2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கூட்டுறவு கூட்டாட்சி: மாநிலங்களின் கவுன்சில் கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர் மோடி

Thipaan   / 2016 ஜூலை 11 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கு பெறும் 'மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில்' கூட்டத்தை கூட்டியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியாவில் உள்ள இந்த கவுன்சில் அமைப்பு பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான விவாதத்திற்குரிய பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு உள்ள அமைப்பு. குறிப்பாக மத்திய அரசு மாநில முதலமைச்சர்களுடன் மனம் விட்டும் பேசுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பு இது. வருகின்ற 16 ஆம் திகதி நடைபெறப் போகும் இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களை நேருக்குநேர் சந்திக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரை அனைத்து முதலமைச்சர்களுடனும் நட்புறவாகவே இருக்கிறார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர; இந்த டெல்லி முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் மட்டும்தான் அடிக்கடி மோதல்கள் வெடித்து வருகின்றன. மத்திய அரசுக்கே டெல்லி அரசின் மீது அதிக அதிகாரங்கள் இருப்பதால் இந்த மோதல் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி விடுகிறது. அதேநேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர மற்ற எந்த மாநில முதலமைச்சர்களும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரிகள் போல் அல்ல‚ பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் இருக்க வேண்டிய நட்புறவு தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

காங்கிரஸ் ஆளும் மாநிலத்தை சேர்ந்த முதலமைச்சர்கள் கூட தங்கள் மாநிலத்திற்கான திட்டங்களை மத்திய அரசிடம் நட்புறவுடன் கேட்டுப் பெறும் நோக்கிலேயே இருக்கிறார்களே தவிர, பிரதமர் நரேந்திர மோடியுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் இல்லை. 'கூட்டுறவு கூட்டாட்சி' என்ற மோடியின் கோட்பாட்டுக்கு இந்த இரு வருடங்களில் ஓரளவு வெற்றி கிடைத்திருக்கிறது. உத்தரகன்ட் மாநில அரசு கலைப்பு விவகாரத்தில் மத்திய அரசு அவசரப்பட்டதும், அதனால் கிடைத்த தோல்வியும் இந்த 'கூட்டுறவு கூட்டாட்சி' க்கு சவாலாக அமைந்ததைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், எதிரும்- புதிருமாக நின்ற பீஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும் பிரதமர் நரேந்திர மோடியும் கூட ஆட்சி அதிகாரத்தில் மோதல் போக்கை கடைப்பிடிக்கவில்லை. பிரதமர் - முதல்வர் என்ற உறவு எந்த விதத்திலும் இந்தியாவில் சீர் கெட்டு விடவில்லை. பரஸ்பரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மத்திய மாநில அரசு உறவுகள் ஓரளவுக்கு உரசல் இன்றியே சென்று கொண்டிருக்கின்றன. இது போன்றதொரு சூழலில் கூட்டப்படும் 'மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில்' மத்திய - மாநில அரசு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் அமையும் என்ற கருத்தே மேலோங்கி நிற்கிறது.

தற்போது நடக்கப் போகும் 'மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில்' கூட்டத்தில் அதிகாரமிக்க முதல்வர்கள் என்றால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சொல்லலாம். அதேபோல் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சொல்லலாம். இவை தவிர ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சொல்லலாம். ஏனென்றால், இந்த மூன்று முதல்வர்களும் திரும்பவும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நவீன் பட்நாயக் தொடர்ந்து மூன்றாவது முறையாக மாநிலத்தின் ஆட்சியைத் தக்கவைத்து வருக்கிறார். மீதியுள்ள பா.ஜ.கவின் முதலமைச்சர்களோ, காங்கிரஸின்

முதலமைச்சர்களோ, வேறு மாநிலக் கட்சிகளின் முதலமைச்சர்களோ திரும்பத் திரும்ப ஆட்சியைப் பிடித்த முதல்வர்கள் அல்ல‚ ஆகவே மக்கள் செல்வாக்கு மிக்க முதல்வர்கள் என்ற அடிப்படையில் இக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, நவீன் பட்நாயக் போன்றோருக்கு அதிமுக்கியத்துவம் கிடைக்கும். அவர்கள் சொல்லும் கருத்துக்கு மரியாதை இருக்கும்.

ஹைதராபாத்தில் சில ஐ.எஸ்.ஐ.எஸ் 'ஸ்லீப்பர் செல்லை'ச் சேர்ந்தவர்களை தேசிய புலனாய்வு துறை கைது செய்துள்ளதும், அதற்கு உதவியவர்கள் சிலர் தமிழகத்தில் உள்ள திருப்பூரில் இருந்தார்கள் என்றும் வெளிவரும் செய்திகள் உள்நாட்டுப் பாதுகாப்பின் மீதான கவலையை அதிகரித்துள்ளது. இது பற்றிய தீவிர விவாதம் 'மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில்' கூட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மாநில முதலமைச்சர்களின் கவனம் உள்நாட்டுப் பாதுகாப்பு விஷயத்தில் ஈர்க்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதே நேரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்யப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது. 'டெல்லி அரசை செயல்பட விடாமல் தடுக்கிறார் மோடி' என்று வெளிப்படையாகவே அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். அதேபோல் தெலுங்கானா மாநிலத்திற்கும் ஆந்திர மாநிலத்திற்கும் அங்குள்ள உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சர்ச்சை வெடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆந்திர மாநிலத்துடன் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. காவிரிநீர் இறுதி தீர்ப்பினை செயல்படுத்த 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைப்பதும் தடைபட்டு நிற்கிறது. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அரசுடன் புதிய அணை கட்டுவது குறித்த விவகாரம் எழுந்திருக்கிறது. ஆகவே ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுடனும், தமிழகத்திற்கு தீராத பிரச்சினை இருக்கிறது. இது பற்றி மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இக்கூட்டம் மாநிலங்களுக்கு இடையில் உள்ள பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையலாம். அதேநேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்களுக்கு மத்திய அரசு மாநில அரசுகளை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்க உதவலாம்.

இவை தவிர மத்திய அரசைப் பொறுத்தவரை இக்கூட்டம் முடிந்த இரு தினங்கள் கழித்து நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. அக்கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு நிதியமைச்சர் அருண்ஜெட்லி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். முன்பு இருந்ததை விட இப்போது மத்திய அரசின் முயற்சிக்கு அதிக ஆதரவு கிடைத்திருக்கிறது. குறிப்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ஆதரவு கிடைத்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை இன்னும் சில திருத்தங்களை அந்த மசோதாவில் எதிர்பார்க்கிறார்.

அதற்கு கிடைக்கும் மத்திய அரசின் உத்தரவாதத்தை முன் வைத்தே சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவிற்கு அ.தி.மு.கவின் ஆதரவு நிச்சயிக்கப்படும்.  காங்கிரஸ் கட்சி இன்னும் இந்த மசோதாவை எதிர்ப்பதால், எப்படியாவது மற்ற மாநிலக் கட்சிகளின் துணையுடன் மசோதாவை நிறைவேற்றி விட வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இந்த மசோதா மத்திய அரசின் கௌரவம் என்பதை விட உத்தரபிரதேச மாநில தேர்தலுக்கு முன்பு இதையொரு அரும் சாதனையாக மாற்றிக் காட்ட மத்திய அரசு விரும்புகிறது.

மத்திய அரசின் செயல்திட்டத்திற்கு ஏற்ப இப்போது மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநில அரசுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி அந்த இலாகாவிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் நீதிபதிகள் நியமனத்தில் ஒரு விதிமுறையை உருவாக்க முடியாத சட்ட அமைச்சர் சதானந்த கவுடா மாற்றப்பட்டுள்ளார்.

புதிதாக வந்திருக்கும் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு இது மிகப்பெரும் சவாலாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவையில் அம்மாநில எம்.பிக்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை குழாமுடன் „மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில்... கூட்டத்திற்கு திகதி குறித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்திய வரலாற்றில் பத்து வருடங்களுக்குப் பிறகு „மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில்... கூட்டம் வருகின்ற 16 ஆம் திகதி நடைபெற்றாலும் இதுவரை அது ஒரு மரபு போலவும் ஏதோ ஒரு சடங்கு போலவுமே அரங்கேறி நடந்து முடிந்திருக்கிறது. இதேபோன்றதொரு கூட்டத்தில் 'பாபர் மசூதியை இடிக்க விட மாட்டேன்' என்று பா.ஜ.கவைச் சேர்ந்த உத்தரபிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங் உறுதிமொழி அளித்தார். ஆனால் அந்த உறுதிமொழியே காற்றில் பறக்க விடப்பட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்படியில்லாமல் இந்த கவுன்சில் கூட்டம் அர்த்தம் உள்ளதாகவும் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடக்கும் விதத்திலும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போது நிலவுகிறது.

காங்கிரஸ் காலங்களில் நடைபெற்ற கவுன்சில் கூட்டங்கள் போல் அல்லாமல் வித்தியாசமான கூட்டமாக பிரதமர் மோடியின் கீழ் கூடும் கூட்டம் இருக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வி. அதற்கு ஏற்றாற்போல் நிகழ்ச்சி நிரல்கள் அக்கூட்டத்தில் முன் வைக்கப்படும் என்றே தெரிகிறது. ஏனென்றால் 'கூட்டுறவு கூட்டாட்சி' என்பது எங்களது கோட்பாடு என்று கூறியுள்ள பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியின் பிரதமரால் கூட்டப்படும் கூட்டம் இது என்பதுதான் முக்கிய அம்சம். மத்திய - மாநில அரசுகள் கூடிப் பேசுவதற்கு ஏற்படுத்தப்பட்ட இந்த சிறந்த அமைப்பு நாட்டின் வளர்ச்சிக்கு துணை போகும் விதத்தில் அனைத்து விடயங்களையும் ஆக்கபூர்வமாக விவாதிக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .