2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதியின் கொள்கை உரை: சிறுபான்மையின அரசியல் தீவிரவாதமா?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 ஜனவரி 08 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறிய அரசியல் கட்சிகளினதும் சிறுபான்மை அரசியல் கட்சிகளினதும் இருப்புக்குப் பெரும் சவாலாகக் கூடிய வகையில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாஸ ராஜபக்‌ஷ சட்டம் ஒன்றைக் கொண்டு வர முயல்கிறார்.  

தேர்தல்களின் போது, அரசியல் கட்சிகள், தாம் போட்டியிடும் மாவட்டங்களில், குறைந்த பட்சம் 12.5 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால், அக்கட்சிகளை, அம்மாவட்டப் போட்டியில் இருந்து நீக்கும் வகையில், தாம் சட்ட மூலமொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.
தற்போது ஒரு கட்சி, ஒரு மாவட்டத்தில் ஐந்து சதவீதம் பெற்றால் போதுமானது.  

நாட்டில், 70 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், ஐந்து, ஆறு கட்சிகள் மட்டுமே, ஏதாவதொரு மாவட்டத்தில் 12.5 சதவீத வாக்குகளைப் பெறக் கூடிய நிலையில் உள்ளன.   

எனவே, விஜயதாஸவின் சட்ட மூலம் நிறைவேறினால், மக்கள் விடுதலை முன்னணி போன்ற, இந்நாட்டு அரசியலில் மிக முக்கிய பங்காற்றி வரும் சில கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் துடைத்தெறியப்படும்; அல்லது, அக் கட்சிகள் நியாயமற்ற நிபந்தனைகளின் பேரில், ஏனைய கட்சிகளுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட நேரிடும்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற சில தமிழ்க் கட்சிகள், வடக்கிலுள்ள மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகள், கிழக்கிலுள்ள மாவட்டங்களிலும் 12.5 சதவீத வாக்குகளைப் பெறலாம். இதே கட்சிகள், நாட்டில் ஏனைய மாவட்டங்களில் 12.5 சதவீத வாக்குகளைப் பெற முடியாது.  

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே இயங்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி, தேசிய தொழிலாளர் சங்கம், மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உருமய, பிவிதுரு ஹெல உருமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள், இதுவரை எந்தவொரு தேர்தலிலும், எந்தவொரு மாவட்டத்திலும் 12.5 சதவீத வாக்குகளைப் பெற்றதில்லை. அவற்றில் சில கட்சிகள், ஐந்து சதவீத வெட்டுப்புள்ளியையும் அடைய முடியாமல் இருக்கின்றன.  

எனவே, விஜயதாஸவின் சட்டமூலம் நிறைவேறினால், ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் சிலவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் மட்டும், தென் பகுதி மாவட்டங்களில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் ஆசனங்களைப் பெற முடியும்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலும் மு.கா போன்ற முஸ்லிம் கட்சிகள் கிழக்கிலும் சிலவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்திலும் தனித்துப் போட்டியிட்டு, சில ஆசனங்களைப் பெறலாம். 

வேறு எந்தவொரு கட்சியும் எந்தவொரு மாவட்டத்திலும் தனித்துப் போட்டியிட்டு, ஓர்  ஆசனத்தையேனும் பெற முடியாது.  

ஒரு காலத்தில், சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவாளராக இருந்த விஜயதாஸ, பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவாளரானார். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். பின்னர், 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற அரசமைப்புச் சதியின் போது, மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான குழுவுடன் இணைந்து கொண்டார். அவர் இன்னமும், மஹிந்தவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் உத்தியோகபூர்வமாக இணையவில்லை.  

விஜயதாஸ ராஜபக்‌ஷ, தற்போது மஹிந்த அணியில் இருப்பதால், அவர், இந்தச் சட்ட மூலத்தை ராஜபக்‌ஷக்களின் தேவைக்காக முன்வைக்கிறார் என்றும் ஊகிக்க முடியும். அல்லது, அவர்கள் பேரினவாதப் போக்குடையவர்கள் என்பதால், அவர்களைக் ‘காக்காய்’  பிடித்து, அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர், அமைச்சர் பதவியொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, இதைச் சமர்ப்பிக்கிறார் என்றும் கருதலாம்.  

சிறு கட்சிகள், குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகள், தேர்தல்களின் போது, சில ஆசனங்களை வென்று, பிரதான கட்சிகளோடு பேரம் பேசி, அசாதாரண இனவாதக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதாகவும் அதைத் தடுப்பதற்காகவே, தாம் இந்தச் சட்டமூலத்தைச் சமர்ப்பிப்பதாகவும் விஜயதாஸ கூறியிருக்கிறார். அதாவது, சிறுபான்மையினக் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாதிருக்க, அக் கட்சிகளைத் துடைத்தெறிவதே, இந்தச் சட்ட மூலத்தின் நோக்கமாகும்.  

இதே கருத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, வெள்ளிக்கிழமை (03) நாடாளுமன்றத்தில் தமது கொள்கை அறிக்கையைச் சமர்ப்பிக்கும் போதும் கூறியிருக்கிறார்.  

“என்னைத் தெரிவு செய்த மக்கள், அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை விரும்புகின்றனர். அவர்கள் இனத்தின் அடிப்படையிலான அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் புறக்கணித்தனர். அரசர்களை அமைக்கும் வகிபாகத்தின் மூலம், இந்நாட்டு அரசியலைக் கட்டுப்படுத்துவதற்கு, இனி ஒருபோதும், எவருக்கும் முடியாது என்பதை, பெரும்பான்மையான மக்கள் நிருபித்துக் காட்டிவிட்டனர்.   இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு, நான் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தமது உரையில் தெரிவித்து இருந்தார்.  

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், இன அடிப்படையில் பிரிந்தே, மக்கள் வாக்களித்தனர். சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் மட்டும், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார் என்று கூறுமளவுக்கு, இந்தப் பிரிவினை அமைந்திருந்தது.  

 “அவர்கள், இனத்தின் அடிப்படையிலான அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் புறக்கணித்தனர்” என்று, இதைத் தான் ஜனாதிபதி குறிப்பிடுகிறார். சிங்கள பௌத்த மக்கள், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒதுக்கித் தள்ளி, தாமாகவே ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்தனர் என்றே அவர் சூட்சுமமாகக் கூறுகிறார்.  

ஆனால், சிங்கள பௌத்த மக்களும் இன ரீதியாகச் சிந்தித்தே செயற்பட்டுள்ளனர் என்ற உண்மையை, ஜனாதிபதி இங்கே உணரவில்லைப் போலும். அவர், அம்மக்களின் அந்த அரசியலை, வெற்றியாகக் கருதுகிறார்.   

எனவே தான், “அரசர்களை அமைக்கும் வகிபாகத்தின் மூலம், இந்நாட்டு அரசியலைக் கட்டுப்படுத்துவதற்கு, இனி ஒருபோதும் எவருக்கும் முடியாது என்பதைப் பெரும்பான்மையான மக்கள் நிரூபித்துக் காட்டிவிட்டனர். இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு நான் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளைக் கேட்டுக் கொள்கிறேன்”  என அவர் கூறுகிறார்.  

அதாவது, இன ரீதியான அரசியலைப் புறக்கணித்துவிட்டு, சிங்கள பௌத்த தலைமையுள்ள அரசியல் கட்சிகளுடன் இணையுமாறே, அவர் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

2010 ஆம் ஆண்டிலும், சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் மட்டும் மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றி பெற்றார் என்று கூறக் கூடிய நிலை உருவாகியது. ஆனால், 2015 ஆம் ஆண்டு அது மாறியது. முஸ்லிம்கள் தமக்கு வாக்களிக்காததாலேயே தாம் தோல்வியடைந்ததாக, மஹிந்த பின்னர் கூறியிருந்தார்.  

“ஆசன எண்ணிக்கை அடிப்படையில், தேர்தல்களில் வெற்றி பெற முடியுமாக இருந்த போதிலும், தெளிவான முடிவுகளை எடுக்க முடியாத அதேவேளை, தொடர்ந்தும் தீவிரவாதத்தின் தாக்கத்துக்கு உள்ளான நாடாளுமன்றமொன்று, நாட்டுக்குப் பொருத்தமாகாது” என்று ஜனாதிபதி தமது உரையில், மற்றுமோர் இடத்தில் கூறுகிறார்.   

நீண்ட காலமாக, பேரினவாதத் தலைவர்கள் மத்தியில் நிலவி வரும் ஒரு கருத்தையே, அவர் இங்கு மீண்டும் கூறுகிறார். தேவையான ஆசன எண்ணிக்கையைப் பெறுவதற்காக, சிறுபான்மை கட்சிகளின் ஆதரவைப் பெற்று, அரசாங்கத்தை அமைத்தாலும், அதன் மூலம் அரசாங்கம், தீவிரவாதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டுவிடும் என்றே, ஜனாதிபதி கோட்டாபய வேறு வார்த்தைகளில் கூறுகிறார்.  

சிறுபான்மையினக் கட்சிகள் என்றால், தீவிரவாதக் கட்சிகள் என்ற கருத்தே, இதில் தொனிக்கிறது. ஆனால், கடந்த காலங்களில், மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் உள்ளிட்ட பல அரசாங்கங்களில், சிறுபான்மை கட்சிகள் அங்கம் வகித்தாலும், என்ன தான் சாதித்துள்ளன? என்ன தீவிரவாதக் கோரிக்கையைத் தான் நிறைவேற்றிக் கொண்டுள்ளன?    

ஜனநாயகத்தின் கதவுகள் அடைக்கப்பட்டால்...

இன ரீதியான அரசியல் கட்சிகள் அவசியமில்லை; சகல இன மக்களும் சகல அரசியல் கட்சிகளிலும், அங்கம் வகிக்க வேண்டும் என்பது, ஜனரஞ்சகமான கருத்து மட்டுமல்லாது முற்போக்கானதும் ஆகும். 

ஆனால், அதற்காகத் தான் விஜயதாஸ ராஜபக்‌ஷ, அரசியல் கட்சிகள் தேர்தல்களின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் 12.5 சதவித வாக்குகளைப் பெற வேண்டும் என்று விதிக்கும் சட்ட மூலத்தைச் சமர்ப்பித்துள்ளார் என்று கூற முடியாது. அந்தச் சட்ட மூலத்தில் குறுகிய அரசியல் நோக்கமே இருக்கிறது.   

இன ரீதியான அரசியலுக்கு, விகிதாசாரத் தேர்தல முறை, பிரதான உந்து சக்தியாக இருக்கிறது. வெட்டுப்புள்ளி, இன ரீதியான அரசியலுக்கான இரண்டாந்தர காரணியாகும். அத்தேர்தல் முறையில், நன்மைகள் இருந்த போதிலும், அம்முறையை வைத்துக் கொண்டு, இன ரீதியான அரசியலைப் பலாத்காரமாக ஒழிக்கவும் முடியாது.   

1978 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த, தொகுதிவாரி தேர்தல் முறையில், இந்த வெட்டுப் புள்ளி இருக்கவில்லை. அப்போது ஒவ்வொரு தொகுதியிலும், ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் தெரிவு செய்யப்பட்டார். அத் தொகுதியில் போட்டியிட்ட ஏனைய அனைவரும் தோல்வியடைந்தவர்களாகவே கருதப்பட்டனர்.   

1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழேயே, வெட்டுப் புள்ளி அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல்களின் போது, இவ்வாறான வெட்டுப்புள்ளி இல்லாவிட்டால், மிகச் சிறிய கட்சிகளும், ஆங்காங்கே ஓரிரண்டு ஆசனங்களைப் பெற்று, இறுதியில் ஆளும் கட்சியை விட, எதிர்க் கட்சிகளின் பலம் அதிகரித்து, நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியாது போய்விடலாம் என்ற அடிப்படையிலேயே, இந்த வெட்டுப்புள்ளி அறிமுகப்படுத்தப்பட்டது.   

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, இது நடைமுறையில் காணக்கூடியதாக இருந்தது. சிறு கட்சிகளின் ஆதரவுடன், மற்றொரு கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதால், பல சபைகளில் ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்ற கட்சி, எதிர்க்கட்சிக்கு தள்ளப்பட்டது. சில சபைகளில், பல வாரங்கள் செல்லும் வரை, தவிசாளர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது.   

1978 ஆம் ஆண்டு, விகிதாசாரத் தேர்தல் முறையோடு, ஆரம்பத்தில் வெட்டுப்புள்ளியாக 12.5 சதவீதமே இருந்தது. 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, இது முதன் முதலாக நடைமுறைப்படுத்தப்பட இருந்தது. ஆனால், அதற்கு முன்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் வேண்டுகோளுக்கு இணங்க, ரணசிங்க பிரேமதாஸ அதை ஐந்து சதவீதமாகக் குறைத்தார்.   

1988 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் சிறிமா பண்டாரநாயக்கவையே ஆதரிக்க இருந்தது. இவ்விரு கட்சிகள் உள்ளிட்ட, எட்டுக் கட்சிகள் இணைந்து, ஜனநாயக மக்கள் கூட்டணி என்ற ஒரு கூட்டணியும் உருவாக்கப்பட்டது. ஆனால், தமக்குத் தெரியாமல் கூட்டணி, ஒப்பந்தத்தில் மாற்றம் செய்திருக்கிறது என்று குற்றஞ்சாட்டி, மு.கா அக்கூட்டமைப்பிலிருந்து விலகிக் கொண்டது.   

அதன் பின்னர், ஐ.தே.க வேட்பாளர்  ஆர். பிரேமதாஸ, மு.கா தலைவர் அஷ்ரபுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வெட்டுப்புள்ளியை 12.5 இலிருந்து ஐந்து சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போது அஷ்ரப் முன்வைத்தார். பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும் போதே, அதிகாலை இரண்டு மணிக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை  நித்திரையிலிருந்து எழுப்பிய பிரேமதாஸ, இந்த மாற்றத்துக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்ததாக, பின்னர் அஷ்ரப் ஊடகங்களிடம் கூறினார். இதன் மூலமே, 15 ஆவது அரசமைப்பு கொண்டு வரப்பட்டு, வெட்டுப்புள்ளி ஐந்து சதவீதமாகக் குறைக்கப்பட்டு, சிறு கட்சிகளின் இருப்புப் பாதுகாக்கப்பட்டது.   

உயர்ந்த வெட்டுப்புள்ளி மூலம், ஓரிரண்டு அரசியல் கட்சிகள் தவிர்ந்த, ஏனைய கட்சிகள் துடைத்தெறியப்படும். ஒரு நாட்டில், இரண்டு, மூன்று அரசியல் போக்குகள் தான் இருக்க வேண்டும் என்பது, ஜனநாயக மரபுக்கு முரணானது. ஆனால், அதற்காகப் பெரும் எண்ணிக்கையில் கட்சிகள் தோன்றி, நிலையான அரசாங்கமொன்றை உருவாக்க முடியாத நிலைமை ஏற்படுவதையும் அனுமதிக்க முடியாது. 

கடந்த 31 வருட வரலாற்றின் அனுபவத்தின் படி, ஐந்து சதவீத வெட்டுப்புள்ளியானது, இந்த இரண்டு விடயங்களையும் சமநிலைப்படுத்தக் கூடிய நியாயமானதொரு பொறிமுறை என்றே கூற வேண்டும்.   

சில அரசியல் சக்திகளை, அநாவசியமாகச் சட்டத்தால் அடக்கினால், அச்சக்திகள் காலப் போக்கில் சட்டத்துக்கு முரணான முறையில், மேலெழுந்து வர முயற்சிக்கலாம். 

ஜே.வி.பி போன்ற கட்சிகள், பிரதான கட்சிகளின் ஊழல் அரசியலை எதிர்க்கின்றன. அவற்றுக்குத் தமது கருத்துகளைத் தெரிவிக்கவும் ஊழல் அரசியலை அம்பலப்படுத்தவும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் மேடையொன்று இருக்க வேண்டும்.   

அவ்வாறு இல்லாவிட்டால் அவை, ஊழல் அரசியலுக்கு எதிரான தமது மன வேகத்தை, வேறு விதமாக வெளிப்படுத்தலாம்; இது பயங்கரமானது. தமிழர்களைத் தாக்கியதாக, பொய்க் குற்றச்சாட்டின் பேரில், ஜே.வி.பி 1983 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டதால் தான், அக்கட்சியின் இரண்டாவது கிளர்ச்சி 1988 ஆம் ஆண்டு வெடித்தது.    

“விஜயதாஸவின்,  அரசமைப்பு மீதான 21 ஆவது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், ஜே.வி.பியும் ஜாதிக்க ஹெல உறுமயவும் காட்டுக்குள் இருந்து அரசியலில் ஈடுபட நேரிடும்” என்று, இதைத் தான் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கிறார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .