சிறப்பான அம்சங்களில் ஒன்று, அவர்கள் சமூக விலங்குகளாக இருப்பது தான். எல்லா விலங்குகளுக்கும் கூட்டமாக இருக்கின்ற பண்பு இருக்கின்ற போதிலும், மனிதர்களுள் உள்ள உயர்வான பண்பாக அது இருப்பதால் தான், மனித இனத்தை 'சமூக விலங்கு' என்று அழைப்பார்கள்.

வளர்ந்துவரும் அதிவேக உலகத்தில், நேரமில்லை என அனைவரும் முறையிட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும், இன்னமும் குடும்ப உறவுகளும் சமுதாய நிகழ்ச்சித் திட்டங்களும், ஏன், ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இன்னமும் உச்சத்தில் இருப்பதற்கும் இந்த 'சமூக' உணர்வை மனிதர்கள் கொண்டிருப்பது தான்.

இவ்வாறாக, இந்த உலகத்தின் ஓரளவு அமைதியான இருப்புக்கு இந்தச் சமூக உணர்வு முக்கியமான காரணியாக இருக்கின்ற போதிலும், அதன் மறுபக்கம் மறைபக்கமாக இருக்கின்றது என்பது தான் கவலையானது. கூட்டுக் கலக மனப்பாங்கு (ஆங்கிலத்தில் இதை 'mob mentality' என்று அழைப்பார்கள்) என்று சொல்லப்படும் இந்த மனப்பாங்கு, மனிதர்களிடத்தே அதிகரித்து வருகின்றது என்பது தான் கவலைக்குரியது.

தன்னைச் சுற்றியுள்ளவர்களான குடும்பத்தினர், நண்பர்கள், இணைந்து தொழிலாற்றுவோர் ஆகியோரின் நடத்தைகள், உங்களின் நடத்தைகளில் தாக்கம் செலுத்துவதை அனுமதிப்பது தான், கூட்டுக் கலக மனப்பாங்கின் ஆரம்பக்கட்ட வரைவிலக்கணமாக இருந்தது. அதாவது, உங்களுடைய நண்பரொருவருக்கு ஒரு நடிகரைப் பிடிக்குமென்றால், அதன் மூலமாக அந்நடிகர் உங்களுக்குப் பிடித்தமானவராக மாறுவது அல்லது அந்நடிகர் உங்களுக்குப் பிடித்தமானவர் என்று நீங்கள் காட்டிக் கொள்வதைக் குறிக்கும். ஆனால், மனிதர்களின் நடத்தைகளும் மாற மாற, வரைவிலக்கணங்களும் விரிவுபடுத்தப்பட வேண்டிய தேவை உண்டாகியது.

கூட்டுக் கலக மனப்பாங்கு என்பது எல்லா இடங்களிலும் இருக்கின்ற போதிலும், அதை ஊட்டி வளர்ப்பதில் இணையம் பாரிய பங்களைச் செலுத்தி வருகிறது. ஏனைய இடங்கள் எல்லாவற்றையும் விட, எமக்கான அதிகபட்ச அங்கிகாரத்தை நாம் தேடுவது இணையத்திலேயே அதிகம் என்பது தான் இதற்கான காரணமாகும்.

முன்னைய காலத்தில், பிரபலமாகுதல் என்பது கடினமானது. ஏராளமான கடின உழைப்பும் வெற்றியும் குறிப்பிடத்தக்களவு அதிர்ஷ்டமும் அதற்குத் தேவைப்பட்டது. இதன் காரணமாகத் தான், திறமையுள்ள பலர், பல்வேறு சாதனைகளுக்குப் பின்னரும் முன்னைய காலங்களில் பிரபலமாகியிருக்கவில்லை.

ஆனால், இப்போதெல்லாம் அவ்வாறானதாக இல்லை. மோசமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியமைக்காக சாம் அன்டர்சன் என்ற தமிழக நடிகர் பிரபலமானது இணையத்தால் தான். இணையத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற அந்தப் பிலபலத் தன்மையால், தமிழ்நாட்டின் பிரபல நடிகர்களில் ஒருவரான விஜயின் கத்தி திரைப்படத்தில் அவருக்கான வாய்ப்புக் கிடைத்திருந்தது.

இலங்கையில் அண்மைய காலத்தில், 'எக்ஸ் ஏலியன்ஸ்' பாடல் மூலம் பிரபலமாகிய பாடகியான மெதானி தேஷப்பிரிய, சிறந்த பாடல் திறமைக்காகவெல்லாம் பிரபலமாகியிருக்கவில்லை. மாறாக, அவருடைய பாடலைப் பலர் வெறுத்ததன் காரணமாகப் பிரபலமாகினார். இணையம் அவரைப் பிரபலமாக்கியது. அதன் பின்னர், ஏராளமான பிரதான ஊடகங்கள் அவரைப் பேட்டி கண்டிருந்தன. இது தான் இணையம் வழங்கும் பிரபலத் தன்மை.

இந்தப் பிரபலத்தை எவ்வாறாவது எட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான், அநேகமான சமூக ஊடகப் பயனர்கள் செயற்பட்டு வருகின்றார். ஏனைய சமூக ஊடகப் பயனர்களிடம் அங்கிகாரத்தைப் பெற்றால், இந்தப் பிரபலத் தன்மை இலகுவானதாக அமைந்து விடும் என்பதோடு, பெரும்பான்மையோரின் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தால் தனித்துவிடுவோம் என்ற அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது.

மனிதன் ஒரு சமூக விலங்கு என்று ஏற்கெனவே சொல்லப்பட்ட போதிலும், ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். சமூகத்துடன் இணைந்து செயற்படுகின்ற போதிலும், தனித்துத் தெரிவது தான் அடையாளமாகவும் உணர்நிலை ஆளுமையாகவும் கருதப்பட்டது. ஆனால், இப்போது ஏற்பட்டிருக்கின்ற சமூகக் கலக மனப்பாங்கால், 'ஊரோடு ஒத்துவாழ்' என்ற நிலை தான் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் இணையப் பயன்பாட்டில், இதற்கான மூன்று வெளிப்படையான உதாரணங்களைக் குறிப்பிட முடியும்.

1. நடிகர் விஜய் மீதான வெறுப்பு. 2. அப்துல் கலாம் மீதான ஆதரவும் வெறுப்பும். 3. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீதான ஆதரவு.

தமிழ் நடிகர்களில் பிரபலமாக இருந்த நடிகர் விஜய், ஏராளமான இரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். ஆனால், இணையத்தில் அவருக்கான எதிர்ப்பு அல்லது கேலி என்பது அதிகமாகக் காணப்படுகிறது என்பது, சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதற்கான காரணம் என்னவெனில், விஜயை வெறுப்பது அல்லது கேலி செய்வதென்பது அவசியமானது அல்லது இணையத்தில் 'உயர் இரசனை'யைக் கொண்டுள்ளோரின் இயல்பு என, ஒரு மனநிலை உருவாக்கப்பட்டது. இதனால், 'நானும் உயர் இரசனை கொண்டுள்ளவன் தான்' என்பதை நிரூபிக்க, விஜயைக் கேலி செய்வதென்பது அவசியமானதாக மாறியது. அத்தோடு, விஜயை இரசிப்பதென்பது கீழ்மட்ட இரசனையென மாற்றப்பட்டதால், அவரின் இரசிகர்கள் கூடத் தங்களது இரசனைத் தன்மையை வெளிப்படுத்துவதைத் தவிர்த்தனர்.

இதற்கு முன்னர் விஜயை வெறுக்காதவர்கள் கூட, தங்களது புலமைத்தன்மையை வெளிப்படுத்த அல்லது உயர் இரசனைத் தன்மையை வெளிப்படுத்த, அதன் மூலம் அங்கிகாரத்தைப் பெறுவதற்கு, விஜயை வெறுக்கவும் கேலி செய்யவும் ஆரம்பித்தனர். அதன் மூலம், விஜய் மீதான எதிர்ப்பு என்பது சாதாரணமாக மாற்றப்பட்டது.

அண்மையில் மரணமடைந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரின் மரணமும் இந்த மனப்பாங்குக்குள் சிக்கிக் கொண்டது. அப்துல் கலாமைக் கொண்டாடுவதென்பது இந்த மனப்பாங்கின் முதற்படியாக அமைந்தது. அவரைப் பற்றி எதுவும் அறியாதவர்கள் கூட, 'சுஐP முயடயஅ' என தங்கள் 'கடமை'யை நிறைவேற்றி, அவரைக் கொண்டாடத் தொடங்கினர். அலைக்கெதிராகப் பயணம் செய்ய விரும்பியோர், அப்துல் கலாமை எதிர்ப்பதைத் தொடங்க, கலாமை எதிர்ப்பதென்பது ஒரு வகையில் நியமமாகியது. திடீரென, கலாமை எதிர்ப்பது தான் உச்சபட்ச அறிவுத்தன்மைக்கான காரணம் போன்றதொரு மனநிலை உருவாக, அப்துல் கலாமுக்கெதிராக ஏராளமான ‡பேஸ்புக், டுவிட்டர் பதிவுகள் பறந்திருந்தன. 'நானும் ரௌடி தான்' மனநிலை அங்கே காணப்பட்டிருந்ததைக் காண முடிந்திருந்தது.

அதேபோல் தான், அண்மைக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீதான ஆதரவு 'அலை'. திடீரென எழுந்த அலை காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு என்பது துரோகம் போன்றதான மனப்பாங்கொன்று இணையத்தில் கட்டியமைக்கப்பட்டது. முன்னைய காலங்களில் மாற்றுக் கருத்துக் கொண்டோரெல்லோரும் எவ்வாறு துரோகிகளாக்கப்பட்டனரோ, அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தோர் எவ்வாறு பயன்பட்டார்களோ, அதே நிலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் பதிவுகள் இணையமெங்கும் பரவின.

கூட்டமைப்பை எதிர்ப்பதென்பது நியமமாக மாறியிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் இருக்கின்ற கொள்கைகளைப் பற்றி அறியாதோர் கூட, அதனை ஆதரிப்பதாக வெளிப்படுத்திக் கொண்டனர். ஆனால், எந்த உணர்வுகளைப் பயன்படுத்தி இணையத்தில் எதிர்ப்புப் பரப்பப்பட்டதோ, அதே உணர்வைப் பயன்படுத்தி கூட்டமைப்பு மீதான ஆதரவு இறுதி நேரத்தில் கட்டியெழுப்பப்பட்டது. கூட்டுக் கலக மனப்பாங்கில் திடீரென மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை எதிர்ப்பதென்பது 'உண்மையான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான முக்கிய படி' என்ற கருத்தொன்று பிரசாரப்படுத்தப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தோல்விக்கு சமூகத்தின் கீழ்மட்டங்களை அவர்கள் சென்றடையாமை முக்கியமான காரணியாக அமைந்த போதிலும், இறுதி நேரத்தில் அவர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட இணையப் பிரசாரங்களும் தாக்கத்தைச் செலுத்தியிருந்தன என்பது மறுக்க முடியாதது.

இவ்வாறு, எமது தனித்துவத்தை இழந்து, போலி அங்கிகாரத்துக்காக, ஏனையோரின் கருத்துக்களை எமது கருத்துக்களாக்கும் மனநிலையென்பது, எமது ஆளுமைகளைச் சிறுமைப்படுத்துகிறது என்பது தான் உண்மையானது.

பிரபல எழுத்தாளரான மார்க் டுவைனின் கருத்துக்கள் இவ்விடயத்தில் பொருத்தமானவை என்பதோடு, ஞாபகப்படுத்த வேண்டியவையும் கூட. 'எப்போது கருத்தொன்றின் பெரும்பான்மையின் பக்கம் இருக்கிறீர்களோ, அப்போதெல்லாம் நின்று நிதானித்து, அது குறித்துச் சிந்திப்பதற்கான நேரமாகும்'.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .