2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சமஷ்டியும் சர்வதேச விசாரணையும் ஊடகப் பரபரப்பும்

Thipaan   / 2016 மார்ச் 09 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமஷ்டியை, ஏன் தென்னிலங்கை இவ்வளவு மூர்க்கமாக எதிர்க்கின்றது?' என்று கனடாவிலிருந்து வந்திருந்த ஊடகத்துறை நண்பரொருவர் என்னிடம் கேட்டார். 'இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் 'சர்வதேச விசாரணை' முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற தமிழ் மக்களின் கோரிக்கை, ஒரு கட்டத்துக்கு மேல் மெல்ல மெல்ல வலுவிழந்தமைக்கான காரணிகளில் ஒன்றுதான், தென்னிலங்கையின் 'சமஷ்டி' எதிர்ப்புக்குமான காரணி' என்றேன்.  நண்பர் கொஞ்சமாக கண்களைச் சுருக்கிக் கொண்டு என்னைப் பார்த்தார்.

கீழ் கண்டவாறு நான் பதில் கூறத் தொடங்கினேன்,

இலங்கையில், 'சர்வதேச விசாரணை' என்கிற சொல்லாடல் ஆளுமை பெறுவதற்கு முன்னரேயே 'சமஷ்டி' பற்றிய உரையாடல்கள் அறிமுகமாகிவிட்டன. இலங்கையில் சமஷ்டி பற்றிய உரையாடல்களை அறிமுகம் செய்தவர்களில் மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க முக்கியமானவர்.

ஆக, யோசித்துக் கொள்ளுங்கள் சர்வதேச விசாரணை என்கிற சொல்லாடலைவிடவும், சமஷ்டி என்கிற உரையாடல் முனைப்புக்கள் எவ்வளவு மூப்பானவை என்று. ஆனாலும், சர்வதேச விசாரணை பற்றிய விடயத்திலிருந்து சமஷ்டி பற்றிய விடயத்துக்கு மறுவளமாகப் போவோம். இதுவொரு உரையாடல்தானே, பின்னுள்ள விடயத்தை முதலில் பேசுவதால் அவ்வளவு பிரச்சினைகள் இல்லை.

இலங்கை அரசாங்கங்கள் மற்றும் அரச படைகள் மீது சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் முன்பும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்திருக்கின்றன. ஆனால், 2009 இறுதி மோதல்களுக்குப் பின்னரான காலத்தில் சர்வதேச விசாரணைகளைக் கோருவதற்கான மூர்க்கமான முனைப்பு பெருமெடுப்பில் ஒருங்கிணைக்கப்பட்டது. குறிப்பாக, புலம்பெயர் தேசங்களிலுள்ள தமிழ் மக்களின் ஓர்மமான ஒருங்கிணைவு சர்வதேச விசாரணைக் கோரிக்கையை குறிப்பிட்டளவு தக்கவைப்பதற்கு முக்கியமான காரணியாக அமைந்தது.

இறுதி மோதல்களுக்குப் பின்னரான இலங்கையில், ராஜபக்ஷக்களின் அதிகாரமும் அடக்குமுறையும் அதனைவிடவும், கண்காணிப்பும் பாதுகாப்பு அச்சுறுத்தலும் பெருமெடுப்பில் அதிகரித்திருந்த நிலையில், தாயகத்திலுள்ள தமிழ் மக்களினால் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையோடு பெருமெடுப்பில் ஒருங்கிணைவதற்கான முனைப்புக்களை முன்னெடுப்பது அவ்வளவு முடியாத ஒன்று. ஆனாலும், அச்சுறுத்தல்களையும், கண்காணிப்புக்களையும் தாண்டி தாயகத்திலுள்ள தமிழ் மக்களும் தம்முடைய அர்ப்பணிப்பையும், போர்க்குணத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர். அதனை மறுக்க முடியாது.

சர்வதேச விசாரணைக்கான நம்பிக்கையும் கோரிக்கையும் தமிழ் மக்களின் உரையாடல் தளத்திலிருந்து தீர்க்கமான செயற்பாட்டுத் தளத்துக்கு நகர ஆரம்பித்த புள்ளியில் தடம்புரள ஆரம்பித்தது. ஏன், அந்தத் தடம்புரள்வு என்கிற கேள்வி எழும்.

மிகுந்த வலியுடனும் ஏமாற்றத்துடனும் இருக்கின்ற மக்கள் கூட்டமொன்றை, உணர்வு ரீதியாக ஓர்மத்துடன் ஒன்றிணைப்பது குறிப்பிட்டளவு இலகுவானது. அதற்கு, அடிப்படையில் அந்த மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் மொழிகளை எடுத்தியம்பினால் போதுமானது. தமிழ் மக்களில் பெருமளவாக ஒருங்கிணைந்த மக்களும் இதே மனநிலையோடு இருந்தவர்கள். ஊடக - அரசியல் உரையாடல் வெளியில் உணர்ச்சி மேலிடுகைகளுடன் சர்வதேச விசாரணை பற்றிய உரையாடல்கள் மேலெழுந்த போது மக்கள் அந்தப் பக்கம் ஏகமாக சாய்ந்தனர்.

அந்த நிலைகளில் அதிகம் தாக்கம் செலுத்தியவை, ஊடகங்களும் அவை நடத்திய அரசியல் உரையாடல் நிகழ்ச்சிகளும். ஒரு மக்கள் கூட்டத்தின் ஏமாற்றத்தினை நம்பிக்கையின் பக்கத்தில் திருப்புவதற்கான முனைப்புக்கள் என்பது அவசியமானவை. அந்த முனைப்புக்கள்  சீரான புரிதலோடும் வேகத்தோடும் கட்டமைக்கப்பட வேண்டியவை. ஆனால், சர்வதேச விசாரணைகள் குறித்த ஓர்மத்துடனான ஒருங்கிணைவு என்பது முதல் கட்டத்தினைத் தாண்டிய அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான படிநிலைகளில் தடம்புரண்டது.

அதாவது, சர்வதேச விசாரணைகளுக்கான முன்நகர்வுகள் சர்வதேச ரீதியில் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதனை நோக்கிய திட்டமிட்ட பயணம் எவ்வளவு சீரானதாகவும் காலம் தாண்டிய நீட்சி கொண்டதும் என்று முதலில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதனைத் தாண்டி, பிராந்திய அரசியலும், அதனை முன்னிறுத்திய இராஜதந்திர நகர்வுகளும் சர்வதேச விசாரணைக் கோரிக்கையின் வெற்றியிலும் தோல்வியிலும் எவ்வளவு தாக்கம் செலுத்தும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும். அல்லது, அது தொடர்பிலும் வெளிப்படையாக உரையாடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், தமிழ் ஊடக, அரசியல் பரப்பில் சர்வதேச விசாரணை தொடர்பில் திறந்தவெளி உரையாடல்கள் நிகழ்த்தப்படவில்லை. ஒரு கோரிக்கையின் - நம்பிக்கையின் பக்கம் மக்களை ஒருங்கிணைத்துவிட்டு, பலரும் ஓடி ஒழிந்து கொண்டனர்.

அந்தப் பக்கம் ஒருங்கிணைந்த மக்களுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் என்ன செய்வதென்று புரியாமல் போனது. சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை மெல்ல மெல்ல வலுவிழப்பதற்கான புறக்காரணிகளைத் தாண்டி அகக்காரணிகளில் திட்டமிடாத செயற்பாடும், சீரான கட்டமைப்புக்களின் மீதான தமிழ்த் தரப்புக்களின் பற்றற்ற நிலையுமாகும்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், ஊடகப் பரபரப்புக்களுக்காக சர்வதேச விசாரணை உரையாடல் வெளி திறந்த அளவுக்கு, அதற்கான செயற்பாட்டு வெளி திறக்கவில்லை. மக்களை ஒரு கட்டத்துக்கு மேல் போலியான ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வைப்பதற்கு ஒப்பாக போய் முடிந்தது. 

 (தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர், மஹிந்தவையும் அவரது பட்டாளத்தையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி சில காலத்துக்குள்ளேயே மரணதண்டனை வாங்கிக் கொடுத்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அந்த மக்களை நோக்கி சர்வதேச விசாரணை உரையாடலினூடு அப்படியான எண்ணக்கருவொன்று பாய்ச்சப்பட்டிருந்தது.)

இப்படியானதொரு நிலையின் இன்னொரு வடிவத்தையே தென்னிலங்கையின் சமஷ்டிக்கான எதிர்ப்பும் வெளிப்படுத்துகின்றது.

ஏனெனில், இங்கும் அரசியல், ஊடக வெளியே அளவினை மீறிய போலி கற்பிதங்களை ஏற்படுத்தி வைத்திருக்கின்றது. சமஷ்டியை, தனித் தமிழீழத்துக்கு ஒப்பான ஒன்றாக கட்டமைத்ததில் தென்னிலங்கை ஊடகங்களுக்கும் அதில், உரையாடல்களை நிகழ்த்துபவர்களும் முக்கியமானவர்கள்.

சமஷ்டியின் அடிப்படைகள் எவ்வாறானவை, என்கிற நியாயமான உரையாடல்களைச் செய்ய எந்தவொரு கட்டத்திலும் தென்னிலங்கை முனையவில்லை. மாறாக, அதனை பிரிவினைக்கான கோரிக்கையாக சொல்லி வந்திருக்கின்றன. தமிழீழத்துக்கும் சமஷ்டிக் கோரிக்கைக்கும் பாரிய வித்தியாசம் உண்டு.

அண்மையில், தமிழ் மக்கள் பேரவை முன்மொழிந்த தீர்வுத் திட்ட யோசனைகளை மேலோட்டமாக வாசித்த தமிழத்; தரப்பு நண்பரொருவர், 'இது என்ன தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஒப்பானதாக இருக்கின்றது?' என்றார். நான் சொன்னேன், 'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்.

தமிழ் மக்கள் பேரவையினரே 'தேசம்' என்கிற கோரிக்கையை அடிக்குறிப்புக்குள் கீழிறக்கிவிட்டு இறங்கி வந்திருக்கின்றார்கள். அவர்களின் கோரிக்கையை தனிநாட்டுக் கோரிக்கையோடு ஒப்பிடுவது அபத்தமானது. தமிழ் மக்கள் பேரவை முன்வைத்திருப்பது ஒரு வகையினால சமஷ்டி முன்வைப்பு.' என்றேன்.

சமஷ்டி பற்றிய தமிழ் தரப்பிலிலுள்ள ஒருவரே, அதாவது அதிகாரங்களையும் விடுதலையையும் கோருகின்ற தரப்பிலுள்ளவரே புரிந்துகொள்வதில் சிக்கலோடு இருக்கின்றார் என்றால், ஊடகங்களும் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும் முக்கியமான விடயங்களை மக்களிடம் சீராக கொண்டு சேர்ப்பதில் எவ்வளவு குறையை விட்டிருக்கின்றார்கள் என்பது புரியும். அப்படிப்பட்ட நிலையில், 'ஒரே நாடு- பௌத்த சிங்கள தேசம்' என்கிற கோரிக்கையை வைத்துக் கொண்டிருக்கும் தென்னிலங்கை, சமஷ்டி பற்றிய உரையாடல்களை விரிவாகவும் தெளிவாகவும் நிகழ்த்துமா, அது சாத்தியமானதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த நடராஜா ரவிராஜும், தற்போதைய தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசனும் 'தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களிடம் நேரடியாக பேச வேண்டும்.

அதுவே, தென்னிலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும். தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தரும்.' என்று தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டவர்கள். அந்த முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவை. ஆனால், அந்த முயற்சிகள் சமுத்திரத்தில் சிறு துளிகள் போன்றவை. ஏனெனில், தென்னிலங்கையின் அரசியல் சக்திகளும் ஊடகங்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புரிந்து கொண்டுதான் புறந்தள்ளுகின்றன. அவை, புரிந்து கொள்ளவில்லை என்கிற வாதம் அபத்தமானது.

அப்படியானவர்கள், சமஷ்டி பற்றி தென்னிலங்கையின் பெரும்பான்மையான சாதாரண மக்களிடம் ஏற்படுத்தி வைத்திருக்கும் போலியான 'பிரிவினை' பிம்பத்தினை உடைப்பது மிகவும் சிரமமானது. அந்த பிம்பம்தான் சமஷ்டியை தென்னிலங்கை மூர்க்கமாக எதிர்ப்பதற்கான காரணி.

தமிழ் மக்களிடம் சர்வதேச விசாரணை பற்றிய கோரிக்கையும் அதற்கான முனைப்பும் சீராக கட்டமைக்கப்படாமல் பரபரப்புக்களோடு ஒருங்கிணைக்கப்பட்டு, காலம் செல்லச் செல்ல வலுவிழந்தமைக்கு அரசியல் கட்சிகள், தலைவர்கள் தாண்டி ஊடகங்கள் முக்கியமான காரணியாகும். அதுபோலவே, தென்னிலங்கையில் சமஷ்டி எதிர்ப்புவாதம் நீட்சி பெறுவதற்கும் ஆரோக்கியமான, திறந்த உரையாடல்கள் நிகழ்த்தப்படாமைக்கும் ஊடகங்கள் முக்கியமான காரணிகளாகும்.

அரசியல் சார் 'சமூகநெறி' சீரான வேகத்தோடு, தெளிவான உரையாடல்களை நிகழ்த்தத் தவறுகின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், படுதோல்வியடைந்து வந்திருக்கின்றது. இதுதான், உலக வழக்கம். அதனையே, இலங்கையும், இலங்கை சார் அரசியலும் தொடர்ந்தும் பிரதிபலித்து வந்திருக்கின்றது. அதுதான், சர்வதேச விசாரணைக் கோரிக்கையும், சமஷ்டிக் கோரிக்கையும் தோல்வியின் பக்கங்களில் இருப்பதற்கான காரணிகளில் முக்கியமாவை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .