2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழக சட்டமன்ற தேர்தல்: வரலாறு காணாத தடுமாற்றத்தின் பின்னணி என்ன?

Thipaan   / 2016 மார்ச் 21 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக தேர்தல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு குழம்பி நிற்கிறது. 'இதுதான் எங்கள் கூட்டணி' என்று அறிவித்த எந்தக் கட்சியும், வேட்பாளரை அறிவிக்க முடியாமல் தவிக்கின்றன. 'கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே தெரியவில்லை' என்று பொதுக்கூட்டங்களில் பேசி வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் இருக்கிறது.

தேர்தல்க் களம் திடீரென்று திகைத்து நிற்பதற்கான காரணங்கள் என்ன? ஏழுமுனைப் போட்டி எங்கும் பேசப்பட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இதுவரை இல்லாத அளவுக்குக் கூட்டணிக் குழப்பத்தில் இருக்கின்றன. குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அந்தப் பிரச்சினை நிரம்பி வழிகிறது.

விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று தி.மு.க கருதியதால், முதலில் வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஏற்பட்டது. இப்போது அந்தக் கட்சி கூட்டணி இல்லை என்று அறிவித்த பின்னரும் தி.மு.க ஏதும் பேச முடியாமல் தவிக்கிறது. கூட்டணி இல்லை என்று அறிவித்த தே.மு.தி.க மீது இன்னும் கண்டனக் கணைகளைத் தொடுக்காமல் அமைதியாக இருக்கிறது தி.மு.க இது மட்டுமின்றி கூட்டணி பற்றி இன்னும் யோசிக்கும் நிலையிலேயே அந்தக் கட்சி பொறுமை காட்டுகிறது. பழம் நழுவிப் பாலில் விழும் என்று தே.மு.தி.க பற்றி நம்பிக்கை வைத்திருந்த கருணாநிதியின் விருப்பம் இப்போது சமூக வளைதலங்களின் 'காமெடி காட்சிகளாக' மாற்றப்பட்டிருக்கிறது.

காங்கிரஸுடன் மட்டும் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டுள்ள தி.மு.க, தங்களது கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி இருந்தாலும், 'இறுதி முடிவு எடுப்பதிலும்' 'வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதிலும்' அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள சோதனை முக்கியமாக மூன்று விளைவுகளால் ஏற்பட்டது. முதல் விளைவு பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டி என்று அறிவித்து, அக்கட்சியின் இளம் தலைவர் டொக்டர் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் இறங்கியது.

இன்னொன்று, வைகோ தலைமையேற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருமாவளவன் தலைமையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி எல்லாம் சேர்ந்து 'தி.மு.கவும் வேண்டாம். அ.தி.மு.கவும் வேண்டாம்' என்று மக்கள் நலக்கூட்டணி அமைத்தது. மூன்றாவதாக 'தி.மு.க கூட்டணியுடன் சேரமாட்டேன்' என்று கூறி, விஜயகாந்த் 'தனித்துப் போட்டி' என்று அறிவித்தது. இந்த மூன்று முடிச்சுகள்தான் தி.மு.கவின் கூட்டணி திருமணத்தை இப்போதைக்கு தடுத்துக் கொண்டிருக்கிறது.

எதிர்கட்சிக்கு இந்தச் சோதனை என்றால், ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.கவுக்கோ 'தனித்துப் போட்டியிடும் தகுதி' இருக்கிறது என்று நீண்ட காலத்துக்கு முன்பே அறிவித்தது. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 37 நாடாளுமன்ற தொகுதிகளில் தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால் டிசம்பர் 2015ல் நடைபெற்ற அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் 'கூட்டணி அமைத்து போட்டியிடும்' விருப்பம் அக்கட்சிக்கும் மலர்ந்தது. அதற்குக் காரணம், பாரதிய ஜனதா கட்சி. அக்கட்சியின் சார்பில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற விருப்பம் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே இருக்கிறது. அப்போது முடியாமல் போனதை இப்போதாவது சாதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியும், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் எண்ணுகிறார்கள் என்ற கருத்து தமிழக பா.ஜ.கவின் தலைமை அலுவலகமான 'கமலாலயத்திலேயே' கேட்க முடிகிறது. 'பிரதமர் நேரடியாக அம்மாவிடம் (முதலமைச்சர் ஜெயலலிதா) பேசி விட்டால் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமைந்து விடும்' என்ற விருப்பத்தை அவர்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்கள்.

கூட்டணி விருப்பம் மாநில பா.ஜ.க மட்டத்தில் மட்டும் அல்ல. அகில இந்திய பா.ஜ.க மட்டத்திலேயே ஏற்பட்டு இருக்கிறது என்பதால், அதை எளிதில் புறந்தள்ள முடியாத இக்கட்டான நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இருக்கிறார். அதனால்தான் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது மோடியின் விருப்பம் என்றால், அதை எளிதில் புறக்கணிக்க முடியாது என்று நினைக்கிறார்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவரின் கோரிக்கையை நிராகரித்தார். ஆனால், அப்போது பா.ஜ.க ஆட்சியில் இல்லை. இன்றைக்கு நிலை அப்படியில்லை. முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பொறுத்தமட்டில் அவரது கட்சியின் ஆட்சி நிறைவுபெற்று மறுபடியும் மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க நிற்கிறார். ஆனால் மோடியோ மக்கள் ஆதரவைப் பெற்று பிரதமராக பொறுப்பு வகிக்கிறார்.

அந்த அதிகார மாற்றத்தால் பா.ஜ.கவுக்கான கூட்டணிக் கதவை இழுத்த மூட முடியாத நிலையில் அ.தி.மு.க திணறிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இதுவரை சிறிய கட்சிகளை அழைத்துப் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறுபான்மையின வாக்குகளை வைத்துள்ள மனித நேய மக்கள் கட்சியையும், காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த ஜி.கே. வாசன் (மறைந்த மூப்பனாரின் மகன்) தமிழ் மாநில காங்கிரஸையும் அழைத்துப் பேசாமல் இருக்கிறார். இரு கட்சிகளுமே அ.தி.மு.கவுடன் கூட்டணிக்குத் தயார் என்று வெளிப்படையாக அறிவித்து விட்ட நிலையிலும் கூட, அ.தி.மு.க தரப்பிலிருந்து இருவரையும் அழைத்துப் பேசவில்லை முதலமைச்சர் ஜெயலலிதா. இருவரையும் அழைத்துப் பேசி விட்டால் மட்டுமே பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்காது என்பது தெளிவாகும். அந்த தெளிவான செய்தியை இப்போது அவசரப்பட்டு கொடுக்க வேண்டாம் என்று கருதுகிறார் ஜெயலலிதா.

மூன்றாவது சக்தியாக தமிழகத்தில் திகழ்ந்தது தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம். மார்ச் 10 ஆம் திகதி வரை அந்தக் கட்சிக்கு எல்லா திசைகளில் இருந்தும் அழைப்பு. பா.ஜ.க அழைத்தது. மக்கள் நலக்கூட்டணி அழைத்தது. திராவிட முன்னேற்றக் கழகம் அழைத்தது. ஏன் காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றோர் கூட 'தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வர வேண்டும்' என்று அழைப்பு விட்டார்.

கூட்டணிக்கு தேடப்படும் கட்சியில் முதலிடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தது தே.மு.தி.க. ஆனால், சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அந்தக் கட்சியின் மகளிர் அணி பொதுக்கூட்டத்தில், 'தே.மு.தி.கவை கூட்டணிக்கு அழைத்த கட்சிகளுக்கு நன்றி. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடுகிறது' என்று அறிவித்த அன்று தே.மு.தி.கவின் மவுசு கீழே இறங்கியது.

கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்த மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, 'மக்கள் நலக்கூட்டணி வெகுதூரம் சென்று விட்டது. மக்கள் மத்தியில் பதிவு ஆகி விட்டது. அதனால் விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணிக்கு வர வேண்டும்' என்று தெளிவாகவே திருச்சியில் அறிவித்து விட்டார்.

அதே போல் பா.ஜ.கவின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவரான முரளிதரராவ், 'நாங்கள் ஏற்கெனவே பா.ஜ.கவின் நிலைப்பாட்டை விஜயகாந்திடம் கூறி விட்டோம். ஆகவே, இனி முடிவு அவர் கையில் இருக்கிறது' என்று கூறிவிட்டார். பா.ஜ.க மற்றும் மக்கள் நலக்கூட்டணியைப் பொறுத்தமட்டில் 'விஜயகாந்த் நம் கூட்டணிக்கு வரட்டும்' என்று அவரவர் விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் விஜயகாந்தோ 'இவர்கள் எல்லாம் என்னைத் தேடி வரட்டும்' என்று இன்னும் நினைக்கிறார். ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் தினமும் குறைந்து வருகின்றன. உச்ச கட்டத்தில் இருந்த தே.மு.தி.கவின் செல்வாக்கு இந்த சில தினங்களாக 'தே.மு.தி.க தடுமாறுகிறது' 'போட்டியிட மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தாங்கள் கட்டிய பணத்தை திருப்பிக் கேட்கிறார்கள்' 'தே.மு.தி.க அலுவலகத்தின் முன் பக்கத்தை மூடி விட்டு பின்பக்கமாக அலுவலகத்திற்குள் நிர்வாகிகள் வந்து போகிறார்கள்' என்றெல்லாம் பத்திரிக்கை செய்திகளுக்கு ஆட்பட்டு, இன்றைக்கு தே.மு.தி.கவுக்கு பரிதாபமான நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் ஒரே காரணம் 'தே.மு.தி.கவின் கூட்டணி அறிவிப்பில் மூக்கை நுழைத்து கெடுத்த பிரேமலாதா விஜயகாந்தான்' என்று தே.மு.தி.க இரண்டாம் கட்டத் தலைவர்கள் எல்லாம் குமுறும் நிலைமைக்கு வந்து விட்டது. 'தமிழ் மிரரில்' வெளிவந்தது போல், 'தனித்துப் போட்டி' என்று அறிவித்து 'சக்கரவியூகம் வகுத்த' விஜயகாந்த் அதிலிருந்து எப்படி வெளியில் வருவது என்பது தெரியாமல் தவிக்கிறார்.

அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க ஆகிய மூன்று கட்சிகளுக்குள்ளும் இருக்கும் இந்த குழப்பம் தமிழக தேர்தலுக்கான 'வேட்பாளர் பட்டியல்' வெளியிடுவதை தடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கட்சிகள் பொறுத்துக் கொண்டிருக்கும் என்பது கேள்விக்குறிதான்.

2016க்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய இன்னும் ஒரு மாதமே எஞ்சியிருக்கும் சூழலில், இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது, கூட்டணிகளை முடிவு செய்வது என்று அனைத்திலும் சட்டமன்றத் தேர்தல் களம் குழம்பிய குட்டை போல் காட்சியளிக்கிறது.

இந்த குழம்பிய குட்டையில் எந்தக் கட்சி மீனைப் பிடிக்கப் போகிறது என்பது எப்படியும் இன்னும் ஒரு வாரத்தில் வெளியே வந்து விடும். எது மாதிரி பூனைக்குட்டி வெளியே வரப் போகிறது என்பதுதான் தமிழக வாக்காளர்கள் இப்போது காணக் காத்திருக்கும் காட்சி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .