2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொம்பு சீவி விடப்பட்டுள்ள பொன்சேகா

Thipaan   / 2016 மார்ச் 22 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப.தெய்வீகன்

இலங்கை அரசியலில், பொன்சேகாவின் உரையாடல் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. ஊடகங்களால் தவிர்க்க முடியாதளவுக்கு, பொன்சேகாவின் பேச்சுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் காணப்படுகின்றன. இழந்துபோன மதிப்பு மரியாதையை போராடி மீளப்பெற்றுக்கொண்டவர் என்பதையும் தாண்டி, அவரது பெயர் எல்லாத்தரப்பிலும் அதிகம் பேசப்படுகிறது.

அவரது பேச்சுக்களைக் கவனமாக அவதானித்தால், அவை பொதுமக்களின் சாதாரண பிரச்சினைகள் பற்றியவையாக இல்லாமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைக் குறிவைத்துத் தாக்குபவையாக இருப்பதை அதிகம் காணலாம். அதிலும் முக்கியமாக, 2009இல் முடிவடைந்த போர் தொடர்பாகவும் அதனை மையமாகக் கொண்ட சம்பவங்களையும் அதில் மஹிந்த கூட்டணி இழைத்த பல்வேறு பொட்டுக்கேடுகளை போட்டுடைத்துக்காட்டும் சாட்சியமாகவும் அவை காணப்படுகின்றன.

இவற்றுக்கான காரணங்களையும் இதன் பின்னணிகளையும் சற்று ஆழமாக நோக்கினால், இலங்கை அரசியலில் நிழல்போல தொடரும் சில சம்பவங்களின் விளைவுகளாக இவை நடந்தேறிக்கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

2009ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரும், அதனால் இலங்கையால் அறிவிக்கப்பட்ட ஒற்றைத் தேசியவாதமும், சிங்கள மக்களைப் பொறுத்தவரை ஒரு போதை. அந்த போர்வெற்றி எனப்படுவது மஹிந்தவினால்தான் சாத்தியமானது என்ற சிங்கள மக்களின் நினைவை, இலகுவில் அழித்துவிடமுடியாது. அந்த வெற்றி மமதை, பல நூற்றாண்டு காலத்துக்கு நிலைத்திருக்கும் என்றுதான் மஹிந்தவும் எதிர்பார்த்தார். ஆனால், மேற்குலகம் பின்னிய நுணுக்கமான இராஜதந்திர வலையில் அவர் முற்றாகவும் சிக்கி மூக்குடைபட்டுக்கொண்டார்.

மேற்கின் இந்த அரசியல் - இராஜதந்திர கூட்டுவெற்றியினால், மஹிந்த கூட்டணி ஆட்சிக்கட்டினால் அகற்றப்பட்டாலும் சிங்கள மக்களின் மனங்களில் அந்த சுத்திகரிப்பு முறையாக நடைபெறவில்லை. அதை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம் என்பது மேற்குலகுக்கும் தெரிந்தவிடயம்தான். ஆனால், உடனடி ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்திவிடுவது என்பதை ஏக இலக்காகக்கொண்டு செயற்படவேண்டிய அவசர தேவை மேற்குலகுக்கு இருந்ததால், அதற்கப்பால் அவர்கள் இதுவிடயத்தில் அதிகம் செயற்றிறன் காண்பிக்கவில்லை.

ஆனால், இப்போது அந்தத் தேவை எழுந்திருப்பதையும் தாம் தொடர்ச்சியாக மௌனம் சாதித்தால்;, பகீரதப்பிரயத்தனங்களுக்கு மத்தியில் மைத்திரி தலைமையில் கொண்டுவந்த நல்லாட்சி செல்லாக்காசாகிவிடும் என்பதையும் மேற்கு உணரத்தொடங்கிவிட்டது.

இதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால், புதிய உலக ஒழுங்கொன்றினை கட்டியெழுப்பிவருகின்ற சீனாவின் ஊடுருவலுக்கு முற்றாக வளைந்து கொடுத்த மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்துவிடுவதற்கு சரத் பொன்சேகா ஊடாக மேற்குலகம் தீட்டிய திட்டங்களில் முதலில் தோல்வியடைந்து, பின்னர் மைத்திரியின் ஊடாக அது வெற்றிபெற்று இன்று நல்லாட்சிக் கோசங்களின் ஊடாக ஒரு தலைகீழ் மாற்றத்தை இலங்கையில் ஏற்படுத்தியிருந்தாலும், மைத்திரி - ரணில் கூட்டு நிர்வாகம் மேற்குலகம் எதிர்பார்த்த செயல்திறனோடு நாட்டு மக்களின் நம்பிக்கையை வெல்லுமளவுக்கு எதையும் சாதிக்கவில்லை என்பதை மேற்குலகம் கவலையுடன் பார்க்க தொடங்கியிருக்கிறது.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வோ தமிழ் மக்கள் விடயத்தில் மேற்கொள்ளவேண்டிய உடனடித் தீர்வு முயற்சிகளோ எவையும் ஆரோக்கியமான பாதையில் பயணிப்பதாகத் தெரியவில்லை. பெரிதாக வெட்டிச்சாய்த்த எந்த சாதனைகளையும் செய்யாததால், இந்தக் கூட்டணி மீது மக்களுக்கும் பெரிதாக நம்பிக்கையிருப்பதாகத் தெரியவில்லை. எந்தத் திசையில் போவது என்று தெரியாது தேக்க நிலையில் நின்று குழம்பிப்போயுள்ள இந்த அரசாங்கம், எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக்கொள்வது என்பதும்கூட புரியாத புதிராகவே காணப்படுகிறது.

தன்முனைப்புடன் அடுத்த கட்டத்துக்கு காலடி எடுத்துவைப்பதற்கு வழி தெரியாமல் நிற்கும் இந்த அரசாங்கத்துக்;கு, மஹிந்த தலைமையிலான அணி, தொடர்ச்சியாக சவாலாகவே இருந்து வருகிறது. ஒரே கட்சியிலிருந்துகொண்டு மஹிந்த அணி கொடுக்கும் சவால்களை சமாளிக்கவும் முடியாமல், அதேவேளை வெளிப்படையாக எதிர்க்கவும் முடியாமல் மைத்திரி திணறிக்கொண்டிருக்க, மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்கவோ, இவர்களது குழாயடிச் சண்டைகள் மற்றும் உட்கட்சி குத்துவெட்டுக்களிலிருந்து மைத்திரியை மீட்டெடுத்து, ஆட்சி இயந்திரத்தை நகர்த்தவேண்டிய கட்டாயத்தில் இன்னொரு திசையில் ஓடிக்கொண்டிருக்கிறார்.

இவையெல்லாம், ஆரோக்கியமான விடயங்களாக மேற்குலகின் பார்வைக்குத் தெரியவில்லை. அதேநேரத்தில், இந்த குழப்பங்கள் மஹிந்தவின் கரங்களை மேலும் வலுப்படுத்திவிடுமோ என்ற அச்சத்தைத்தான் அதிகம் ஏற்படுத்தியிருக்கின்றன. ஏற்கெனவே, மக்களாதரவுடன் தோற்றுப்போன தலைவராக வெளியிலிருக்கும் மஹிந்தவுக்கு, இந்த மாதிரியான சூழ்நிலைகள் நிச்சயம் அவரது மீள்பிரவேசத்துக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துவிடும் என்ற யதார்த்தநிலையை, மேற்குலகம் திடமாக நம்புகிறது.

இந்தமாதிரியான நிலையில்தான், மஹிந்தவின் அசுர பலமாக காணப்படும் போர்வெற்றி நாயகன் என்ற விம்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைப்பதற்கு மேற்குலகம், திட்டம் வரைகிறது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சரியான ஆள் சரத் பொன்சேகாதான் என்பதால், அவரின் ஊடாக தனது திட்டங்களை நகர்த்துவதற்கு முடிவுசெய்கிறது.

நாடாளுமன்றத்துக்கு தேசிய பட்டியல் ஊடாக வந்த சரத் பொன்சேகா, வந்த மாத்திரத்திலேயே போரை மையமாக கொண்டு தனது பிரசார இயந்திரத்தை முடுக்கிவிடுகிறார். இதுவரை, கோட்டாபயவினால் மாத்திரம் பிரசாரம் செய்யப்பட்டுவந்த போர்குறித்த ஒற்றைப்பார்வையை, பொன்சேகா உடைத்துப்போடுகிறார். போரின் உண்மையான நாயகன் தானே என்று பிரகடனம் செய்கிறார். மஹிந்த - கோட்டாபய கூட்டணி, மக்கள் நலனில் கிஞ்சித்தும் கவலையின்றி மேற்கொண்ட செயல்கள் என்று ஒரு பெரிய பட்டியலையே தூக்கிப்

போடுகிறார். மஹிந்தவின் மீது தென்னிலங்கை மக்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு வெறுப்பை ஏற்படுத்தமுடியுமோ அவ்வளவுக்கும் தேவையான தகவல்களை, நாடாளுமன்றத்தின் நடுவிலேயே போட்டுடைக்கிறார். பொன்சேகாவின் பேச்சைக் கேட்பதற்குத் தாங்கமுடியாமல், ஒரு கட்டத்தில் மஹிந்த நாடாளுமன்றை விட்டே வெளியேறுமளவுக்கு அவரது பேச்சுக்கள் பயங்கர காத்திரமாக காணப்படுகின்றன.

தென்னிலங்கை மக்களுக்கு மஹிந்தவைக் காட்டிக்கொடுக்கும் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொள்ளும் பொன்சேகா, மறுபுறத்தில் தனது எண்ணங்கள் தூய்மையானவை

என்றும், தான் சிங்கள மக்களின் விசுவாசத்துக்குரியவன் என்றும் பிரகடனம் செய்கிறார். போர் வெற்றிகள் குறித்து எத்தனையோ புதிய செய்திகளைச் சொல்லுகின்றபோதும், படையினர் ஒருபோதும் குற்றங்களில் ஈடுபடவில்லை என்கிறார். தனது கட்டளைகளின் பிரகாரம் செயற்பட்ட படையினரின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் தானே பொறுப்பு என்று கூறி தனது தலைமைத்துவப் பண்பை நிரூபிக்க முயற்சிக்கின்றார்.

அதேவேளை, இன்னொரு பக்கத்தில், தமிழ் மக்களுக்கும் தனது 'வெள்ளை மனத்தை' காண்பிக்க பிரயத்தனம் செய்கிறார். தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கவேண்டும் என்றெல்லாம் சொல்கிறார். வெள்ளைக்கொடி விவகாரம், நிச்சயம் விசாரிக்கப்படவேண்டும் என்கிறார். எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே போய், மைத்திரியைக் கொலை செய்ய முயன்றவரை விடுதலை செய்ததுபோல, தன்னைக் கொலை செய்ய முயற்சித்தவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் இன்னமும் தடுப்புக்காவலில் உள்ளவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று அரசாங்கத்துக்கு விண்ணப்பிக்கிறார். அதன் மூலம், தனது முழுமையான நல்லெண்ணக் கதவுகளை தமிழ்மக்களை நோக்கித் திறப்பதாக, தன்னை அடையாளப்படுத்த முயற்சிக்கிறார்.

அதாவது, மஹிந்தவின் மீள் எழுச்சி எனப்படுவது உடனடியாக இல்லாவிட்டாலும் காலப்போக்கில் சாத்தியமாகலாம் என்றும் தென்னிலங்கை அரசியல் நிலைவரங்கள் அவ்வாறான ஒரு வாய்ப்புநிலையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன என்பதையும் மேற்குலகம் அச்சத்துடன் பார்க்கிறது.

மஹிந்தவின் எழுச்சிக்காக அவரது அரசியல் அணிகள் மிகுந்த வெறியுடன் செயற்படுவதையும் நாட்டு மக்களும் அந்தக் காற்றில் அடிபட்டுச்செல்லும் சாத்தியம் இருப்பதையும் மேற்குலகம் நன்றாகவே அறிந்திருக்கிறது. அதனைத் தடுப்பதற்கான களச்செயற்பாடுகளின் தலையாய நகர்வாக, பொன்சேகாவின் முன்னிலைப்படுத்தலும் அவரின் செயற்பாடுகளும் ஊக்குவிக்கப்படுகின்றன.

பொன்சேகாவைப் பொறுத்தவரை அவரும் அரசின் அதியுச்ச பதவியை இலக்குவைத்து களத்தில் குதித்த ஒருவர்தான். இன்றைய களத்தில் அவருக்குக் கேட்காமலே வழங்கப்படும் அந்தஸ்தும் முக்கியத்துவமும் அவரது நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய வரப்பிரசாதம். அதனை அவர் செவ்வனே செய்வார் என்ற மேற்குலகின் திட்டம் பொய்க்கவில்லை. ரணிலைப் பொறுத்தவரை, அவரது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பொன்;சேகாவின் தற்போதைய நகர்வுகள் எல்லாமே இலவச ஒத்துழைப்பு.

இலங்கை எனும் சிறு தீவு, தற்போது மேற்குலகினால் செல்லமாகத் தத்தெடுத்துவிடப்பட்ட குழந்தை. இதன் பாதுகாப்பினை இனிவரும் காலங்களில் எந்தப் பங்கமும் இல்லாமல் உறுதிசெய்துகொள்வதில், மேற்குலகம் மிகக்கவனமாக செயற்படும்.

தமிழ் அரசியல் தரப்பு இந்த பொதுச்சமன்பாட்டின் ஊடாகத்தான் தங்களது நகர்வுகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும். இந்தச் சமன்பாட்டின் மீது எல்லோரும் தத்தமது நலன்களை முன்னிறுத்திக்கொண்டு தங்கள் அரசியலை முன்னெடுக்கிறார்கள். தமிழர் தரப்பு இதில் எங்கே தமது மக்களின் நலனை முன்னிலைப்படுத்தப்போகிறது? எவ்வளவுதூரத்திற்கு அது காத்திரமாக முன்னிலைப்படுத்தப்போகிறது? என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X