2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுவாதிகளைக் காப்பாற்ற ராம்குமார்களை என்ன செய்யப் போகிறோம்?

Thipaan   / 2016 ஜூலை 14 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இந்தியாவின் தமிழகத்தில், சுவாதி என்ற பெண்ணின் கொலை, உலகத்தில் தமிழர்கள் தொடர்பான செய்திகளை வாசிக்கின்ற அனைவர் மத்தியிலும், ஒரு வகையான ஈடுபாட்டை ஏற்படுத்தியிருக்கிறது. கவலையை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லிவிட முடியாது, ஏனெனில் தமிழ் ஊடகச் சூழலில், சுடச்சுட வழங்கப்படும் கிசு கிசுக்களுக்கான மவுசு, முன்னெப்போதுமில்லாதவாறு அதிகரித்திருக்கிறது: பிரசுரித்தலிலும் சரி, வாசிப்பதிலும் சரி. ஆகவே, சுவாதி வழக்குச் சம்பந்தமான ஆர்வம், உண்மையான பிரச்சினைகளை ஆழமாகப் புரிந்ததால் ஏற்பட்ட ஆர்வமா, இல்லையெனில் 'க்ரைம்' நாவல்கள் மேல் காணப்படும் ஆர்வம் போன்றதா என்பது, தனியாக அலசப்பட வேண்டியது.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த பொறியியலாளரான சுவாதி, ரயில் நிலையத்தில் வைத்து, பொதுமக்களுக்கு மத்தியில் அண்மையில் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவரென, சுவாதியோடு பேஸ்புக்கில் பழக்கத்தை ஏற்படுத்திய ராம்குமார் என்பர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. பொலிஸார் வழங்கும் தகவல்களின் அடிப்படையில், சுவாதியோடு நட்புடன் பழக ஆரம்பித்த ராம்குமாருக்கு, சுவாதி மீது காதல் ஏற்பட்டுள்ளதாகவும், அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

எத்தனை ஆண்டுகளாக 'காதலை ஏற்க மறுத்த பெண் மீது அசிட் வீச்சு' என்ற தலைப்பிடப்பட்ட செய்திகளை வாசித்திருக்கிறோம்? அந்தச் செய்திகளை வாசித்துவிட்டு, 'எவ்வளவு கொடூரமானவன் அவன்?', 'பாவம் அந்தப் பிள்ளை' என்று, உச்சுக் கொட்டியிருக்கிறோம்? நாங்கள் கொட்டிய உச்சுகள், ஏதாவது உதவி செய்திருக்கின்றனவா? பெண் மீதான உரித்துணர்வை, ஆண்கள் குறைத்தமைக்கான ஏதாவது அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றனவா?

இந்தப் பிரச்சினையின் அடித்தளமாகக் காணப்படும் ஆண்களின் மனநிலையை, பெண் செயற்பாட்டாளரொருவர் இலகுவாக விளக்கினார். 'என்னிடம் ஓர் ஆண் காதலைச் சொன்னால், „என்னால் உங்கள் காதலை ஏற்க முடியாது... என்று சொன்னால், அதை அவர் ஏற்பதில்லை. „எனக்கு ஏற்கெனவே ஆள் இருக்கிறது... என்று சொன்னால், விலகுவதற்கு முயல்வார். ஆனால், அவரை விரும்புவதற்கு எனக்கு விருப்பமில்லை என்ற முடிவை ஏற்பதற்கு, அவர் தயாராக இருப்பதில்லை. அதாவது, அவர் காதலைச் சொல்வாராயின், எனக்கு ஏற்கெனவே இன்னொரு காதல் இல்லாவிட்டால், அதை நான் ஏற்றே ஆக வேண்டும் என்பது தான், அனேகமான ஆண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது' என்றார்.

இதையே தான், 2013ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி என்ற திரைப்படத்திலும் காட்டியிருப்பார்கள். நஸ்ரியாவைப் பார்த்ததும், ஆர்யாவுக்குக் காதல் வந்துவிடும். உடனேயே சொல்லிவிடுவார். அதை நஸ்ரியா ஏற்க வேண்டுமெனவும் எதிர்பார்ப்பார். அதை மறுப்பதற்கு நஸ்ரியா பயன்படுத்துவதும், இதே 'எனக்கு ஆள் இருக்கு' தான். நஸ்ரியாவுக்கு 'ஆள்' இல்லை என்பதைக் கண்டுபிடித்த ஆர்யா, தன் காதலோடு பின்னுக்கு அலைவார். இது, இத்திரைப்படத்தில் மாத்திரமல்ல, ஏராளமான திரைப்படங்களில் கண்டது தான். என்ன, திரைப்படங்களில் கதாநாயகன் பின்னால் திரியத் திரிய, கதாநாயகியின் காதல் பார்வை கிடைக்கும். நேரில் அவ்வாறு நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவென்ற நிலையில், இலகுவில் உடைந்துவிடக்கூடிய 'ஆண்மை', காயப்பட்டு விடுகிறது. மாற்று வழிகளைத் தேடுகிறது.

அதேபோன்று, ஆண்களுக்கென்று காதல் உணர்வு இருப்பது போல, பெண்களுக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள, ஆண்களில் கணிசமானோர் தயாராக இருப்பதில்லை. இதனால் தான், தங்களின் காதலை ஏற்றுக் கொள்ளாத பெண்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள், அதேபோல் தன் காதலைத் தானாகச் சென்று வெளிப்படுத்தும் பெண்ணின் நடத்தை பற்றிக் கேள்விகளை எழுப்பவும் தயாராக இருக்கிறார்கள்.

இன்னமும் கூட, பெண்களின் சமவுரிமை பற்றிக் கதைக்கிறோம், இது 2016ஆம் ஆண்டு என்று அலுத்துக் கொள்பவர்கள், இன்னமும் கூட, தங்களின் உடமைகளில் ஒன்றாகத் தான் அல்லது தாங்கள் உரிமைப்படுத்தும் ஒன்றாகத் தான் அல்லது தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒன்றாகத் தான் பெண்களைக் கணிசமான ஆண்கள் கருதுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை.

இந்தப் பிரச்சினை, தமிழகத்துக்குரியதோ அல்லது இந்தியாவுக்குரியதோ என்று, அலட்சியமாக இருந்துவிட முடியாது.

இலங்கையில் வன்புணர்வுகள் சம்பந்தமாக 2013ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளாhல் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையொன்றில், இலங்கையின் 15 சதவீதமான ஆண்கள், வன்புணர்வை மேற்கொண்டிருந்ததை ஏற்றுக் கொண்டிருந்தனர். அவர்களில் 40 சதவீதமானோர், 20 வயதுக்கு முன்னர் தங்களது முதலாவது வன்புணர்வில் ஈடுபட்டிருந்தனர். வன்புணர்வில் ஈடுபட்டமைக்காக அவர்களில் பெரும்பாலானோர் (66 சதவீதமானோர்) தெரிவித்த காரணம், 'பாலியல் உரித்துணர்வு'. 'அவள் எனக்கு வேண்டுமென விரும்பினேன்', உடலுறவை வைத்துக் கொள்ள விரும்பினேன்', 'என்னால் முடியுமென நான் காட்ட விரும்பினேன்' போன்றன தான்,  அவர்கள் தெரிவித்த காரணங்கள். அதைவிட முக்கியமானதாக, வன்புணர்வில் ஈடுபட்டோரில் 3.2 சதவீதமானோர் மாத்திரமே கைது செய்யப்பட்டதோடு, 2.2 சதவீதமானோர் மாத்திரமே சிறையில் அடைக்கப்பட்டதாக, அந்த அறிக்கை தெரிவித்தது.

இலங்கை மீது அவதூறு மேற்கொள்வதற்காக ஐ.நா மேற்கொண்ட முயற்சி என்று 'தேசியவாதிகள்' அல்லது 'நாட்டுப்பற்றாளர்கள்' குற்றஞ்சாட்டுவதற்கு முன்பாக, நாடாளுமன்ற உறுப்பினராக ரோஸி சேனநாயக்க இருந்தபோது, பாலியல் அவதூறு சம்பந்தமான 300,000 வழக்குகளில் 600 பேர் மாத்திரமே (2 சதவீதம்) தடுத்து வைக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தவிர, நாட்டில் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு ஒரு பெண், வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறாள், பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்தும் 95 சதவீதமான பெண்கள், பாலியல் தொல்லைகள் தொடர்பாக முறையிடுகின்றனர் என்பனவெல்லாம், இலங்கையில் இப்பிரச்சினையின் தீவிரத்தை எடுத்தியம்புகின்றன.

வயலில் விவசாயம் செய்யும் விவசாயி ஒருவன் நெல் விதைத்த பின்னர், வளர்ந்து நிற்கும் பயிர்களில் 15 சதவீதமானவை களைகள் என்றால், அந்த விளைச்சலை அவன் சிறந்த விளைச்சலாக இனங்காணப் போவதில்லை. நாம் உண்ணும் சோற்றுப் பருக்கைகளில் 15 சதவீதமானவை கற்களாக இருந்தால், அந்தச் சோறை நாம் உண்ணப் போவதில்லை. ஆனால், இந்த வன்புணர்வு அல்லது பாலியல் தொல்லைகள் தொடர்பாக மாத்திரம், இன்னமும் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, சட்டங்களும் தயாராக இல்லை, சட்ட அமுலாக்கல் பிரிவினரும் தயாராக இல்லை.

இவ்வாறான நிலைமைக்கு, சட்ட இயற்றலாகச் செயற்படும் நாடாளுமன்றத்தில், போதியளவிலான பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாமையை, முக்கிய காரணமாகச் சொல்ல முடியும். அங்கிருக்கும் ஒரு சில பெண்களும் கூட, நீண்டகால நோக்கில், பெண்களுக்கான உரிமைகள், பாதுகாப்பு தொடர்பாகச் சிந்தித்து, அழுத்தங்களை வழங்குவதும் இல்லை. ஆனால், பெண்களுக்கான உரிமைகளைப் பெண்கள் தான் கேட்டுப் பெற வேண்டுமென்ற நிலைமை இருக்கக்கூடாது. பெண்களினுடைய பிரச்சினை, பெண்களுக்கானவை மாத்திரமன்று. சமூகத்தினுடைய பிரச்சினை இது.

தமிழகத்தில் சுவாதி வழக்கில் வேண்டுமானால் நீதி கிடைக்கக்கூடும். ராம்குமார் தண்டிக்கப்படக்கூடும். ஆனால், கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான சுவாதிகள், உலகம் முழுவதிலும் நீதிக்கான வாய்ப்பையே பெற்றுக் கொள்ளவில்லையே? பல்லாயிரக்கணக்கான ராம்குமார்கள், இன்னமும் சமூகத்தில் 'பெரிய மனுசர்களாக' வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே?

இனிமேலும் அதிகளவிலான சுவாதிகள் உருவாகுவதைத் தடுக்க வேண்டுமானால், சமூகத்தில் காணப்படும் ஆணாதிக்க மனநிலையை உடைப்பதற்கான நடவடிக்கைகள், உடனடியாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டங்களும் சமுதாயக் கட்டமைப்புகளும் இவற்றில் பங்களிப்புச் செய்ய முடியுமென்ற போதிலும், இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, தனிநபரிலிருந்து குடும்பம் வரை, மாற்றத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும். 'ஆம்பிளைப் பிள்ளை அழக்கூடாது' எனவும் 'பொம்பிளைப் பிள்ளை மாதிரி அழாதடா' எனவும் 5 வயதுப் பையனிடம் சொல்வதை நிறுத்துவதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். வேலைத்தளத்தில் புதிதாகப் பதவியுயர்வு பெற்ற பெண், 'உயரதிகாரியிடம் நெருங்கிப் பழகியதால் தான் அந்தப் பதவியுயர்வைப் பெற்றாள்' என்று, சக பெண் ஊழியர்களே, ஆதாரங்கள் எவையுமின்றிச் சொல்லும் வசைகளும் தான் நிறுத்தப்பட வேண்டும். மாற்றங்களைப் பற்றி எப்போதும் கதைத்துக் கதைத்தே, மாற்றங்கள் எவையுமின்றி நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள். பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, தமிழகத்தின் சுவாதியாவது உதவுவாரா?

(குறிப்பு: சுவாதி வழக்கில், ராம்குமாருக்கெதிராக ஏராளமான சாட்சிகள் இருப்பதோடு, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், அவர் குற்றவாளியென நீதிமன்றத்தால் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இப்பத்தியின் தலைப்பு, இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, இலகுவாகப் புரிய வைப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .