2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சில்கொட் அறிக்கை ஒரு கண்துடைப்பு

Thipaan   / 2016 ஜூலை 13 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்குக்கு எதிராக 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகள் இணைந்து நடத்திய போரில் பிரிட்டனின் பங்கைப் பற்றி சேர் ஜோன் சில்கொட் தலைமையில் பிரித்தானியா அரசாங்கம் நியமித்த குழுவின் அறிக்கை, அக்குழு நியமிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளின் பின்னர் கடந்த வாரம் வெளியாகியது. அது பிரித்தானியா அரசாங்கத்துக்கும் முன்னாள் பிரித்தானியா பிரதமர் டொனி பிளயருக்கும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அறிக்கையில் உள்ள முக்கிய விடயங்கள் ஒரு விசாரணையின் பின்னர் ஊர்ஜிதமாகியுள்ளதேயோழிய அவை எதுவும் புதியன அல்ல. போர் நடக்கும் காலத்திலேயே சாதாரண அறிவுள்ள மக்களும் கூட அவற்றை அறிந்திருந்தனர்.

ஈராக்குக்கு எதிரான மேற்கத்தேய நாடுகள் அண்மைக் காலத்தில் இரண்டு போர்களை தொடுத்தனர். 1990 ஆம் ஆண்டு ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுஸைன்  குவைத்தை ஆக்கிரமித்ததை அடுத்து ஈராக்குக்கு எதிராக சர்வதேச பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு 1990-91 ஆண்டுகளில் தொடுக்கப்பட்ட போர் முதலாவது போராகும். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், பிரித்தானியா உட்பட 14 நாடுகளின் இராணுவ உதவியுடன் ஈராக்கை ஆக்கிரமித்தார்.

அப்போரின் போது ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுஸைன் , பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய 'சுப்பர் கன்' (Super Gun) எனப்படும் 1,000 மற்றும் 350 மில்லிமீற்றர் விட்டமுள்ள குழாயைக் கொண்ட ஆயுதங்களைத் தயாரிப்பதாக அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகள் குற்றஞ்சாட்டின.  ஆனால் அந்தப் படையினரால் எந்தவொரு 'சுப்பர் கன்'னையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனைய நாடுகள் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம்சாட்டி வரும் அமெரிக்காவின் படையினர் அந்தப் போரின் இறுதியில் சரணடைந்தவர்கள் உட்பட 9,000 ஈராக்கிய படையினரை அவர்களது பதுங்குக் குழிகளிலேயே புல்டோசர் மூலம் உயிருடன் புதைத்தனர்.

அதன் பின்னர் ஈராக் இரசாயன ஆயுதங்களையும் பாரிய அழிவுகளையும் ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களைத் (Weapons of Mass Destruction- WMD) தயாரிப்பதாக அமெரிக்க மற்றும் பிரித்தானியா உட்பட மேற்கத்தேய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. இக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஈராக்குக்கு எதிராக மேலும் பல சர்வதேச பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இத்தடைகளின் காரணமாக ஏற்பட்ட

போஷாக்கின்மையால் மட்டும் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான ஈராக்கிய சிறுவர்கள்; உயிரிழந்தனர்.

சர்வதேச அணு சக்தி நிறுவனத்தின் (International Atomic Energy Agency) அதிகாரிகள் ஈராக்கின் ஜனாதிபதி மாளிகையிலும் அந்த ஆயுதங்களை தேடினர். எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் 1990 ஆம் ஆண்டு ஈராக்கை ஆக்கிரமித்த ஜோர்ஜ் புஷ்

ஷின் மகன் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தலைமையில் அந்தக் குற்றச்சாட்டின் பேரிலேயே அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் மீண்டும் 2003 ஆம் ஆண்டு ஈராக்கை ஆக்கிரமித்தன. ஈராக் முற்றாக அமெரிக்க மற்றும் பிரித்தானியா படையினர் வசம் வீழ்ந்ததன் பின்னரும் அப்படையினரால் எந்தவொரு நாசகார ஆயுதத்தையும் ஈராக்கிய மண்ணிலிருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. சதாம் ஹுஸைன்  கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

இந்தப் போரினால் ஈராக்கின் பொருளாதாரம் அழிக்கப்பட்டது. ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். பல நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்த ஈராக்கிய கலாசாரம் சிதைக்கப்பட்டது. பல பண்டைக் கால பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டன. உலகிலேயே மிகவும் பெறுமதி வாய்ந்த நூதன சாலையான பக்தாத் நூதனசாலை கொள்ளையடிக்கப்பட்டது. ஈராக் இன்னமும் பல குழுக்களின் போர்க் களமாகவே இருக்கிறது.

முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுஸைன்  பாரியளவில் அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை தயாரிக்கிறார் என்று பிரித்தானியா மக்களையும் உலகையும் ஏமாற்றியே பிளயர், பிரித்தானியா அரசாங்கத்தை போருக்குள் தள்ளியிருக்கிறார் என 'சில்கொட்' அறிக்கை கூறுகிறது. பிளயர் பொய் கூறுகிறார் என்று போர் நடைபெறும் முன்னரும் நடைபெறும் போதும் இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் ஆயிரக் கணக்கான செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதியிருந்தனர் என்பது தெரிந்ததே. எனவே இந்த அறிக்கையில் புதிதாக எதுவுமே இல்லை. அறிக்கையில் உள்ள சில விடயங்களைப் பார்க்கும் போது அது விளங்கும்.

ஈராக் பிரச்சினையை தீர்ப்பதற்கான சகல சமாதான வழிகளும் மூடப்படும் முன்னரே பிரித்தானியா போருக்கான முடிவை எடுத்ததாகவும் இராணுவ தீர்வு இறுதி முடிவாக அமையவில்லை எனவும் அறிக்கை கூறுகிறது. இராணுவ நடவடிக்கை பின்னர் தேவைப்பட்டு இருக்கலாம். ஆனால் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சத்தாம் ஹூசைனிடமிருந்து அதற்கான அச்சுறுத்தல் வந்திருக்கவில்லை என்றும் பெரும்பாலான ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள் ஈராக்கில் ஆயுத பரிசோதனையை தொடர வேண்டும் என்றே கூறினர் என்றும் அறிக்கை நினைவூட்டுகிறது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் சில முக்கிய விடயங்கள் வருமாறு: 'ஈராக்கில் இருந்ததாக கூறப்பட்ட நாசகார ஆயுதங்களின் அச்சுறுத்தலின் பாரதூரத் தன்மையைப் பற்றிய அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு இருந்த போதிலும் அவை நியாயப்படுத்தப்படவில்லை. சதாம் ஹுஸைன்  தொடர்ந்தும் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை தயாரிக்கிறார் என்பதற்கு போதிய உளவுத் தகவல்கள் பிரிட்டனிடம் இருக்கவில்லை'

'இராணுவ நடவடிக்கைக்கான அடிப்படை நிலைமைகள் திருப்திகரமானதாக இருக்கவில்லை. பிழையான புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே ஈராக் தொடர்பான கொள்கை வகுக்கப்பட்டுள்ளது'.

'பிரித்தானியா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஐ.நா பாதுகாப்புச் சபையின் அதிகாரத்தை புறக்கணித்துள்ளன. ஐ.நா சாசனத்தின் படி சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு பாதுகாப்புச் சபைக்கே உரியதாகும். தாம் சர்வதேச சமூகத்தின் சார்பில் பாதுகாப்புச் சபையின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக நடவடிக்கை எடுத்ததாக பிரித்தானியா கூறிய போதிலும் சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையினரின் ஆதரவு தமக்கு இருக்கவில்லை என்பதை பிரித்தானியா அறிந்திருந்தது'.

'தாம் கூறிய நோக்கத்தை அடைய அரசாங்கம் தவறிவிட்டது. மோதலின் காரணமாக 200 க்கும் மேற்பட்ட பிரித்தானியா பிரஜைகள் உயிரிழந்தனர். ஈராக்கிய மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலும் குறைந்த பட்சம் 150,000 ஈராக்கியர்கள் உயிரிழந்திருந்தனர். சிலவேளை இந்த எண்ணிக்கை அதை விட அதிகமாகவும் இருக்கலாம். ஓர் இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்தனர்' இவ்வாறு அறிக்கை கூறுகிறது.

அறிக்கை ஏகாதிபத்திய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்த போதிலும் இவ்வாறு தமது தலைவர்கள் செய்த மாபெரும் குற்றமொன்றை ஏற்றுக் கொண்டு ஓர் அரசாங்கம் ஓர் அறிக்கையை வெளியிட முற்பட்டமை பாராட்டுக்குரியதாகும். பிளயரின் பொய்களினால் பிரிட்டனுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அது எழுதப்பட்டு இருப்பதனாலேயே அது ஏகாதிபத்திய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டு இருப்பதாக கூறுகிறோம்.

அதேவேளை அந்த அறிக்கை முதலாவது வளைகுடாப் போர் எனப்படும் 1990 ஆம் ஆண்டு 'சிரேஷ்ட புஷ்' (தந்தை புஷ்) ஈராக்குக்கு எதிராக நடத்திய போரைப் பற்றி ஆராயவில்லை. அதுவும் 2003 ஆம் ஆண்டு 'கனிஷ்ட புஷ்' (மகன்) நடத்திய போரைப் போலவே பாரிய அழிவை ஏற்படுத்தியிருந்தது. இது இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றி மட்டும் விசாரணை நடத்துவதற்கு சமமாகும். இறுதிப் போருக்கு முன்னரும் இலங்கைப் படையினர் ஆட்களைக் கடத்தினர்; கண்மூடித்தனமான விமான குண்டு வீச்சுகள் இடம்பெற்றன; கைது செய்யப்பட்டோர் கொல்லப்பட்டனர்; காணாமற்போயினர். புலிகளும் சிறுவர்களை தமது படையில் சேர்த்தனர். மக்களை கேடயமாக பாவித்தனர்.

1990 ஆம் ஆண்டு ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுஸைன்  குவைத்தை ஆக்கிரமித்து அதனை ஈராக்குடன் இணைத்துக் கொண்டார். அதற்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் ஈராக் மீது படையெடுத்து குவைத்தை மீட்டன. அது நியாயம் தான்‚ ஆனால் அதற்காக ஈராக்கில் ஏற்படுத்திய பாரிய அழிவை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அதன் பின்னர் இலட்சக் கணக்கான மக்கள் உயிரிழக்கக் காரணமாகவிருந்த மிக மோசமான பொருளாதார தடைகளை நியாயப்படுத்த முடியாது.

இலங்கையில் பலர் தமது மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்த இந்த 'சில்கொட் அறிக்கை'யை பாவிக்கிறார்கள். இந்த அறிக்கையின் படி உலகுக்கே பொய்யைக் கூறி இலட்சக்கணக்கான உயிர்ச் சேதங்களுக்கு காரணமானவர்களுக்கு இலங்கையில் போர் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகளுக்காக இலங்கை அரசாங்கத்தை தண்டிக்க என்ன தார்மிக உரிமை இருக்கிறது என அவர்கள் கேட்கிறார்கள். அது நியாயமான கேள்வி தான். ஆனால் அதனால் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் நியாயமாகிவிடப் போவதில்லை.

ஒரு வகையில் 'சில்கொட்' அறிக்கையானது உலகை ஏமாற்றுவதற்கான முயற்சியாகவும் இருக்கலாம். உலகமே ஒரு போரை நியாயமற்றது, பிழையானது எனக் கூறும் போது அதனைப் புறக்கணித்து விட்டு அந்தப்  போர் மூலம் ஒரு நாட்டை அழித்து, அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை சூறையாடும் வாய்ப்பை பெற்றுக் கொண்டதன் பின்னர் போர் நியாயமற்றது எனக் கூறுவது ஏமாற்றமில்லையா? ஐ.நா. அங்கிகாரமளிக்காத போர் சட்ட விரோதமானது என்பதை தீர்மானிக்க ஏழு வருடங்கள் தேவையா?

ஏகாதிபத்திய நாடுகள் இவ்வாறு நடந்து கொண்டமையானது முதலாவது முறை இதுவல்ல‚ உலகமே எதிர்க்கும்போது பல அட்டூழியங்களைச் செய்துவிட்டு பல ஆண்டுகள் அல்லது பல நூற்றாண்டுகள் சென்றதன் பின்னர் 'உண்மை தான், நாம் பிழை செய்துவிட்டோம்' எனக் கூறுவது ஏமாற்றமேயல்லாது வெறொன்றுமல்ல. உதாரணமாக இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பானிய படைகள் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பெண்களை பலாத்காரமாக தமது வீரர்களின் காம இச்சைகளைத் தீர்த்;துக் கொள்வதற்காக சிறைப் பிடித்தனர். அப்பெண்களை 'comfort women' என்று அக்காலத்தில் அழைத்தனர்.

இது குற்றம் என்பதை நிரூபிக்க விசாரணைகள் தேவையா? ஆனால் சுமார் அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னரே ஜப்பான் இதற்காக கொரிய பெண்களிடம் மன்னிப்புக் கேட்டது. அப்பெண்களுக்கு 8.3 மில்லியன் டொலர் நட்ட ஈடும் வழங்கப்பட்டது. ஆனால் அதனால் அப்பெண்களின் ஐந்தாறு தலைமுறைகளுக்கு ஏற்பட்ட அவதூறை அகற்ற முடியாது.

இதேபோல் பிரித்தானியர் அமெரிக்காவில் குடியேறி அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை கொன்று குவித்தனர். அவர்களிடையே பலவேறு நோய்கள் வேண்டுமென்றே பரப்பப்பட்டன. அவர்களது காணிகள் பலாத்காரமாக கொள்ளையடிக்கப்பட்டன. இந்த காணி அபகரிப்புக்காக அம்மக்களிடம் மன்னிப்புக் கோருவதை அண்மையில்தான் ஜனாதிபதி பராக் ஒபாமா ஏற்றுக் கொண்டார். ஆனால் அதனால் அப்பழங்குடிகளான செவ்விந்தியர்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது?

பிரித்தானியா படைகள், நியூஸிலாந்தைக் கைப்பற்றிய போது அங்கும் பழங்குடி மக்கள் அழிக்கப்பட்டனர். அவர்களது சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அதற்காக எலிசபெத் மகா ராணியார் பல

நூற்றாண்டுகள் சென்றதன் பின்னர் 1995 ஆம் ஆண்டு அப்பழங்குடிகளான மௌரி சமூகத்தினரிடம் மன்னிப்புக் கேட்டார். ஆனால் அவர்களிடம் பறிக்கப்பட்ட நிலத்தை வெள்ளையர்கள் திருப்பிக் கொடுக்கப் போகிறார்களா?

இதுதான் 'சில்கொட்' அறிக்கையைப் பற்றியும் கூற வேண்டியிருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X